1 “ஒருவன் ஒரு எச்சரிக்கையைக் கேட்டாலோ அல்லது பிறரை எச்சரிக்க வேண்டியவைகளைப் பார்த்தாலோ கேட்டாலோ அதை மற்றவர்களுக்குச் சொல்லவேண்டும். தான் கண்டதையும் கேட்டதையும் மற்றவர்களுக்குச் சொல்லாவிட்டால், பிறகு அவன் தவறு செய்வதற்கான குற்ற உணர்வைப் பெறுவான்.
2 “ஒருவன் தூய்மையற்ற ஒன்றைத் தொட்டிருக்கலாம். அது காட்டுமிருகத்தின் இறந்து போன உடலாகக் கூட இருக்கலாம். அல்லது அது தரையில் ஊர்ந்து போகும் அசுத்தமான நாட்டு மிருகத்தின் உடலாக இருக்கலாம். அவற்றைத் தொட்டதற்கான உணர்வு அவனிடம் இல்லாமல் இருக்கலாம். எனினும் அதனால் அவன் தீட்டுக்குரியவனாய் இருக்கிறான்.
3 “ஒருவன் பல காரணங்களால் அசுத்தமானவற்றைத் தொட்டதற்கான தீட்டைப் பெற்றிருக்கலாம். ஒரு மனிதன் மனிதத் தீட்டுக்களில் ஏதாகிலும் ஒன்றை அவனை அறியாமல் மற்ற மனிதனிடமிருந்து தொட்டிருக்கலாம். அவன் அதனை அறிய வரும்போது, அவன் குற்றமுடையவனாகிறான்.
4 “ஒருவன் அவசரமாக ஏதோ ஒரு காரணத்திற்காக வாக்குறுதி கொடுக்கிறான். அது நன்மைக்குரியதாகவோ தீமைக்குரியதாகவோ இருக்கலாம். ஜனங்கள் பலவிதமான அவசர வாக்குறுதிகள் வழங்குகின்றனர். ஒருவன் இவ்வாறு செய்து மறந்தும் போகலாம், அதைக் காப்பாற்றாமலும் போகலாம். பிற்காலத்தில் தான் கொடுத்த வாக்குறுதிகளை நினைத்துப் பார்க்கும் போது குற்றவாளியாகிறான். ஏனெனில் அவ்வாக்குறுதிகளின்படி அவன் செய்யவில்லை.
5 ஒருவன் இப்படிப்பட்ட ஏதாவது ஒன்றில் குற்றம் உள்ளவனாகும்போது அவன் தான் செய்தது பாவம் என்று ஒத்துக்கொள்ள வேண்டும்.
6 அவன் தான் செய்த பாவத்துக்குக் குற்ற நிவாரண பலியிடவேண்டும். அதற்காக அவன் பெண் ஆட்டினை அல்லது பெண் வெள்ளாட்டுக் குட்டியைக் கர்த்தருக்காகப் பாவநிவாரண பலியாகக் கொண்டு வரவேண்டும். பிறகு ஆசாரியன் அவனை பரிசுத்தமாக்குவதற்கான சடங்குகளைச் செய்து அவனது பாவத்தைப் போக்கி சுத்தமாக்குவான்.
7 “ஒருவேளை அவனால் ஆட்டுக் குட்டியைக் கொண்டுவர வசதியில்லாமல் போனால், அவன் கர்த்தருக்கு இரண்டு காட்டுப் புறாக்களையாவது அல்லது இரண்டு புறாக்குஞ்சுகளையாவதுகொண்டு வரவேண்டும். இவை அவன் பாவத்திற்கான குற்றநிவாரண பலியாகும். அவற்றில் ஒன்றை பாவப்பரிகார பலியாகவும் மற்றொன்றை தகன பலியாகவும் படைக்க வேண்டும்.
8 அவன் அவற்றை ஆசாரியனிடம் கொண்டு வரவேண்டும். ஆசாரியன் பாவப்பரிகார பலிக்கானதை முதலில் செலுத்துவான். அதன் தலையைக் கழுத்திலிருந்து கிள்ளுவான். அவன் அப்புறாவை இரண்டு துண்டாக்கக் கூடாது.
9 பாவப் பரிகாரப் பலியின் இரத்தத்தில் ஆசாரியன் கொஞ்சம் எடுத்து பலிபீடத்தின் பக்கத்திலே தெளித்து, மீதி இரத்தத்தைப் பலிபீடத்தின் அடியிலே ஊற்றிவிடுவான். இதுவே பாவப்பரிகார பலி ஆகும்.
