2 தெசலோனிக்கேயர் 3

fullscreen1 கடைசியாக, சகோதரரே, உங்களிடத்தில் கர்த்தருடைய வசனம் பரம்பி மகிமைப்படுகிறதுபோல, எவ்விடத்திலும் பரம்பி மகிமைப்படும்படிக்கும்,

fullscreen2 துர்க்குணராகிய பொல்லாத மனுஷர் கையினின்று நாங்கள் விடுவிக்கப்படும்படிக்கும், எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்; விசுவாசம் எல்லாரிடத்திலுமில்லையே.

fullscreen3 கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்.

fullscreen4 மேலும், நாங்கள் கட்டளையிடுகிறவைகளை நீங்கள் செய்துவருகிறீர்களென்றும், இனிமேலும் செய்வீர்களென்றும், உங்களைக்குறித்துக் கர்த்தருக்குள் நம்பிக்கையாயிருக்கிறோம்.

fullscreen5 கர்த்தர் உங்கள் இருதயங்களை தேவனைப்பற்றும் அன்புக்கும் கிறிஸ்துவின் பொறுமைக்கும் நேராய் நடத்துவாராக.

fullscreen6 மேலும், சகோதரரே, எங்களிடத்தில் பெற்றுக்கொண்ட முறைமையின்படி நடவாமல், ஒழுங்கற்று நடக்கிற எந்தச் சகோதரரையும் நீங்கள் விட்டு விலகவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்திலே, உங்களுக்குக் கட்டளையிடுகிறோம்.

fullscreen7 இன்னவிதமாய் எங்களைப் பின்பற்றவேண்டுமென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்களே; நாங்கள் உங்களுக்குள்ளே ஒழுங்கற்று நடவாமலும்,

fullscreen8 ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம்.

fullscreen9 உங்கள்மேல் பாரத்தை வைப்பதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லையென்பதினாலே அப்படிச் செய்யாமல், நீங்கள் எங்களைப் பின்பற்றும்படிக்கு நாங்கள் உங்களுக்கு மாதிரியாயிருக்கவேன்டுமென்றே அப்படிச் செய்தோம்.

fullscreen10 ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.

fullscreen11 உங்களில் சிலர் யாதொரு வேலையும் செய்யாமல், வீண் அலுவற்காரராய், ஒழுங்கற்றுத் திரிகிறார்களென்று கேள்விப்படுகிறோம்.

fullscreen12 இப்படிப்பட்டவர்கள் அமைதலோடே வேலைசெய்து, தங்கள் சொந்தச் சாப்பாட்டைச் சாப்பிடவேண்டுமென்று, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே அவர்களுக்குக் கட்டளையிட்டுப் புத்திசொல்லுகிறோம்.

fullscreen13 சகோதரரே, நீங்கள் நன்மை செய்வதிலே சோர்ந்துபோகாமலிருங்கள்.

fullscreen14 மேலும், இந்த நிருபத்தில் சொல்லிய எங்கள் வசனத்துக்கு ஒருவன் கீழ்ப்படியாமற்போனால், அவனைக் குறித்துக்கொண்டு, அவன் வெட்கப்படும்படிக்கு அவனுடனே கலவாதிருங்கள்.

fullscreen15 ஆனாலும் அவனைச் சத்துருவாக எண்ணாமல், சகோதரனாக எண்ணி, அவனுக்குப் புத்திசொல்லுங்கள்.

fullscreen16 சமாதானத்தின் கர்த்தர்தாமே எப்பொழுதும் சகலவிதத்திலும் உங்களுக்குச் சமாதானத்தைத் தந்தருளுவாராக. கர்த்தர் உங்களனைவரோடுங்கூட இருப்பாராக.

fullscreen17 பவுலாகிய நான் என் கையெழுத்தாலே உங்களை வாழ்த்துகிறேன், நிருபங்கள்தோறும் இதுவே அடையாளம்; இப்படியே எழுதுகிறேன்.

fullscreen18 நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை உங்களனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்.