1 இராஜாக்கள் 22

fullscreen1 சீரியருக்கும் இஸ்ரவேலருக்கும் மூன்று வருஷம் யுத்தமில்லாமலிருந்தது.

fullscreen2 மூன்றாம் வருஷத்திலே யூதாவின் ராஜாவாகிய யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவினிடத்திற்குப் போயிருக்கும் போது,

fullscreen3 இஸ்ரவேலின் ராஜா தன் ஊழியக்காரரை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத் நம்முடையதென்று அறியீர்களா? நாம் அதைச் சீரியா ராஜாவின் கையிலிருந்து பிடித்துக்கொள்ளாமல், சும்மாயிருப்பானேன் என்று சொல்லி,

fullscreen4 யோசபாத்தை நோக்கி: கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ண என்னோடேகூட வருகிறீரா என்று கேட்டான். யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவை நோக்கி: நான்தான் நீர், என்னுடைய ஜனங்கள் உம்முடைய ஜனங்கள், என்னுடைய குதிரைகள் உம்முடைய குதிரைகள் என்றான்.

fullscreen5 பின்னும் யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: கர்த்தருடைய வார்த்தையை இன்றைக்கு விசாரித்து அறியும் என்றான்.

fullscreen6 அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா ஏறக்குறைய நானூறு தீர்க்கதரிசிகளைக் கூடிவரச்செய்து: நான் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப்போகலாமா, போகலாகாதா என்று அவர்களைக் கேட்டதற்கு; அவர்கள், போம், ஆண்டவர் ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.

fullscreen7 பின்பு யோசபாத்: நாம் விசாரித்து அறிகிறதற்கு இவர்களையல்லாமல் கர்த்தருடைய தீர்க்கதரிசி வேறே யாராகிலும் இங்கே இல்லையா என்று கேட்டான்.

fullscreen8 அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா, யோசபாத்தை நோக்கி: கர்த்தரிடத்தில் விசாரித்து அறிகிறதற்கு இம்லாவின் குமாரனாகிய மிகாயா என்னும் இன்னும் ஒருவன் இருக்கிறான்; ஆனாலும் நான் அவனைப் பகைக்கிறேன்; அவன் என்னைக் குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனஞ்சொல்லுகிறவன் என்றான். அதற்கு யோசபாத், ராஜாவே, அப்படிச் சொல்லவேண்டாம் என்றான்.

fullscreen9 அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா பிரதானிகளில் ஒருவனைக் கூப்பிட்டு: இம்லாவின் குமாரனாகிய மிகாயாவைச் சீக்கிரமாய் அழைத்துவா என்றான்.

fullscreen10 இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும், சமாரியாவின் ஒலிமுகவாசலுக்கு முன்னிருக்கும் விசாலத்திலே ராஜவஸ்திரம் தரித்துக்கொண்டவர்களாய், அவரவர் தம்தம் சிங்காசனத்தில் உட்கார்ந்திருந்தார்கள்; சகல தீர்க்கதரிசிகளும் அவர்களுக்கு முன்பாகத் தீர்க்கதரிசிகளும் அவர்களுக்கு முன்பாகத் தீர்க்கதரிசனஞ்சொன்னார்கள்.

fullscreen11 கேனானாவின் குமாரனாகிய சிதேக்கியா தனக்கு இருப்புக்கொம்புகளை உண்டாக்கி, இவைகளால் நீர் சீரியரை முட்டி நிர்மூலமாக்கிப் போடுவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

fullscreen12 சகல தீர்க்கதரிசிகளும் அதற்கு இசைவாகத் தீர்க்கதரிசனம் சொல்லி, கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப்போம், உமக்கு வாய்க்கும்; கர்த்தர் அதை ராஜாவின் கையில் ஒப்புக்கொடுப்பார் என்றார்கள்.

fullscreen13 மிகாயாவை அழைக்கப்போன ஆள் அவனுடன் பேசி: இதோ, தீர்க்கதரிசிகளுடைய வார்த்தைகள் ஏகவாக்காய் ராஜாவுக்கு நன்மையாயிருக்கிறது; உம்முடைய வார்த்தையும் அவர்களில் ஒருவர் வார்த்தையைப்போல இருக்கும்படி நன்மையாகச் சொல்லும் என்றான்.

