1 சாலமோன் தம் மன்றாட்டை முடித்ததும், வானத்திலிருந்து நெருப்பு இறங்கி, எரி பலியையும் மற்றப் பலிகளையும் எரித்தது. ஆண்டவரின் மாட்சி கோவிலை நிரப்பியது.2 ஆண்டவரின் மாட்சி அவர் இல்லத்தை நிரப்பியிருந்ததால், குருக்கள் ஆண்டவரின் இல்லத்தில் நுழைய முடியவில்லை.3 நெருப்பு இறங்குவதையும், ஆண்டவரின் மாட்சி கோவிலில் இருப்பதையும் இஸ்ரயேலின் மக்கள் அனைவரும் கண்டபோது, தரையில் முகம் குப்புற வீழ்ந்து வழிபட்டனர்; “ஆண்டவர் நல்லவர்; அவரது பேரன்பு என்றென்றும் உள்ளது” என்று அவருக்கு நன்றி கூறினர்.4 அரசரும் மக்கள் யாவரும் ஆண்டவர் திருமுன் பலி செலுத்தினர்.5 அரசர் சாலமோன் இருபத்திரண்டாயிரம் மாடுகளையும், இலட்சத்திருபதினாயிரம் ஆடுகளையும் பலியிட்டார்; இவ்வாறு, அரசரும் மக்கள் அனைவரும் கடவுளின் இல்லத்தை அர்ப்பணம் செய்தனர்.6 குருக்கள் தமக்குரிய திருப்பணியைச் செய்தனர். ஆண்டவருக்கு நன்றி செலுத்தத் தாவீது உருவாக்கிய இசைக்கருவிகளை லேவியர் இசைத்து, “ஏனெனில் அவர் நல்லவர்; அவரது பேரன்பு என்றென்றும் உள்ளது” என்று புகழ்ந்தனர். அப்போது, அவர்கள் முன்னிலையில் குருக்கள் எக்காளம் ஊதினர். மக்கள் அனைவரும் நின்று கொண்டிருந்தனர்.⒫7 அப்போது ஆண்டவரது இல்லத்தின் முன்னிருந்த நடுமுற்றத்தைச் சாலமோன் அர்ப்பணம் செய்தார்; எரிபலிகளையும், நல்லுறவுப் பலிகளின் கொழுப்பையும் அங்கேதான் அவர் செலுத்தினார். ஏனெனில், சாலமோன் செய்திருந்த வெண்கலப் பலிபீடம் எரிபலி, தானியப் படையல், கொழுப்பு ஆகியவற்றைக் கொள்ளவில்லை.8 இத்திருவிழாவை சாலமோன் ஏழுநாள் தொடர்ந்து கொண்டாடினார்; அவருடன், ஆமாத்து எல்லை முதல் எகிப்து நதிவரை வாழ்ந்த இஸ்ரயேல் மக்கள் பெருந்திரளாகக் கூடியிருந்தனர்.9 பலிபீட அர்ப்பணத்தையும், திருவிழாவையும் ஏழு நாள்கள் அவர்கள் கொண்டாடி, எட்டாம் நாளன்று சிறப்புக் கூட்டம் நடத்தினர்.10 பின்பு, அவர் ஏழாம் மாதத்தின் இருபத்து மூன்றாம் நாள் மக்களை அவர்களின் கூடாரங்களுக்கு அனுப்பினார்; ஆண்டவர் தாவீதுக்கும், சாலமோனுக்கும் தம் மக்களாகிய இஸ்ரயேலுக்கும் செய்துள்ள நன்மைத்தனத்தை நினைத்து அவர்கள் உள்ளத்தில் அக்களிப்போடும் அகமகிழ்வோடும் சென்றனர்.11 இவ்வாறு, சாலமோன் ஆண்டவரின் இல்லத்தையும் அரண்மனையையும் கட்டி முடித்தார். ஆண்டவரின் இல்லத்திலும் அரண்மனையிலும் அவர் செய்ய விரும்பிய அனைத்தையும் வெற்றியுடன் முடித்தார்.12 பின்பு, ஆண்டவர் சாலமோனுக்கு