2 நாளாகமம் 13 ERV ஒப்பிடு Tamil Easy Reading Version
1 இஸ்ரவேலில் யெரொபெயாமின் 18வது ஆட்சியாண்டில், அபியா யூதாவின் புதிய அரசனானான்.
2 அபியா எருசலேமில் 3 ஆண்டுகள் அரசனாக இருந்தான். அபியாவின் தாய் மாக்கா ஆவாள். மாக்கா ஊரியேலின் மகள். ஊரியேல் கிபியா என்னும் ஊரைச் சேர்ந்தவன். அபியாவிற்கும் யெரொபெயாமிற்கும் சண்டை ஏற்பட்டது.
3 அபியாவின் படையில் 4,00,000 பலமிக்க வீரர்கள் இருந்தனர். அவர்களை அபியா போரில் ஈடுபடுத்தினான். யெரொபெயாமின் படையில் 8,00,000 வீரர்கள் இருந்தனர். யெரொபெயாம் அபியாவோடு போரிடத் தயாரானான்.
4 பிறகு அபியா மலைநாடான எப்பிராயீமில் செமராயீம் என்னும் மலைமீது ஏறி நின்றான். அபியா, “யெரொபெயாமே! இஸ்ரவேல் ஜனங்களே! நான் சொல்வதைக் கேளுங்கள்.
5 இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் தாவீதிற்கும், அவரது பிள்ளைகளுக்கும் இஸ்ரவேல் அரசனாக என்றென்றைக்கும் இருக்கும்படியான உரிமையைக் கொடுத்திருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். தேவன் இந்த உரிமையை தாவீதிற்கு மாறாத உடன்படிக்கையாகக் கொடுத்திருக்கிறார்.
6 ஆனால் யெரொபெயாம் தன் எஜமானுக்கு எதிராகிவிட்டான். நேபாத்தின் மகனான யெரொபெயாம் சாலொமோனின் வேலைக்காரர்களில் ஒருவன். சாலொமோன் தாவீதின் மகன்.
7 பயனற்ற மோசமான நண்பர்களோடு சேர்ந்து யெரோபெயாம் சாலொமோனின் மகனான ரெகொபெயாமுக்கு எதிரானான். அவன் இளைஞனாகவும், அனுபவம் இல்லாதவனாகவும் இருந்தான். அதனால் அவனால் யெரொபெயாமையும், அவனது தீய நண்பர்களையும் தடுக்க முடியவில்லை.
8 “இப்போது யெரொபெயாமாகிய நீயும், இஸ்ரவேல் ஜனங்களும் கர்த்தருடைய அரசாட்சிக்கு எதிராக திட்டமிடுகிறீர்கள். கர்த்தருடைய அரசாங்கம் தாவீதின் சந்ததியாருக்கு உரியது. உங்களில் அநேகம் பேர் யெரொபெயாமால் செய்யப்பட்ட பொன் கன்றுக்குட்டிகளை தெய்வங்களாக வழிபடுகின்றீர்கள்.
9 நீங்கள் கர்த்தருடைய ஆசாரியர்களையும், லேவியர்களையும் விரட்டிவிட்டீர்கள். ஆசாரியர்கள் அனைவரும் ஆரோனின் சந்ததியினர். நீங்கள் உங்கள் ஆசாரியர்களைத் தேர்ந்தெடுத்துக்கொண்டீர்கள். இதைத்தான் மற்ற நாட்டினரும் செய்கின்றனர். ஒரு காளைக் கன்றுக்குட்டியுடன் அல்லது ஏழு செம்மறியாட்டுக் கடாக்களுடன் தன்னைப் பரிசுத்தப்படுத்திக்கொள்ள வருகிற எவனும் ‘தெய்வங்கள் இல்லாத உருவச்சிலைகளுக்கு’ ஆசாரியனாகலாம்.
10 “ஆனால் எங்களுக்கோ கர்த்தரே தேவன். யூத ஜனங்களாகிய நாங்கள் தேவனுக்கு கீழ்ப்படிய மறுக்கவில்லை. நாங்கள் அவரை விட்டு விலகவில்லை. கர்த்தருக்கு சேவை செய்கிற ஆசாரியர்கள் அனைவரும் ஆரோனின் சந்ததிகளே. மேலும் கர்த்தருக்கு சேவைசெய்ய ஆசாரியர்களுக்கு லேவியர்கள் உதவுகிறார்கள்.
