1 பொழுது விடிந்ததும் மூப்பரோடும் மறைநூல் அறிஞரோடும் தலைமைச் சங்கத்தார் அனைவரோடும் தலைமைக் குருக்கள் ஆலோசனை செய்து, இயேசுவைக் கட்டி இழுத்துச் சென்று பிலாத்திடம் ஒப்புவித்தனர்.

2 பிலாத்து அவரை நோக்கி, “நீ யூதரின் அரசனா?” என்று கேட்க அவர், “அவ்வாறு நீர் சொல்கிறீர்” என்று பதில் கூறினார்.

3 தலைமைக் குருக்கள் அவர்மீது பல குற்றங்களைச் சுமத்தினார்கள்.

4 மீண்டும் பிலாத்து, “நீ பதில் ஒன்றும் சொல்ல மாட்டாயா? உன் மீது இத்தனை குற்றங்களைச் சுமத்துகிறார்களே!” என்று அவரிடம் கேட்டான்.

5 இயேசுவோ எப்பதிலும் கூறவில்லை. ஆகவே, பிலாத்து வியப்புற்றான்.

6 விழாவின்போது மக்கள் கேட்டுக் கொள்ளும் ஒரு கைதியை அவர்களுக்காகப் பிலாத்து விடுதலை செய்வதுண்டு.

7 பரபா என்னும் கைதி ஒருவன் இருந்தான். ஒரு கலகத்தில் கொலை செய்த கலகக்காரரோடு பிடிபட்டவன் அவன்.

8 மக்கள் கூட்டம் வந்து, வழக்கமாய்ச் செய்வதுபோல ஒரு கைதியை விடுதலை செய்யுமாறு பிலாத்துவை வேண்டத் தொடங்கியது.

9 அதற்குப் பிலாத்து, “யூதரின் அரசரை உங்களுக்காக நான் விடுதலை செய்ய வேண்டுமென்று விரும்புகிறீர்களா?” என்று கேட்டான்.

10 ஏனெனில், தலைமைக் குருக்கள் பொறாமையால்தான் அவரை ஒப்புவித்திருந்தார்கள் என்று அவன் உணர்ந்திருந்தான்.

11 ஆனால், தலைமைக் குருக்கள் தங்களுக்குப் பரபாவையே அவன் விடுதலை செய்ய வேண்டுமெனக் கேட்குமாறு கூட்டத்தினரைத் தூண்டிவிட்டார்கள்.

12 பிலாத்து மீண்டும் அவர்களைப் பார்த்து, “அப்படியானால் நீங்கள் யூதரின் அரசர் என்று குறிப்பிடும் இவனை நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.

13 அவர்கள், “அவனைச் சிலுவையில் அறையும்” என்று மீண்டும் கத்தினார்கள்.

14 அதற்குப் பிலாத்து, “இவன் செய்த குற்றம் என்ன?” என்று கேட்க, அவர்கள், “அவனைச் சிலுவையில் அறையும்” என்று இன்னும் உரக்கக் கத்தினார்கள்.

15 ஆகவே, பிலாத்து கூட்டத்தினரின் விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் பரபாவை விடுதலை செய்து, இயேசுவைக் கசையால் அடித்து, சிலுவையில் அறையுமாறு ஒப்புவித்தான்.

16 பிறகு, படைவீரர் அவரை ஆளுநர் மாளிகையின் முற்றத்திற்கு இழுத்துக்கொண்டு போய்ப் படைப்பிரிவினர் அனைவரையும் கூட்டினர்;

17 அவருக்குச் செந்நிற ஆடையை உடுத்தினர்; ஒரு முள் முடி பின்னி அவருக்குச் சூட்டி,

18 “யூதரின் அரசே வாழ்க!” என்று அவரை வாழ்த்தத் தொடங்கினர்;

19 மேலும், கோலால் அவர் தலையில் அடித்து. அவர்மீது துப்பி, முழந்தாள்படியிட்டு அவரை வணங்கினர்.

20 அவரை ஏளனம் செய்த பின் செந்நிற ஆடையைக் கழற்றி விட்டு அவருடைய ஆடைகளை அணிவித்து அவரைச் சிலுவையில் அறைவதற்காக வெளியே கூட்டிச் சென்றனர்.

21 அப்பொழுது அலக்சாந்தர், ரூபு ஆகியோரின் தந்தையான சிரேன் ஊரைச் சேர்ந்த சீமோன் என்பவர் வயல்வெளியிலிருந்து வந்து கொண்டிருந்தார். படைவீரர்கள் இயேசுவின் சிலுவையைச் சுமக்கும்படி அவரைக் கட்டாயப்படுத்தினார்கள்.

22 அவர்கள் “மண்டைஓட்டு இடம்” எனப்பொருள்படும் “கொல்கொதா” வுக்கு இயேசுவைக் கொண்டு சென்றார்கள்;

23 அங்கே அவருக்கு வெள்ளைப் போளம் கலந்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்தார்கள். ஆனால், அவர் அதைப் பெற்றுக்கொள்ளவில்லை.

24 பிறகு, அவர்கள் அவரைச் சிலுவையில் அறைந்தார்கள்; குலுக்கல் முறையில் யாருக்கு எது என்று பார்த்து அவருடைய ஆடைகளைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டார்கள்.