fullscreen14 அதற்கு மிகாயா: கர்த்தர் என்னிடத்தில் சொல்வதையே சொல்லுவேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.

fullscreen15 அவன் ராஜாவினிடத்தில் வந்தபோது, ராஜா அவனைப் பார்த்து: மிகாயாவே, நாங்கள் கீலேயாத்திலுள்ள ராமோத்தின்மேல் யுத்தம்பண்ணப்போகலாமா, போகலாகாதா என்று கேட்டான். அதற்கு அவன்: போம், உமக்கு வாய்க்கும்; கர்த்தர் அதை ராஜாவின்கையில் ஒப்புக்கொடுப்பார் என்றான்.

fullscreen16 ராஜா அவனைப் பார்த்து: நீ கர்த்தருடைய நாமத்திலே உண்மையை அல்லாமல் வேறொன்றையும் என்னிடத்தில் சொல்லாதபடிக்கு, நான் எத்தனைதரம் உன்னை ஆணையிடுவிக்கவேண்டும் என்று சொன்னான்.

fullscreen17 அப்பொழுது அவன்: இஸ்ரவேலரெல்லாரும் மேய்ப்பன் இல்லாத ஆடுகளைப்போல மலைகளிலே சிதறப்பட்டதைக் கண்டேன்; அப்பொழுது கர்த்தர்: இவர்களுக்கு எஜமான் இல்லை; அவரவர் தம் தம் வீட்டிற்குச் சமாதானத்தோடே திரும்பக்கடவர்கள் என்றார் என்று சொன்னான்.

fullscreen18 அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: இவன் என்னை குறித்து நன்மையாக அல்ல, தீமையாகவே தீர்க்கதரிசனம் சொல்லுகிறவன் என்று நான் உம்மோடே சொல்லவில்லையா என்றான்.

fullscreen19 அப்பொழுது அவன் சொன்னது: கர்த்தருடைய வார்த்தையைக் கேளும்; கர்த்தர் தம்முடைய சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கிறதையும், பரமசேனையெல்லாம் அவரிடம் அவர் வலதுபக்கத்திலும் அவர் இடதுபக்கத்திலும் நிற்கிறதையும் கண்டேன்.

fullscreen20 அப்பொழுது கர்த்தர்: ஆகாப் போய், கீலேயாத்திலுள்ள ராமோத்தில் விழும்படிக்கு, அவனுக்குப் போதனை செய்கிறவன் யார் என்று கேட்டதற்கு, ஒருவன் இப்படியும் ஒருவன் அப்படியும் சொன்னார்கள்.

fullscreen21 அப்பொழுது ஒரு ஆவி புறப்பட்டு வந்து, கர்த்தருக்கு முன்பாக நின்று: நான் அவனுக்குப் போதனை செய்வேன் என்றது.

fullscreen22 எதினால் என்று கர்த்தர் அதைக் கேட்டார். அப்பொழுது அது: நான் போய், அவனுடைய தீர்க்கதரிசிகள் எல்லாரின் வாயிலும் பொய்யின் ஆவியாய் இருப்பேன் என்றது. அதற்கு அவர்: நீ அவனுக்குப் போதனைசெய்து அப்படி நடக்கப்பண்ணுவாய்; போய் அப்படிச் செய் என்றார்.

fullscreen23 ஆதலால் கர்த்தர் பொய்யின் ஆவியை இந்த உம்முடைய தீர்க்கதரிசிகளாகிய இவர்கள் எல்லாருடைய வாயிலும் கட்டளையிட்டார்; கர்த்தர் உம்மைக் குறித்துத் தீமையாகச் சொன்னார் என்றான்.

fullscreen24 அப்பொழுது கேனானாவின் குமாரனாகிய சிதேக்கியா கிட்டேவந்து, மிகாயாவைக் கன்னத்தில் அடித்து, கர்த்தருடைய ஆவி எந்தவழியாய் என்னைவிட்டு உன்னோடே பேசும்படி வந்தது என்றான்.

