1 இவை அனைத்தும் சாலொமோனின் நீதி மொழிகள் (ஞானவார்த்தைகள்): ஒரு ஞானமுள்ள மகன் தன் தந்தைக்கு மகிழ்ச்சியைத் தருகிறான். ஆனால் ஒரு முட்டாள் மகனோ தன் தாயைத் துன்பப்படுத்துகிறான்.
2 ஒருவன் தீயச் செயல்கள் மூலம் பொருள் சம்பாதித்திருந்தால் அவை பயனற்றவை. ஆனால் நல்ல செயல்களைச் செய்வது உன்னை மரணத்திலிருந்து காப்பாற்றும்.
3 கர்த்தர் நல்லவர்களைப் பற்றியே அக்கறைகொள்கிறார். அவர் அவர்களுக்குத் தேவையான உணவைக் கொடுக்கிறார். தீய ஜனங்கள் விரும்புகிறவற்றை கர்த்தர் அவர்களிடமிருந்து எடுத்துக்கொள்கிறார்.
4 ஒரு சோம்பேறி ஏழ்மையாக இருப்பான். ஆனால் கடினமாக உழைக்கிற ஒருவன் செல்வந்தனாகிறான்.
5 சுறுசுறுப்பானவன் சரியான நேரத்தில் அறுவடை செய்துகொள்கிறான். ஆனால் அறுவடைக் காலத்தில் தூங்கிவிட்டு, பயிர்களைச் சேகரிக்காமல் இருப்பவன், வெட்கத்திற்குரியவனாவான்.
6 நல்லவர்களை ஆசீர்வதிக்கும்படி ஜனங்கள் தேவனை வேண்டுகின்றனர். தீயவர்களும் நல்லவற்றைப் பற்றிக் கூறலாம். ஆனால் அது, அவர்களின் கெட்ட செயல்களுக்கான திட்டங்களை மறைப்பதாக இருக்கும்.
7 நல்லவர்கள் நல்ல நினைவுகளை விட்டுவிட்டுச் செல்கின்றனர். தீயவர்கள் விரைவில் மறக்கப்படுகின்றனர்.
8 யாராவது நல்லவற்றைச் செய்யவேண்டும் எனக்கூறினால் அறிவாளி அதற்குக் கீழ்ப்படிகிறான். ஆனால் அறிவில்லாதவனோ வீண்விவாதம் செய்து தனக்குத் துன்பத்தைத் தேடிக்கொள்கிறான்.
9 ஒரு நல்ல நேர்மையான மனிதன் பாதுகாப்பாக இருக்கிறான். ஆனால் கோணல் வழியில் செல்பவன் பிடிபடுவான்.
10 உண்மையை மறைக்கிறவன் துன்பங்களுக்குக் காரணமாகிறான். வெளிப்படையாகப் பேசுபவன் சமாதானத்தை உருவாக்குகிறான்.
11 நல்லவனின் வார்த்தைகள் வாழ்வைச் சிறப்புள்ளதாக்கும். ஆனால் தீயவனின் வார்த்தைகள் அவனுக்குள்ளிருக்கும் தீயவற்றையே வெளிக்காட்டும்.
12 வெறுப்பு விவாதங்களுக்குக் காரணமாகும். ஆனால் அன்பானது ஜனங்கள் செய்கிற தவறுகளை மன்னித்து விடும்.
13 அறிவுள்ளவர்கள் கேட்கத்தக்கவற்றைப் பேசுகிறார்கள். ஆனால் அறிவில்லாதவர்களோ பாடம் கற்றுக்கொள்வதற்கு முன்னதாகவே தண்டிக்கப்படவேண்டும்.
14 அறிவுள்ளவர்கள் அமைதியாக இருந்து புதியவற்றைக் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் அறிவில்லாதவர்கள் வீணாகப் பேசி தமக்குத்தாமே துன்பத்தை வரவ ழைத்துக்கொள்கிறார்கள்.
15 செல்வமானது செல்வந்தர்களைக் காப்பாற்றுகிறது. வறுமையோ ஏழைகளை அழிக்கிறது.