25 அவரைச் சிலுவையில் அறைந்தபோது காலை ஒன்பது மணி.

26 அவரது மரண தண்டனைக்கான காரணத்தை அறிவிக்க “யூதரின் அரசன்” என்று அவர்கள் எழுதிவைத்தார்கள்;

27 அவருடைய வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக,

28 இரு கள்வர்களை அவருடன் சிலுவைகளில் அறைந்தார்கள்.⒫

29 ❮29-30❯அவ்வழியே சென்றவர்கள் தங்கள் தலைகளை அசைத்து, “ஆகா, திருக்கோவிலை இடித்து மூன்று நாளில் கட்டி எழுப்புகிறவனே, சிலுவையிலிருந்து இறங்கி உன்னையே விடுவித்துக்கொள்” என்று அவரைப் பழித்துரைத்தார்கள்.

30 Same as above

31 அவ்வாறே, தலைமைக் குருக்கள் மறைநூல் அறிஞர்களுடன் சேர்ந்து அவரை ஏளனம் செய்து, “பிறரை விடுவித்தான், தன்னையே விடுவிக்க முடியவில்லை” என்று தங்களிடையே பேசிக்கொண்டார்கள்.

32 அவர்கள், “இஸ்ரயேலின் அரசனாகிய மெசியா இப்போது சிலுவையிலிருந்து இறங்கி வரட்டும்; அப்போது நாங்கள் கண்டு நம்புவோம்” என்றார்கள். அவரோடு சிலுவையில் அறையப்பட்டிருந்தவர்களும் அவரை இகழ்ந்தார்கள்.

33 நண்பகல் வந்தபொழுது நாடெங்கும் இருள் உண்டாயிற்று. பிற்பகல் மூன்று மணிவரை அது நீடித்தது.

34 பிற்பகல் மூன்று மணிக்கு இயேசு, ⁽“எலோயி, எலோயி, லெமா சபக்தானி?”⁾ என்று உரக்கக் கத்தினார். ⁽“என் இறைவா, என் இறைவா ஏன் என்னைக் கைவிட்டீர்?”⁾ என்பது அதற்குப் பொருள்.

35 சூழ நின்று கொண்டிருந்தவர்களுள் சிலர் அதைக்கேட்டு, “இதோ! எலியாவைக் கூப்பிடுகிறான்” என்றனர்.

36 அப்பொழுது அவர்களுள் ஒருவர் ஓடிச்சென்று கடற்பஞ்சை எடுத்து, புளித்த திராட்சை இரசத்தில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக் கொடுத்துக்கொண்டே, “பொறுங்கள், எலியா இவனைக் கீழே இறக்க வருவாரா, பார்ப்போம்” என்றார்.

37 இயேசுவோ உரக்கக் கத்தி உயிர் துறந்தார்.

38 அப்பொழுது திருக்கோவிலின் திரை மேலிருந்து கீழ்வரை இரண்டாகக் கிழிந்தது.

39 அவருக்கு எதிரே நின்றுகொண்டிருந்த நூற்றுவர் தலைவர், அவர் இவ்வாறு உயிர் துறந்ததைக் கண்டு, “இம்மனிதர் உண்மையாகவே இறைமகன்” என்றார்.

40 பெண்கள் சிலரும் தொலையில் நின்று உற்று நோக்கிக்கொண்டிருந்தனர். அவர்களுள் மகதலா மரியாவும் சின்ன யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாகிய மரியாவும், சலோமி என்பவரும் இருந்தனர்.

41 இயேசு கலிலேயாவில் இருந்த போது அவர்கள் அவரைப் பின்பற்றி அவருக்குப் பணிவிடை செய்து வந்தவர்கள், அவருடன் எருசலேமுக்கு வந்திருந்த வேறுபல பெண்களும் அங்கே இருந்தார்கள்.

42 இதற்குள் மாலை வேளையாகிவிட்டது. அன்று ஓய்வுநாளுக்கு முந்திய ஆயத்த நாளாக இருந்தபடியால்,

43 அரிமத்தியா ஊரைச் சேர்ந்த யோசேப்பு என்பவர் துணிவுடன் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். அவர் மதிப்புக்குரிய தலைமைச் சங்க உறுப்பினர். அவரும் இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர்.

44 ஏற்கெனவே இயேசு இறந்துவிட்டதைக் குறித்துப் பிலாத்து வியப்படைந்து, நூற்றுவர் தலைவரை அழைத்து, “அவன் இதற்குள் இறந்து விட்டானா?” என்று கேட்டான்.

45 நூற்றுவர் தலைவரிடமிருந்து கேட்டு அறிந்ததும் உடலை அவன் யோசேப்பிடம் அளித்தான்.⒫

46 யோசேப்பு மெல்லிய துணி ஒன்றை வாங்கி வந்து, இயேசுவின் உடலை இறக்கித் துணியால் சுற்றிப் பாறையில் வெட்டப்பட்டிருந்த கல்லறையில் கொண்டு வைத்தார்; அதன் வாயிலில் ஒரு கல்லை உருட்டி வைத்தார்.

47 அவரை எங்கே வைத்தனர் என்பதை மகதலா மரியாவும் யோசேப்பின் தாய் மரியாவும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

Mark 15 ERV IRV TRV