1 பின்பு, இஸ்ரயேல் தமக்கிருந்த யாவற்றையும் சேர்த்துக்கொண்டு புறப்பட்டு, பெயேர்செபாவைச் சென்றடைந்தார். அவ்விடத்தில் தம் தந்தை ஈசாக்கின் கடவுளுக்குப் பலிகளை ஒப்புக்கொடுத்தார்.

2 அன்றிரவு கடவுள் இஸ்ரயேலுக்குக் காட்சி அளித்து, “யாக்கோபு! யாக்கோபு!” என்று அழைத்தார். அவர், “இதோ அடியேன்” என்றார்.

3 கடவுள், “உன் தந்தையின் கடவுளான இறைவன் நானே, எகிப்திற்குச் செல்ல நீ அஞ்ச வேண்டாம். அங்கே உன்னைப் பெரிய இனமாக வளரச் செய்வேன்.

4 நானும் உன்னோடு எகிப்திற்கு வருவேன். உன்னை நான் அங்கிருந்து மீண்டும் அழைத்து வருவேன். யோசேப்பு தன் கையாலே உன் கண்களை மூடுவான்” என்றார்.⒫

5 யாக்கோபு பெயேர்செபாவை விட்டுப் புறப்பட்டார். இஸ்ரயேலின் புதல்வர்கள் தம் தந்தையாகிய யாக்கோபையும் தங்கள் பிள்ளைகளையும் மனைவியரையும் அவருக்குப் பார்வோன் அனுப்பியிருந்த வண்டிகளில் ஏற்றிக் கொண்டனர்.

6 கானான் நாட்டில் அவர்கள் சேர்த்திருந்த ஆடு மாடுகளையும் சொத்துகளையும் சேகரித்துக் கொண்டனர். இவ்வாறு, யாக்கோபு தம் வழிமரபினர் அனைவரோடும் எகிப்திற்குப் போனார்.

7 தம் புதல்வரையும் அவர்கள் புதல்வரையும் தம் புதல்வியரையும் புதல்வரின் புதல்வியரையும் தம் வழிமரபினர் அனைவரையும் அவர் தம்மோடு எகிப்திற்கு அழைத்துக் கொண்டு சென்றார்.⒫

8 எகிப்திற்கு வந்துசேர்ந்த யாக்கோபும் அவர் புதல்வர்களுமாகிய இஸ்ரயேலரின் பெயர்கள் பின்வருமாறு; யாக்கோபின் தலைமகன் ரூபன்.

9 ரூபனின் புதல்வர்கள்; அனோக்கு, பல்லூ, எட்சரோன், கர்மி.

10 சிமியோனின் புதல்வர்; எமுவேல், யாமின், ஒகாது, யாக்கின், சோவார், கானானியப் பெண்ணின் மகன் சாவூல்.

11 லேவியின் புதல்வர்; கெர்சோன், கோகாத்து, மெராரி.

12 யூதாவின் புதல்வர்; ஏரு , ஓனான், சேலா, பெரேட்சு, செராகு. இவர்களுள் ஏரும் ஓனானும் கானான் நாட்டில் இறந்து போயினர். எட்சரோன், ஆமூல் என்பவர்கள் பெரேட்சுக்குப் பிறந்த புதல்வர்கள்.

13 இசக்காரின் புதல்வர்; தோலா, பூவா, யாசூபு, சிம்ரோன்.

14 செபுலோனின் புதல்வர்; செரேது, ஏலோன், யாகுலவேல்.

15 இவர்கள் லேயாவின் பிள்ளைகள். இவர் இவர்களையும் தீனா என்ற மகளையும் பதான் அராமில் யாக்கோபுக்குப் பெற்றெடுத்தார். லேயா வழிவந்த அவர் புதல்வர், புதல்வியர் மொத்தம் முப்பத்துமூன்றுபேர்.

16 காத்தின் புதல்வர். சிபியோன், அக்கி, சூனி, எட்சபோன், ஏரீ, அரோதி, அரேலி.

17 ஆசேரின் புதல்வர்; இம்னா, இசுவா, இசுவி, பெரியா. இவர்களுடைய சகோதரி செராகு. பெரியாவின் புதல்வர்; எபேர், மல்கியேல்.

18 இவர்கள் லாபான் தன் மகள் லேயாவுக்குக் கொடுத்த சில்பாவின் பிள்ளைகள். இவள் வழியாக யாக்கோபுக்குப் பிறந்தவர்கள் இந்தப் பதினாறுபேர்.

