Leviticus 10 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ஆரோனின் புதல்வர்களான நாதாபும் அபிகூவும் தம் தூபக் கலசத்தை எடுத்து அதில் நெருப்பையும் தூபத்தையும் இட்டு ஆண்டவர் கட்டளைக்கு எதிராக நெருப்பைக் கொண்டு சென்றனர்.2 உடனே, ஆண்டவரிடமிருந்து நெருப்பு விரைந்தெழுந்து அவர்களை விழுங்கியது. அவர்கள் ஆண்டவர் முன்னிலையிலேயே மடிந்தனர்.3 அப்பொழுது மோசே ஆரோனை நோக்கி, “‘என்னை அணுகிவருவோர்மூலம் என் தூய்மையை வெளிப்படுத்துவேன். எல்லா மக்களுக்கும் முன்பாக நான் மாட்சியுறுவேன்’ என ஆண்டவர் உரைத்ததன் பொருள் இதுதான்” என்றார். ஆரோன் மௌனமாயிருந்தார்.⒫4 மோசே, ஆரோனின் சிற்றப்பனாகிய உசியேலின் புதல்வராகிய மிசாவேலையும், எல்சாபானையும் அழைத்து, “நீங்கள் இங்கே வந்து உங்கள் சகோதரரின் சடலங்களைத் தூயகத்தின் முன்னின்று எடுத்துப் பாளையத்திற்கு வெளியே கொண்டு போங்கள்” என்றார்.5 மோசே சொன்னபடியே அவர்கள் சென்று அவர்கள் சடலங்களை அவர்கள் உடைகளோடும் எடுத்துப் பாளையத்திற்கு வெளியே கொண்டு போனார்கள்.⒫6 மோசே, ஆரோனையும் எலயாசர், இத்தாமர் என்னும் அவர் புதல்வரையும் நோக்கி, “நீங்கள் உங்கள் தலைமுடியைக் கலைத்துக் கொள்ளவும், ஆடைகளைக் கிழித்துக் கொள்ளவும் வேண்டாம். அப்படிச் செய்தால் நீங்கள் சாவீர்கள். மக்கள் கூட்டமைப்பு முழுவதற்கும் எதிராக அவரது சினம் மூளும். உங்கள் சகோதரராகிய இஸ்ரயேல் குடும்பத்தார் யாவரும் ஆண்டவர் மூட்டிய இந்த நெருப்பை முன்னிட்டுப் புலம்புவார்கள்.7 நீங்கள் அழியாதபடி, சந்திப்புக் கூடார நுழைவாயிலிலிருந்து எங்கும் செல்லாதீர்கள். ஆண்டவரது அருள்பொழிவு உங்கள்மீது இருக்கிறதே!” என்றார். அவர்கள் மோசேயின் வார்த்தையின்படியே செய்தார்கள்.8 ஆண்டவர் ஆரோனிடம் கூறியது:9 “நீரும் உம்மோடு உம் புதல்வரும் சாகாதிருக்க வேண்டுமெனில், நீங்கள் சந்திப்புக்கூடாரத்திற்குள் நுழையும்போது திராட்சை இரசத்தையோ மதுவையோ குடிக்க வேண்டாம். இது உங்கள் தலைமுறைதோறும் மாறாத நியமமாக விளங்கும்.10 தூயதற்கும் தூய்மையற்றதற்கும், தீட்டுள்ளதற்கும் தீட்டற்றதற்கும் வேறுபாடு தோன்றும்படி,11 ஆண்டவர் மோசேயைக் கொண்டு இஸ்ரயேல் மக்களுக்குக் கூறி அறிவித்த அவருடைய எல்லாச் சட்டங்களையும் நீங்கள் மக்களுக்குப் போதிக்கும்படி இது என்றுமுள நியமமாக விளங்கும்”.⒫12 மோசே ஆரோன், அவருடைய எஞ்சிய புதல்வர்களாகிய எலயாசர், இத்தாமர் ஆகியோரிடம் கூறியது: நீங்கள் ஆண்டவரின் நெருப்புப் பலிகளில் எஞ்சிய உணவுப் படையலை எடுத்துப் பலிபீடத்தருகில் புளிப்பற்றதாய் உண்ணவேண்டும். அது மிகவும் தூயது.13 அதைத் தூய இடத்தில் உண்ண வேண்டும். ஏனெனில், அது ஆண்டவரின் நெருப்புப் பலிகளில் உமக்கும் உம் புதல்வருக்கும் உரிய பங்காகும். இதுவே நான் பெற்ற கட்டளை.14 ஆரத்திப் பலியான நெஞ்சுக் கறியையும் உயர்த்திப் படைக்கும் பலியான முன்னந் தொடையையும் நீரும் உம்மோடு உம் புதல்வரும் புதல்வியரும் ஒரு தூய்மையான இடத்தில் வைத்து உண்பீர்கள். இஸ்ரயேல் மக்களின் நல்லுறவுப் பலிகளில் இவை உமக்கும் உம் புதல்வருக்கும் புதல்வியருக்கும் உரிய பங்காகும்.15 உயர்த்திப் படைக்கும் பலிப்பொருளான முன்னந்தொடையையும் ஆரத்திப் பலிப்பொருளான நெஞ்சுக்கறியையும் நெருப்புப் பலிப்பொருளான கொழுப்பையும் ஆண்டவர் திருமுன் அவர்கள் கொண்டுவந்து ஆரத்திப் பலியாக அசைவாட்டுவார்கள். அது ஆண்டவரின் கட்டளைப்படியே உமக்கும் உம் புதல்வருக்கும் மாறாத நியமமாக விளங்கும்.”⒫16 இதற்கிடையில், மோசே பாவம் போக்கும் பலிப்பொருளான ஆட்டுக்கிடாயைத் தேடிப்பார்த்தார். அது எரித்தழிக்கப்பட்டிருந்தது. எனவே, மோசே ஆரோனின் எஞ்சியிருந்த புதல்வராகிய எலயாசர், இத்தாமர் மீது கடும் சினமுற்றுச் சொன்னது:17 நீங்கள் பாவம் போக்கும் பலியைத் தூய தலத்தில் ஏன் உண்ணவில்லை? அது மிகவும் தூயதன்றோ? மக்கள் கூட்டமைப்பின் குற்றப்பழியை ஏற்றுக்கொண்டு நீங்கள் ஆண்டவர் திருமுன் அவர்களுக்குக் கறை நீக்கம் செய்ய ஆண்டவர் அதை உங்களுக்குக் கொடுத்தார்.18 அதன் இரத்தம் தூயகத்திற்குள் கொண்டுபோகப்படவில்லை. ஆகையால் நீங்கள் அதை நான் கட்டளையிட்டபடி தூயகத்திலேயே உண்டிருக்க வேண்டும்!⒫19 உடனே ஆரோன் மோசேயை நோக்கி, “ஆண்டவர் திருமுன் பாவம் போக்கும் பலியும் எரிபலியும் செலுத்தப்பட்ட இன்றுதானே எனக்கு இப்படி நடந்தது! எனக்கு நேரிட்ட துன்பம் உமக்குத் தெரியாதா? நான் பாவம் போக்கும் பலியை இன்று உண்டிருந்தால் அது ஆண்டவரின் பார்வைக்கு உகந்ததாய் இருக்குமோ?” என்றார்.20 மோசே இதைக்கேட்டு அமைதியடைந்தார்.