Numbers 15 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:2 "நீ இஸ்ரயேல் மக்களிடம் இவ்வாறு சொல்; நீங்கள் குடியிருக்க நான் உங்களுக்குத் தரும் நாட்டினுள் வரும்போது மாட்டுமந்தையிலிருந்து அல்லது ஆட்டு மந்தையிலிருந்து நெருப்புப் பலியொன்றை ஆண்டவருக்குப் படைப்பாய்;3 அது எரிபலியாகவோ வேறு பலியாகவோ இருக்கும்; அது பொருத்தனையை நிறைவேற்றுவதாகவோ, தன்னார்வப் படையலாகவோ, குறிக்கப்பட்ட திருநாளில் செய்வதாகவோ இருக்கும்; அது ஆண்டவர் விரும்பத்தக்க நறுமணத்தை ஏற்படுத்தும்.4 அப்போது ஆண்டவருக்குப் படையல் கொண்டு வருபவன் உணவுப் படையலாகப் பத்திலொரு மரக்கால் மெல்லிய மாவைக் கால்படி எண்ணெயில் பிசைந்து படைக்க வேண்டும்.5 எரிபலியோ வேறு பலியோ செலுத்துகையில் ஆட்டுக்குட்டி ஒவ்வொன்றுக்கும் கால்படி திராட்சைரசம் என நீர்மப்படையல் ஆயத்தப்படுத்தி வைக்க வேண்டும்.6 ஆட்டுக் கிடாயாக இருந்தால், உணவுப் படையலாகப் பத்தில் இரண்டு பங்கு மரக்கால் மிருதுவான மாவை மூன்றிலொருபடி எண்ணெயில் பிசைந்து ஆயத்தப்படுத்துவீர்கள்.7 நீர்மப்படையலாக நீங்கள் மூன்றிலொருபடி திராட்சை ரசம் படைப்பீர்கள்; இது ஆண்டவர் விரும்பும் நறுமணமாயிருக்கும்.8 ஒரு பொருத்தனையை நிறைவேற்ற அல்லது ஆண்டவருக்கு நல்லுறவுப் பலியாக ஒரு காளையை எரிபலியாகவோ வேறுபலியாகவோ நீங்கள் ஆயத்தப்படுத்தும்போது,9 அந்தக் காளையுடன் உணவுப் படையலாக பத்தில் மூன்று பங்கு மரக்கால் மெல்லிய மாவை அரைப்படி எண்ணெயில் பிசைந்து படைக்க வேண்டும்.10 நீர்மப் படையலாக அரைப்படித் திராட்சை ரசத்தைக் கொண்டுவர வேண்டும். அது நெருப்புப் பலியாகி ஆண்டவர் விரும்பும் நறுமணமாக விளங்கும்.⒫11 காளை, ஆட்டுக்கிடாய், செம்மறிக் குட்டி அல்லது வெள்ளாட்டுக்குட்டி ஒவ்வொன்றுக்கும் இவ்வாறே செய்யவேண்டும்.12 நீங்கள் ஆயத்தம் செய்யும் எண்ணிக்கைப்படி அவற்றின் எண்ணிக்கைக்கேற்ப ஒவ்வொன்றிற்கும் நீங்கள் இப்படியே செய்வீர்கள்.13 உள்நாட்டவர் அனைவரும் ஆண்டவர் விரும்பும் நறுமணமான நெருப்புப் பலியாக இவற்றை இம்முறையில் செலுத்த வேண்டும்.14 உங்களோடு தங்கியிருக்கும் அயல்நாட்டவரோ தலைமுறைதோறும் உங்களோடிருப்பவரோ ஆண்டவர் விரும்பும் நறுமணமாக நெருப்புப் பலி செலுத்த விரும்பினால் அவரும் நீங்கள் செய்கிறபடியே செய்ய வேண்டும்.