1 ஏழாம் ஆண்டில், ஐந்தாம் மாதத்தின் பத்தாம் நாளன்று, இஸ்ரயேல் மக்களின் பெரியோருள் சிலர் ஆண்டவரின் திருவுளத்தைக் கேட்டறிய வந்து, என் முன் அமர்ந்தனர்.

2 அப்போது ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது;

3 “மானிடா! இஸ்ரயேல் மக்களின் பெரியோரிடம் பேசி அவர்களுக்கு அறிவி; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; நீங்கள் என் திருவுளத்தைக் கேட்டறிய வந்திருக்கிறீர்களோ? என்மேல் ஆணை! நீங்கள் கேட்டறிய நான் விடமாட்டேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

4 மானிடா! நீயே அவர்களுக்குத் தீர்ப்பளிக்கமாட்டாயா? நீயே அவர்களுக்குத் தீர்ப்புக் கூறமாட்டாயா? அவர்களுடைய மூதாதையரின் வெறுக்கத்தக்க செயல்களை அவர்கள் அறியச் செய்.

5 அவர்களிடம் சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: நான் இஸ்ரயேலைத் தேர்ந்துகொண்ட நாளில், யாக்கோபின் வழிமரபினர்க்கு உறுதிமொழி அளித்து, எகிப்து நாட்டில் என்னை அவர்களுக்கு வெளிப்படுத்தி, ‘நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்’ என்று ஆணையிட்டுக் கூறினேன்.

6 நான் அவர்களை எகிப்து நாட்டினின்றும் வெளிக் கொணர்ந்து, நான் அவர்களுக்காகத் தேர்ந்தெடுத்ததும், பாலும் தேனும் வழிந்தோடுவதும், எல்லா நாடுகளிலும் பெருமைமிக்கதுமான நாட்டுக்கு அவர்களை அழைத்துச் செல்வேன் என்றும் அவர்களிடம் ஆணையிட்டுக் கூறினேன்.

7 மேலும், அவர்களைப் பார்த்து, ‘ஒவ்வொருவரும் தம் கண்களுக்கு விருந்தளிக்கும் அருவருப்பானவற்றை விட்டெறியட்டும். எகிப்தின் தெய்வச் சிலைகளால் உங்களையே தீட்டுப்படுத்திக் கொள்ளாதீர்கள்; நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர்,’என்று சொன்னேன்.

8 அவர்களோ, எனக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர். எனக்குச் செவி சாய்க்க மறுத்தனர். அவர்களின் கண்களுக்கு விருந்தளித்த அருவருப்பானவற்றை எவனும் விட்டெறியவில்லை; எகிப்தின் தெய்வச் சிலைகளை ஒதுக்கிவிடவுமில்லை. ஆகையால் எகிப்து நாட்டின் நடுவில் என் ஆத்திரத்தை அவர்கள்மேல் கொட்டி, என் சினத்தைத் தீர்த்துக் கொள்வேன் என்று நான் கூறினேன்.

9 ஆயினும் அவர்களைச் சூழ்ந்திருந்த வேற்றினத்தார் முன்னிலையில் என் பெயர் மாசுறாதபடி நான் நடந்து கொண்டேன். இவ்வேற்றினத்தாரின் கண்முன் அன்றோ நான் அவர்களை எகிப்து நாட்டினின்று வெளிக்கொணர்ந்து, என்னை அவர்களுக்கு வெளிப்படுத்தினேன்.

10 ஆக, நான் அவர்களை எகிப்து நாட்டினின்று புறப்படச் செய்து, பாலைநிலத்துக்குக் கூட்டி வந்து,

11 வாழ்வளிக்கும் என் நியமங்களை அவர்களுக்குக் கொடுத்து, வாழ்வுதரும் என் நீதிநெறிகளை அவர்களுக்கு வெளிப்படுத்தினேன். அவற்றைக் கடைப்பிடிப்போர் வாழ்வு பெறுவர்.

12 மேலும், அவர்களைப் புனிதப்படுத்தும் ஆண்டவர் நானே என்பதை அவர்கள் அறிந்து கொள்ளும்படி, என் ஓய்வு நாள்களை எனக்கும் அவர்களுக்குமிடையே ஓர் அடையாளமாகத் தந்தருளினேன்.

