Numbers 14 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 உடனே மக்கள் கூட்டமைப்பு முழுதும் உரத்தக் குரலில் புலம்பிற்று; மக்கள் அன்றிரவு அழுது கொண்டே இருந்தனர்.2 இஸ்ரயேல் மக்கள் அனைவரும் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்தனர்; மக்கள் கூட்டமைப்பிலுள்ள அனைவரும் அவர்களிடம், “எகிப்து நாட்டில் நாங்கள் இறந்திருந்தால் எவ்வளவோ நலம்! இந்தப் பாலை நிலத்தில் மடிந்தால் அதுவும் நலமே!3 வாளுக்கு இரையாகும்படியா ஆண்டவர் எங்களை இந்த நாட்டுக்கு அழைத்து வந்திருக்கிறார்? எங்கள் மனைவியரும் குழந்தைகளும் மடியப்போகிறார்கள்! நாம் எகிப்து நாட்டுக்குத் திரும்பிச் செல்வது நலமன்றோ?” என்றனர்.⒫4 மேலும், அவர்கள் ஒருவர் மற்றவரை நோக்கி, “நாம் ஒரு தலைவனை நியமித்துக்கொண்டு எகிப்துக்குத் திரும்பிச் செல்வோம்” என்றனர்.5 உடனே மோசேயும் ஆரோனும் இஸ்ரயேல் மக்கள் கூட்டமைப்பின் முழுவதற்கும் முன்பாக முகங்குப்புற விழுந்தனர்.6 மேலும், நாட்டை உளவு பார்த்து வந்தவர்களிடையே இருந்த நூன் மகன் யோசுவாவும் எப்புன்னே மகன் காலேபும் தங்கள் உடைகளைக் கிழித்துக்கொண்டு,7 இஸ்ரயேலர் கூட்டமைப்பிலுள்ள அனைவரிடமும் கூறியது: உளவு பார்க்கும்படி நாங்கள் கடந்து சென்ற நாடு மிகச் சிறந்த நாடு.8 ஆண்டவருக்கு நம்மேல் நல்விருப்பு ஏற்பட்டால் பாலும் தேனும் வழிந்தோடும் இந்த நாட்டினுள் அவர் நம்மை அழைத்துச் சென்று அதை நமக்குத் தருவார்.⒫9 எனவே,ஆண்டவருக்கெதிராக மட்டும் கிளர்ந்தெழாதீர்; நாட்டின் மக்களுக்கு அஞ்சாதீர்; அவர்கள் நமக்கு இரையாவர்; அவர்களின் பாதுகாவல் அகன்று போயிற்று; ஆண்டவரோ நம்மோடு இருக்கிறார்; அவர்களுக்கு அஞ்சவேண்டாம்.⒫10 ஆனால்,மக்கள் கூட்டமைப்பினர் அனைவரும் அவர்களைக் கல்லால் எறியும்படி கூறினர்; உடனே ஆண்டவரின் மாட்சி சந்திப்புக் கூடாரத்தில் இஸ்ரயேல் மக்கள் அனைவருக்கும் தோன்றியது.11 ஆண்டவர் மோசேயிடம், “எதுவரை இம்மக்கள் என்னை இழிவுபடுத்துவார்கள், நான் அவர்களுக்கு அடையாளங்கள் தந்தும் எதுவரை இவர்கள் என்னில் நம்பிக்கை கொள்ளாதிருப்பார்கள்?12 நான் அவர்களைக் கொள்ளை நோயால் வதைத்து அவர்களைப் புறக்கணித்து விடுவேன்; உன்னையோ அவர்களைவிடப் பெரியதும் வலியதுமான இனமாக்குவேன்” என்றார்.⒫13 ஆனால், மோசே ஆண்டவரிடம் கூறியது: அப்போது எகிப்தியர் இதைப்பற்றிக் கேள்விப்படுவார்களே! நீர் அவர்களிடமிருந்துதானே இம்மக்களை உம் ஆற்றலால் கொண்டு வந்தீர்!14 அதோடு இந்த நாட்டுக் குடிகளிடமும் அவர்கள் சொல்லி வைப்பார்கள். ஆண்டவரே, நீர் இம்மக்களிடையே இருக்கிறீர் என்பதை அவர்கள் கேள்விப்பட்டிருக்கிறார்கள். ஏனெனில் ஆண்டவரே, நீர் நேர் முகமாய்க் காணப்படுகிறீர்; உமது மேகம் அவர்கள்மேல் நிற்கிறது; பகலில் மேகத் தூணிலும் இரவில் நெருப்புத் தூணிலும் நீர் அவர்களுக்கு