Leviticus 26 in Tamil ERV Compare Tamil Easy Reading Version
1 “உங்களுக்காக விக்கிரகங்களை ஏற்படுத்தாதீர்கள். உங்கள் நாடுகளில் சிலைகளையோ நினைவுச் சின்னங்களையோ வணங்குவதற்காக ஏற்படுத்தாதீர்கள். ஏனென்றால் நானே உங்கள் தேவனாகிய கர்த்தர்!
2 “எனது சிறப்பான ஓய்வு நாட்களை நினைவில் கொள்ளுங்கள். எனது பரிசுத்தமான இடங்களைப் பெருமைப்படுத்துங்கள். நானே கர்த்தர்!
3 “எனது சட்டங்களையும் கட்டளைகளையும் நினைவில் கொண்டு அவற்றுக்குக் கீழ்ப்படியுங்கள்!
4 நீங்கள் இவற்றைச் செய்தால் நான் உரிய பருவத்தில் மழையைத் தருவேன். நிலம் நன்றாக விளையும். மரங்கள் நல்ல பழங்களைத் தரும்.
5 திராட்சைப் பழம் பறிக்கும் காலம்வரை உங்கள் போரடிப்புக் காலம் இருக்கும். விதைப்புக் காலம்வரை திராட்சைப்பழம் பறிக்கும் காலம் இருக்கும். நீங்கள் உங்கள் அப்பத்தைத் திருப்தியாகச் சாப்பிட்டு உங்கள் நாட்டில் சுகமாய் குடியிருப்பீர்கள்.
6 உங்கள் நாட்டில் சமாதானத்தை உருவாக்குவேன். நீங்கள் பாதுகாப்புடன் இருப்பீர்கள். எவரும் வந்து உங்களை நெருங்கி அச்சுறுத்த முடியாது. தீமை செய்யும் மிருகங்களை நாட்டுக்கு வெளியே வைத்திருப்பேன். வேறு படைகளும் உங்கள் நாட்டின் வழியாகக் கடந்து செல்லாது.
7 “நீங்கள் உங்களது பகைவர்களைத் துரத்தி சென்று தோற்கடிப்பீர்கள். உங்கள் வாளால் அவர்களைக் கொல்வீர்கள்.
8 ஐந்து பேரான நீங்கள் நூறு பேரை விரட்டிச் செல்வீர்கள், நூறு பேராக இருந்தாலும் நீங்கள் பத்தாயிரம் பேரை விரட்டிச்சென்று அவர்களை வாளால் வெட்டிக் கொல்லுவீர்கள்.
9 “நான் உங்கள்மேல் கவனமாயிருந்து நிறைய குழந்தைகளை நீங்கள் பெறும்படி செய்வேன். நான் எனது உடன்படிக்கையை பாதுகாப்பேன்.
10 நீங்கள் ஒரு ஆண்டு விளைச்சலைப் போதுமான அளவிற்கு மேல் பெற்றிருப்பீர்கள். புதிய விளைச்சலும் பெறுவீர்கள். புதியதை வைக்க இடமில்லாமல் பழையதை எறிவீர்கள்.
11 உங்கள் நடுவே எனது ஆராதனைக் கூடாரத்தை அமைப்பேன். நான் உங்களிடமிருந்து விலகிச் செல்லமாட்டேன்.
12 நான் உங்களோடு நடந்து உங்கள் தேவனாக இருப்பேன். நீங்களே எனது ஜனங்கள்.
13 நானே உங்கள் தேவனாகிய கர்த்தர். நீங்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்தீர்கள். நான் உங்களை அங்கிருந்து மீட்டு வந்தேன். அடிமைகளாக நீங்கள் சுமந்த பாரத்தால் முதுகு வளைந்துபோனீர்கள். நான் உங்கள் நுகத்தடிகளை உடைத்து உங்களை நிமிர்ந்து நடக்கச் செய்தேன்!
14 “நீங்கள் எனக்கு கீழ்ப்படியாவிட்டாலோ அல்லது என் கட்டளையை பின்பற்றாவிட்டாலோ கீழ்க்கண்ட தீமைகள் உங்களுக்கு ஏற்படும்.
15 நீங்கள் எனது சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிய மறுத்தால் எனது உடன்படிக்கையை மீறினவர்களாக மாறுகிறீர்கள்.
16 நீங்கள் அவ்வாறு செய்தால் நான் உங்களுக்கு மோசமான தீமைகளை உருவாக்குவேன். நோய்களையும் காய்ச்சலையும் உங்களுக்கு வரச் செய்வேன். அவை உங்கள் கண்களையும் ஜீவனையும் கெடுக்கும். நீங்கள் செய்யும் பயிர் விளைச்சலில் நீங்கள் வெற்றி பெற முடியாது. உங்கள் பகைவர்கள் உங்களது விளைச்சலை உண்பார்கள்.
17 நான் உங்களுக்கு எதிராக இருப்பேன். எனவே உங்களை உங்கள் எதிரிகள் வெல்வார்கள். அவர்கள் உங்களை வெறுத்து ஆட்சி செலுத்துவார்கள். உங்களை எவரும் துரத்தாவிட்டாலும் நீங்கள் பயந்து ஓடுவீர்கள்.
