Hosea 5 in Tamil ERV Compare Tamil Easy Reading Version
1 “ஆசாரியர்களே, இஸ்ரவேல் தேசமே, அரச குடும்பத்து ஜனங்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். நீங்கள் குற்றவாளிகளாக நியாய்ந்தீர்க்கப்பட்டுள்ளீர்கள். நீங்கள் மிஸ்பாவில் கண்ணியைப் போன்றிருந்தீர்கள். நீங்கள் தாபோரில் தரை மேல் விரிக்கப்பட்ட வலையைப் போன்றிருக்கிறீர்கள்.
2 நீங்கள் பல தீமைகளைச் செய்திருக்கிறீர்கள். எனவே நான் உங்கள் அனைவரையும் தண்டிப்பேன்.
3 நான் எப்பிராயீமை அறிவேன். இஸ்ரவேல் செய்திருக்கிற செயல்களையும் நான் அறிவேன். எப்பிராயீமே, இப்பொழுது நீ ஒரு வேசியைப்போல் நடந்துக்கொள்கிறாய். இஸ்ரவேல் பாவங்களால் அழுக்கடைந்தது.
4 இஸ்ரவேல் ஜனங்கள் பல தீமைகளைச் செய்திருக்கின்றார்கள். அத்தீமைகள் அவர்களை அவர்களுடைய தேவனிடம் மறுபடியும் வராமல் தடுக்கின்றன. அவர்கள் எப்பொழுதும் அந்நிய தெய்வங்களைத் பின்பற்றும் வழிகளையே நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கர்த்தரை அறியாதிருந்தார்கள்.
5 இஸ்ரவேலின் அகந்தை அவர்களுக்கு எதிரிரான சாட்சியாக உள்ளது. எனவே, இஸ்ரவேலும் எப்பிராயீமும் தமது பாவங்களில் இடறி விழுவார்கள். ஆனால் யூதவும் அவர்களோடு இடறி விழும்.
6 “ஜனங்களின் தலைவர்கள் கர்த்தரைத் தேடி போவார்கள். அவர்கள் தங்களோடு ஆடுகளையும் பசுக்கைளையும் எடுத்துச் செல்வார்கள். ஆனால் அவர்கள் கர்த்தரைக் கண்டுக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால், அவர் அவர்களைவிட்டு விலகினார்.
7 அவர்கள் கர்த்தருக்கு விசுவாசமானவர்களாக இல்லை. அவர்களின் பிள்ளைகள் ஏதோ அந்நியனிடமிருந்து வந்தவர்கள். இப்பொழுது அவர் மீண்டும் அவர்களையும் அவர்களது நாட்டையும் அழிப்பார்.”
8 “கிபியாவிலே பூரிகையை ஊதுங்கள். ராமாவிலே எக்காளத்தை ஊதுங்கள். பெத்தாவேனிலே எச்சரிக்கைக் கொடுங்கள். பென்யமீனே, பகைவன் உனக்குப் பின்னால் உள்ளான்.
9 எப்பிராயீம் தண்டனை காலத்தில் வெறுமையாகிவிடும். நான் (தேவன்) இஸ்ரவேல் குடும்பங்களுக்கு நிச்சயமாக வரப்போவதைக் கூறி எச்சரிப்பேன்.
10 யூதாவின் தலைவர்கள் திருடர்களைப் போன்று மற்றவர்களின் சொத்துக்களைத் திருட முயற்சிக்கிறார்கள். எனவே நான் (தேவன்) தண்ணீரைப் போன்று எனது கோபத்தை அவர்கள்மீது ஊற்றுவேன்.
11 எப்பிராயீம் தண்டிக்கப்படுவான். அவன் திராட்சைப் பழத்தைப் போன்று நசுக்கிப் பிழியப்படுவான். ஏனென்றால் அவன் அருவருப்பானவற்றைப் பின்பற்ற முடிவுசெய்தான்.
12 நான் எப்பிராயீமை பொட்டரிப்பு துணியை அழிப்பது போன்று அழிப்பேன். நான் யூதாவை மரத்துண்டை அழிக்கும் உளுப்பைப் போன்று அழிப்பேன்.
13 எப்பிராயீம் தனது நோயைப் பார்த்தான், யூதா தனது காயத்தை பார்த்தான். எனவே அவர்கள் அசீரியாவிடம் உதவிக்குச் சென்றார்கள். அவர்கள் பேரரசனிடம் தங்கள் பிரச்சனைகளைச் சொன்னார்கள். ஆனால் அந்த அரசன் உங்களைக் குணப்படுத்த முடியாது. அவன் உங்கள் புண்களை குணப்படுத்த முடியாது.
14 ஏனென்றால் நான் எப்பிராயீமுக்கு ஒரு சிங்கத்தைப் போன்றிருப்பேன். நான் யூதா நாட்டிற்கு ஒரு இளம் சிங்கத்தைப் போன்று இருப்பேன். நான் ஆம் நான் (கர்த்தர்) அவர்களைத் துண்டு துண்டாக்குவேன். நான் அவர்களை எடுத்துச் செல்வேன். அவர்களை என்னிடமிருந்து எவரும் காப்பாற்ற முடியாது.
15 அவர்கள் தங்களைக் குற்றவாளிகளென்று ஏற்றுக்கொள்ளும்வரை, அவர்கள் என்னைத் தேடும்வரை நான் எனது இடத்திற்குத் திரும்பிப்போவேன். ஆம், அவர்கள் தம் ஆபத்தில் என்னைத் தேடக் கடுமையாக முயற்சி செய்வார்கள்.”