Psalm 10 in Tamil ERV Compare Tamil Easy Reading Version
1 கர்த்தாவே, ஏன் தூரத்தில் தங்கியிருக்கிறீர்? தொல்லைக்குள்ளான மனிதர்கள் உம்மைக் காண இயலாது.
2 பெருமையும் தீமையும் நிறைந்த ஜனங்கள் தீய திட்டங்களை வகுக்கிறார்கள். அவர்கள் ஏழை ஜனங்களைத் துன்புறுத்துகிறார்கள்.
3 தீய ஜனங்கள் தங்களுடைய இச்சைகளைக் குறித்து பெருமை கொள்வார்கள். பேராசை மிக்க அந்த ஜனங்கள் தேவனை சபிப்பார்கள். இவ்வகையாகக் கர்த்தரைத் தாங்கள் வெறுப்பதைத் தீயோர் வெளிக்காட்டுவார்கள்.
4 தீயோர் தேவனைப் பின்பற்றக்கூடாத அளவிற்கு அதிகப் பெருமை பாராட்டுவார்கள். அவர்கள் தீய திட்டங்களையே வகுப்பார்கள். தேவனே இல்லை என்பது போல அவர்கள் நடந்துகொள்வார்கள்.
5 தீயோர் எப்போதும் கோணலானவற்றையே செய்வார்கள். அவர்கள் தேவனுடைய சட்டங்களையும், நல்ல போதகத்தையும் கவனிப்பதில்லை. தேவனுடைய பகைவர்கள் அவரது போதனைகளை அசட்டை செய்வார்கள்.
6 தீயவை அவர்களை ஒருபோதும் அணுகுவதில்லை என நினைப்பார்கள். அவர்கள், “நாம் களிகூருவோம், நமக்குத் தண்டனையில்லை” என்பார்கள்.
7 அந்த ஜனங்கள் எப்போதும் சபிப்பார்கள். அவர்கள் பிறரைக் குறித்து எப்போதும் தீமையே பேசுவார்கள். அவர்கள் தீயவற்றையே திட்டமிடுவார்கள்.
8 அந்த ஜனங்கள் மறைவிடங்களில் இருந்து ஜனங்களைப் பிடிக்கக் காத்திருப்பார்கள். ஜனங்களைக் காயப்படுத்த மறைந்திருப்பார்கள். ஒன்றும் அறியாத ஜனங்களை அவர்கள் கொல்லுவார்கள்.
9 மிருகங்களை உண்பதற்காய் கொல்லக் காத்திருக்கும் சிங்கங்களைப் போலாவார்கள். ஏழைகளை அவர்கள் தாக்குவார்கள். தீயோர் விரிக்கும் வலையில் அவர்கள் சிக்குவார்கள்.
10 மீண்டும் மீண்டும் ஏழைகளையும் பிறரையும் துன்புறுத்துவார்கள்.
11 எனவே, “தேவன் எங்களை மறந்தார். என்றென்றும் தேவன் நம்மிடமிருந்து விலகிச் சென்றார். நமக்கு ஏற்படும் தீமையை தேவன் பாரார்!” என்று அந்த ஏழைகள் எண்ணத் தொடங்குவார்கள்.
12 கர்த்தாவே, எழுந்து செயல்படும்! தேவனே, அத்தீயோரைத் தண்டியும்! ஏழைகளை மறவாதேயும்!
13 தீயோர் தேவனுக்கு எதிராவார்கள். ஏனென்றால் தேவன் தங்களைத் தண்டி யாரென்று எண்ணுவார்கள்.
14 கர்த்தாவே, தீயோர் செய்யும் கொடுமைகளையும் தீமைகளையும் நீர் காண்கிறீர். அவற்றைப் பார்த்து ஏதேனும் செய்யும்! தொல்லைக்குள்ளான ஜனங்கள் உதவி கேட்டு உம்மிடம் வருவார்கள். கர்த்தாவே, நீரே அனாதைகளுக்கு உதவுகிறவர். எனவே அவர்களுக்கு உதவும்!
15 கர்த்தாவே, தீயோரை அழித்துவிடும்.
16 உமது நாட்டிலிருந்து அவர்களை அகற்றும். அப்பொழுது ஆண்டவராகிய நீரே நித்திய ராஜா என்பதை எல்லோரும் உணருவார்கள்.
17 கர்த்தாவே, ஏழை ஜனங்களின் தேவையைக் கேட்டறிந்தீர். அவர்கள் ஜெபங்களைக் கேட்டு, அதன்படி செய்யும்.
18 கர்த்தாவே, பெற்றோரற்ற பிள்ளைகளைக் காப்பாற்றும். துயரப்பட்டுக் கொண்டிருக்கும் ஜனங்களை மேலும் தொல்லைகளால் வருந்தவிடாதிரும். தீயோர் இங்கு வாழாதபடி அவர்களை அச்சுறுத்தும்.