1 சாலொமோன் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் ஆண்டான்.

2 கீழ்க்கண்ட முக்கிய அதிகாரிகள் அனைவரும் அவனது ஆட்சிக்கு உதவினார்கள். சாதோக்கின் மகனான அசரியா ஆசாரியனாக இருந்தான்.

3 சீசாவின் மகனான ஏலிகோரேப்பும், அகியாவும் எழுத்தாளர்கள். அகிலூதின் மகன் யோசபாத் பதிவாளர்.

4 யோய்தாவின் மகன் பெனாயா படைத் தலைவன். சாதோக்கும் அபியத்தாரும் ஆசாரியர்கள்.

5 நாத்தானின் மகன் அசரியா மணியக்காரர்களின் தலைவன். நாத்தானின் மகன் சாபூத் அரசனின் அன்புக்குரிய பிரதானியும், ஆசாரியனுமாயிருந்தான்.

6 அகீஷார் அரண்மனை விசாரிப்புக்காரன். அப்தாவின் மகன் அதோனிராம் அடிமைகளுக்கு பொறுப்பு அதிகாரி.

7 இஸ்ரவேல் பன்னிரெண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. சாலொமோன் ஒவ்வொரு மாவட்டத்தையும் ஆள ஆளுநர்களை தேர்ந்தெடுத்தான். இவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் உணவுப் பொருட்களைச் சேகரித்து அரசனுக்கும் அவனது குடும்பத்திற்கும் அளித்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதத்திற்குப் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

8 கீழ்க்கண்டவர்களே அந்தப் பன்னிரண்டு ஆளுநர்களாவார்கள்: எப்பிராயீம் மலைநாட்டின் ஆளுநர் ஊரின் குமாரன்.

9 தேக்கேரின் குமாரன், மாக்காத்சிலும், சால்பீமிலும் பெத்ஷிமேசிலும், ஏலோன் பெத்தானானிலும் ஆளுநராக இருந்தான்.

10 ஏசேதின் குமாரன் அறுபோத்திலும், சோகோப்பிலும், எப்பேர் சீமையிலும் ஆளுநராக இருந்தான்.

11 அபினதாபின் மகன் இரதத்தின் ஆளுநர். இவன்சாலொமோனின் மகளான தாபாத்தை மணந்திருந்தான்.

12 அகிலூதின் மகனான பானா, தானாகு, மெகிதோ, சர்த்தனாவுக்கு அருகிலும் ஆளுநர். இது யெஸ்ரயேலுக்கு கீழாகவும் பெத்செயான் முதல் ஆபேல்மெகொல்லா வரையிலும் யக்மெயாமுக்கு அப்புறம் மட்டும் இருந்தது.

13 ராமோத் கீலேயாத்தின் ஆளுநராக கேபேரின் மகன் இருந்தான். கீலேயாத் மனாசேயின் மகனான யாவீரின் எல்லா ஊர்களுக்கும் கிராமங்களுக்கும் அவன் ஆளுநராக இருந்தான். மேலும் பாசானில் அர்கோப் மாவட்டத்திற்கும் அவன் ஆளுநராக இருந்தான். இப்பகுதியில் பெரிய மதில்களைக்கொண்ட 60 நகரங்கள் இருந்தன. இந்த நகரங்களின் வாயில்களில் வெண்கலக்கம்பிகளும் இருந்தன.

14 இத்தோவின் மகனான அகினதாப் மக்னாயீமில் ஆளுநர்.

15 அகிமாஸ் நப்தலியில் ஆளுநர். இவன் சாலொமோனின் மகளான பஸ்மாத்தை மணந்திருந்தான்.

16 ஊசாயின் மகனான பானா ஆசேரிலும் ஆலோத்திலும் ஆளுநர்.

17 பருவாவின் மகன் யோசபாத் இசக்காரின் ஆளுநர்.

18 ஏலாவின் மகன் சீமேயி பென்யமீனில் ஆளுநர்.

19 ஊரியின் மகன் கேபேர் கீலேயாத் நாட்டில் ஆளுநர். இங்கு எமோரியரின் அரசனாகிய சீகோனும் பாசானின் அரசனாகிய ஓகு ஜனங்களும் வாழ்ந்தனர். எனினும் இவன் மட்டுமே இங்கு ஆளுநராக இருந்தான்.

20 யூதாவிலும், இஸ்ரவேலிலும் ஏராளமான ஜனங்கள் வாழ்ந்தனர். அவர்களின் எண்ணிக்கை கடற்கரை மணலைப் போன்றிருந்தது. அவர்கள் உண்டும், குடித்தும் மகிழ்ச்சியோடு இருந்தனர்.