18 “இவற்றுக்குப் பிறகும் நீங்கள் கீழ்ப்படியாவிட்டால் உங்கள் பாவங்களுக்காக ஏழு மடங்கு தண்டிப்பேன்.
19 உங்கள் பெருமைக்குரிய பெரிய நகரங்களையெல்லாம் அழிப்பேன். வானம் உங்களுக்கு மழையைத் தராது. நிலம் விளைச்சலைத் தராது.
20 நீங்கள் கடினப்பட்டு உழைப்பீர்கள், ஆனால் விளைச்சல் கிடைக்காது. உங்கள் மரங்களும் பழங்களைத் தராது.
21 “அல்லது இத்தனைக்குப் பிறகும் எனக்கு எதிராகவே நீங்கள் மாறி கீழ்ப்படிய மறுத்தால் உங்களை ஏழு மடங்கு கடுமையாக தண்டிப்பேன். உங்களது பாவங்கள் அதிகரிக்கும்போது தண்டனைகளும் அதிகமாகும்.
22 நான் உங்களுக்கு எதிராகக் காட்டு மிருகங்களை அனுப்புவேன். உங்கள் பிள்ளைகளை உங்களிடமிருந்து அவை பிரித்துக் கொண்டு போகும். அவை உங்கள் மிருகங்களைக் கொல்லும். அவை உங்கள் ஜனங்களை அழிக்கும். ஜனங்கள் பயணம் செய்ய அஞ்சுவார்கள். சாலைகள் வெறுமையாகும்!
23 “இவை அனைத்தும் நடந்த பிறகும் நீங்கள் பாடம் கற்றுக்கொள்ளவில்லை என்றாலோ மேலும் எனக்கு எதிராக இருந்தாலோ,
24 நானும் உங்களுக்கு எதிராக மாறுவேன். ஆம் கர்த்தராகிய நானே உங்கள் பாவங்களுக்காக ஏழு மடங்கு தண்டிப்பேன்.
25 நீங்கள் எனது உடன்படிக்கையை மீறியிருப்பதினால் நான் உங்களைத் தண்டிப்பேன். உங்களுக்கெதிராக நான் படைகளைக் கொண்டு வருவேன். நீங்கள் பாதுகாப்புக்காக உங்கள் நகரங்களுக்கு ஓடுவீர்கள். ஆனால், உங்களுக்கிடையில் நோய்களைப் பரவச் செய்வேன். மேலும் உங்கள் எதிரிகள் உங்களைத் தோற்கடிப்பார்கள்.
26 அந்த நகரத்தில் உண்பதற்குக் குறைவான அளவிலேயே தானியங்கள் இருக்கும். ஒரே அடுப்பில் பத்துப் பெண்கள் அவர்களது எல்லா உணவையும் சமைக்க முடியும். நீங்கள் அதை உண்ட பிறகும் பசியோடிருப்பீர்கள்!
27 “நீங்கள் அதற்கு மேலும் என்னைக் கவனிக்காவிட்டாலோ, எனக்கு எதிராகத் திரும்பினாலோ,
28 நான் உண்மையாகவே எனது கோபத்தைக் காட்டுவேன். ஆம், கர்த்தராகிய நான் உங்கள் பாவங்களுக்காக உங்களை ஏழு மடங்கு தண்டிப்பேன்.
29 நீங்கள் மிகவும் பசியாவதினால் உங்கள் மகன்களையும். மகள்களையும் தின்பீர்கள்.
30 நான் உங்களது உயர்ந்த மேடைகளை அழிப்பேன். உங்களது நறுமணப்புகைப் பலிபீடங்களை உடைப்பேன். உங்களது பிணங்களை உங்களது உயிரற்ற விக்கிரகங்களின்மேல் போடுவேன். நீங்கள் எனது வெறுப்புக்கு ஆளாவீர்கள்.
31 நான் உங்கள் நகரங்களை அழிப்பேன். உங்கள் பரிசுத்தமான இடங்களை வெறுமையாக்குவேன். உங்கள் பலிகளின் மணத்தை நுகரமாட்டேன்.
32 உங்கள் நிலங்களை வெறுமையாக்குவேன். அதிலே குடியிருக்கும் உங்கள் பகைவர்கள் அதிர்ச்சியடைவார்கள்.
33 தேசங்களெங்கும் உங்களைச் சிதறடிப்பேன். நான் எனது வாளை உருவி உங்களை அழிப்பேன். உங்கள் வயல்கள் பாழாகும், உங்கள் நகரங்கள் அழிந்துபோகும்.
34 “நீங்கள் உங்களது பகைவரின் நாட்டிற்கு கொண்டு செல்லப்படுவீர்கள். உங்கள் நாடு வெறுமையடையும். இறுதியில் உங்கள் வயல்கள் ஓய்வுபெறும். அவை ஓய்வு காலத்தின் மகிழ்ச்சியை அனுபவிக்கும்.
