1 சாலொமோன் ஒரு பலிபீடத்தை வெண்கலத்தால் செய்தான். அது 30 அடி நீளமும், 30 அடி அகலமும், 18 அடி உயரமும் கொண்டது.

2 பிறகு ஒரு பெரிய தொட்டியைச் செய்ய சாலொமோன் உருக்கிய வெண்கலத்தைப் பயன்படுத்தினான். இது வட்ட வடிவத்தில் ஒரு விளிம்பிலிருந்து மறுவிளிம்புவரை 18 அடி அகலம் கொண்டதாக இருந்தது. 7 1/2 அடி உயரமும், 45 அடி சுற்றளவும் கொண்டிருந்தது.

3 தொட்டியின் கீழ்ப்புறமாய் காளைகளின் உருவங்கள் வெண்கலத்தால் வார்க்கப்பட்டு 18 அடி உயரத்தில் வைக்கப்பட்டிருந்தது. இரண்டு வரிசைகளில் காளையின் உருவங்கள் தொட்டியோடு வார்க்கப்பட்டன.

4 இத்தொட்டி 12 காளை உருவங்களின் மேல் வைக்கப்பட்டது. அவற்றில் 3 காளைகள் வடக்கு நோக்கியும், 3 காளைகள் மேற்கு நோக்கியும், 3 காளைகள் கிழக்கு நோக்கியும், 3 காளைகள் தெற்கு நோக்கியும் இருந்தன. பெரிய தொட்டியானது இக்காளைகளின் மேல் இருந்தது. அவற்றின் பின்பக்கம் உட்புறமாய் இருந்தது.

5 பெரிய வெண்கலத் தொட்டியின் கனம் 4 விரல்கடை அளவுள்ளது. தொட்டியின் விளிம்பானது கப்பின் விளிம்புபோல் இருந்தது. அவ்விளிம்பானது லீலி பூ போலவும் இருந்தது. இது 3,000 குடம் தண்ணீர் கொள்ளளவு கொண்டது.

6 சாலொமோன் 10 குழாய்கள் பொருத்தப்பட்ட கிண்ணங்களைச் செய்தான். இவற்றில் 5 கிண்ணங்களைத் தொட்டியின் வலது பக்கத்திலும், 5 கிண்ணங்களை இடது பக்கத்திலும் வைத்தான். தகனபலிக்கான பொருட்களைச் சுத்தப்படுத்த இக்கோப்பைகள் பயன்பட்டன. பலிகளைக் கொடுக்கும் முன்பு குளித்து பரிசுத்தமாகும் பொருட்டு ஆசாரியர்களால் வெண்கலத் தொட்டி பயன்படுத்தப்பட்டது.

7 சாலொமோன் 10 விளக்குத் தண்டுகளைத் தங்கத்தில் செய்தான். அவன் விளக்குத் தண்டுகளைச் செய்வதற்கான விதிமுறைகளைப் பயன்படுத்தினான். அவன் அவ்விளக்குத் தண்டுகளை ஆலயத்தில் வைத்தான். 5 விளக்குத் தண்டுகளை வலது பக்கத்திலும், 5 விளக்குத் தண்டுகளை இடது பக்கத்திலும் வைத்தான்.

8 சாலொமோன் 10 மேஜைகளைச் செய்து ஆலயத்தில் வைத்தான். அவற்றில் 5 மேஜைகளை வலது பக்கத்திலும், 5 மேஜைகளை இடது பக்கத்திலும் வைத்தான். சாலொமோன் 100 குழாய் பொருத்தப்பட்ட கிண்ணங்களைத் தங்கத்தால் செய்தான்.

9 சாலொமோன் ஆசாரியர்களின் பிரகாரத்தையும், பெரிய பிரகாரத்தையும், மற்ற பிரகாரங்களையும் வாசலோடு அமைத்தான். அவன் பிரகாரக் கதவுகளை வெண்கலத் தகடுகளால் மூடினான்.

10 தொட்டியை ஆலயத்தின் வலதுபுறத்தில் தென் கிழக்காக வைத்தான்.

11 ஈராம் செப்புச்சட்டிகளையும், சாம்பல் கரண்டிகளையும், கலங்களையும் செய்தான். பிறகு அவன் கர்த்தருடைய ஆலயத்திற்காக சாலொமோன் அரசனுக்குச் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து முடித்தான்.

12 அதுவரை அவன் இரண்டு தூண்களையும், தூண்களின் மேல் உள்ள கும்பங்களையும் குமிழ்களையும் இவற்றை மூடுவதற்கான வலைகளையும் செய்திருந்தான்.

13 இரண்டு வலைகளையும் அலங்கரிப்பதற்காக 400 மாதளம் பழங்களையும் செய்தான். ஒவ்வொரு வலையிலும் இருவரிசையாக மாதளம் பழங்களைத் தொங்கவிட்டான். இவ்வலைகள் இரண்டு தூண்களின் மேலுள்ள கும்பங்களை மூடிக்கொண்டிருந்தன.

14 தாங்கிகளையும் தாங்கிகளின் மேலுள்ள பாத்திரங்களையும் ஈராம் செய்தான்.

15 ஈராம் ஒரு பெரிய வெண்கலத் தொட்டியையும் அதற்கடியில் 12 காளைகளையும் செய்துமுடித்தான்.

16 ஈராம் செப்புச் சட்டிகளையும், சாம்பல் கரண்டிகளையும், முள் துறடுகள் போன்ற பணிமூட்டுகள் போன்றவற்றையும் அரசன் சாலொமோனுக்கு கர்த்தருடைய ஆலயத்திற்காகச் செய்தான். இவை பளபளப்பாக்கப்பட்ட வெண்கலத்தால் செய்யப்பட்டன.

17 அரசன் சாலொமோன் முதலில் இவற்றைக் களிமண் வார்ப்படங்களில் வடித்தான். அக்களிமண் வார்ப்படங்கள் யோர்தான் பள்ளத்தாக்கில் சுக்கோத் மற்றும் சரேத்தா ஆகிய ஊர்களுக்கு இடையில் செய்யப்பட்டன.

18 இதுபோல் ஏராளமான பொருட்களை சாலொமோன் செய்தான். இதற்குரிய வெண்கலத்தின் எடையை அளக்க யாரும் முயற்சி செய்யவில்லை.

19 தேவனுடைய ஆலயத்திற்கு வேண்டிய அனைத்து பொருட்களையும் சாலொமோன் செய்தான். அவன் தங்கத்தாலான பலிபீடத்தைச் செய்தான். சமூகத்து அப்பங்களை வைக்கும் மேஜைகளையும் அவன் செய்தான்.

20 சாலொமோன் விளக்குத் தண்டுகளையும் அதன்மேல் வைக்க விளக்குகளையும் சுத்தமான தங்கத்தால் செய்தான். உள்புறமிருந்த பரிசுத்த இடத்தில் சன்னதிக்கு முன்பு முறைப்படி விளக்கு ஏற்றுவதற்காக இவைச் செய்யப்பட்டன.

21 பூக்களையும், விளக்குகளையும், இடுக்கிகளையும்,

22 கத்திகளையும், கலங்களையும், கலயங்களையும், தூபகலசங்களையும் செய்ய சாலொமோன் தூய பொன்னையே பயன்படுத்தினான். மகா பரிசுத்தமான இடத்தின் உட்கதவுகளையும் ஆலயத்தின் கதவுகளையும் வாசல் கதவுகளையும் பொன்னால் செய்வித்தான்.