1 அசீரியாவின் அரசனாகச் சர்கோன் இருந்தான். சர்கோன் தர்த்தானை அஸ்தோத்துக்கு எதிராக சண்டையிட அனுப்பினான். தர்த்தான் அங்கே போய் அந்நகரத்தைக் கைப்பற்றினான்.

2 அந்த நேரத்தில், கர்த்தர், ஆமோத்சின் மகனான ஏசாயா மூலமாகப் பேசினார். “போ உன் இடுப்பில் இருந்து துயரமாகிய ஆடையை எடு. உன் கால்களில் உள்ள பாதரட்சைகளைக் கழற்று” என்று கர்த்தர் கூறினார். ஏசாயா கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தான். ஏசாயா ஆடைகளும் பாதரட்சைகளும்இல்லாமல் நடந்தான்.

3 பிறகு, “மூன்று ஆண்டு காலமாக ஏசாயா ஆடைகளும் பாதரட்சைகளும் இல்லாமல் நடந்து வந்தான். இது எகிப்துக்கும் எத்தியோப்பியாவுக்கும் ஒரு அடையாளமாக இருக்கிறது.

4 அசீரியாவின் அரசன் எகிப்து மற்றும் எத்தியோப்பியாவைத் தோற்கடிப்பான். அசீரியா சிறைக் கைதிகளை அவர்களது நாடுகளிலிருந்து அழைத்துச்செல்லும். முதியவர்களும் இளைஞர்களும், ஆடைகளும், பாதரட்சைகளும் இல்லாமல் அழைத்துச் செல்லப்படுவார்கள். அவர்கள் நிர்வாணமாக இருப்பார்கள். எகிப்திலுள்ள ஜனங்கள் வெட்கம் அடைவார்கள்.

5 அவர்கள் எகிப்தின் மகிமையைப் பார்த்து அதிசயித்தனர். அவர்கள் ஏமாந்து நாணம் அடைவார்கள்” என்று கர்த்தர் சொன்னார்.

6 கடற்கரையில் வாழ்ந்து கொண்டிருக்கிற ஜனங்கள், “அவர்கள் எங்களுக்கு உதவுவார்கள் என்று அந்த நாடுகளின் மீது நாங்கள் நம்பிக்கை வைத்திருந்தோம். நாங்கள் அவர்களிடம் ஓடிப்போனோம். ஆதலால், அவர்கள் எங்களை அசீரியா அரசனிடம் இருந்து தப்புமாறு செய்வார்கள். ஆனால் அவர்களைப் பாருங்கள் அவர்களின் நாடுகள் கைப்பற்றப்பட்டன. எனவே எப்படி நாங்கள் தப்பித்துக்கொள்வோம்?” என்று சொல்வார்கள்.

Isaiah 20 ERV IRV TRV