முன்னே போகிறீர்.15 நீர் இப்போது இம்மக்களை ஓர் ஆள் எனக் கொன்றுவிட்டால், உம் புகழைக் கேள்விப்பட்டிருந்த இனத்தவரெல்லாம்,16 “ஆண்டவர் இம்மக்களுக்கு வாக்களித்த நாட்டுக்குள் அவர்களைக் கொண்டுவர இயலாததால் பாலைநிலத்தில் அவர்களைக் கொன்று போட்டார்” என்று சொல்வார்களே!17 இப்போதும் உம்மை மன்றாடிக் கேட்கிறேன்; நீர் வாக்களித்தபடி ஆண்டவர் ஆற்றல் சிறப்புறுவதாக.18 “ஆண்டவர் சினங்கொள்ளத் தாமதிப்பவர்; அருளிரக்கம் காட்டுவதில் அளவு கடந்தவர்; குற்றங்களையும் குறைகளையும் மன்னிப்பவர்; எவ்விதத்திலும் நம்பிக்கைத் துரோகம் செய்வோரை விட்டு விடாதவர்; மூதாதையர் குற்றங்களுக்காக அவர்கள் பிள்ளைகளை மூன்றாம் நான்காம் தலைமுறை வரை தண்டிப்பவர்” என்றும் சொல்லியிருக்கிறீரே!19 உம்மை மன்றாடிக் கேட்கிறேன், இம்மக்களின் குற்றங்களை மன்னியும்; உன் அருளிரக்கத்தின் பேரளவின்படியும் எகிப்திலிருந்து இதுகாறும் இம்மக்களை நீர் மன்னித்து வந்தது போன்றும் செய்யும்".⒫20 ஆண்டவர் மோசேயிடம் கூறியது: உன் வாக்கின்படி நான் மன்னித்துவிட்டேன்;21 ஆயினும், உண்மையாகவே என் உயிர்மேல் ஆணை! பூவுலகனைத்தும் நிறைந்துள்ள ஆண்டவரின் மாட்சியின் மேல் ஆணை!22 எகிப்திலும் இப்பாலை நிலத்திலும் என் மாட்சியையும் நான் செய்த அருஞ்செயல்களையும் கண்டிருந்தும், இப் பத்துத் தடவையும் இம்மனிதர்கள் என்னைச் சோதித்து என் குரலுக்குச் செவிகொடுக்காததால்,23 இவர்களில் ஒருவன்கூட இவர்கள் மூதாதையருக்குத் தருவதாக நான் வாக்களித்திருந்த நாட்டினைக் காண மாட்டான்; என்னை இழிவுபடுத்திய எவனுமே அதைப் பார்க்கமாட்டான்.24 ஆனால், என் அடியான் காலேபு வேறுபட்ட மனநிலை கொண்டு என்னை முழமையாகப் பின்பற்றினான்; ஆகவே, அவன் சென்று வந்த நாட்டுக்குள் அவனைக் கொண்டு வருவேன்; அவன் தலைமுறையினர் அதனை உடைமையாக்கிக்கொள்வர்.25 இப்போது அமலேக்கியரும் கானானியரும் பள்ளத்தாக்குகளில் வாழ்கின்றனர். எனவே, நாளைக்கு நீங்கள் செங்கடலுக்குப் போகும் வழியே பாலைநிலத்துக்குத் திரும்பிச் செல்லுங்கள்.26 மேலும், ஆண்டவர் மோசேயிடமும் ஆரோனிடமும் கூறியது:27 இப்பொல்லாத மக்கள் கூட்டமைப்பினர் எதுவரை எனக்கெதிராக முறுமுறுப்பர்? எனக்கெதிராக முறுமுறுக்கும் இஸ்ரயேல் மக்களின் முறுமுறுப்புகளை நான் கேட்டேன்.28 நீங்கள் அவர்களிடம் சொல்லவேண்டியது, “ஆண்டவர் கூறுவதாவது; என் உயிர் மேல் ஆணை! என் செவிகளில்படுமாறு நீங்கள் சொன்னதையே நான் உங்களுக்குச் செய்வேன்;29 எனக்கெதிராக முறுமுறுத்த, இருபது வயதும் அதற்கு மேலும் எண்ணப்பட்ட மொத்தத் தொகையினரான நீங்கள் இப்பாலைநிலத்தில் பிணங்களாக விழுவீர்கள்.30 நீங்கள் குடியிருக்கும்படி நான் வாக்களித்த நாட்டிற்குள் எப்புன்னே