11 அவர்கள் தகனபலி செலுத்துவார்கள். ஒவ்வொருநாள் காலையிலும், மாலையிலும் கர்த்தருக்கு நறுமணப் பொருட்களை எரிக்கிறார்கள். ஆலயத்தில் பரிசுத்தமான மேஜையின் மேல் சமூகத்தப்பங்களை அடுக்கி வைக்கிறார்கள். ஒவ்வொரு நாள் மாலையில் விளக்கை அதற்குரிய தங்கத் தண்டின் மேல் ஏற்றி வைக்கிறார்கள். எனவே அது ஒவ்வொரு மாலைப்பொழுதிலும் வெளிச்சத்துடன் பிரகாசிக்கிறது. எங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிவோம். ஆனால் யெரொபெயாமாகிய நீயும் இஸ்ரவேல் ஜனங்களும் கர்த்தருக்கு கீழ்ப்படியவில்லை. நீங்கள் அவரைவிட்டு விலகிவிட்டீர்கள்.
12 தேவன் தாமே எங்களோடு இருக்கிறார். அவரே எங்களை ஆள்பவர். அவரது ஆசாரியர்களே எங்களோடு இருக்கின்றனர். தேவனுடைய ஆசாரியர்கள் எக்காளங்களை ஊதி உங்களுக்கு எதிராகப் போரிட அழைத்தனர். இஸ்ரவேல் ஜனங்களே உங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தருக்கு எதிராகப் போர் செய்யாதீர்கள். ஏனென்றால் உங்களால் வெற்றிபெற இயலாது” என்றான்.
13 ஆனால் யெரொபெயாம் ஒரு படைக் குழுவை அபியாவின் படைக்குப் பின்புறமாக அனுப்பினான். யெரொபெயாமின் படையோ அபியாவிற்கு முன்னால் இருந்தது. மறைவாகச் சென்ற படைக்குழுவோ அபியாவின் படைக்குப் பின்னால் இருந்தது.
14 அபியாவின் படைவீரர்கள் தம்மைச் சுற்றிப் பார்த்தபோது யெரொபெயாமின் படை வீரர்கள் சுற்றி நின்று முன்னும் பின்னும் தாக்குவதைக் கண்டனர். உடனே யூத ஜனங்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள். ஆசாரியர்கள் எக்காளங்களை ஊதினார்கள்.
15 பின்னர் அபியாவின் படையிலுள்ள ஜனங்கள் ஆர்ப்பரித்தனர். யூத ஜனங்கள் ஆர்ப்பரித்தபோது தேவன் யெரொபெயாமைத் தோற்கடித்தார் யெரொபெயாமின் இஸ்ரவேல் படைவீரர்களை, அபியாவின் யூதப்படை தோற்கடித்தது.
16 இஸ்ரவேல் ஆண்கள், யூதாவின் ஆண்களைவிட்டு ஓடிப்போனார்கள். இஸ்ரவேல் படைகளைத் தோற்கடிக்க தேவன் யூதப்படைகளை அனுமதித்தார்.
17 அபியாவும் அவனுடைய படைவீரர்களும் இஸ்ரவேல் படை வீரர்களைத் தோற்கடித்து 5,00,000 வீரர்களைக் கொன்றுவிட்டனர்.
18 இவ்வகையில் இஸ்ரவேல் ஜனங்கள் தோற்கடிக்கப்பட்டனர். யூத ஜனங்கள் வென்றனர். யூதப்படை வென்றதற்கான காரணம் அவர்கள் தம் முற்பிதாக்களின் தேவனாகிய கர்த்தரைச் சார்ந்திருந்ததுதான்.
19 அபியாவின் படை யெரொபெயாமின் படையைத் துரத்திச் சென்றது. அபியாவின் படை பெத்தேல், எஷானா, எப்பெரோன் ஆகிய நகரங்களையும், அவற்றைச் சுற்றியுள்ள கிராமங்களையும் கைப்பற்றினார்கள்.
20 அபியா உயிரோடு இருந்தவரை யெரொபெயாம் பலமுள்ளவனாக ஆக முடியவில்லை. கர்த்தர் தாமே யெரொபெயாமைக் கொன்றார்.
21 ஆனால் அபியா பலமுள்ளவன் ஆனான். அவன் 14 பெண்களை மணந்துக்கொண்டான். 22 மகன்களுக்கும், 16 மகள்களுக்கும் தந்தையானான்.
22 அபியாவின் மற்ற செயல்கள் இத்தோ தீர்க்கதரிசியின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளன.