1 தாவீது பாடிய பாடல் தேவனே, என்னுடைய இருதயம் ஆயத்தமாக இருக்கிறது; நான் இன்னிசையால் புகழ்ந்து பாடுவேன்; என்னுடைய மகிமையும் பாடும்.

2 வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள், நான் அதிகாலையில் விழிப்பேன்.

3 கர்த்தாவே, மக்களுக்குள்ளே உம்மைத் துதிப்பேன்; தேசங்களுக்குள்ளே உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.

4 உமது கிருபை வானங்களுக்கு மேலாகவும், உமது சத்தியம் மேகமண்டலங்கள் வரையிலும் எட்டுகிறது.

5 தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்திரும்; உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.

6 உமது பிரியர்கள் விடுவிக்கப்படுவதற்காக, உமது வலதுகரத்தினால் இரட்சித்து, எங்களுடைய ஜெபத்தைக் கேட்டருளும்.

7 தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு சொன்னார், ஆகையால் சந்தோஷப்படுவேன்; சீகேமைப் பங்கிட்டு, சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன்.

8 கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது; எப்பிராயீம் என்னுடைய தலையின் பெலன், யூதா என்னுடைய செங்கோல்.

9 மோவாப் என்னுடைய பாதம் கழுவும் பாத்திரம்; ஏதோமின்மேல் என்னுடைய காலணியை எறிவேன்; பெலிஸ்தியாவின்மேல் ஆர்ப்பரிப்பேன்.

10 வலுவான நகரத்திற்குள் என்னை நடத்திக்கொண்டு போகிறவன் யார்? ஏதோம்வரை எனக்கு வழிகாட்டுகிறவன் யார்?

11 எங்களுடைய சேனைகளோடு புறப்படாமலிருந்த தேவனே நீரல்லவோ? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவனே நீரல்லவோ?

12 இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனிதனுடைய உதவி வீண்.

13 தேவனாலே வெற்றி பெறுவோம்; அவரே எங்களுடைய எதிரிகளை மிதித்துப்போடுவார்.

Psalm 108 ERV IRV TRV