1 மேலும், அவர் அவர்களிடம், “இங்கே இருப்பவர்களுள் சிலர் இறையாட்சி வல்லமையோடு வந்துள்ளதைக் காண்பதற்குமுன் சாகமாட்டார்கள் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.

2 ஆறு நாள்களுக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, ஓர் உயர்ந்த மலைக்கு அவர்களைமட்டும் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார். அங்கே அவர்கள்முன் அவர் தோற்றம் மாறினார்.

3 அவருடைய ஆடைகள் இவ்வுலகில் எந்த சலவைக்காரரும் வெளுக்க முடியாத அளவுக்கு வெள்ளை வெளேரென ஒளிவீசின.

4 அப்போது எலியாவும் மோசேயும் அவர்களுக்குத் தோன்றினர். இருவரும் இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள்.

5 பேதுரு இயேசுவைப் பார்த்து, “ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்” என்றார்.

6 தாம் சொல்வது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. ஏனெனில், அவர்கள் மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்கள்.

7 அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட அந்த மேகத்தினின்று, “என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள்” என்று ஒரு குரல் ஒலித்தது.

8 உடனடியாக அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை.⒫

9 அவர்கள் மலையிலிருந்து இறங்கி வந்துகொண்டிருந்த போது அவர், “மானிட மகன் இறந்து உயிர்த்தெழும் வரை, நீங்கள் கண்டதை எவருக்கும் எடுத்துரைக்கக் கூடாது” என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

10 அவர்கள் இவ்வார்த்தையை அப்படியே மனத்தில் இருத்தி, “இறந்து உயிர்த்தெழுதல்” என்றால் என்னவென்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள்.

11 அவர்கள் அவரிடம், “எலியாதான் முதலில் வரவேண்டும் என்று மறைநூல் அறிஞர் கூறுவதேன்?” என்று கேட்டார்கள்.

12 அதற்கு அவர், “எலியா முதலில் வந்து எல்லாவற்றையும் சீர்ப்படுத்தப் போகிறார் என்று கூறுவது உண்மையே. ஆனால், மானிட மகன் பல துன்பங்கள் படவும் இகழ்ந்து தள்ளப்படவும் வேண்டுமென்று அவரைக் குறித்து எழுதப்பட்டுள்ளதே, அது எப்படி?

13 ஆகவே, நான் உங்களுக்குச் சொல்கிறேன்; எலியா வந்துவிட்டார். அவர்கள் தாங்கள் விரும்பியவாறெல்லாம் அவருக்குச் செய்தார்கள். அவரைக் குறித்து மறைநூலில் எழுதியுள்ளவாறே அவை நிகழ்ந்தன” என்றார்.

14 அவர்கள் மற்ற சீடரிடம் வந்தபொழுது, பெருந்திரளான மக்கள் அவர்களைச் சூழ்ந்திருப்பதையும் மறைநூல் அறிஞர் அவர்களுடன் வாதாடுவதையும் கண்டனர்.

15 மக்கள் அனைவரும் இயேசுவைக் கண்ட உடனே மிக வியப்புற்று அவரிடம் ஓடிப்போய் அவரை வாழ்த்தினர்.

16 அவர் அவர்களை நோக்கி, “நீங்கள் இவர்களோடு எதைப்பற்றி வாதாடுகிறீர்கள்?” என்று கேட்டார்.

17 அப்போது கூட்டத்திலிருந்து ஒருவர் அவரைப் பார்த்து, “போதகரே. தீய ஆவி பிடித்துப் பேச்சிழந்த என் மகனை உம்மிடம் கொண்டு வந்தேன்.

18 அது அவனைப் பிடித்து அந்த இடத்திலேயே அவனைக் கீழே தள்ளுகிறது. அவன் வாயில் நுரை தள்ளிப் பற்களை நெரிக்கிறான்; உடம்பும் விறைத்துப்போகிறது. அதை ஓட்டிவிடும்படி நான் உம் சீடரிடம் கேட்டேன்; அவர்களால் இயலவில்லை” என்று கூறினார்.

19 அதற்கு அவர் அவர்களிடம், “நம்பிக்கையற்ற தலைமுறையினரே. எவ்வளவு காலம் நான் உங்களோடு இருக்க இயலும்? எவ்வளவு காலம் நான் உங்களைப் பொறுத்துக்கொள்ள இயலும்? அவனை என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று கூறினார்.

20 அவர்கள் அவனை அவரிடம் கொண்டுவந்தார்கள். அவரைக் கண்டவுடன் அந்த ஆவி அவனுக்கு வலிப்பு உண்டாக்க, அவன் தரையில் விழுந்து புரண்டான்; வாயில் நுரை தள்ளியது.

21 அவர் அவனுடைய தந்தையைப் பார்த்து, “இது இவனுக்கு வந்து எவ்வளவு காலமாயிற்று?” என்று கேட்டார். அதற்கு அவர், “குழந்தைப் பருவத்திலிருந்து இது இருந்துவருகிறது.

22 இவனை ஒழித்துவிடத் தீயிலும் தண்ணீரிலும் பலமுறை அந்த ஆவி இவனைத் தள்ளியதுண்டு. உம்மால் ஏதாவது செய்ய இயலுமானால் எங்கள்மீது பரிவு கொண்டு எங்களுக்கு உதவி செய்யும்” என்றார்.