16 ஒருவன் நன்மை செய்தால் அதற்காகப் பாராட்டப்படுவான். அவனுக்கு வாழ்க்கை கொடுக்கப்படுகிறது. தீமையோ தண்டனையை மட்டுமே பெற்றுத் தருகிறது.
17 ஒருவன் தனது தண்டனைகளிலிருந்து கற்றுக்கொண்டால் அது மற்றவர்களின் வாழ்க்கைக்கு உதவும். ஆனால் கற்றுக் கொள்ள மறுக்கிறவன் ஜனங்களைத் தவறான வழியிலேயே அழைத்துச் செல்வான்.
18 வெறுப்பை மறைக்கிறவனால் பொய் சொல்ல முடியும். ஆனால் ஒரு முட்டாளால் வதந்தியை மட்டுமே பரப்ப முடியும்.
19 அதிகமாகப் பேசுகிற ஒருவன் துன்பத்திற்கு ஆளாகிறான். ஞானம் உள்ளவன் அமைதியாக இருக்கக் கற்றுக்கொள்கிறான்.
20 நல்லவனின் வார்த்தைகள் சுத்தமான வெள்ளியைப் போன்றவை. தீயவனின் எண்ணங்களோ பயனற்றவை.
21 நல்லவனின் வார்த்தைகள் பலருக்கு உதவியாக இருக்கும். ஆனால் முட்டாள்களோ அறிவீனத்தால் அழிந்துபோவார்கள்.
22 கர்த்தருடைய ஆசீர்வாதம் உனக்கு உண்மையான செல்வத்தைக் கொண்டுவரும். அது துன்பத்தைக் கொண்டு வராது.
23 அறிவில்லாதவர்களோ தவறு செய்வதில் மகிழ்ச்சி அடைவார்கள். அறிவுள்ளவனோ ஞானத்தால் மகிழ்ச்சி அடைகிறான்.
24 தீயவர்கள் தாங்கள் அஞ்சுகிறவற்றாலேயே தோற்கடிக்கப்படுவார்கள். ஆனால் நல்லவர்களோ தாங்கள் விரும்புவதைப் பெறுவார்கள்.
25 தங்களுக்கு நேரும் பிரச்சனைகளாலேயே தீயவர்கள் அழிவார்கள். ஆனால் நல்லவர்களோ எல்லாக் காலங்களிலும் உறுதியாக நிற்பார்கள்.
26 ஒரு சோம்பேறியை உனக்காக எதுவும் செய்ய அனுமதிக்காதே. ஏனென்றால் அவர்கள் பற்களுக்குக் காடியைப் போன்றும் கண்களுக்குப் புகையைப் போன்றும் இருப்பார்கள்.
27 நீ கர்த்தரை மதித்தால் நீண்டகாலம் வாழலாம். ஆனால் தீயவர்களோ தம் வாழ் நாளில் பல ஆண்டுகளை இழப்பார்கள்.
28 நல்லவர்கள் நம்புகிறவை மகிழ்ச்சியைக் கொண்டுவரும். கெட்டவர்கள் நம்புகிறவையோ அழிவைக் கொண்டுவரும்.
29 கர்த்தர் நல்லவர்களைப் பாதுகாக்கிறார். ஆனால் தவறு செய்பவர்களையோ கர்த்தர் அழிக்கிறார்.
30 நல்ல மனிதர்கள் எப்பொழுதும் பாதுகாக்கப்படுவார்கள். தீயவர்கள் தேசத்தைவிட்டுப் போகக் கட்டாயப்படுத்தப்படுவார்கள். ஆண்டவர் நல்ல ஜனங்களை பாதுகாப்பார். அவர் தீய செயல்களைச் செய்யும் ஜனங்களை அழிப்பார்.
31 நல்லவர்கள் ஞானமுள்ளவற்றைப் பேசுவார்கள். தொல்லை உண்டாக்கும் காரியங்களைப் பேசுபவர்களின் வார்த்தைகளை ஜனங்கள் கேட்காமல் நிறுத்திவிடுவார்கள்.
32 நல்லவர்கள் சரியானவற்றைச் சொல்ல அறிந்துள்ளனர். ஆனால் கெட்டவர்களோ தொல்லை தருவதையே பேசுகின்றனர்.
Proverbs 10 ERV IRV TRV