1 இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனாகிய பவுல் எழுதுவது, நான் அப்போஸ்தலன் ஆனேன். ஏனென்றால் நான் அவ்விதம் ஆவதையே தேவன் விரும்பினார். கிறிஸ்துவில் நமது சகோதரனாகிய தீமோத்தேயுவிடமிருந்தும் கொரிந்து நகரின் தேவனுடைய சபைக்கும் அகாயா நாடெங்கும் உள்ள எல்லா பரிசுத்தவான்களுக்கும் எழுதுகிறதாவது,
2 நம்முடைய பிதாவாகிய தேவனாலும், கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினாலும் உங்களுக்குக் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
3 நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிதாவாகிய தேவனை வாழ்த்துங்கள். தேவனே இரக்கம் நிறைந்த பிதா. எல்லா விதமான ஆறுதல்களுக்கும் உறைவிடம் அவர் தான்.
4 நாம் துன்பத்தில் இருக்கும் ஒவ்வொரு முறையும் அவர் ஆறுதல் வழங்குகிறார். இது எந்த வகையிலாவது மற்றவர்கள் துன்பத்தில் இருக்கும்போது நாம் ஆறுதல் வழங்கத் துணையாயிருக்கும். நம்மை தேவன் ஆறுதல்படுத்துவதைப் போலவே நாம் அவர்களையும் ஆறுதல்படுத்த வேண்டும்.
5 கிறிஸ்துவின் அநேக துன்பங்களில் நாம் பங்கு கொண்டால் கிறிஸ்துவிடமிருந்து நமக்கு மிகுந்த ஆறுதலும் கிடைக்கும்.
6 நாங்கள் தொல்லைக்குட்பட்டால் அது உங்களின் இரட்சிப்புக்காகவும் ஆறுதலுக்காகவும் தான். நாங்கள் ஆறுதல் பெற்றால் அது உங்களின் ஆறுதலுக்காகத்தான். எங்களுக்கு நேரும் தொல்லைகள் போல உங்களுக்கு நேரும் தொல்லைகளை நீங்கள் பொறுமையுடன் தாங்கிக்கொள்ள இது உதவும்.
7 உங்களுக்கான எங்கள் நம்பிக்கை பலமானது. எங்கள் துன்பங்களில் நீங்களும் பங்கு கொள்வீர்கள் என்பதை அறிவோம். எனவே, எங்கள் ஆறுதலிலும் உங்களுக்குப் பங்கு உண்டு என்பதை நாங்கள் அறிவோம்.
8 சகோதர சகோதரிகளே, ஆசியா நாட்டில் நாங்கள் பட்ட துன்பங்களைப் பற்றி நீங்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என விரும்புகிறோம். அங்கே எங்களுக்குப் பெரும் பாரங்கள் இருந்தன. அந்த பாரங்கள் எங்கள் பலத்தைவிட பெரிது. வாழ்க்கைப் பற்றிய நம்பிக்கையையே நாங்கள் இழந்துவிட்டோம்.
9 உண்மையாகவே நாங்கள் இறந்து போவோம் என மனதிற்குள் எண்ணினோம். நம்மீது நம்பிக்கை வைக்காமல் தேவன் மீது நம்பிக்கை வைப்பதை நாம் உணரும் பொருட்டு இது இவ்வகையில் நடந்தது. அவர் மரணத்திலிருந்து மக்களை எழுப்பியவர்.
10 இது போன்ற மரண ஆபத்துகளில் இருந்து தேவன் எங்களைக் காப்பாற்றினார். அவர் தொடர்ந்து நம்மைக் காப்பாற்றுவார். நாங்கள் அவர் மீது தான் நம்பிக்கையை வைத்திருக்கிறோம். அவரே தொடர்ந்து நம்மைக் காப்பாற்றுவார்.
11 நீங்கள் உங்களது பிரார்த்தனைகள் மூலம் எங்களுக்கு உதவலாம். ஏராளமான மக்கள் எங்களுக்காக நன்றி சொல்வர். அவர்களின் பிரார்த்தனைகளால் தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்.
12 இதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். நான் இதனை மனப்பூர்வமாகக் கூறுவேன். இது உண்மையானது. நாங்கள் இந்த உலகத்தில் செய்த அனைத்தையும் தேவன் தந்த நேர்மையும் சுத்தமும் கொண்ட இதயத்தோடு செய்தோம். நாங்கள் உங்களிடம் செய்த காரியங்களில் இது மேலும் உண்மையானது. இவற்றை நாங்கள் தேவனுடைய கிருபையால் செய்தோம். உலகிலுள்ள ஞானத்தால் செய்யவில்லை.
