1 மானிடா! நீ கோகுக்கு எதிராய் இறைவாக்குரைத்துச் சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே. மெசேக்கு மற்றும் தூபால் இனங்களின் முதன்மைத் தலைவனாகிய கோகே! நான் உனக்கு எதிராய் இருக்கிறேன்.

2 நான் உன்னைத் திருப்பி, தொலைவடக்குப் பகுதிகளிலிருந்து விரட்டி, இஸ்ரயேல் மலைகளுக்கு இழுத்துக்கொண்டு வருவேன்.

3 பின்னர் உன் இடக்கையில் இருக்கும் வில்லை நான் தட்டிவிட்டு வலக்கையில் இருக்கும் அம்புகளைக் கீழே விழச் செய்வேன்.

4 இஸ்ரயேல் மலைகளில் நீ வீழ்வாய்; நீயும் உன் எல்லாப் படைகளும், உன்னோடிருக்கும் மக்களினங்களும் வீழ்வீர். நான் உன்னை ஊன் தின்னும் எல்லாப் பறவைகளுக்கும், காட்டு விலங்குகளுக்கும் இரையாகக் கொடுப்பேன்.

5 நீ திறந்தவெளியில் வீழ்வாய். நானே இதை உரைத்தேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

6 நான் மாகோகின்மீதும் கடலோரங்களில் பாதுகாப்பாய் வாழும் எல்லார்மீதும் நெருப்பை அனுப்புவேன். அப்பொழுது நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்துகொள்வர்.

7 நான் என் மக்களாம் இஸ்ரயேலில் என் திருப்பெயரை அறியச் செய்வேன். என் திருப்பெயரை இனிமேல் தீட்டுப்படவிடமாட்டேன். ஆண்டவராகிய நானே இஸ்ரயேலில் தூயவராய் இருப்பவர் என வேற்றினத்தார் அறிந்துகொள்வர்.

8 இதோ வருகிறது! இது உறுதியாய் நடந்தேறும்; இதுவே நான் குறிப்பிட்ட நாள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

9 அப்போது, இஸ்ரயேல் நகர்களில் வாழ்வோர் வெளியேறிப் படைக்கலன்களாகிய சிறியதும் பெரியதுமான கேடயங்களையும் வில்களையும் அம்புகளையும், வேல்களையும் ஈட்டிகளையும் எரிபொருளாய்ப் பயன்படுத்துவர். ஏழாண்டுகள் இவ்வாறு எரிபொருளாய்ப் பயன்படுத்துவர்.

10 அவர்கள் விறகுகளை வயல் வெளியிலிருந்து சேகரிக்கவோ காடுகளிலிருந்து வெட்டவோ மாட்டார்கள். ஏனெனில் படைக்கலன்களை அவர்கள் எரிபொருளாய்ப் பயன்படுத்துவர். அவர்கள் தங்களைக் கொள்ளையடித்தவர்களைக் கொள்ளையடிப்பர், தங்களைச் சூறையாடியோரைச் சூறையாடுவர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

11 அந்த நாளில் இஸ்ரயேல் கடலுக்குக் கிழக்கே வழிப்போக்கர்களின் பள்ளத்தாக்கில் கோகுக்கு ஓர் இடுகாடு கொடுப்பேன். அது வழிப்போக்கரின் பாதையில் இருக்கும். ஏனெனில் கோகையும் அவனுடைய கூட்டத்தினர் அனைவரையும் அவர்கள் அங்கே புதைப்பர். எனவே அதை ‘அமோன் கோகு பள்ளத்தாக்கு’ என அழைப்பர்.

12 நாட்டைத் தூய்மைப்படுத்தும்பொருட்டு இஸ்ரயேல் வீட்டார் அவர்களை ஏழு மாதங்கள் புதைப்பர்.

13 நாட்டின் எல்லா மக்களும் அவர்களைப் புதைப்பர். நான் என் மாட்சியை வெளிப்படுத்தும் அந்நாள் அவர்களுக்குச் சிறப்பான நாளாய் இருக்கும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

14 நாட்டைத் தூய்மைப்படுத்த வழிப்போக்கர் குழு ஒன்றை அவர்கள் அழைப்பர். அக்குழுவினர் அவர்கள் நாடெங்கும் சென்று மண்ணில் எஞ்சிக் கிடக்கும் பிணங்களைத் தேடிப்புதைப்பர். ஏழு மாத முடிவில் அவர்கள் இப்படித் தேடத் தொடங்குவர்.

15 அவர்கள் நாடெங்கும் செல்கையில் ஒருவன் ஒரு மனித எலும்புக்கூட்டைப் பார்த்தால், புதைப்போர் அதனை அமோன் கோகு பள்ளத்தாக்கில் புதைக்கும் வரை, அதன் அருகில் ஓர் அடையாளம் வைக்க வேண்டும்.