10 பின்பு இரண்டாவது புறாவை தகன பலிக்குரிய விதிகளின்படி காணிக்கையாகச் செலுத்த வேண்டும். இதன் மூலம் ஆசாரியன் அந்த மனிதன் செய்த பாவத்திலிருந்து அவனை விடுவித்து சுத்தப்படுத்துகிறான். தேவனும் அவனை மன்னித்துவிடுவார்.
11 “இரண்டு காட்டுப் புறாக்களையோ, இரண்டு புறாக்குஞ்சுகளையோ அவனால் கொண்டுவர வசதியில்லாமல் போனால் அவன் 8 கிண்ணங்கள் அளவு மிருதுவான மாவை எடுத்து வரவேண்டும். இதுவே பாவப்பரிகாரப் பலியாக இருப்பதால் அந்த மாவின் மேல் எண்ணெய் எதையும் ஊற்றவோ, அதன்மேல் எவ்விதமான சாம்பிராணியையும் போடவோ கூடாது.
12 அவன் அந்த மாவை ஆசாரியனிடத்தில் கொண்டு வரவேண்டும். அதில் ஆசாரியன் ஒரு கைப் பிடியளவு எடுக்கவேண்டும். அது ஞாபகப் பலியாக இருக்கும். மாவை ஆசாரியன் பலி பீடத்தின் மேல் எரித்துவிடுவான். இது நெருப்பினால் கர்த்தருக்கென்று கொடுக்கும் காணிக்கையாகும். இது பாவப்பரிகாரப் பலியாகும்.
13 இவ்வாறு ஆசாரியன் அம்மனிதனை சுத்தபடுத்துவான். அப்போது தேவன் அவனுக்கு மன்னிப்பார். மீதி மாவானது தானியக் காணிக்கையைப் போல ஆசாரியனுக்குச் சேரும்” என்றார்.
14 மேலும் கர்த்தர் மோசேயிடம்,
15 “கர்த்தருக்குரிய பரிசுத்தமானவற்றில் ஒருவன் அசம்பாவிதமாக தவறு செய்துவிட்டால் அவன் ஒரு குறையற்ற ஆட்டுக்குட்டியைக் கொண்டு வரவேண்டும். அது கர்த்தருக்கு அவன் கொடுக்கும் குற்ற நிவாரண பலியாகும். அதிகாரப் பூர்வமான அளவைப் பயன்படுத்தி ஆட்டின் விலையை நிர்ணயிக்க வேண்டும்.
16 அந்த மனிதன் தான் செய்த பாவத்திற்குரிய விலையைச் செலுத்த வேண்டும். வாக்குறுதியளித்த தொகையோடு, அதன் மதிப்பில் ஐந்தில் ஒரு பகுதியையும் கூட்டி, மொத்தப் பணத்தை ஆசாரியன் கையில் கொடுக்க வேண்டும். இம்முறையில் குற்ற நிவாரண பலியின் மூலம் அம்மனிதனை ஆசாரியன் சுத்தமாக்குகிறான். தேவனும் அம்மனிதனை மன்னிப்பார்.
17 “செய்யக்கூடாது என்று கர்த்தர் சொன்னவற்றில் ஏதாவது ஒன்றைச் செய்தால் ஒருவன் பாவியாகிறான். அவன் அறியாமல் செய்தாலும் அது பாவமே. அவன் குற்றவாளியாகிறான். அவன் தன் பாவத்தின் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
18 அவன் ஆசாரியனிடம் ஒரு ஆட்டுக்குட்டியைக் கொண்டு வரவேண்டும். எவ்வித குறைகளும் இல்லாததாக அந்த ஆடு இருக்கவேண்டும். அந்த ஆட்டுக்குட்டி குற்ற நிவாரண பலி ஆகும். இந்த முறையில் ஆசாரியன் அவன் அறியாமல் செய்த பாவத்திலிருந்து அவனை சுத்தமாக்குவான், தேவனும் அவனை மன்னித்துவிடுவார்.
19 ஒருவன் பாவம் செய்யும்போது அறியாமல் செய்தாலும் அவன் குற்றவாளிதான். எனவே அவன் கர்த்தருக்கு குற்ற நிவாரணப் பலியைச் செலுத்தியே ஆக வேண்டும்” என்று கூறினார்.
Leviticus 5 ERV IRV TRV