1 இயேசு தம் சீடரோடு ஒலிவமலை அருகிலுள்ள பெத்பகு, பெத்தானியா என்னும் ஊர்களுக்கு வந்து, எருசலேமை நெருங்கியபொழுது இரு சீடர்களை அனுப்பி,

2 “உங்களுக்கு எதிரே இருக்கும் ஊருக்குள் போங்கள்; அதில் நுழைந்தவுடன், இதுவரை யாரும் அமராத ஒரு கழுதைக்குட்டி கட்டி வைக்கப்பட்டிருப்பதைக் காண்பீர்கள். அதை அவிழ்த்துக் கொண்டு வாருங்கள்.

3 யாராவது உங்களிடம், ‘ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?’ என்று கேட்டால், ‘இது ஆண்டவருக்குத் தேவை, இதை அவர் உடனே திருப்பி இங்கு அனுப்பிவிடுவார்’ எனச் சொல்லுங்கள்” என்றார்.

4 அவர்கள் சென்று ஒரு வீட்டுவாயிலுக்கு வெளியே, தெருவில் ஒரு கழுதைக் குட்டியைக் கட்டி வைத்திருப்பதைக் கண்டு அதை அவிழ்த்துக் கொண்டிருக்கையில்,

5 அங்கே நின்றுகொண்டிருந்த சிலர் அவர்களிடம், “என்ன செய்கிறீர்கள்? கழுதைக் குட்டியையா அவிழ்க்கிறீர்கள்?” என்று கேட்டனர்.

6 அவர்கள் இயேசு தங்களுக்குக் கூறியபடியே சொல்ல, அங்கு நின்றவர்களும் போகவிட்டனர்.

7 பிறகு, அக்கழுதைக்குட்டியை இயேசுவிடம் கொண்டு வந்து, அதன் மேல் தங்கள் மேலுடைகளைப் போட, அவர் அதன் மீது அமர்ந்தார்.

8 பலர் தங்கள் மேலுடைகளையும், வேறு சிலர் வயல் வெளிகளில் வெட்டிய இலைதழைகளையும் வழியில் பரப்பினர்.

9 முன்னேயும் பின்னேயும் சென்றவர்கள், ⁽“ஓசன்னா!* ஆண்டவர் பெயரால்␢ வருகிறவர் போற்றப்பெறுக!⁾

10 ⁽வரவிருக்கும் நம் தந்தை␢ தாவீதின் அரசு போற்றப்பெறுக!␢ உன்னதத்தில் ஓசன்னா!”⁾ என்று ஆர்ப்பரித்தனர்.⒫

11 அவர் எருசலேமுக்குள் சென்று கோவிலில் நுழைந்தார். அவர் அனைத்தையும் சுற்றிப் பார்த்துவிட்டு, ஏற்கெனவே மாலை வேளையாகி விட்டதால், பன்னிருவருடன் பெத்தானியாவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

12 மறுநாள் பெத்தானியாவை விட்டு அவர்கள் திரும்பிய பொழுது இயேசுவுக்குப் பசி உண்டாயிற்று.

13 இலையடர்ந்த ஓர் அத்திமரத்தை அவர் தொலையிலிருந்து கண்டு, அதில் ஏதாவது கிடைக்குமா என்று அதன் அருகில் சென்றார். சென்றபோது இலைகளைத்தவிர வேறு எதையும் அவர் காணவில்லை. ஏனெனில், அது அத்திப் பழக்காலம் அல்ல.

14 அவர் அதைப் பார்த்து, “இனி உன் கனியை யாரும் உண்ணவே கூடாது” என்றார். அவருடைய சீடர்கள் இதைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.

15 அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். கோவிலுக்குள் சென்றதும் இயேசு அங்கு விற்பவர்களையும் வாங்குபவர்களையும் வெளியே துரத்தத் தொடங்கினார்; நாணயம் மாற்றுவோரின் மேசைகளையும் புறா விற்பவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துப்போட்டார்.

16 கோவில் வழியாக எந்தப் பொருளையும் எடுத்துச் செல்ல அவர் விடவில்லை.

