1 தாவீது தன் ஆட்களை எண்ணிப் பார்த்தான். 1,000 பேருக்கு ஒரு படைத்தலைவனாகவும் 100 பேருக்கு ஒரு படைத்தலைவனாகவும் ஜனங்களை வழி நடத்துவோரை நியமித்தான்.

2 ஜனங்களை மூன்று பிரிவினராகப் பிரித்தான். பின்பு ஜனங்களை வெளியே அனுப்பினான். மூன்றில் ஒரு பகுதி ஜனங்களை யோவாப் வழி நடத்தினான். மற்றொரு மூன்றில் ஒரு பகுதியினரை செருயாவின் மகனும் யோவாபின் சகோதரனுமாகிய அபிசாய் வழி நடத்தினான். காத்திலிருந்து வந்த ஈத்தாயி மூன்றாவது பிரிவு ஜனங்களை வழி நடத்தினான். தாவீது அரசன் ஜனங்களிடம், “நானும் உங்களோடு வருவேன்” என்று கூறினான்.

3 ஆனால் ஜனங்கள், “இல்லை, நீங்கள் எங்களோடு வரக்கூடாது. ஏனெனில் நாங்கள் (யுத்தத்தில்) ஓடிவிட்டால் அப்சலோமின் ஆட்கள் பொருட்படுத்தமாட்டார்கள். நம்மில் பாதி பேர் கொல்லப்பட்டாலும் அப்சலோமின் ஆட்கள் கவலைப்படமாட்டார்கள். ஆனால் நீங்கள் எங்களில் 10,000 பேருக்கு ஒப்பானவர்கள்! நீங்கள் நகரத்தில் தங்கியருப்பதே நல்லது. பின்பு எங்களுக்கு உதவி தேவையானால், நீங்கள் எங்களுக்கு உதவ முடியும்” என்றார்கள்.

4 அரசன் ஜனங்களை நோக்கி, “நீங்கள் சிறந்ததென முடிவெடுக்கும் காரியத்தையே நான் செய்வேன்” என்றான். பின்பு அரசன் வாயிலருகே வந்து நின்றான். படை வெளியே சென்றது. அவர்கள் 100 பேராக மற்றும் 1,000 பேராக அணிவகுத்துச் சென்றனர்.

5 யோவாப், அபிசாயி, ஈத்தாய் ஆகியோருக்கு அரசன் ஒரு கட்டளையிட்டான். அவன், “இதை எனக்காகச் செய்யுங்கள் அப்சலோமிடம் மென்மையாய் நடந்துக்கொள்ளுங்கள்” என்றான். ஜனங்கள் எல்லாரும் அப்சலோமைக் குறித்து படைத் தலைவர்களுக்கு அரசன் இட்ட கட்டளையைக் கேட்டார்கள்.

6 அப்சலோமின் இஸ்ரவேலருடைய படையைத் தாவீதின் படை களத்தில் சந்தித்தது. அவர்கள் எப்பிராயீமின் காட்டில் சண்டையிட்டனர்.

7 தாவீதின் படை இஸ்ரவேலரைத் தோற்கடித்தது. அன்றைக்கு 20,000 ஆட்கள் கொல்லப்பட்டனர்.

8 அப்போர் தேசமெங்கும் பரவியது. அன்றைக்கு வாளால் மரித்தோரைக்காட்டிலும் காட்டில் மரித்தவர்களே அதிக எண்ணிகையில் இருந்தனர்.

9 அப்சலோம் தாவீதின் அதிகாரிகளைச் சந்திக்க நேர்ந்தது. அப்சலோம் தனது கோவேறு கழுதையின் மேலேறிக்கொண்டு, தப்பித்துச்செல்ல முயன்றான். ஒரு பெரிய கர்வாலி மரத்தின் கீழே அந்தக் கோவேறு கழுதைச் சென்றது. அதன் கிளைகள் அடர்த்தியாக இருந்தன. அப்சலோமின் தலை மரத்தில் அகப்பட்டுக்கொண்டது, அவன் ஏறி வந்த கோவேறு கழுதை ஓடிவிட்டதால், அப்சலோம் நிலத்திற்கு மேலாகத் தொங்கிக்கொண்டிருந்தான்.