13 உங்களால் வாசித்து புரிந்துகொள்ளத்தக்கவற்றை மட்டுமே உங்களுக்கு எழுதுகிறோம்.
14 எங்களைப் பற்றி ஏற்கெனவே சில காரியங்களை நீங்கள் புரிந்துகொண்டிருப்பதைப் போல இதையும் நீங்கள் புரிந்துகொள்ள முடியும் என்று நம்புகிறோம். எங்களுக்காகப் பெருமை அடைய முடியும் என்பதைப் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன். இது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மீண்டும் வரும்போது உங்களுக்காக நாங்கள் பெருமைப்படுவதைப் போன்றிருக்கும்.
15 நான் இவற்றைப் பற்றியெல்லாம் மிகவும் உறுதியாக இருந்தேன். அதனால் தான் முதலில் உங்களைச் சந்திக்கத் திட்டமிட்டேன். பிறகு நீங்கள் இரண்டு முறை ஆசீர்வதிக்கப்பட்டவர்களாவீர்கள்.
16 மக்கதோனியாவுக்குப் போகிற வழியில் உங்களைச் சந்திக்கத் திட்டமிட்டேன். பிறகு திரும்பும் வழியில் மீண்டும் உங்களைச் சந்திக்கத் திட்டமிட்டேன். யூதேயாவுக்குப் போகும்போது உங்கள் உதவியைப் பெற விரும்பினேன்.
17 நான் சிந்தித்துப் பார்க்காமலேயே இத்திட்டங்களை வகுத்தேன் என்று நினைக்கிறீர்களா? அல்லது நான் “ஆமாம், ஆமாம்” என்றும் அதே நேரத்தில் “இல்லை, இல்லை” என்றும் சொல்லும்படியான இந்த உலகத்தின் திட்டங்களைப் போன்றே இத்திட்டங்களும் இருக்கின்றன என்று நினைக்கிறீர்களா?
18 ஆனால் தேவனை நம்ப முடியுமானால், பிறகு நாங்கள் சொல்பவை ஒரே நேரத்தில் “ஆமாம் என்றும்” “இல்லை என்றும்” இருக்காது என நம்பமுடியும்.
19 என்னாலும், சில்வானுவினாலும், தீமோத்தேயுவினாலும் போதிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து வெறும் “ஆமாம்” மற்றும் “இல்லை” போல அல்லர். கிறிஸ்துவுக்குள் அது எல்லா காலத்திலும் “ஆமாம்” மட்டும்தான்.
20 தேவனுடைய வாக்குறுதிகள் எல்லாம் இயேசு கிறிஸ்துவுக்குள் “ஆம்” என்றுள்ளது. ஆகவேதான் தேவனுடைய மகிமையை கிறிஸ்துவின் வழியாகச் சொல்லும்போது “ஆமென்” என்கிறோம்.
21 நீங்களும் நாங்களும் கிறிஸ்துவுக்கு உரியவர்களே என்பதை தேவனே உறுதியாக்கினார். நமக்கு ஞானஸ்நானம் வழங்கியவரும் அவரே.
22 நாம் அவரைச் சார்ந்தவர் என்பதைக் காட்ட அவரே முத்திரையிட்டார். அவர் தம்முடைய ஆவியை நம் இதயத்தில் நிரப்பினார். அது அவர் தமது வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்பதற்கான உறுதிப்பத்திரமும் நிரூபணமுமாயிற்று.
23 நான் சொல்வதெல்லாம் உண்மை. இதற்கு தேவனே சாட்சி. நான் கொரிந்து நகருக்கு வராததற்குக் காரணம் உங்களைத் தண்டிக்கக் கூடாது என்பதும் உங்களைப் புண்படுத்திவிடக்கூடாது என்பதும்தான்.
24 நாங்கள் உங்கள் விசுவாசத்தைக் கட்டுப்படுத்துகிறோம் என்று நான் எண்ணவில்லை. நீங்கள் உங்கள் விசுவாசத்தில் பலமாய் இருக்கிறீர்கள். உங்கள் மகிழ்ச்சிக்காக உங்களோடு பணிபுரிபவர்களாக இருக்கிறோம்.
2 கொரிந்தியர் 1 ERV IRV TRV