16 இத்துடன் ‘அமோனா’ எனும் பெயரில் ஒரு நகரும் இருக்கும்; இவ்வாறு அவர்கள் நாட்டைத் தூய்மைப்படுத்துவர்.

17 மானிடா! தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: எல்லாப் பறவைகளையும் எல்லாக் காட்டுவிலங்குகளையும் அழைத்துச் சொல்; வாருங்கள்! எப்பக்கமுமிருந்து நான் தயாரிக்கும் என் பலிக்கு ஒன்று திரண்டு வாருங்கள். உங்களுக்கென இஸ்ரயேல் மலையில் நடைபெறும் பெரிய பலி அது. நீங்கள் அங்கே இறைச்சி உண்டு, இரத்தம் குடிக்கலாம்.

18 வலிமைமிகு மனிதரின் சதையை உண்பீர்கள். நாட்டின் தலைவர்களின் இரத்தத்தைக் குடிப்பீர்கள். அவற்றை, ஆட்டுக்கிடாய்கள், செம்மறிகள், வெள்ளாட்டுக் கிடாய்கள், பாசானின் கொழுத்த காளைகள் ஆகியவற்றை உண்பது போல உண்பீர்கள்.

19 நான் உங்களுக்கெனத் தயாரிக்கும் பலியில் நீங்கள் தெவிட்டுமளவுக்குக் கொழுப்பை உண்டு, வெறியுண்டாகுமளவுக்கு இரத்தத்தைக் குடிப்பீர்கள்.

20 என் மேசையில் நீங்கள் குதிரைகளையும் குதிரை வீரர்களையும் வலிமைமிகு மனிதர்களையும் எல்லாப் போர் வீரர்களையும் வயிறார உண்பீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

21 நான் என் மாட்சியை வேற்றினத்தாரிடையே வெளிப்படுத்துவேன். நான் நிறைவேற்றும் தண்டனைத் தீர்ப்பையும் அவர்கள் மீது விழும் என் கைவலிமையையும் எல்லா மக்களினத்தாரும் காண்பர்.

22 ஆண்டவராகிய நானே அவர்களின் கடவுள் என்பதை அந்நாளிலிருந்து இஸ்ரயேல் வீட்டார் அறிந்துகொள்வர்.

23 இஸ்ரயேல் மக்கள் எனக்கு உண்மையற்றவராய் நடந்ததால் தங்கள் பாவத்தின் பொருட்டுச் சிறையிருப்புக்குச் சென்றனர் என வேற்றினத்தார் அறிந்துகொள்வர். எனவே நான் என் முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக்கொண்டு அவர்களைப் பகைவர்களிள் கையில் ஒப்புவித்தேன். அவர்கள் எல்லாரும் வாளால் வீழ்ந்தனர்.

24 நான் அவர்களின் தீட்டுக்கும் குற்றங்களுக்கும் ஏற்றபடி அவர்களை நடத்தி என் முகத்தை அவர்களிடமிருந்து திருப்பிக்கொண்டேன்.⒫

25 எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: இப்போது நான் யாக்கோபை முன்னைய நன்னிலைக்குக் கொணர்வேன். இஸ்ரயேல் வீட்டார் அனைவர் மீதும் மனம் இரங்குவேன். என் திருப்பெயர் குறித்து பேரார்வம் கொண்டிருப்பேன்.

26 அவர்கள் தங்கள் நாட்டில் எவருடைய அச்சுறுத்தலுமின்றிப் பாதுகாப்புடன் வாழும்போது, தங்கள் அவமானத்தையும் அவர்கள் எனக்குச் செய்த எல்லா நம்பிக்கைத் துரோகங்களையும் மறந்து விடுவர்.

27 நான் அவர்களை வேற்றினத்தாரிடமிருந்தும் பகை நாடுகளிலிருந்தும் கூட்டிச் சேர்க்கையில், நான் தூயவர் என அவர்கள் வழியாய்ப் பல மக்களினங்கள் முன்னால் வெளிப்படுத்துவேன்.

28 அப்போது ஆண்டவராகிய நானே அவர்களின் கடவுள் என்று அவர்கள் அறிந்து கொள்வர். ஏனெனில் நான் அவர்களை வேற்றித்தாரிடையே சிறையிருப்புக்கு அனுப்பினாலும் அவர்களது நாட்டிற்குள் கூட்டிச் சேர்ப்பேன். அவர்களில் யாரையும் அங்கே விட்டுவிட மாட்டேன்.

29 நான் இனி ஒருபோதும் என் முகத்தை அவர்களிடமிருந்து மறைத்துக் கொள்ளமாட்டேன். இஸ்ரயேல் வீட்டார் மீது என் ஆவியைப் பொழிவேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

Ezekiel 39 ERV IRV TRV