1 பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரும், அவருடைய எல்லாப் படைகளும், அவரது ஆட்சிக்கு உட்பட்ட உலகின் அரசுகள், மக்களினங்கள் அனைத்தும் எருசலேமையும் அதன் நகர்களையும் எதிர்த்துப் போரிட்டுக்கொண்டிருந்த வேளையில், ஆண்டவரிடமிருந்து எரேமியாவுக்கு அருளப்பட்ட வாக்கு;

2 இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நீ போய், யூதா அரசன் செதேக்கியாவிடம் சொல்லவேண்டியது: ஆண்டவர் கூறுவது இதுவே: பாபிலோனிய மன்னனிடம் இந்நகரைக் கையளிக்கப்போகிறேன். அவன் அதைத் தீக்கிரையாக்குவான்.

3 நீ அவனுடைய கைக்குத் தப்பமாட்டாய்; மாறாகத் திண்ணமாய்ப் பிடிபட்டு, அவன் கையில் ஒப்புவிக்கப்படுவாய். பாபிலோனிய மன்னனை நீ முகத்துக்குமுகம் பார்ப்பாய்; அவனோடு நேருக்கு நேர் பேசுவாய்; நீ பாபிலோனுக்குப் போவாய்.

4 ஆயினும், யூதாவின் அரசனே! செதேக்கியா! ஆண்டவரின் வாக்கைக் கேள். உன்னைப் பற்றி ஆணடவர் கூறுவது இதுவே; நீ வாளால் மடியமாட்டாய்;

5 ஆனால் அமைதியாகவே சாவாய். உனக்குமுன் வாழ்ந்த பண்டைய அரசர்களான உன் மூதாதையரின் நினைவாக மக்கள் நறுமணப் பொருள்களை எரித்தது போன்று, உன் நினைவாகவும் எரிப்பார்கள்; ‘ஐயோ, தலைவா!’ எனச் சொல்லி உன்பொருட்டுப் புலம்புவார்கள்! இது உறுதி, என்கிறார் ஆண்டவர்.⒫

6 பின்னர் இறைவாக்கினர் எரேமியா எருசலேமில் யூதா அரசன் செதேக்கியாவிடம் இவற்றை எல்லாம் கூறினார்.

7 அப்பொழுது எருசலேமுக்கு எதிராகவும், யூதாவின் அரண்சூழ் நகர்களுள் எஞ்சியிருந்த இலாக்கிசு, அசேக்காவுக்கு எதிராகவும் பாபிலோனிய மன்னனின் படை போரிட்டுக் கொண்டிருந்தது.

8 விடுதலையை அறிவிப்பதற்காக, அரசன் செதேக்கியா எருசலேம் மக்கள் அனைவரோடும் உடன்படிக்கை செய்துகொண்டபின், ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது.

9 யூதா நாட்டினர் எவரும் தம் சகோதரரை அடிமைப்படுத்தாமல், அவரவர் தம் எபிரேய அடிமைகளான ஆண், பெண் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே அவ்வுடன்படிக்கை.

10 உடன்படிக்கை செய்துகொண்ட தலைவர்கள், மக்கள் ஆகிய எல்லாரும், தம் அடிமைகளான ஆண், பெண் அனைவரும் தொடர்ந்து அடிமைகளாய் இராதவாறு, அவர்களுக்கு விடுதலை அளிக்க உடன்பட்டு அவர்களை விடுதலை செய்தார்கள்.

11 ஆனால் பின்னர் அவர்கள் தங்கள் மனத்தை மாற்றிக்கொண்டார்கள்; தாங்கள் ஏற்கெனவே விடுதலை செய்திருந்த ஆண், பெண்களை மீண்டும் அடிமைப்படுத்திக்கொண்டார்கள்.⒫

12 எனவே ஆண்டவரிடமிருந்து எரேமியாவுக்கு வாக்கு அருளப்பட்டது:

13 இஸ்ரயேலின் கடவுளான ஆண்டவர் கூறுவது இதுவே; அடிமைத்தன வீடாகிய எகிப்து நாட்டினின்று உங்கள் மூதாதையரை அழைத்துவந்த நாளில் நான் அவர்களோடு ஓர் உடன்படிக்கை செய்துகொண்டேன்.

