1 நாளாகமம் 13 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 தாவீது ஆயிரத்தவர், நூற்றுவர் தலைவர்களோடும் ஏனைய தலைவர் அனைவரோடும் கலந்தாலோசித்தார்.2 தாவீது இஸ்ரயேல் சபை முழுவதையும் நோக்கிக் கூறியது: “உங்களுக்கு நலமெனத் தோன்றினால், அது நம் கடவுளாகிய ஆண்டவரிடமிருந்து வருகின்றதென்றால், இஸ்ரயேல் நாடெங்கிலும் வாழ்ந்துவரும் நம் சகோதரர் அனைவருக்கும் அவர்களுடன் மேய்ப்பு நிலம் சூழ்ந்த நகர்களில் வாழ்ந்துவரும் குருக்களும், லேவியரும் நம்மோடு வந்து சேரும்படி ஆளனுப்புவோம்.3 சவுலின் காலத்தில் நாம் நாடிச்செல்லாமல் விட்டுவிட்ட நம் கடவுளின் பேழையைத் திரும்பக் கொண்டு வருவோம்”.4 இது அனைவருக்கும் நலமென்று தோன்றியதால் சபையோர் அனைவரும் அவ்வாறே செய்ய இசைந்தனர்.⒫5 எனவே, தாவீது கடவுளின் பேழையைக் கிரியத் எயாரிமிலிருந்து கொண்டு வரும்படி எகிப்தைச் சேர்ந்த சீகோர் முதல் ஆமாத்து எல்லைவரை வாழ்ந்து வந்த இஸ்ரயேலர் அனைவரையும் ஒன்று கூட்டினார்.6 பின்னர், கெருபுகள் மேல் வீற்றிருக்கும் ஆண்டவர் பெயர் தாங்கிய கடவுளின் பேழையை யூதாவைச் சார்ந்த கிரியத் எயாரிம் என்னும் பாகாலாவிலிருந்து எடுத்துக்கொண்டு வரும்படி தாவீதும் இஸ்ரயேல் அனைவரும் அவ்விடத்துக்குச் சென்றனர்.7 அவர்கள் கடவுளின் பேழையை அபினதாபின் வீட்டிலிருந்து எடுத்து ஒரு புது வண்டியின் மேல் ஏற்றினர். உசாவும் அகியோவும் வண்டியை ஓட்டிவந்தனர்.8 தாவீதும் இஸ்ரயேல் மக்கள் அனைவரும் தங்கள் முழு ஆற்றலுடன் கடவுளுக்கு முன்பாகச் சுர மண்டலங்கள், யாழ்கள், மத்தளங்கள், கைத்தாளங்கள், எக்காளங்கள் இவற்றை இசைத்து மகிழ்ச்சி பொங்க ஆர்ப்பரித்துப் பாடினர்.⒫9 அவர்கள் கீதோன் களத்தில் வந்தபோது மாடுகள் இடறவே, உசா பேழையைப் பிடிக்கத் தன் கையை நீட்டினான்.10 நீட்டவே, ஆண்டவரின் சினம் உசாவுக்கு எதிராகக் கிளர்ந்து, அவன் தன் கையைப் பேழையை நோக்கி நீட்டினதால் அவனைச் சாகடித்தார்; அவன் அங்கேயே கடவுள் திருமுன் இறந்தான்.11 ஆண்டவர் உசாவை அழித்ததை முன்னிட்டுத் தாவீது பெருந்துயருற்றார். அந்த இடத்துக்குப் ‘பேரேட்சு உசா’* என்று பெயரிட்டார். அப்பெயர் இந்நாள்வரை வழங்கி வருகிறது.⒫12 அந்நாளில் தாவீது கடவுளுக்கு அஞ்சி, “கடவுளின் பேழையை என்னிடம் கொண்டுவருவது எப்படி?” என்று சொல்லி,13 தாவீதின் நகருக்கு, தம்மிடம் பேழையைக் கொண்டுவராமல், இத்தியரான ஓபேது-ஏதோம் வீட்டில் கொண்டுபோய் வைத்தார்.14 கடவுளின் பேழை ஓபேது-ஏதோம் வீட்டில் அவர் வீட்டாரோடு மூன்று மாதம் இருந்தது. அந்நாளில் அவர் வீட்டாருக்கும் அவருக்கு உரிய அனைத்திற்கும் ஆண்டவர் ஆசி வழங்கினார்.