ஆதியாகமம் 29

fullscreen1 யாக்கோபு பிரயாணம்பண்ணி, கீழ்த்திசையாரின் தேசத்தில் போய்ச் சேர்ந்தான்.

fullscreen2 அங்கே வயல்வெளியிலே ஒரு கிணற்றையும், அதின் அருகே மடக்கியிருக்கிற மூன்று ஆட்டுமந்தைகளையும் கண்டான்; அந்தக் கிணற்றிலே மந்தைகளுக்குத் தண்ணீர் காட்டுவார்கள்; அந்தக் கிணற்றின் வாய் ஒரு பெரிய கல்லினால் அடைக்கப் பட்டிருந்தது.

fullscreen3 அவ்விடத்தில் மந்தைகளெல்லாம் சேர்ந்தபின் கிணற்றின் வாயிலிருக்கும் கல்லை மேய்ப்பர் புரட்டி, ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டி, மறுபடியும் கல்லை முன்னிருந்தபடி கிணற்றின் வாயில் வைப்பார்கள்.

fullscreen4 யாக்கோபு அவர்களைப் பார்த்து: சகோதரரே, நீங்கள் எவ்விடத்தார் என்றான்; அவர்கள், நாங்கள் ஆரான் ஊரார் என்றார்கள்.

fullscreen5 அப்பொழுது அவன்: நாகோரின் குமாரனாகிய லாபானை அறிவீர்களா என்று கேட்டான்; அறிவோம் என்றார்கள்.

fullscreen6 அவன் சுகமாயிருக்கிறானா என்று விசாரித்தான்; அதற்கு அவர்கள்: சுகமாயிருக்கிறான்; அவன் குமாரத்தியாகிய ராகேல், அதோ, ஆடுகளை ஓட்டிக்கொண்டு வருகிறாள் என்று சொன்னார்கள்.

fullscreen7 அப்பொழுது அவன்: இன்னும் வெகுபொழுதிருக்கிறதே; இது மந்தைகளைச் சேர்க்கிற வேளை அல்லவே, ஆடுகளுக்குத் தண்ணீர்காட்டி, இன்னும் மேயவிடலாம் என்றான்.

fullscreen8 அதற்கு அவர்கள்: எல்லா மந்தைகளும் சேருமுன்னே அப்படிச் செய்யக் கூடாது; சேர்ந்தபின் கிணற்றின் வாயிலுள்ள கல்லைப் புரட்டுவார்கள்; அப்பொழுது ஆடுகளுக்குத் தண்ணீர் காட்டுவோம் என்றார்கள்.

fullscreen9 அவர்களோடே அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே, தன் தகப்பனுடைய ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த ராகேல் அந்த ஆடுகளை ஓட்டிக்கொண்டு வந்தாள்.

fullscreen10 யாக்கோபு தன் தாயின் சகோதரனான லாபானுடைய குமாரத்தியாகிய ராகேலையும், தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளையும் கண்டபோது, யாக்கோபு போய், கிணற்றின் வாயிலிருந்த கல்லைப் புரட்டி, தன் தாயின் சகோதரனாகிய லாபானின் ஆடுகளுக்கு தண்ணீர் காட்டினான்.

fullscreen11 பின்பு யாக்கோபு ராகேலை முத்தஞ்செய்து, சத்தமிட்டு அழுது,

fullscreen12 தான் அவள் தகப்பனுடைய மருமகனென்றும், ரெபெக்காளின் குமாரனென்றும் ராகேலுக்கு அறிவித்தான். அவள் ஓடிப்போய் தன் தகப்பனுக்கு அறிவித்தாள்.

fullscreen13 லாபான் தன் சகோதரியின் குமாரனாகிய யாக்கோபுடைய செய்தியைக் கேட்டபோது, அவனுக்கு எதிர்கொண்டோடி, அவனைக் கட்டிக்கொண்டு முத்தஞ்செய்து, தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டுபோனான்; அவன் தன் காரியங்களையெல்லாம் விபரமாய் லாபானுக்குச் சொன்னான்.

fullscreen14 அப்பொழுது லாபான்: நீ என் எலும்பும் என் மாம்சமுமானவன் என்றான். ஒரு மாதம்வரைக்கும் யாக்கோபு அவனிடத்தில் தங்கினான்.

fullscreen15 பின்பு லாபான் யாக்கோபை நோக்கி: நீ என் மருமகனாயிருப்பதினால், சும்மா எனக்கு வேலை செய்யலாமா? சம்பளம் எவ்வளவு கேட்கிறாய், சொல் என்றான்.

fullscreen16 லாபானுக்கு இரண்டு குமாரத்திகள் இருந்தார்கள்; மூத்தவள் பேர் லேயாள், இளையவள் பேர் ராகேல்.