19 யோசேப்பு, பென்யமின் என்பவர் யாக்கோபின் மனைவி ராகேலின் புதல்வர்.

20 யோசேப்பிற்கு எகிப்து நாட்டில் புதல்வர் பிறந்தனர். ஓன் நகர் அர்ச்சகர் போற்றி பெராவின் மகளான அசினத்து அவர்களை அவருக்குப் பெற்றெடுத்தாள். அவர்கள் மனாசே, எப்ராயீம் ஆவர்.

21 பென்யமினின் புதல்வர்; பேலா, பெக்கேர், அசுபேல், கேரா, நாகமான், ஏகி, ரோசு, முப்பிம், குப்பிம், அருது.

22 ராகேல் வழிவந்த யாக்கோபின் புதல்வர் மொத்தம் பதினான்கு பேர்.

23 தாணின் மகன், ஆசும்.

24 நப்தலியின் புதல்வர்; யாகுட்சேல், கூனி, ஏட்சேர், சில்லேம்.

25 இவர்கள் லாபான் தன் மகள் ராகேலுக்குக் கொடுத்த பில்காவின் பிள்ளைகள். இவள் வழியாக யாக்கோபுக்குப் பிறந்தவர்கள் மொத்தம் ஏழுபேர்.

26 யாக்கோபின் புதல்வர்களுடைய மனைவியரைத் தவிர அவரது வழிமரபாக எகிப்தில் குடிபுகுந்தோர் மொத்தம் அறுபத்தாறுபேர்.

27 எகிப்து நாட்டில் யோசேப்பிற்குப் பிறந்த புதல்வர்களோ இருவர். ஆகவே, எகிப்தில் குடிபுகுந்த யாக்கோபின் குடும்பத்தார் எல்லோரும் எழுபதுபேர் ஆவர்.

28 கோசேன் பகுதியில் யோசேப்பு தம்மை வந்து சந்திக்குமாறு யாக்கோபு யூதாவைத் தமக்குமுன் அனுப்பியிருந்தார். அவர்கள் கோசேன் வந்து சேர்ந்தார்கள்.

29 யோசேப்பு தம் தேரைப் பூட்டிக்கொண்டு தம் தந்தை இஸ்ரயேலைச் சந்திக்கச் சென்றார். யோசேப்பு தம் தந்தையைக் கண்டவுடன் அவரை அரவணைத்து அவர் தோளில் சாய்ந்து கொண்டு வெகுநேரம் அழுதார்.

30 அப்பொழுது, இஸ்ரயேல் யோசேப்பிடம், “இப்பொழுது நான் சாகத் தயார். நீ உயிரோடு தான் இருக்கிறாய்! உன் முகத்தைக் கண்ணாரக் கண்டுவிட்டேன்!” என்றார்.

31 பின்னர், யோசேப்பு தம் சகோதரரையும் தம் தந்தையின் குடும்பத்தாரையும் நோக்கி, “நான் பார்வோனிடம் போய், ‘கானான் நாட்டிலிருந்து என் சகோதரரும், என் தந்தையின் குடும்பத்தாரும் என்னிடம் வந்திருக்கிறார்கள்.

32 அவர்கள் மந்தை மேய்ப்பவர்கள். மந்தைகளை வைத்துப் பேணுவது அவர்கள் தொழில். அவர்கள் தங்கள் ஆடு மாடுகளையும் தங்களுக்குச் சொந்தமான யாவற்றையும் தங்களுடன் கொண்டு வந்திருக்கிறார்கள்” என்று அவருக்குத் தெரிவிப்பேன்.

33 பார்வோன் உங்களை வரவழைத்து, “உங்கள் தொழில் என்ன?” என்று கேட்கும்பொழுது,

34 நீங்கள் மறுமொழியாக, “எங்கள் சிறுவயது முதல் இந்நாள்வரை உம் பணியாளர்களாகிய நாங்கள் எங்கள் மூதாதையரைப்போல் மேய்ப்பவர்களாய் இருக்கிறோம்” என்று சொல்லுங்கள். நீங்கள் கோசேன் பகுதியில் குடியிருக்கும்படி அனுமதிக்கப்படுவீர்கள். ஏனெனில், ஆடு மேய்ப்பவர்கள் அனைவரும் எகிப்தியருக்கு அருவருப்பானவர்கள்” என்றார்.

Genesis 46 ERV IRV TRV