13 ஆனால், இஸ்ரயேல் வீட்டார் பாலை நிலத்தில் எனக்கெதிராகக் கிளர்ச்சி செய்தனர். கடைப்பிடிப்போர்க்கு வாழ்வளிக்கும் என் நியமங்களின்படி அவர்கள் நடக்காமல், என் நீதி நெறிகளை ஒதுக்கி வைத்துவிட்டு என் ஓய்வு நாள்களையும் மிகவும் இழிவுபடுத்தினார்கள். எனவே, பாலைநிலத்திலேயே என் ஆத்திரத்தை அவர்கள் மேல் கொட்டி அவர்களை அழித்துவிடப்போவதாக நான் கூறினேன்.

14 ஆயினும், நான் இவர்களைப் புறப்படச் செய்ததைக் கண்ட வேற்றினத்தார் முன்னிலையில் என் பெயர் மாசுறாதபடி நடந்து கொண்டேன்.

15 மேலும் நான் அவர்களுக்கு அளிக்கவிருந்ததும், பாலும் தேனும் வழிந்தோடுவதும், எல்லா நாடுகளிலும் பெருமை மிக்கதுமான நாட்டுக்கு அவர்களை அழைத்துச் செல்ல மாட்டேன் என்று பாலை நிலத்தில் அவர்களிடம் ஆணையிட்டுக் கூறினேன்.

16 ஏனெனில், என் நீதிநெறிகளை அவர்கள் ஒதுக்கி விட்டனர். என் நியமங்களின்படி அவர்கள் நடக்கவில்லை. என் ஓய்வுநாள்களை அவர்கள் இழிவுபடுத்தினார்கள். அவர்களின் தெய்வச்சிலைகளையே அவர்களின் இதயம் நாடியது.

17 ஆயினும், நான் அவர்களைக் கண்ணோக்கி, அழிக்காமல் விட்டு விட்டேன். பாலை நிலத்தில் நான் அவர்களை முழுவதும் ஒழித்துவிடவில்லை.

18 ஆனால், பாலை நிலத்திலேயே அவர்களுடைய புதல்வர்களைப் பார்த்து; “உங்கள் மூதாதையரின் நியமங்களின்படி நடவாதீர்கள். அவர்களுடைய நீதிநெறிகளைக் கைக்கொள்ளாதீர்கள். அவர்களுடைய தெய்வச் சிலைகளால் உங்களையே தீட்டுப்படுத்திக் கொள்ளாதீர்கள்.

19 நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர். என் நியமங்களின்படி நடந்து, என் நீதிநெறிகளைக் கடைப்பிடித்து ஒழுகுங்கள்.

20 என் ஓய்வு நாள்களைப் புனிதப்படுத்தங்கள். அவை எனக்கும் உங்களுக்குமிடையே ஓர் அடையாளமாகத் திகழும். அப்போது நானே உங்கள் கடவுளாகிய ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள், என்று நான் கூறினேன்.

21 ஆனால், அவர்களின் பிள்ளைகளோ எனக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்தனர். கடைப்பிடிப்போர்க்கு வாழ்வளிக்கும் என் நியமங்களின்படி அவர்கள் நடக்கவில்லை. என் நீதிநெறிகளையும் கடைப்பிடித்து ஒழுகவில்லை. என் ஓய்வு நாள்களை அவர்கள் இழிவுபடுத்தினார்கள். எனவே, பாலைநிலத்திலேயே என் ஆத்திரத்தை அவர்கள்மேல் கொட்டி, என் சினத்தைத் தீர்த்துக் கொள்வேன் என்று நான் கூறினேன்.

22 ஆயினும், நான் இவர்களைப் புறப்படச் செய்ததைக் கண்ட பிறவினத்தார் முன்னிலையில் என் பெயர் மாசுறாதபடி நான் நடந்துகொண்டு என்னை அடக்கிக் கொண்டேன்.

23 மேலும் அவர்களை வேற்றினத்தாரிடையே பிரிந்துபோகச் செய்வதாகவும், நாடுகளிடையே சிதறிப்போகச் செய்வதாகவும், பாலைநிலத்தில் அவர்களுக்கெதிராக ஆணையிட்டுக் கூறினேன்.

24 ஏனெனில், என் நீதிநெறிகளின்படி அவர்கள் செய்யவில்லை; என் நியமங்களை ஒதுக்கிவிட்டார்கள்; என் ஓய்வு நாள்களை இழிவுபடுத்தினார்கள்; அவர்களின் மூதாதையரின் தெய்வச் சிலைகளை வணங்கினார்கள்.