fullscreen17 லேயாளுடைய கண்கள் கூச்சப் பார்வையாயிருந்தது: ராகேலோ ரூபவதியும் பார்வைக்கு அழகானவளுமாயிருந்தாள்.

fullscreen18 யாக்கோபு ராகேல்பேரில் பிரியப்பட்டு: உம்முடைய இளைய குமாரத்தியாகிய ராகேலுக்காக உம்மிடத்தில் ஏழு வருஷம் வேலைசெய்கிறேன் என்றான்.

fullscreen19 அதற்கு லாபான்: நான் அவளை அந்நிய புருஷனுக்குக் கொடுக்கிறதைப்பார்க்கிலும், அவளை உனக்குக் கொடுக்கிறது உத்தமம், என்னிடத்தில் தரித்திரு என்றான்.

fullscreen20 அந்தப்படியே யாக்கோபு ராகேலுக்காக ஏழு வருஷம் வேலைசெய்தான்; அவள் பேரில் இருந்த பிரியத்தினாலே அந்த வருஷங்கள் அவனுக்குக் கொஞ்சநாளாகத் தோன்றினது.

fullscreen21 பின்பு யாக்கோபு லாபானை நோக்கி: என் நாட்கள் நிறைவேறினபடியால், என் மனைவியினிடத்தில் நான் சேரும்படி அவளை எனக்குத் தரவேண்டும் என்றான்.

fullscreen22 அப்பொழுது லாபான் அவ்விடத்து மனிதர் எல்லாரையும் கூடிவரச்செய்து விருந்துபண்ணினான்.

fullscreen23 அன்று இரவிலே அவன் தன் குமாரத்தியாகிய லேயாளை அழைத்துக்கொண்டுபோய், அவனிடத்தில் விட்டான்; அவளை அவன் சேர்ந்தான்.

fullscreen24 லாபான் தன் வேலைக்காரியாகிய சில்பாளைத் தன் குமாரத்தியாகிய லேயாளுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான்.

fullscreen25 காலையிலே, இதோ, அவள் லேயாள் என்று யாக்கோபு கண்டு, லாபானை நோக்கி: ஏன் எனக்கு இப்படிச் செய்தீர்? ராகேலுக்காக அல்லவா உம்மிடத்தில் வேலைசெய்தேன்; பின்னை ஏன் எனக்கு வஞ்சகம்பண்ணினீர் என்றான்.

fullscreen26 அதற்கு லாபான்: மூத்தவள் இருக்க இளையவளைக் கொடுப்பது இவ்விடத்து வழக்கம் அல்ல.

fullscreen27 இவளுடைய ஏழு நாளை நிறைவேற்று; அவளையும் உனக்குத் தருவேன்; அவளுக்காகவும் நீ இன்னும் ஏழு வருஷம் என்னிடத்தில் வேலைசெய் என்றான்.

fullscreen28 அந்தப்படியே யாக்கோபு, இவளுடைய ஏழுநாளை நிறைவேற்றினான். அப்பொழுது தன் குமாரத்தியாகிய ராகேலையும் அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான்.

fullscreen29 மேலும் லாபான் தன் வேலைக்காரியாகிய பில்காளைத் தன் குமாரத்தியாகிய ராகேலுக்கு வேலைக்காரியாகக் கொடுத்தான்.

fullscreen30 யாக்கோபு ராகேலையும் சேர்ந்தான்; லேயாளைப்பார்க்கிலும் ராகேலை அவன் அதிகமாய் நேசித்து, பின்னும் ஏழு வருஷம் அவனிடத்தில் சேவித்தான்.

fullscreen31 லேயாள் அற்பமாய் எண்ணப்பட்டாள் என்று கர்த்தர் கண்டு, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்; ராகேலோ மலடியாயிருந்தாள்.

fullscreen32 லேயாள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: கர்த்தர் என் சிறுமையைப் பார்த்தருளினார்; இப்பொழுது என் புருஷன் என்னை நேசிப்பார் என்று சொல்லி, அவனுக்கு ரூபன் என்று பேரிட்டாள்.

fullscreen33 மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: நான் அற்பமாய் எண்ணப்பட்டதைக் கர்த்தர் கேட்டருளி இவனையும் எனக்குத் தந்தார் என்று சொல்லி, அவனுக்குச் சிமியோன் என்று பேரிட்டாள்.

fullscreen34 பின்னும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: என் புருஷனுக்கு மூன்று குமாரனைப் பெற்றபடியால் அவர் இப்பொழுது என்னோடே சேர்ந்திருப்பார் என்று சொல்லி, அவனுக்கு லேவி என்று பேரிட்டாள்.

fullscreen35 மறுபடியும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று இப்பொழுது கர்த்தரைத் துதிப்பேன் என்று சொல்லி, அவனுக்கு யூதா என்று பேரிட்டாள்; பிற்பாடு அவளுக்குப் பிள்ளைப்பேறு நின்றுபோயிற்று.