1 பெலிஸ்தர்கள் இஸ்ரவேலர்களோடு யுத்தம் செய்தார்கள்; இஸ்ரவேல் பெலிஸ்தர்களுக்கு முன்பாக பயந்தோடி, கில்போவா மலையிலே வெட்டப்பட்டு விழுந்தார்கள்.

2 பெலிஸ்தர்கள் சவுலையும் அவனுடைய மகன்களையும் நெருங்கித் தொடர்ந்து, சவுலின் மகன்களாகிய யோனத்தானையும் அபினதாபையும் மல்கிசூவாவையும் வெட்டிப்போட்டார்கள்.

3 சவுலுக்கு விரோதமாக போர் பலத்தது; வில்வீரர்கள் அவனைக்கண்டு நெருங்கினார்கள்; அப்பொழுது சவுல் வில்வீரர்களுக்கு மிகவும் பயந்து,

4 தன்னுடைய ஆயுததாரியை நோக்கி: அந்த விருத்தசேதனம் இல்லாதவர்கள் வந்து என்னை அவமானப்படுத்தாதபடி, நீ உன்னுடைய பட்டயத்தை உருவி, என்னைக் குத்திப்போடு என்றான்; அவனுடைய ஆயுததாரி மிகவும் பயப்பட்டதால் அப்படி செய்யமாட்டேன் என்றான். அப்பொழுது சவுல் பட்டயத்தை ஊன்றி அதின்மேல் விழுந்தான்.

5 சவுல் செத்துப்போனதை அவனுடைய ஆயுததாரி கண்டபோது, அவனும் பட்டயத்தின்மேல் விழுந்து செத்துப்போனான்.

6 அப்படியே சவுலும், அவனுடைய மூன்று மகன்களும், அவனுடைய வீட்டு மனிதர்கள் அனைவரும் ஒன்றாக இறந்துபோனார்கள்.

7 மக்கள் பயந்தோடியதையும், சவுலும் அவனுடைய மகன்களும் இறந்துபோனதையும், பள்ளத்தாக்கிலுள்ள இஸ்ரவேலர்கள் எல்லோரும் கண்டபோது தங்களுடைய பட்டணங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; அப்பொழுது பெலிஸ்தர்கள் வந்து, அவைகளில் குடியிருந்தார்கள்.

8 வெட்டப்பட்டவர்களின் ஆடைகளை எடுத்துக்கொள்ளப் பெலிஸ்தர்கள் மறுநாளில் வந்தபோது, அவர்கள் சவுலையும் அவனுடைய மகன்களையும் கில்போவா மலையிலே விழுந்துகிடக்கக்கண்டு,

9 அவனுடைய ஆடைகளையும், அவனுடைய தலையையும், அவனுடைய ஆயுதங்களையும் எடுத்துக்கொண்டு, தங்களுடைய விக்கிரகங்களுக்கும் மக்களுக்கும் அதை அறிவிக்கும்படி பெலிஸ்தர்களுடைய தேசத்தைச்சுற்றிலும் செய்தி அனுப்பி,

10 அவனுடைய ஆயுதங்களைத் தங்களுடைய தெய்வங்களின் கோவிலிலே வைத்து, அவனுடைய தலையைத் தாகோன் கோவிலிலே தூக்கிவைத்தார்கள்.

11 பெலிஸ்தர்கள் சவுலுக்கு செய்த எல்லாவற்றையும் கீலேயாத்தேசத்து யாபேஸ் பட்டணத்தார்கள் எல்லோரும் கேட்டபோது,

12 பெலசாலிகள் எல்லோரும் எழுந்துபோய், சவுலின் உடலையும், அவனுடைய மகன்களின் உடல்களையும் எடுத்து, யாபேசுக்குக் கொண்டுவந்து, அவர்களுடைய எலும்புகளை யாபேசிலிருக்கிற ஒரு கர்வாலி மரத்தின்கீழ் அடக்கம்செய்து, ஏழுநாட்கள் உபவாசம் இருந்தார்கள்.

13 அப்படியே சவுல் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல், கர்த்தருக்குச் செய்த தன்னுடைய துரோகத்தினாலும், அவன் கர்த்தரைத் தேடாமல் குறி சொல்லுகிறவர்களைக் கேட்கும்படி தேடியதாலும் செத்துப்போனான்.

14 அதற்காக அவர் அவனைக் கொன்று, ராஜ்ஜியபாரத்தை ஈசாயின் மகனாகிய தாவீதிடம் ஒப்படைத்தார்.

1 நாளாகமம் 10 ERV IRV TRV