10 ஒரு மனிதன் நிகழ்ந்தது அனைத்தையும் பார்த்தான். அவன் யோவாபிடம், “ஓர் கர்வாலி மரத்தில் அப்சலோம் தொங்கிக்கொண்டிருப்பதை நான் கண்டேன்” என்றான்.

11 யோவாப் அம்மனிதனை நோக்கி, “ஏன் அவனைக் கொன்று நிலத்தில் விழும்படியாகச் செய்யவில்லை? நான் உனக்கு ஒரு கச்சையையும் 10 வெள்ளிக் காசையும் கொடுத்திருப்பேன்!” என்றான்.

12 அம்மனிதன் யோவாபை நோக்கி, “நீங்கள் எனக்கு 1,000 வெள்ளிக்காசைக் கொடுத்தாலும் நான் அரசனின் மகனைக் காயப்படுத்த முயலமாட்டேன். ஏனெனில் உங்களுக்கும், அபிசாயிக்கும், ஈத்தாயிக்கும் அரசன் இட்ட கட்டளையை நாங்கள் கேட்டோம். அரசன், ‘இளைய அப்சலோமைக் காயப்படுத்தாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்’ என்றான்.

13 நான் அப்சலோமைக் கொன்றால் அரசன் கண்டு பிடித்துவிடுவான். அப்போது நீங்களே என்னைத் தண்டிப்பீர்கள்” என்றான்.

14 யோவாப், “நான் உன்னோடு இங்குப் பொழுதை வீணாக்கமாட்டேன்!” என்றான். அப்சலோம் உயிரோடு இன்னும் ஓக் மரத்தில் தொங்கிக்கொண்டிருந்தான். யோவாப் மூன்று ஈட்டிகளை எடுத்தான். அவற்றை அப்சலோமை நோக்கி எறிந்தான். அவை அப்சலோமின் இருதயத்தை துளைத்தன.

15 யோவாபுக்கு யுத்தத்தில் உதவிய பத்து இளம் வீரர்கள் இருந்தனர். அந்த பத்து பேரும் அப்சலோமைச் சூழ்ந்து நின்று அவனைக் கொன்றனர்.

16 யோவாப் எக்காளம் ஊதி அப்சலோமின் இஸ்ரவேலரைத் துரத்துவதை நிறுத்துமாறு அறிவித்தான்.

17 பின்பு அப்சலோமின் உடலை யோவாபின் ஆட்கள் எடுத்துக் காட்டிலிருந்த ஒரு பெரிய குழியில் இட்டனர். அக்குழியைப் பெரிய கற்களால் மூடினார்கள். அப்சலோமைப் பின்பற்றிய இஸ்ரவேலர் ஓடிப்போய், தங்கள் வீடுகளை அடைந்தனர்.

18 அப்சலோம் உயிரோடிருந்தபோது அரசனின் பள்ளதாக்கில் ஒரு தூணை நிறுவினான். அப்சலோம். “எனது பெயரை நிலைநிறுத்துவதற்கு எனக்கு மகன் இல்லை” என்றான். எனவே அத்தூணுக்கு தனது பெயரிட்டான். அத்தூண் இன்றைக்கும் “அப்சலோமின் ஞாபகச் சின்னம்” என்று அழைக்கப்படுகிறது.

19 சாதோக்கின் மகனாகிய அகிமாஸ் யோவாபை நோக்கி, “நான் ஓடிப்போய் தாவீது அரசனுக்குச் செய்தியைத் தெரிவிப்பேன். அவருக்காக பகைவனை கர்த்தர் தாமே அழித்தார் என்று சொல்வேன்” என்றான்.

20 யோவாப் அகிமாசிடம், “வேண்டாம், நீ இன்று தாவீதுக்குச் செய்தியைச் சொல்ல வேண்டாம். இன்றல்ல, இன்னொரு நாள் செய்தியைக் கொண்டு போகலாம். ஏனெனில், அரசனின் மகன் மரித்துவிட்டான்” என்றான்.

21 பின்பு யோவாப் கூஷியை நோக்கி, “நீ பார்த்த காரியங்களை அரசனிடம் போய்ச் சொல்” என்றான். கூஷியன் யோவாபை வணங்கினான். பின்பு அவன் தாவீதுக்குச் சொல்ல ஓடினான்.