17 ⁽“‘என் இல்லம் மக்களினங்கள்␢ அனைத்திற்கும் உரிய␢ இறைவேண்டலின் வீடு என␢ அழைக்கப்படும்’⁾ என்று மறைநூலில் எழுதியுள்ளது” என்று அவர்களுக்குக் கற்பித்தார்; “ஆனால், நீங்கள் இதைக் கள்வர் குகையாக்கிவிட்டீர்கள்” என்றார்.

18 தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் இதைக் கேட்டு, அவரை எப்படி ஒழித்துவிடலாம் என்று வழிதேடினார்கள். எனினும், கூட்டத்தினர் அனைவரும் அவரது போதனையில் ஆழ்ந்து வியந்திருந்ததால் அவர்கள் அவருக்கு அஞ்சினார்கள்.

19 மாலை வேளை ஆனதும் இயேசுவும் சீடர்களும் நகரத்திலிருந்து வெளியேறினார்கள்.

20 காலையில் அவர்கள் அவ்வழியே சென்றபோது அந்த அத்தி மரம் வேரோடு பட்டுப்போயிருந்ததைக் கண்டார்கள்.

21 அப்போது பேதுரு நடந்ததை நினைவுகூர்ந்து அவரை நோக்கி, “ரபி, அதோ நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போயிற்று” என்றார்.

22 அதற்கு இயேசு அவர்களைப் பார்த்து, “கடவுள்மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.

23 உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்; எவராவது இந்த மலையைப் பார்த்து, ‘பெயர்ந்து கடலில் விழு’ எனத் தம் உள்ளத்தில் ஐயம் எதுவுமின்றி நம்பிக்கையுடன் கூறினால், அவர் சொன்னவாறே நடக்கும்.

24 ஆகவே, உங்களுக்குச் சொல்கிறேன்; நீங்கள் இறைவனிடம் வேண்டும்போது எவற்றையெல்லாம் கேட்பீர்களோ அவற்றைப் பெற்று விட்டீர்கள் என நம்புங்கள்; நீங்கள் கேட்டபடியே நடக்கும்.

25 நீங்கள் வேண்டுதல் செய்ய நிற்கும்போது யார் மேலாவது நீங்கள் மனத்தாங்கல் கொண்டிருந்தால், மன்னித்துவிடுங்கள்.

26 அப்போது உங்கள் விண்ணகத் தந்தையும் உங்கள் குற்றங்களை மன்னிப்பார்” என்று கூறினார்.

27 அவர்கள் மீண்டும் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு கோவிலில் நடந்து கொண்டிருந்தபோது தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள் ஆகியோர் அவரிடம் வந்து,

28 “எந்த அதிகாரத்தால் நீர் இவற்றைச் செய்கிறீர்? இவற்றைச் செய்ய உமக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்?” என்று கேட்டனர்.

29 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “நானும், உங்களிடம் ஒரு கேள்வி கேட்கிறேன்; நீங்கள் மறுமொழி கூறுங்கள். அப்போது எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என நான் உங்களுக்குச் சொல்வேன்.

30 திருமுழுக்கு அளிக்கும் அதிகாரம் யோவானுக்கு விண்ணகத்திலிருந்து வந்ததா? அல்லது மனிதரிடமிருந்து வந்ததா? எனக்குப் பதில் சொல்லுங்கள்” என்றார்.

31 ❮31-32❯அவர்கள், “‘விண்ணகத்திலிருந்து வந்தது’ என்போமானால், ‘பின் ஏன் அவரை நம்பவில்லை’ எனக் கேட்பார். எனவே ‘மனிதரிடமிருந்து வந்தது’ என்போமா?” என்று தங்களிடையே பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால், மக்கள் அனைவரும் யோவானை ஓர் இறைவாக்கினராகக் கருதியதால் அவர்கள் அவர்களுக்கு அஞ்சினார்கள்.

32 Same as above

33 எனவே, அவர்கள் இயேசுவிடம், “எங்களுக்குத் தெரியாது” என்று பதிலுரைத்தார்கள். இயேசுவும் அவர்களிடம், “எந்த அதிகாரத்தால் இவற்றைச் செய்கிறேன் என்று நானும் உங்களுக்குச் கூறமாட்டேன்” என்றார்.

Mark 11 ERV IRV TRV