25 ஆகவே அவர்களுக்கு நன்மை பயக்காத நியமங்களையும், வாழ்வு தராத நீதி நெறிகளையும் நான் அவர்களுக்கு அளித்தேன்.

26 அவர்கள் தங்கள் தலைப்பிள்ளைகளை எல்லாம் பலியிடச் செய்து அவர்களின் அந்தக் காணிக்கைகளாலேயே அவர்களைத் தீட்டுப்படச் செய்தேன். அவர்களைத் திகிலுறச் செய்யவும். நானே ஆண்டவர் என்று அவர்கள் அறியும் பொருட்டும் இவ்வாறு செய்தேன்.⒫

27 ஆகையால், மானிடா! இஸ்ரயேல் வீட்டாருக்கு எடுத்துச் சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; எனக்கு மீண்டும் மீண்டும் துரோகம் செய்து, உங்கள் மூதாதையர் என்னை இழிவுபடுத்தியுள்ளனர்.

28 நான் அவர்களுக்குத் தருவதாக வாக்களித்திருந்த நாட்டுக்கு அவர்களை அழைத்து வந்ததும், அங்கிருந்த ஒவ்வொரு உயர்ந்த குன்றையும், தழைத்த மரத்தையும் கண்டவுடன் ஆங்காங்கே தங்கள் பலிகளைச் செலுத்தினார்கள். எனக்குச் சினமூட்டும் நேர்ச்சைகளைப் படைத்தார்கள்; நறுமணப் புகை காட்டினார்கள்; நீர்மப்பலிகளை வார்த்தார்கள்.

29 நான் அவர்களை நோக்கி, “நீங்கள் செல்லும் தொழுகை மேடு எங்கே உள்ளது?” என்று கேட்டேன். எனவே அதன் பெயர் “பாமா” என்று இந்நாள்வரை வழங்குகிறது.

30 ஆகவே இஸ்ரயேல் வீட்டாரிடம் சொல்; உங்கள் மூதாதையரைப் பின்பற்றி நீங்களும் தீட்டுப்படுவீர்களோ? அவர்களின் அருவருக்கத்தக்கவற்றின் பின் திரிந்து நீங்களும் விபசாரம் செய்வீர்களோ?

31 இன்று வரையிலும் நீங்கள் உங்கள் காணிக்கைகளை அர்ப்பணித்து, உங்கள் பிள்ளைகளை நெருப்புக்குப் பலியாக்கி, உங்கள் தெய்வச்சிலைகள் அனைத்தாலும் உங்களைத் தீட்டுப்படுத்திக் கொள்கிறீர்கள். இஸ்ரயேல் வீட்டாரே, நீங்களா என் திருவுளத்தைக் கேட்டறியப் போகிறர்கள்? என்மேல் ஆணை! நீங்கள் கேட்டறிய நான் விடமாட்டேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

32 மேலும் மரத்தையும் கல்லையும் வழிபட்டு, ‘நாங்களும் வேற்றினத்தாரைப் போலவும், வேற்றுநாடுகளின் குடிமக்களைப் போலவும் இருப்போம்’ என்று உங்கள் மனத்தில் எழும் எண்ணம் நிறைவேறப் போவதே இல்லை.

33 இது என் மேல் ஆணை! என்கிறார் தலைவராகிய ஆண்டவர். வலிமைமிகு கையோடும், ஓங்கிய புயத்தோடும், வெளிப்படும் சினத்தோடும் நான் உங்களை ஆள்வேன்.

34 வலிமைமிகு கையோடும், ஓங்கிய புயத்தோடும், சீறிவரும் சினத்தோடும், பிற மக்களினங்களிடையே இருந்து உங்களை அழைத்து வந்து, நீங்கள் சிதறிக் கிடக்கும் நாடுகளிலிருந்து உங்களை ஒன்று சேர்ப்பேன்.

35 உங்களை வேற்றினத்தாரின் பாலைநிலத்துக்கு அழைத்துச்சென்று, அங்கே உங்களை நேருக்கு நேராய்த் தீர்ப்பிடுவேன்.

36 எகிப்து நாட்டின் பாலை நிலத்தில் உங்கள் மூதாதையரைத் தீர்ப்பிட்டது போல் உங்களையும் நான் தீர்ப்பிடுவேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

37 உங்களை என் கோலின் கீழ்க் கடந்து போகச் செய்து, உடன்படிக்கையின் கட்டுக்குள் கொண்டு வருவேன்.

