பிரசங்கி 4

fullscreen1 இதற்குப் பின்பு நான் சூரியனுக்குக்கீழே செய்யப்படும் கொடுமைகளையெல்லாம் சிந்தித்துப்பார்த்தேன்; இதோ ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைக் கண்டேன், அவர்களைத் தேற்றுவாரில்லை; ஒடுக்குகிறவர்கள் பட்சத்தில் பெலமிருந்தது, அப்படியிருந்தும் தேற்றுவாரில்லை.

fullscreen2 ஆதலால் இன்னும் உயிரோடிருந்து பிழைக்கிறவர்களைப்பார்க்கிலும் முன்னமே காலஞ்சென்று செத்தவனையே பாக்கியவான்கள் என்றேன்.

fullscreen3 இவ்விரு திறத்தாருடைய நிலைமையைப்பார்க்கிலும் இன்னும் பிறவாதவனுடைய நிலைமையே வாசி; அவன் சூரியனுக்குக் கீழே செய்யப்படும் துர்ச்செய்கைகளைக் காணவில்லையே.

fullscreen4 மனுஷன் படும் எல்லாப் பிரயாசமும், பயன்படும் எல்லாக் கிரியையும், அயலானுடைய பொறாமைக்கு ஏதுவாயிருக்கிறதை நான் கண்டேன்; இதுவும் மாயை, மனதுக்கு சஞ்சலமுமாயிருக்கிறது.

fullscreen5 மூடன் தன் கைகளைக் கட்டிக்கொண்டு, தன் சதையையே தின்கிறான்.

fullscreen6 வருத்தத்தோடும் மனச்சஞ்சலத்தோடும் இரண்டு கைப்பிடியும் நிறையக்கொண்டிருப்பதைப்பார்க்கிலும், அமைச்சலோடு ஒருகைப்பிடி நிறையக் கொண்டிருப்பதே நலம்.

fullscreen7 பின்பு நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே செய்யப்படும் மாயையான வேறொரு காரியத்தைக் கண்டேன்.

fullscreen8 ஒருவன் ஒண்டிக்காரனாயிருக்கிறான்; அவனுக்கு உடனாளியுமில்லை, அவனுக்குப் பிள்ளையும் சகோதரனுமில்லை; அப்படியிருந்தும் அவன்படும் பிரயாசத்துக்கு முடிவில்லை; அவன் கண் ஐசுவரியத்தால் திருப்தியாகிறதுமில்லை; நான் ஒரு நன்மையையும் அநுபவியாமல் யாருக்காகப் பிரயாசப்படுகிறேன் என்று அவன் சிந்திக்கிறதுமில்லை; இதுவும் மாயை தீராத தொல்லை.

fullscreen9 ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும்.

fullscreen10 ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே.

fullscreen11 இரண்டுபேராய்ப் படுத்துக்கொண்டிருந்தால் அவர்களுக்குச் சூடுண்டாகும்; ஒண்டியாயிருக்கிறவனுக்குச் சூடுண்டாவது எப்படி?

fullscreen12 ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்துநிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது.

fullscreen13 இனி ஆலோசனையைக் கேளாத கிழவனும் மூடனுமாகிய ராஜாவைப்பார்க்கிலும், ஏழையும் ஞானியுமாகிய இளைஞனே வாசி.

fullscreen14 அரசாளச் சிறைச்சாலையிலிருந்து புறப்படுவாருமுண்டு; ராஜாங்கத்தில் பிறந்து ஏழையாவாருமுண்டு.

fullscreen15 சூரியனுக்குக்கீழே ஜீவனுள்ளோர் யாவரும் ராஜாவின் பட்டத்திற்கு வரப்போகிற பிள்ளையின் பட்சத்தில் சார்ந்திருப்பதைக் கண்டேன்.

fullscreen16 அவர்களுக்குமுன் அப்படிச் செய்த ஜனங்களின் இலக்கத்திற்கு முடிவில்லை; இனி இருப்பவர்கள் இவன்மேலும் பிரியம் வைக்காமற்போவார்கள்; இதுவும் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.