14 ‘உங்களிடம் அடிமைகளாய் விற்கப்பட்ட உங்கள் எபிரேய சகோதரர்கள் அனைவரும், ஆறு ஆண்டுகள் உங்களுக்குப் பணிவிடை புரிந்தபின், ஏழாம் ஆண்டின் முடிவில் அனைவரும் உங்களிடமிருந்து விடுதலை பெறவேண்டும்’ என்று நான் அப்போது உங்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன். உங்கள் மூதாதையரோ எனக்கு கீழ்ப்படியவில்லை; செவி சாய்க்கவுமில்லை.

15 ஆனால் நீங்கள் சற்றுமுன்பு மனம் வருந்தி, ஒவ்வோருவரும் தம் சகோதருக்கு விடுதலை கொடுத்ததன் மூலம் என் முன்னிலையில் நேர்மையாக நடந்துகொண்டீர்கள்; என் பெயர் விளங்கும் இல்லத்தில் என் திருமுன் நீங்கள் உடன்படிக்கை செய்து கொண்டீர்கள்.

16 ஆனால் உங்கள் மனத்தை நீங்கள் மீண்டும் மாற்றிக் கொண்டீர்கள்; என் பெயருக்குக் களங்கம் வருவித்தீர்கள்; தங்கள் விருப்பம்போல் செல்லும்படி நீங்கள் ஒவ்வொருவரும் விடுதலை செய்திருந்த ஆண், பெண்களை நீங்கள் மீண்டும் அடிமைப்படுத்திக் கொண்டீர்கள்.

17 எனவே, ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நீங்கள் எனக்குச் செவிசாய்க்கவில்லை; உங்கள் சகோதரருக்கும் அடுத்திருப்பவருக்கும் விடுதலை அறிவிக்கவுமில்லை. ஆகவே வாள், கொள்ளைநோய், பஞ்சம் ஆகியவற்றால் அழிவதற்கான ‘விடுதலை’யை நான் உங்களுக்கு வழங்குவேன், என்கிறார் ஆண்டவர். உலக அரசுகள் அனைத்துக்கும் திகிலூட்டும் சின்னமாய் உன்னை மாற்றுவேன்.

18 ❮18-19❯இளங் காளையின் துண்டங்களுக்கு நடுவே கடந்து போன யூதாவின் தலைவர்கள், எருசலேமின் தலைவர்கள், அரசவையோர், குருக்கள், நாட்டுமக்கள் அனைவரும் என் திருமுன் செய்துகொண்ட உடன்படிக்கையை மீறி அதன் உடன்பாடுகளை நிறைவேற்றத் தவறினார்கள். எனவே, இரண்டாக வெட்டப்பட்டு, அத்துண்டங்களிடையே கடந்து செல்வதற்காகப் பயன்படுத்திய இளங்காளையைப் போல் அவர்களை நான் ஆக்குவேன்.

19 Same as above

20 அவர்களை அவர்தம் பகைவர்கையிலும், அவர்களது உயிரைப் பறிக்கத் தேடுவோர் கையிலும் நான் ஒப்புவிப்பேன். அவர்களுடைய பிணங்கள் வானத்துப் பறவைகளுக்கும் வையகத்து விலங்குகளுக்கும் இரையாகும்.

21 யூதா அரசன் செதேக்கியாவையும் நாட்டுத் தலைவர்களையும் அவர்தம் பகைவர்கையிலும், அவர்களது உயிரைப் பறிக்கத் தேடுவோர் கையிலும், உங்களிடமிருந்து பின்வாங்கி நிற்கும் பாபிலோனிய மன்னனது படையின் கையிலும் ஒப்புவிப்பேன்.

22 இதோ! நான் கட்டளையிடப்போகிறேன், என்கிறார் ஆண்டவர். நான் அவர்களை இந்நகருக்குத் திரும்ப அழைத்துவருவேன். அவர்கள் அதைத் தாக்கிக் கைப்பற்றித் தீக்கிரையாக்குவார்கள். யூதாவின் நகர்கள் குடியிருப்பாரற்றுப் பாழாய்ப் போகும்படி செய்வேன்.

Jeremiah 34 ERV IRV TRV