22 ஆனால் சாதோக்கின் மகனாகிய அகிமாஸ் யோவாபை மீண்டும் வேண்டியவனாய், “எது நடந்தாலும் பரவாயில்லை. கூஷியன் பின்னால் ஓட என்னை அனுமதியுங்கள்!” என்றான். யோவாப், “மகனே, ஏன் நீ செய்தியைக் கொண்டுபோக வேண்டும் என நினைக்கிறாய்? நீ கூறப்போகும் செய்திக்கு எந்தப் பரிசையும் பெறமாட்டாய்” என்றான்.

23 அகிமாஸ் பதிலாக, “எது நடந்தாலும் பரவாயில்லை, நான் ஓடுவேன்” என்றான். யோவாப் அகிமாசிடம், “ஓடு!” என்றான். அப்போது அகிமாஸ் யோர்தான் பள்ளதாக்கு வழியாக ஓடினான். அவன் கூஷியனை முந்திவிட்டான்.

24 நகர வாயில்கள் இரண்டிற்கும் நடுவே தாவீது உட்கார்ந்திருந்தான். வாயில் மதிலின் கூரையில் காவலன் போய் நின்றான். ஒரு மனிதன் தனித்து ஓடிவருகிறதைக் காவலன் கண்டான்.

25 காவலன் தாவீது அரசனிடம் உரக்கச் சொன்னான். தாவீது அரசன், “அம்மனிதன் தனித்து வந்தால் அவன் செய்திக் கொண்டு வருகிறான்” என்றான். அம்மனிதன் அருகே வந்துக்கொண்டிருந்தான்.

26 காவலன் மற்றொரு மனிதனும் ஓடி வருவதைக் கண்டான். காவலன் வாயிற் காப்போனிடம், “பார்! மற்றொருவனும் தனியாக ஓடிவருகிறான்!” என்றான். அரசன், “அவனும் செய்திக் கொண்டு வருகிறான்” என்றான்.

27 காவலன், “சாதோக்கின் மகன் அகிமாசைப் போல் முதல் மனிதன் ஓடிவருகிறான்” என்றான். அரசன், “அகிமாஸ் நல்ல மனிதன். அவன் நற்செய்தியைக் கொண்டு வரக்கூடும்” என்றான்.

28 அகிமாஸ் அரசனிடம், “எல்லாம் நல்லபடி நடந்தது!” என்றான். அகிமாஸ் அரசனை வணங்கினான். அவனது முகம் நிலத்திற்கு அருகில் வந்தது. அகிமாஸ், “உங்கள் தேவனாகிய கர்த்தரை துதியுங்கள்! எனது அரசனாகிய ஆண்டவனே, உங்களுக்கு எதிரான ஆட்களைக் கர்த்தர் தோற்கடித்தார்” என்றான்.

29 அரசன், “இளம் அப்சலோம் நலமா?” என்று கேட்டான். அகிமாஸ் பதிலாக, “யோவாப் என்னை அனுப்பியபோது பெரிய சந்தடியிருந்தது. அது என்னதென்று எனக்குத் தெரியாது” என்றான்.

30 அப்போது அரசன், “இங்கே வந்து நின்று காத்திரு” என்றான். அகிமாசும் தள்ளிப்போய் நின்றான்.

31 கூஷியன் வந்தான். அவன், “எனது ஆண்டவனாகிய அரசனுக்குச் செய்தி இது. உங்களுக்கு எதிரான ஜனங்களை கர்த்தர் இன்று தண்டித்தார்!” என்றான்.

32 அரசன் கூஷியனை நோக்கி, “இளம் அப்சலோம் நலமா?” என்றான். கூஷியன் பதிலாக, “உங்களுக்கு எதிராக வரும் பகைவர்களும் ஜனங்களும் இந்த இளம் மனிதனைப் (அப்சலோமைப்) போல தண்டிக்கப்படுவார்கள் என நம்புகிறேன்” என்றான்.

33 அப்போது அப்சலோம் மரித்துவிட்டான் என்பதை அரசன் அறிந்தான். அரசன் நிலை குலைந்தான். நகரவாயிலின் மேலிருந்த அறைக்கு அவன் சென்றான். அங்கே அவன் அழுதான். போகும்போது, “எனது மகன் அப்சலோமே, என் மகன் அப்சலோமே! நான் உனக்காக மரித்திருக்கலாம் என விரும்புகிறேன். என் மகனே, என் மகனே!” என்றான்.

2 Samuel 18 ERV IRV TRV