⒫15 சபையில், உங்களுக்கும் உங்களோடு தங்கியிருக்கும் அயல்நாட்டவருக்கும் ஒரே விதிமுறையே; உங்கள் தலைமுறைதோறும் என்றுமுள்ள விதிமுறை இதுவே; உங்களோடு தங்கியிருக்கும் அயல்நாட்டவர் ஆண்டவர் திருமுன் உங்களைப் போன்றே இருப்பார்.16 உங்களுக்கும் உங்களோடு தங்கியிருக்கும் அயல்நாட்டவருக்கும் ஒரே சட்டம், ஒரே நீதித் தீர்ப்பு.”⒫17 ஆண்டவர் மோசேயிடம் கூறியது:18 நீ இஸ்ரயேல் மக்களிடம் சொல்ல வேண்டியது: “நான் உங்களை அழைத்துச் செல்லும் நாட்டுக்குள் நீங்கள் வந்து,19 அந்நாட்டின் உணவை நீங்கள் உண்ணும்போது ஆண்டவருக்கென உயர்த்திப் படைக்கும் படையலொன்றை அர்ப்பணிப்பீர்கள்.20 முதல் மாவிலிருந்து பிசைந்து செய்த ஓர் அடையை நீங்கள் உயர்த்திப் படைக்கும் படையலாக அர்ப்பணிக்க வேண்டும்; போரடிக்கும் களத்திலிருந்து வரும் படையல் போன்றே அதை நீங்கள் அர்ப்பணிக்க வேண்டும்.21 முதல் மாவிலிருந்து பிசைந்து செய்ததை ஆண்டவருக்கு ஒர் உயர்த்திப் படைக்கும் படையலாக உங்கள் தலைமுறை தோறும் கொடுப்பீர்கள்.⒫22 ஆயினும், நீங்கள் ஆண்டவர் மோசேக்கு இட்ட இந்தக் கட்டளைகளை மீறினால்,23 ஆண்டவர் கட்டளை கொடுத்தநாள் முதல் தலைமுறைதோறும் மோசே வழியாக அவர் கட்டளையிட்ட எல்லாவற்றிலும்24 மக்கள் கூட்டமைப்புக்கு அறியாப் பிழையேதும் செய்தால், முறைப்படி மக்கள் கூட்டமைப்பு முழுவதும் ஆண்டவர் விரும்பும் நறுமணமாக, அதன் உணவுப் படையலோடும் நீர்மப் படையலோடும் சேர்த்து ஓர் இளங்காளையை எரிபலியாகவும் ஒரு வெள்ளாட்டுக்கிடாயைப் பாவம் போக்கும் பலியாகவும் செலுத்த வேண்டும்.25 குரு இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பு முழுவதுக்குமாக பாவக் கழுவாய் நிறைவேற்றுவார்; அவர்கள் மன்னிக்கப்படுவார்கள்; ஏனெனில், அது ஓர் அறியாப்பிழை; அவர்கள் தங்கள் படையலை ஆண்டவருக்கு ஒரு நெருப்புப் பலியாகவும் தங்கள் அறியாப் பிழைக்காக ஆண்டவர் முன் பாவம்போக்கும் பலியாகவும் கொண்டுவந்து விட்டார்கள்.26 இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பிலுள்ள அனைவரும், அவர்களிடையே தங்கியிருக்கும் அயல் நாட்டவரும் மன்னிக்கப்படுவார்கள்; ஏனெனில், மக்கள் அனைவருமே இந்த அறியாப் பிழையில் பங்கு கொண்டவர்கள்.