fullscreen25 அதற்கு மிகாயா: நீ ஒளித்துக்கொள்ள உள்ளறையிலே பதுங்கும் அந்நாளிலே அதைக் காண்பாய் என்றான்.

fullscreen26 அப்பொழுது இஸ்ரவேலின் ராஜா: மிகாயாவைப் பிடித்து, அவனைப் பட்டணத்துத் தலைவனாகிய ஆமோனிடத்திற்கும், ராஜாவின் குமாரனாகிய யோவாசிடத்திற்கும் திரும்பக் கொண்டு போய்,

fullscreen27 இவனைச் சிறைச்சாலையிலே வைத்து, நான் சமாதானத்தோடே வருமளவும், இவனுக்கு இடுக்கத்தின் அப்பத்தையும் இடுக்கத்தின் தண்ணீரையும் சாப்பிடக்கொடுங்கள் என்று ராஜா சொன்னார் என்று சொல்லுங்கள் என்றான்.

fullscreen28 அப்பொழுது மிகாயா: நீர் சமாதானத்தோடே திரும்பிவருகிறது உண்டானால், கர்த்தர் என்னைக் கொண்டு பேசினதில்லை என்று சொல்லி; ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேளுங்கள் என்றான்.

fullscreen29 பின்பு இஸ்ரவேலின் ராஜாவும், யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தும் கீலேயாத்திலுள்ள ராமோத்துக்குப் போனார்கள்.

fullscreen30 இஸ்ரவேலின் ராஜா யோசபாத்தை நோக்கி: நான் வேஷம்மாறி யுத்தத்தில் பிரவேசிப்பேன்; நீரோ ராஜவஸ்திரம் தரித்திரும் என்று சொல்லி, இஸ்ரவேலின் ராஜா வேஷம்மாறி, யுத்தத்தில் பிரவேசித்தான்.

fullscreen31 சீரியாவின் ராஜா தனக்கு இருக்கிற இரதங்களின் முப்பத்திரண்டு தலைவரையும் நோக்கி: நீங்கள் சிறியவரோடும் பெரியவரோடும் யுத்தம்பண்ணாமல் இஸ்ரவேலின் ராஜா ஒருவனோடேமாத்திரம் யுத்தம்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டிருந்தான்.

fullscreen32 ஆதலால் இரதங்களின் தலைவர் யோசபாத்தைக் காண்கையில், இவன் தான் இஸ்ரவேலின் ராஜா என்று சொல்லி யுத்தம்பண்ண அவனுக்கு நேராகச் சாய்ந்துவந்தார்கள்; அப்பொழுது யோசபாத் கூக்குரலிட்டான்.

fullscreen33 இவன் இஸ்ரவேலின் ராஜா அல்ல என்று இரதங்களின் தலைவர் கண்டு அவனைவிட்டு, விலகிப்போனார்கள்.

fullscreen34 ஒருவன் நினையாமல் வில்லை நாணேற்றி எய்தான்; அது இஸ்ரவேலின் ராஜாவினுடைய கவசத்தின் சந்துகளுக்குள் பட்டது; அப்பொழுது அவன் தன் சாரதியைப் பார்த்து: நீ திருப்பி என்னை இராணுவத்துக்கப்பால் கொண்டுபோ; எனக்குக் காயம்பட்டது என்றான்.

fullscreen35 அன்றையதினம் யுத்தம் அதிகரித்தது; ராஜாவைச் சீரியருக்கு எதிராக இரதத்தில் நிறுத்திவைத்தார்கள்; சாயங்காலத்திலே அவன் இறந்துபோனான்; காயத்தின் இரத்தம் இரதத்தின் தட்டிலே வடிந்தது.

fullscreen36 பொழுதுபோகும்போது அவரவர் தம்தம் பட்டணத்திற்கும், அவரவர் தம் தம் தேசத்திற்கும் போகலாம் என்று இராணுவத்தில் பறைசாற்றப்பட்டது.

fullscreen37 அப்படியே ராஜா இறந்தபின்பு, சமாரியாவுக்குக் கொண்டுவரப்பட்டான்; ராஜாவைச் சமாரியாவில் அடக்கம் பண்ணினார்கள்.