இரவில் தோன்றி, “நான் உன் விண்ணப்பத்தை ஏற்று, இவ்விடத்தை எனக்குப் பலியிடும் கோவிலாகத் தேர்ந்துகொண்டுள்ளேன்.13 நான் மழை பெய்யாதவாறு வானத்தை அடைத்தாலும், நாட்டை அழிக்க வெட்டுக் கிளிகளுக்குக் கட்டளையிட்டாலும், என் மக்களிடையே கொள்ளை நோயை அனுப்பினாலும்,14 எனது பெயரைப் போற்றிடும் என் மக்கள் சிறுமையுற்று, தங்கள் பாவங்களிலிருந்து மனம் வருந்தி, இரந்து மன்றாடி, என் திருமுகத்தை நாடினால், வானகத்திலிருந்து அவர்களது மன்றாட்டுகளைக் கேட்டு அவர்கள் பாவங்களை மன்னிப்பேன்; அவர்களது நாட்டுக்கு நலன் அளிப்பேன்.15 இவ்விடத்தில் எழுப்பப்படும் வேண்டுதல்களை என் கருணைக் கண் கொண்டு நோக்கிக் கவனத்தோடு செவிகொடுப்பேன்.16 எனது பெயர் என்றென்றும் போற்றப்படுமாறு இக்கோவிலை நான் தெரிந்தெடுத்துத் திருநிலைப்படுத்தியுள்ளேன்; என் கண்ணும் கருத்தும் இதன்மேல் எந்நாளும் இருக்கும்.⒫17 உன் தந்தை தாவீதுபோல் நீயும் என் திருமுன் நடந்து, என் கட்டளைகளையும் நியமங்களையும் நீதிநெறிகளையும் ஏற்று வாழ்ந்தால்,18 ‘இஸ்ரயேலை அரசாளும் ஒருவன் உனக்கு இல்லாமல் போகான்’ என்று உன் தந்தை தாவீதுடன் நான் செய்த உடன்படிக்கைக்கு ஏற்ப உனது அரசின் அரியணையை நான் நிலைபெறச் செய்வேன்.19 ஆனால், நீங்கள் நெறிதவறி, உங்களுக்கு அளித்துள்ள கட்டளைகளையும் நியமங்களையும் புறக்கணித்து, வேற்றுத் தெய்வங்களுக்குப் பணி செய்து அவற்றை வழிபட்டால்,20 நான் அவர்களுக்கு அளித்துள்ள எனது நாட்டிலிருந்து அவர்களைத் துரத்திவிட்டு, என் பெயருக்கென திருநிலைப்படுத்திய இக்கோவிலை எனது திருமுன்னின்று அகற்றிவிடுவேன்; இதனை எல்லா நாட்டு மக்களினங்கள் நடுவிலும் பழமொழியாகவும் வசைமொழியாகவும் நிலவச் செய்வேன்.⒫21 அப்பொழுது உயர்ந்து விளங்கிய இக்கோவிலைக் கடந்து செல்வோர் யாவரும் நடுங்கி, ‘ஆண்டவர் இந்நாட்டிற்கும் இக்கோவிலுக்கும் ஏன் இவ்வாறு செய்துவிட்டார்?’ என்று கேட்பார்கள்.22 அதற்கு அவர்கள், ‘தங்கள் முன்னோர்களை எகிப்து நாட்டிலிருந்து அழைத்து வந்த தங்கள் மூதாதையரின் கடவுளான ஆண்டவரைப் புறக்கணித்து விட்டு, வேற்றுத் தெய்வங்கள்மேல் பற்றுக் கொண்டு அவற்றை வழிபட்டு, அவற்றிற்கு ஊழியம் செய்ததனால், அவர் இத்தகைய தீமை முழுவதையும் அவர்கள்மேல் விழச்செய்தார்’ என்று பதிலளிப்பர்” என்று உரைத்தார்.
By continuing to browse the site, you are agreeing to our use of cookies.