⒫27 அறியாமல் ஓர் ஆள் பாவம் செய்தால் அவன் பாவ நீக்கப்பலியாக ஒரு வயது வெள்ளாடு ஒன்றைப் படைக்க வேண்டும்.28 ஒருவன் அறியாப்பிழை செய்தால் அவனுக்காகக் குரு ஆண்டவர்முன் கறைநீக்கம் செய்வார்; அவனது அறியாப் பிழைக்காக அவனுக்குக் கறை நீக்கம் செய்யப்படும்; அவன் மன்னிக்கப்படுவான்.29 ஒருவன் அறியாமல் செய்யும் எதற்கும், அவன் இஸ்ரயேல் மக்களைச் சார்ந்த உள்நாட்டவனாயினும் அவர்களிடையே தங்கியிருக்கும் அயல் நாட்டவனாயினும் உங்களிடம் இருக்க வேண்டியது ஒரே சட்டமே.30 ஆனால், ஒருவன் வேண்டுமென்றே எதையும் துணிந்து செய்தால் அவன் உள்நாட்டவனாயினும் உங்களிடையே இருக்கும் அயல்நாட்டவனாயினும் அவன் ஆண்டவரை ஏளனம் செய்கிறான்; அந்த ஆள் மக்களிடமிருந்து விலக்கி வைக்கப்படவேண்டும்.31 ஏனெனில், அவன் ஆண்டவரின் வாக்கை இகழ்ந்துவிட்டான், அவர்தம் கட்டளையை மீறிவிட்டான்; அந்த ஆள் முற்றிலும் விலக்கிவைக்கப்படவேண்டும்; அவன் குற்றம் அவன் மேலேயே இருக்கும்.”32 இஸ்ரயேல் மக்கள் பாலைநிலத்தில் இருக்கையில் ஓய்வுநாளில் ஒரு மனிதன் விறகு பொறுக்கிக் கொண்டிருந்ததைக் கண்டனர்.33 அவன் விறகு பொறுக்கியதைக் கண்டவர்கள் அவனை மோசேயிடமும் ஆரோனிடமும் மக்கள் கூட்டமைப்பு அனைத்திடமும் கூட்டி வந்தனர்.34 அவர்கள் அவனைக் காவலில் வைத்தனர்; ஏனெனில், அவனுக்கு என்ன செய்யவேண்டுமென்பது தெளிவாக இல்லை.35 ஆண்டவர் மோசேயிடம், “இந்த மனிதன் கொல்லப்படவேண்டும்; மக்கள் கூட்டமைப்பிலுள்ள அனைவரும் பாளையத்துக்கு வெளியே அவனைக் கல்லால் எறிய வேண்டும்” என்றார்.36 மக்கள் கூட்டமைப்பிலுள்ள அனைவரும் அவனைப் பாளையத்துக்கு வெளியே கொண்டுவந்து ஆண்டவர் மோசேக்குக் கட்டளையிட்டபடி அவனைக் கல்லால் எறிந்தனர்; அவனும் செத்தான்.37 மேலும், ஆண்டவர் மோசேயிடம் கூறியது:38 இஸ்ரயேல் மக்களிடம் நீ பேசு; அவர்கள் தலைமுறைதோறும் தங்கள் உடைகளின் முனைகளில் குஞ்சங்கள் செய்து ஒவ்வொரு குஞ்சத்திலும் ஒரு நீல நாடாவைக் கட்டச் செய்;39 நீங்கள் ஒழுக்கம் கெட்டு நடப்பதற்கு ஏதுவாய் உங்கள் இதயங்களும் உங்கள் கண்களும் விரும்புவதைப் பின்பற்றாமல் நீங்கள் அவற்றைப் பார்த்து ஆண்டவர் கட்டளைகள் அனைத்தையும் நீங்கள் நினைவு கூர்ந்து அவற்றைச் செய்திடவே இக்குஞ்சம்.40 அதனால் நீங்கள் என் கட்டளைகளையெல்லாம் நினைவில் கொண்டு அவற்றை நிறைவேற்றுவீர்கள், உங்கள் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டவர்களாயிருப்பீர்கள்.41 உங்களுக்குக் கடவுளாயிருக்கும்படி உங்களை எகிப்து நாட்டிலிருந்து கொண்டு வந்த உங்கள் கடவுளாகிய ஆண்டவர் நானே; நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்.Numbers 15 ERV IRV TRV