fullscreen38 அந்த இரதத்தையும் அவனுடைய கவசத்தையும் சமாரியாவின் குளத்திலே கழுவுகிறபோது, கர்த்தர் சொல்லியிருந்த வார்த்தையின்படியே, நாய்கள் அவன் இரத்தத்தை நக்கினது.

fullscreen39 ஆகாபின் மற்ற வர்த்தமானங்களும், அவன் செய்தவை யாவும், அவன் கட்டின தந்த அரமனையின் வரலாறும், அவன் கட்டின எல்லாப் பட்டணங்களின் வரலாறும் இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

fullscreen40 ஆகாப் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவன் குமாரனாகிய அகசியா அவன் ஸ்தலத்தில் ராஜாவானான்.

fullscreen41 ஆசாவின் குமாரனாகிய யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவாகிய ஆகாபின் நாலாம் வருஷத்தில் யூதாவின்மேல் ராஜாவானான்.

fullscreen42 யோசபாத் ராஜாவாகிறபோது முப்பத்தைந்து வயதாயிருந்து, இருபத்தைந்து வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; சில்கியின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் அசுபாள்.

fullscreen43 அவன் தன் தகப்பனாகிய ஆசாவின் வழிகளிலெல்லாம் நடந்தான்; அவன் அதை விட்டு விலகாமல் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்; ஆகிலும் மேடைகள் தகர்க்கப்படவில்லை; ஜனங்கள் இன்னும் மேடைகளின்மேல் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தார்கள்.

fullscreen44 யோசபாத் இஸ்ரவேலின் ராஜாவோடே சமாதானமாயிருந்தான்.

fullscreen45 யோசபாத்தின் மற்ற வர்த்தமானங்களும், அவன் காட்டிய வல்லமையும், அவன் பண்ணின யுத்தமும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புஸ்தகத்தில் அல்லவோ எழுதியிருக்கிறது.

fullscreen46 தன் தகப்பனாகிய ஆசாவின் நாட்களில் மீதியாய் விட்டிருந்த இலச்சையான புணர்ச்சிக்காரரையும் அவன் தேசத்திலிருந்து அற்றுப்போகப்பண்ணினான்.

fullscreen47 அப்பொழுது ஏதோமில் ராஜா இல்லை; பிரதிராஜா ஒருவன் இருந்தான்.

fullscreen48 பொன்னுக்காக ஓப்பீருக்குப் போகும்படி, யோசபாத் தர்ஷீஸ் கப்பல்களைச் செய்தான்; ஆனால் அவைகள் போகவில்லை; அவைகள் எசியோன்கேபேரிலே உடைந்துபோயின.

fullscreen49 அப்பொழுது ஆகாபின் குமாரனாகிய அகசியா யோசபாத்தை நோக்கி: என் வேலைக்காரர் உம்முடைய வேலைக்காரரோடுங்கூடக் கப்பல்களிலே போகட்டும் என்றான்; அதற்கு யோசபாத் சம்மதிக்கவில்லை.

fullscreen50 யோசபாத் தன் பிதாக்களோடே நித்திரையடைந்து, தாவீதின் நகரத்திலே தன் பிதாக்களோடே அடக்கம்பண்ணப்பட்டான்; அவன் குமாரனாகிய யோராம் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.

fullscreen51 ஆகாபின் குமாரனாகிய அகசியா யூதாவின் ராஜாவாகிய யோசபாத்தின் பதினேழாம் வருஷத்திலே சமாரியாவில் ராஜாவாகி, இஸ்ரவேலின்மேல் இரண்டு வருஷம் ராஜ்யபாரம்பண்ணி,

fullscreen52 கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தன் தகப்பன் வழியிலும், தன் தாயின் வழியிலும், இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரன் யெரொபெயாமின் வழியிலும் நடந்து,

fullscreen53 பாகாலைச் சேவித்து, அவனைப் பணிந்துகொண்டு, தன் தகப்பன் செய்தபடியெல்லாம் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபமுண்டாக்கினான்.