23 இயேசு அவரை நோக்கி, “இயலுமானாலா? நம்புகிறவருக்கு எல்லாம் நிகழும்” என்றார்.

24 உடனே அச்சிறுவனின் தந்தை, “நான் நம்புகிறேன். என் நம்பிக்கையின்மை நீங்க உதவும்” என்று கதறினார்.⒫

25 அப்போது மக்கள் கூட்டம் தம்மிடம் ஓடிவருவதை இயேசு கண்டு, அந்தத் தீய ஆவியை அதட்டி, “ஊமைச் செவிட்டு ஆவியே, உனக்குக் கட்டளையிடுகிறேன்; இவனை விட்டுப் போ; இனி இவனுள் நுழையாதே” என்றார்.

26 அது அலறி அவனுக்கு மிகுந்த வலிப்பு உண்டாக்கி வெளியேறியது. அச்சிறுவன் செத்தவன் போலானான். ஆகவே, அவர்களுள் பலர், “அவன் இறந்துவிட்டான்” என்றனர்.

27 இயேசு அவன் கையைப் பிடித்துத் தூக்கிவிட்டார். அவனும் எழுந்தான்.⒫

28 அவர் வீட்டில் நுழைந்ததும் அவருடைய சீடர் அவரிடம் தனிமையாக வந்து, “அதை ஏன் எங்களால் ஓட்ட இயலவில்லை?” என்று கேட்டனர்.

29 அதற்கு அவர், “இவ்வகைப் பேய் இறை வேண்டலினாலும் [நோன்பினாலும்]* அன்றி வேறு எதனாலும் வெளியேறாது” என்றார்.

30 அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுக் கலிலேயா வழியாகச் சென்றார்கள். அது யாருக்கும் தெரியக்கூடாது என்று இயேசு விரும்பினார்.

31 ஏனெனில், “மானிடமகன் மக்களின் கையில் ஒப்புவிக்கப்படவிருக்கிறார்; அவர்கள் அவரைக் கொலை செய்வார்கள். கொல்லப்பட்ட மூன்று நாள்களுக்குப் பின் அவர் உயிர்த்தெழுவார்” என்று அவர் தம் சீடருக்குக் கற்பித்துக் கொண்டிருந்தார்.

32 அவர் சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை. அவரிடம் விளக்கம் கேட்கவும் அவர்கள் அஞ்சினார்கள்.

33 அவர்கள் கப்பர்நாகுமுக்கு வந்தார்கள். அவர்கள் வீட்டில் இருந்த பொழுது இயேசு, “வழியில் நீங்கள் எதைப்பற்றி வாதாடிக் கொண்டிருந்தீர்கள்?” என்று அவர்களிடம் கேட்டார்.

34 அவர்கள் பேசாதிருந்தார்கள். ஏனெனில், தங்களுள் பெரியவர் யார் என்பதைப்பற்றி வழியில் ஒருவரோடு ஒருவர் வாதாடிக் கொண்டு வந்தார்கள்.

35 அப்பொழுது அவர் அமர்ந்து, பன்னிருவரையும் கூப்பிட்டு, அவர்களிடம், “ஒருவர் முதல்வராக இருக்க விரும்பினால் அவர் அனைவரிலும் கடைசியானவராகவும் அனைவருக்கும் தொண்டராகவும் இருக்கட்டும்” என்றார்.

36 பிறகு, அவர் ஒரு சிறு பிள்ளையை எடுத்து, அவர்கள் நடுவே நிறுத்தி, அதை அரவணைத்துக் கொண்டு,

37 “இத்தகைய சிறுபிள்ளைகளுள் ஒன்றை என் பெயரால் ஏற்றுக் கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார். என்னை ஏற்றுக் கொள்பவர் என்னைமட்டும் அல்ல, என்னை அனுப்பினவரையே ஏற்றுக் கொள்கிறார்” என்றார்.

38 அப்பொழுது யோவான் இயேசுவிடம், “போதகரே , ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில், அவர் நம்மைச் சாராதவர்” என்றார்.

39 அதற்கு இயேசு கூறியது: “தடுக்க வேண்டாம். ஏனெனில், என் பெயரால் வல்லசெயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேச மாட்டார்.

40 ஏனெனில், நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.

41 நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதால் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.”

42 “என்மீது நம்பிக்கைகொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது.

43 உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். நீங்கள் இரு கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்துக்குள் தள்ளப்படுவதைவிட, கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது.

44 உங்கள் கால் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள்.

45 நீங்கள் இரு காலுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட கால் ஊனமுற்றவராய் வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது.

46 உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால், அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள்.

47 நீங்கள் இரு கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணராய் இறையாட்சிக்கு உட்படுவது உங்களுக்கு நல்லது.

48 நரகத்திலோ அவர்களைத் தின்னும் புழு சாகாது; நெருப்பும் அவியாது.

49 ஏனெனில், பலிப்பொருள் உப்பால் தூய்மையாக்கப்படுவதுபோல் ஒவ்வொருவரும் நெருப்பால் தூய்மையாக்கப்படுவர்.

50 உப்பு நல்லது. ஆனால், அது உவர்ப்பற்றுப் போனால் எதைக்கொண்டு அதை உவர்ப்புள்ளதாக்குவீர்கள்? நீங்கள் உப்பின் தன்மை கொண்டிருங்கள். ஒருவரோடு ஒருவர் அமைதியுடன் வாழுங்கள்.

Mark 9 ERV IRV TRV