மகன் காலேபையும் நூன் மகன் யோசுவாவையும் தவிர ஒருவருமே வரமாட்டீர்கள்.31 ஆனால், இரையாகிவிடப்போவதாக நீங்கள் கருதிய உங்கள் குழந்தைகளை நான் கொண்டு போய்ச் சேர்ப்பேன்; நீங்கள் இழிவாய் எண்ணின நாட்டை அவர்கள் கண்டறிவார்கள்.32 உங்களைப் பொறுத்தமட்டில் நீங்கள் இப் பாலைநிலத்தில் பிணங்களாக விழுவீர்கள்.33 நாற்பது ஆண்டுகள் உங்கள் பிள்ளைகள் இப் பாலைநிலத்தில் அலைந்து திரிவர்; உங்கள் நம்பிக்கைத் துரோகத்திற்காக இப் பாலைநிலத்தில் உங்களுள் கடைசி ஆள்பிணமாக விழும்வரை அவர்கள் துன்புறுவர்.34 நீங்கள் நாட்டை உளவு பார்த்த நாள்களின் எண்ணிக்கைப்படி ஒரு நாளைக்கு ஒரு ஆண்டாக நாற்பது நாள்களுக்கும் நாற்பது ஆண்டுகள் நீங்கள் குற்றப்பழியைச் சுமப்பீர்கள்; என் வெறுப்பையும் அறிந்துகொள்வீர்கள்.35 ஆண்டவராகிய நானே பேசியுள்ளேன்; எனக்கெதிராக ஒன்று கூடிய இப்பொல்லாத மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் இதை நான் கட்டாயம் செய்துமுடிப்பேன்; இப்பாலைநிலத்தில் அவர்கள் முற்றிலும் அழிந்தொழிந்து அங்கேயே மடிவார்கள்.”⒫36 நாட்டை உளவு பார்க்க மோசே அனுப்பி, பின் திரும்பி வந்து நாட்டைப் பற்றித் தவறான அறிக்கையைக் கொண்டுவந்து மக்கள் கூட்டமைப்பு முழுவதையும் அவருக்கு எதிராக முறுமுறுக்கச் செய்த ஆள்கள்,37 அதாவது, நாட்டைப்பற்றித் தவறான அறிக்கை கொண்டு வந்த ஆள்கள் ஆண்டவர் முன்னிலையில் வாதையால் மாண்டனர்.38 ஆயினும், நாட்டை உளவு பார்க்கச் சென்றவர்களில் நூன் மகன் யோசுவாவும் எப்புன்னே மகன் காலேபும் உயிர் தப்பி வாழ்ந்தனர்.39 மோசே இவ்வார்த்தைகளை இஸ்ரயேல் மக்கள் எல்லாரிடமும் கூறினார்; மக்கள் மிகவும் அழுது புலம்பினர்.40 அவர்கள் காலையில் எழுந்து, “இதோ நாம் இங்கிருந்து ஆண்டவர் வாக்களித்த இடத்திற்கு ஏறிச் செல்வோம்; நாம் பாவம் செய்து விட்டோம்” என்று சொல்லி மலையுச்சிகளை நோக்கிச் சென்றனர்.41 அப்போது மோசே சொன்னது: ஏன் இப்போது ஆண்டவர் கட்டளையை மீறுகிறீர்கள்? அது நடக்கப் போவதில்லை.42 உங்கள் எதிரிகளால் முறியடிக்கப்படாதபடி நீங்கள் ஏறிச் செல்ல வேண்டாம்; ஆண்டவர்தாம் உங்களிடையே இல்லையே!43 அங்கே அமலேக்கியரும் கானானியரும் உங்களை எதிர்க்க இருக்கிறார்கள்; நீங்கள் வாளால் வெட்டி வீழ்த்தப்படுவீர்கள், ஏனெனில், ஆண்டவரைப் பின்பற்றுவதினின்று நீங்கள் விலகிவிட்டீர்கள்; ஆண்டவர் உங்களோடிருக்கமாட்டார்.⒫44 ஆனாலும், அவர்கள் மலையுச்சிகளுக்கு ஏறிச் செல்லத் துணிந்தனர்; ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையோ, மோசேயோ பாளையத்தை விட்டுப் புறப்படவேயில்லை.45 அப்போது அம் மலை நாட்டில் தங்கியிருந்த அமலேக்கியரும் கானானியரும் இறங்கி வந்து அவர்களை முறியடித்து ஓர்மா மட்டும் அவர்களைத் துரத்திச் சென்றனர்.Numbers 14 ERV IRV TRV