நீதிமொழிகள் 16

fullscreen1 மனதின் யோசனைகள் மனுஷனுடையது; நாவின் பிரதியுத்தரம் கர்த்தரால் வரும்.

fullscreen2 மனுஷனுடைய வழிகளெல்லாம் அவன் பார்வைக்குச் சுத்தமானவைகள்; கர்த்தரோ ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார்.

fullscreen3 உன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவி; அப்பொழுது உன் யோசனைகள் உறுதிப்படும்.

fullscreen4 கர்த்தர் சகலத்தையும் தமக்கென்று படைத்தார்; தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார்.

fullscreen5 மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; கையோடே கைகோர்த்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பான்.

fullscreen6 கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.

fullscreen7 ஒருவனுடைய வழிகள் கர்த்தருக்குப் பிரியமாயிருந்தால், அவனுடைய சத்துருக்களும் அவனோடே சமாதானமாகும்படி செய்வார்.

fullscreen8 அநியாயமாய் வந்த அதிக வருமானத்திலும், நியாயமாய் வந்த கொஞ்ச வருமானமே உத்தமம்.

fullscreen9 மனுஷனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ கர்த்தர்.

fullscreen10 ராஜாவின் உதடுகளில் திவ்வியவாக்கு பிறக்கும்; நியாயத்தில் அவன் வாய் தவறாது.

fullscreen11 சுமுத்திரையான நிறைகோலும் தராசும் கர்த்தருடையது; பையிலிருக்கும் நிறைகல்லெல்லாம் அவருடைய செயல்.

fullscreen12 அநியாயஞ்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு; நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும்.

fullscreen13 நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; நிதானமாய்ப் பேசுகிறவனில் ராஜாக்கள் பிரியப்படுவார்கள்.

fullscreen14 ராஜாவின் கோபம் மரணதூதருக்குச் சமானம்; ஞானமுள்ளவனோ அதை ஆற்றுவான்.

fullscreen15 ராஜாவின் முகக்களையில் ஜீவன் உண்டு; அவனுடைய தயை பின்மாரி பெய்யும் மேகத்தைப்போல் இருக்கும்.

fullscreen16 பொன்னைச் சம்பாதிப்பதிலும் ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு உத்தமம்! வெள்ளியைச் சம்பாதிப்பதிலும் புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை!

fullscreen17 தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை; தன் நடையைக் கவனித்திருக்கிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான்.

fullscreen18 அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.

fullscreen19 அகங்காரிகளோடே கொள்ளைப் பொருளைப் பங்கிடுவதைப்பார்க்கிலும், சிறுமையானவர்களோடே மனத்தாழ்மையாயிருப்பது நலம்.

fullscreen20 விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மைபெறுவான்; கர்த்தரை நம்புகிறவன் பாக்கியவான்.

fullscreen21 இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகியென்னப்படுவான்; உதடுகளின் மதுரம் கல்வியைப் பெருகப்பண்ணும்.

fullscreen22 புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவஊற்று; மதியீனரின் போதனை மதியீனமே.

fullscreen23 ஞானியின் இருதயம் அவன் வாய்க்கு அறிவையூட்டும்; அவன் உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும்.

fullscreen24 இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும், எலும்புகளுக்கு ஔஷதமுமாகும்.

fullscreen25 மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரணவழிகள்.

fullscreen26 பிரயாசப்படுகிறவன் தனக்காகவே பிரயாசப்படுகிறான்; அவன் வாய் அதை அவனிடத்தில் வருந்திக் கேட்கும்.

fullscreen27 பேலியாளின் மகன் கிண்டிவிடுகிறான்; எரிகிற அக்கினிபோன்றது அவன் உதடுகளில் இருக்கிறது.

fullscreen28 மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்; கோள் சொல்லுகிறவன் பிராண சிநேகிதரையும் பிரித்துவிடுகிறான்.

fullscreen29 கொடுமையானவன் தன் அயலானுக்கு நயங்காட்டி, அவனை நலமல்லாத வழியிலே நடக்கப்பண்ணுகிறான்.

fullscreen30 அவன் மாறுபாடானவைகளை யோசிக்கும்படி தன் கண்களை மூடி, தீமையைச் செய்யும்படி தன் உதடுகளைக் கடிக்கிறான்.

fullscreen31 நீதியின் வழியில் உண்டாகும் நரைமயிரானது மகிமையான கிரீடம்.

fullscreen32 பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்.

fullscreen33 சீட்டு மடியிலே போடப்படும்; காரியசித்தியோ கர்த்தரால் வரும்.