21 சாலொமோன், ஐபிராத்து ஆறு முதல் பெலிஸ்தர் நாடுவரையுள்ள நாடுகளை ஆண்டு வந்தான். அவனது எல்லை எகிப்து வரை விரிந்திருந்தது. இந்நாடுகள் சாலொமோனுக்குப் பரிசுகளை அனுப்பி அவனது வாழ்வு முழுவதும் கட்டுபட்டு வாழ்ந்தது.

22 சாலொமோனுக்கும் அவனோடு மேஜையில் உணவைச் சேர்ந்து உண்ணும் மற்றவர்களுக்கும் ஒரு நாளுக்கு கீழ்க்கண்ட பொருட்கள் தேவைப்பட்டன: 30 மரக்கால் மெல்லியமாவு, 60 மரக்கால் மாவு, 10 கொழுத்த பசுமாடுகள், 2 நன்றாக மேய்ந்த பசுமாடுகள், 100 ஆடுகள், கலைமான்கள், வெளிமான்கள், பறவைகள்.

24 சாலொமோன் ஐபிராத்து ஆற்றின் மேற்கிலுள்ள நாடுகளையும் அரசாண்டான். இது திப்சா முதல் ஆசா மட்டும் இருந்தது. சாலொமோன் தனது இராஜ்யத்தின் எல்லாப் பக்கங்களிலும் சமாதானமாயிருந்தான்.

25 சாலொமோனின் வாழ்நாளில் யூதா மற்றும் இஸ்ரவேலில் உள்ள ஜனங்கள், தாண் முதல் பெயெர்செபா வரை சமாதானத்தோடும் பாதுகாப்போடும் இருந்தனர். இவர்கள் தமது அத்திமரத்தின் நிழலிலும், திராட்சைகொடியின் நிழலிலும் சமாதானத்தோடு குடியிருந்தனர்.

26 சாலொமோனிடம் 4,000 இரதக் குதிரை லாயங்களும் 12,000 குதிரை வீரர்களும் இருந்தனர்.

27 ஒவ்வொரு மாதமும் பன்னிரெண்டு மாவட்டங்களிலும் உள்ள ஆளுநர்களும் அரசனான சாலொமோனுக்கு வேண்டியவற்றையெல்லாம் கொடுத்து வந்தனர். அரசனோடு உணவு அருந்துகின்றவர்களுக்கு இது போதுமானதாக இருந்தது.

28 இரதக் குதிரைகளுக்கும் சவாரிக்குதிரைகளுக்கும் தேவையான வைக்கோல், பார்லி போன்றவற்றையும் அவர்கள் கொடுத்துவந்தனர். ஒவ்வொரு வரும் தங்கள் பொறுப்பின்படி தேவையான தானியங்களை உரிய இடத்திற்குக் கொண்டுவந்தனர்.

29 தேவன் சாலொமோனைச் சிறந்த ஞானியாக்கினார். அவனால் பலவற்றைப் புரிந்துகொள்ளமுடிந்தது. அவனது ஞானம் கற்பனைக்குள் அடங்காததாக இருந்தது.

30 கிழக்கே உள்ள அறிஞர்களின் ஞானத்தைவிட சாலொமோனின் ஞானம் மிகச்சிறந்ததாக இருந்தது. எகிப்திலுள்ள அனைவரின் ஞானத்தை விடவும் சிறந்த ஞானமாக இருந்தது.

31 பூமியிலுள்ள அனைவரையும்விட புத்திசாலியாக இருந்தான். எஸ்ராகியனாகிய ஏத்தானிலும், ஏமான், கல்கோல், தர்தா என்னும் மாகோலின் ஜனங்களைவிடவும் ஞானவானாயிருந்தான். இஸ்ரவேல் மற்றும் யூதாவைச் சுற்றியுள்ள நாடுகள் அனைத்திலும் அவன் புகழ் பெற்றவனாக விளங்கினான்.

32 அவனது வாழ்வில் 3,000 நீதிமொழிகளையும் 1,005 பாடல்களையும் எழுதினான்.

33 சாலொமோனுக்கு இயற்கையைப்பற்றி தெரியும். வீபனோனில் உள்ள கேதுரு மரங்கள் முதற் கொண்டு சுவரில் முளைக்கிற ஈசோப்பு பூண்டுவரை பலவிதமான தாவரங்கள்பற்றி கற்பித்தான். மேலும் அவன் மிருகங்கள் பறவைகள் ஊர்வன மற்றும் மீன்கள் ஆகியவற்றைப் பற்றியும் கற்பித்தான்.

34 அவனது ஞானத்தைப்பற்றி தெரிந்துக்கொள்ள பல நாடுகளில் உள்ளவர்களும் வந்தனர். பலநாட்டு அரசர்களும் தம் நாட்டிலுள்ள அறிஞர்களை அனுப்பி சாலொமோனைக் கவனிக்க வைத்தனர்.

1 Kings 4 ERV IRV TRV