35 வயல்கள் ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை ஓய்வு பெறவேண்டும் என்று சட்டம் கூறுகின்றன. நீங்கள் அங்கு குடியிருந்தபோது ஓய்வுபெறாத அந்த நிலங்கள் பாழாய்க் கிடந்து ஓய்வுபெறும்.
36 உங்களில் உயிரோடு இருப்பவர்களைப் பகைவரின் நாடுகளில் தைரியம் இழந்து தவிக்கச் செய்வேன். அசைகிற இலைகளின் சத்தமும் அவர்களை அச்சுறுத்தி விரட்டும். அவர்கள் எதற்கெடுத்தாலும் அஞ்சுவார்கள். யாரும் துரத்தாவிட்டாலும் யாரோ அவர்களை வாளெடுத்துக் கொண்டு துரத்துவது போன்று ஓடிக்கொண்டிருப்பார்கள்.
37 யாரும் துரத்தாவிட்டாலும் கூட அவர்கள் ஓடி ஒருவர் மேல் ஒருவர் விழுவார்கள். “எதிரிகளை எதிர்த்து நிற்கிற பலம் உங்களிடம் இல்லாமல் போகும்.
38 வேறு நாடுகளில் நீங்கள் காணாமல் போவீர்கள். உங்கள் பகைவரின் நாடுகளில் மறைந்து போவீர்கள்.
39 உங்களில் உயிரோடு இருப்பவர்கள் தங்கள் பாவங்களால் பகைவர்கள் நாட்டில் அழிவார்கள். அவர்கள் தம் முற்பிதாக்கள் செய்ததுபோலவே தங்கள் பாவங்களால் அழிவார்கள்.
40 “ஜனங்கள் தங்கள் பாவங்களை ஒப்புக்கொண்டு, அவர்கள் தங்கள் முற்பிதாக்களின் பாவங்களையும் அறிக்கையிட்டு, அவர்கள் எனக்கு எதிராக நடந்துக்கொண்டு, பாவம் செய்தார்கள் என்பதை ஒப்புக்கொள்ளலாம்.
41 அவர்கள் எனக்கு எதிராக நடந்துகொண்டதால் நானும் அவர்களுக்கு எதிராக நடந்துகொண்டேன். அவர்களைப் பகைவரின் நாடுகளுக்கு அனுப்பி வைத்தேன். இதனையும் அவர்கள் அறிக்கையிடலாம். அவர்கள் எனக்கு அந்நியர்களாவார்கள். அவர்கள் அடக்கமாக தங்கள் பாவங்களுக்கான தண்டனைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
42 இவ்வாறு செய்தால் நான் யாக்கோபோடு செய்த உடன்படிக்கையையும், நான் ஈசாக்கோடு செய்த உடன்படிக்கையையும் நான் ஆபிரகாமோடு செய்த உடன்படிக்கையையும் நினைவுப்படுத்திக்கொள்வேன். நான் அந்த தேசத்தை நினைவுகூருவேன்.
43 “நிலம் வெறுமையாக இருக்கும். அது தனது ஓய்வு காலத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கும். பின் உயிரோடு இருக்கிறவர்கள் தங்கள் பாவங்களுக்கான தண்டனைகளை ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் எனது சட்டங்களையும், விதிகளையும் வெறுத்து கீழ்ப்படிய மறுத்ததால் இந்தத் தண்டனை பெற்றதாக உணர்ந்துகொள்வார்கள்.
44 அவர்கள் உண்மையில் பாவம் செய்தவர்கள். ஆனால் அவர்கள் என்னிடம் உதவிக்கு வந்தால் நான் அவர்களை விட்டு விலகிப் போகமாட்டேன். நான் அவர்கள் சொல்வதைக் கேட்பேன். அவர்கள் தங்கள் பகைவரின் நாட்டிலே இருந்தாலும் முழுவதுமாக அழித்துவிடமாட்டேன். நான் அவர்களோடு செய்த உடன்படிக்கையை உடைக்கமாட்டேன். ஏனென்றால் நான் அவர்களுடைய தேவனாகிய கர்த்தர்.
45 அவர்களுக்காக, நான் அவர்களின் முற்பிதாக்களோடு செய்த உடன்படிக்கையை நினைவுபடுத்திக்கொள்வேன். நான் அவர்களின் முற்பிதாக்களை எகிப்திலிருந்து மீட்டுக்கொண்டு வந்து, அவர்களின் தேவன் ஆனேன். மற்ற நாடுகளும் இதனைக் கவனித்தன. நான் கர்த்தர்!” என்று கூறினார்.
46 இவையே இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கர்த்தர் கொடுத்த சட்டங்களும், விதிகளும், போதனைகளுமாகும். கர்த்தருக்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் ஏற்பட்ட உடன்படிக்கையின் சட்டங்களும் இவை தான். இச்சட்டங்களை கர்த்தர் சீனாய் மலையில் மோசேயிடம் கொடுத்தார். மோசே இவற்றை ஜனங்களிடம் கொடுத்தான்.