எண்ணாகமம் 15

fullscreen1 கர்த்தர் மோசேயை நோக்கி:

fullscreen2 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நீங்கள் குடியிருக்கும்படி நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்தபின்பு,

fullscreen3 விசேஷித்த பொருத்தனையாயாவது, உற்சாக பலியாயாவது, உங்கள் பண்டிகைகளில் செலுத்தும் பலியாயாவது, கர்த்தருக்கு மாடுகளிலாகிலும் ஆடுகளிலாகிலும் சர்வாங்க தகனபலியையாவது மற்ற யாதொரு பலியையாவது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனமாகப் பலியிடும்போது,

fullscreen4 தன் படைப்பைக் கர்த்தருக்குச் செலுத்துகிறவன் சர்வாங்க தகனபலிக்காகிலும் மற்றப் பலிக்காகிலும் ஒரு ஆட்டுக்குட்டியுடனே, ஒரு மரக்காலிலே பத்தில் ஒரு பங்கும் காற்படி எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியைச் செலுத்தக்கடவன்.

fullscreen5 பானபலியாக காற்படி திராட்சரசத்தையும் படைக்கவேண்டும்.

fullscreen6 ஆட்டுக்கடாவாயிருந்ததேயாகில், பத்தில் இரண்டு பங்கானதும், ஒரு படியில் மூன்றில் ஒரு பங்காகிய எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியையும்,

fullscreen7 பானபலியாக ஒரு படியில் மூன்றிலொரு பங்கு திராட்சரசத்தையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான படைப்பாகப் படைக்கவேண்டும்.

fullscreen8 நீ சர்வாங்க தகனபலிக்காகிலும், விசேஷித்த பொருத்தனை பலிக்காகிலும், சமாதான பலிக்காகிலும், ஒரு காளையைக் கர்த்தருக்குச் செலுத்த ஆயத்தப்படுத்தும்போது,

fullscreen9 அதனோடே பத்தில் மூன்று பங்கானதும், அரைப்படி எண்ணெயிலே பிசைந்ததுமான மெல்லிய மாவின் போஜனபலியையும்,

fullscreen10 பானபலியாக அரைப்படி திராட்ச ரசத்தையும், கர்த்தருக்குச் சுகந்தவாசனையான தகனபலியாகப் படைக்கவேண்டும்.

fullscreen11 இந்தப்பிரகாரமாகவே ஒவ்வொரு மாட்டுக்காகிலும், ஆட்டுக்கடாவுக்காகிலும், செம்மறியாட்டுக் குட்டிக்காகிலும், வெள்ளாட்டுக் குட்டிக்காகிலும் செய்து படைக்கவேண்டும்.

fullscreen12 நீங்கள் படைக்கிறவைகளின் இலக்கத்திற்குத்தக்கதாய் ஒவ்வொன்றிற்காகவும் இந்தப்பிரகாரம் செய்யவேண்டும்.

fullscreen13 சுதேசத்தில் பிறந்தவர்கள் யாவரும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியைச் செலுத்தும்போது இவ்விதமாகவே செய்யவேண்டும்.

fullscreen14 உங்களிடத்திலே தங்கியிருக்கிற அந்நியனாவது, உங்கள் நடுவிலே உங்கள் தலைமுறைதோறும் குடியிருக்கிறவனாவது, கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி செலுத்தவேண்டுமானால், நீங்கள் செய்கிறபடியே அவனும் செய்யவேண்டும்.

fullscreen15 சபையாராகிய உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும் ஒரே பிரமாணம் இருக்கவேண்டும் என்பது உங்கள் தலைமுறைகளில் நித்திய கட்டளையாயிருக்கக்கடவது; கர்த்தருக்கு முன்பாக அந்நியனும் உங்களைப்போலவே இருக்கவேண்டும்.

fullscreen16 உங்களுக்கும் உங்களிடத்தில் தங்குகிற அந்நியனுக்கும் ஒரே பிரமாணமும் ஒரே முறைமையும் இருக்கக்கடவது என்று சொல் என்றார்.

fullscreen17 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

fullscreen18 நீ இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால்: நான் உங்களை அழைத்துக்கொண்டுபோகிற தேசத்தில் நீங்கள் சேர்ந்து,

fullscreen19 தேசத்தின் ஆகாரத்தைப் புசிக்கும்போது, கர்த்தருக்கு ஏறெடுத்துப் படைக்கும் காணிக்கையைச் செலுத்தக்கடவீர்கள்.

fullscreen20 உங்கள் பிசைந்த மாவினால் செய்த முதற்பலனாகிய அதிரசத்தை ஏறெடுத்துப் படைப்பீர்களாக; போரடிக்கிற களத்தின் படைப்பை ஏறெடுத்துப் படைக்கிறதுபோல அதையும் ஏறெடுத்துப் படைக்கவேண்டும்.

fullscreen21 இப்படி உங்கள் தலைமுறைதோறும் உங்கள் பிசைந்த மாவின் முதற்பலனிலே கர்த்தருக்குப் படைப்பை ஏறெடுத்துப் படைக்கக்கடவீர்கள்.