38 கிளர்ச்சி செய்வோரையும் என்னை மீறி நடப்போரையும் உங்களிடையே இருந்து களைந்து விடுவேன். அவர்கள் வாழும் நாட்டிலிருந்து நான் அவர்களையும் அழைத்து வருவேன். ஆனால் இஸ்ரயேல் நாட்டினுள் அவர்கள் புகமாட்டார்கள். அப்போது நானே ஆண்டவர் என்று அறிந்து கொள்வீர்கள்.

39 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; இஸ்ரயேல் வீட்டாரே! நீங்கள் ஒவ்வொருவரும் போய் உங்கள் தெய்வச் சிலைகளை வழிபட்டுக் கொள்ளுங்கள். ஆனால் பின்னர் நீங்கள் எனக்குச் செவிசாய்த்து உங்கள் காணிக்கைகளாலும் தெய்வச் சிலைகளாலும் என் பெயரை மாசுபடுத்தவே மாட்டீர்கள்.

40 என் திருமலையில், இஸ்ரயேல் நாட்டு மலைமுகட்டில் வாழும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் அந்நாட்டில் என்னை வழிபடுவர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். அங்கே நான் அவர்களை ஏற்றுக் கொள்வேன். அங்கே உங்கள் புனிதப்பலிகள் அனைத்தோடும் படையல்களையும் முதற்பலன் காணிக்கைகளையும் நான் எதிர்பார்த்து நிற்பேன்.

41 பிற மக்களினங்களிடையே இருந்து உங்களை அழைத்து வருவேன். நீங்கள் சிதறிக்கிடக்கும் நாடுகளிலிருந்து நான் ஒன்று சேர்க்கும்போது, உங்களை நறுமணக் காணிக்கையாக ஏற்றுக் கொள்வேன். அப்போது நான் தூயவர் என்பது உங்கள் மூலம் வேற்றினத்தார்க்கு வெளிப்படும்.

42 இவ்வாறு நான் உங்கள் மூதாதையர்க்குத் தருவதாக ஆணையிட்டுக் கூறிய இஸ்ரயேல் நாட்டுக்கு நான் உங்களை அழைத்து வரும்போது, நானே ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வீர்கள்.

43 உங்கள் வழிகளையும், உங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்ளச் செய்த செயல்கள் அனைத்தையும் அங்கே நீங்கள் நினைத்து, நீங்கள் புரிந்த எல்லாத் தீச்செயல்களின் பொருட்டும் உங்களையே மிகவும் நொந்து கொள்வீர்கள்.

44 இஸ்ரயேல் வீட்டாரே! உங்கள் தீய வழிகளுக்கும், கெட்ட பழக்கங்களுக்கும் ஏற்ப நான் உங்களை நடத்தாமல், என் பெயரின் பொருட்டு உங்களுக்கு இவ்வாறெல்லாம் செய்யும்போது, நானே ஆண்டவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.

45 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.

46 மானிடா! நீ உன் முகத்தைத் தெற்கு நோக்கித் திருப்பி, தென் பகுதிக்கு எதிராக அருளுரையாற்றி, நெகேபின் நிலப்பரப்பின் காட்டு வெளிக்கு எதிராக இறைவாக்குரை.

47 நெகேபிலிருக்கும் காட்டு வெளிக்குச் சொல். ஆண்டவரின் வாக்கைக் கேள். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: இதோ! நான் உனக்குத் தீ வைப்பேன். அது உன்னிலிருக்கும் எல்லாப் பச்சை மரங்களையும் பட்ட மரங்களையும் எரித்து விடும். கொழுந்து விட்டெரியும் அப்பிழம்பு அணைக்கப்படாது. தென்திசைமுதல் வடதிசைவரை இருக்கும் எல்லா முகங்களும் அதனால் கருகிப் போகும்.

48 ஆண்டவராகிய நானே அதைக் கொளுத்தினேன் என்பதை யாவரும் அறிந்து கொள்வார்கள். அதுவோ அணைந்து போகாது.

49 அப்போது நான், தலைவராகிய ஆண்டவரே! ‘இவன் உவமைகளைப் புனைபவன் அன்றோ? என்று என்னைக் குறித்துச் சொல்கிறார்களே’ என்று முறையிட்டேன்.

Ezekiel 20 ERV IRV TRV