fullscreen22 கர்த்தர் மோசேயினிடத்தில் சொன்ன இந்தக் கற்பனைகள் எல்லாவற்றின்படியும்,

fullscreen23 கர்த்தர் மோசேயைக்கொண்டு கட்டளைகொடுத்த நாள்முதற்கொண்டு அவர் உங்களுக்கும் உங்கள் சந்ததிகளுக்கும் நியமித்த எல்லாவற்றின்படியேயும் நீங்கள் செய்யாமல்,

fullscreen24 அறியாமல் தவறி நடந்தாலும், சபையாருக்குத் தெரியாமல் யாதொரு தப்பிதம் செய்தாலும், சபையார் எல்லாரும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலியாக ஒரு காளையையும், முறைமைப்படி அதற்கேற்ற போஜனபலியையும், பானபலியையும், பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தவேண்டும்.

fullscreen25 அதினால் ஆசாரியன் இஸ்ரவேல் புத்திரரின் சபையனைத்திற்காகவும் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அது அறியாமையில் செய்யப்பட்டபடியாலும், அதினிமித்தம் அவர்கள் கர்த்தருக்குத் தகனபலியையும் பாவநிவாரணபலியையும் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்ததினாலும், அது அவர்களுக்கு மன்னிக்கப்படும்.

fullscreen26 அது அறியாமையினாலே ஜனங்கள் யாவருக்கும் வந்தபடியால், அது இஸ்ரவேல் புத்திரரின் சபையனைத்திற்கும் அவர்களுக்குள்ளே தங்குகிற அந்நியனுக்கும் மன்னிக்கப்படும்.

fullscreen27 ஒருவன் அறியாமையினால் பாவஞ்செய்தானாகில், ஒரு வயதான வெள்ளாட்டைப் பாவநிவாரணபலியாகச் செலுத்தக்கடவன்.

fullscreen28 அப்பொழுது அறியாமையினால் பாவஞ்செய்தவனுக்காக ஆசாரியன் பாவநிவிர்த்தி செய்யும்படி கர்த்தருடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன், அப்பொழுது அவனுக்கு மன்னிக்கப்படும்.

fullscreen29 இஸ்ரவேல் புத்திரராகிய உங்களில் பிறந்தவனுக்கும் உங்களுக்குள்ளே தங்கும் அந்நியனுக்கும், அறியாமையினால் பாவஞ்செய்தவனிமித்தம், ஒரே பிரமாணம் இருக்கவேண்டும்.

fullscreen30 அன்றியும் தேசத்திலே பிறந்தவர்களிலாகிலும் அந்நியர்களிலாகிலும், எவனாவது துணிகரமாய் யாதொன்றைச் செய்தால், அவன் கர்த்தரை நிந்திக்கிறான்; அந்த ஆத்துமா தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகவேண்டும்.

fullscreen31 அவன் கர்த்தரின் வார்த்தையை அசட்டைபண்ணி, அவர் கற்பனையை மீறினபடியால், அந்த ஆத்துமா அறுப்புண்டுபோகவேண்டும்; அவன் அக்கிரமம் அவன்மேல் இருக்கும் என்று சொல் என்றார்.

fullscreen32 இஸ்ரவேல் புத்திரர் வனாந்தரத்தில் இருக்கையில், ஓய்வுநாளில் விறகுகளைப் பொறுக்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டுபிடித்தார்கள்.

fullscreen33 விறகுகளைப் பொறுக்கின அந்த மனிதனைக் கண்டுபிடித்தவர்கள், அவனை மோசே ஆரோன் என்பவர்களிடத்துக்கும் சபையார் அனைவரிடத்துக்கும் கொண்டுவந்தார்கள்.

fullscreen34 அவனுக்குச் செய்யவேண்டியது இன்னதென்று தீர்க்கமான உத்தரவு இல்லாதபடியினால், அவனைக் காவலில் வைத்தார்கள்.

fullscreen35 கர்த்தர் மோசேயை நோக்கி: அந்த மனிதன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லாரும் அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கல்லெறியக்கடவர்கள் என்றார்.

fullscreen36 அப்பொழுது சபையார் எல்லாரும் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கொண்டுபோய்க் கல்லெறிந்தார்கள்; அவன் செத்தான்.

fullscreen37 பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

fullscreen38 நீ இஸ்ரவேல் புத்திரரிடத்தில் பேசி, அவர்கள் தங்கள் தலைமுறைதோறும் தங்கள் வஸ்திரங்களின் ஓரங்களிலே தொங்கல்களை உண்டாக்கி, ஓரத்தின் தொங்கலிலே இளநீலநாடாவைக் கட்டவேண்டுமென்று அவர்களுக்குச் சொல்.

fullscreen39 நீங்கள் பின்பற்றிச் சோரம்போகிற உங்கள் இருதயத்துக்கும் உங்கள் கண்களுக்கும் ஏற்க நடவாமல், அதைப்பார்த்து, கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் நினைத்து அவைகளின்படியே செய்யும்படிக்கு, அது உங்களுக்குத் தொங்கலாய் இருக்கவேண்டும்.

fullscreen40 நீங்கள் என் கற்பனைகளையெல்லாம் நினைத்து, அவைகளின்படியே செய்து, உங்கள் தேவனுக்குப் பரிசுத்தராயிருக்கும்படி அதைப் பார்ப்பீர்களாக.

fullscreen41 நான் உங்களுக்குத் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர்; நானே உங்கள் தேவனாகிய கர்த்தர் என்று சொல் என்றார்.