1 சிம்சோன் திம்னாத்திற்குப் போய், திம்னாத்திலே பெலிஸ்தர்களின் மகள்களில் ஒரு பெண்ணைப் பார்த்து,
2 திரும்ப வந்து, தன்னுடைய தாயையும் தகப்பனையும் நோக்கி: திம்னாத்திலே பெலிஸ்தர்களின் மகள்களில் ஒரு பெண்ணைப் பார்த்தேன்; அவளை எனக்குத் திருமணம் செய்துவைக்கவேண்டும் என்றான்.
3 அப்பொழுது அவனுடைய தாயும் அவனுடைய தகப்பனும் அவனை நோக்கி: நீ போய், விருத்தசேதனமில்லாத பெலிஸ்தர்களிடத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளவேண்டியதென்ன? உன்னுடைய சகோதரர்களின் மகள்களிலும், எங்கள் மக்கள் அனைவரிலும் பெண் இல்லையா என்றார்கள். சிம்சோன் தன்னுடைய தகப்பனை நோக்கி: அவள் என்னுடைய கண்ணுக்குப் பிரியமானவள், அவளையே திருமணம் செய்துவைக்கவேண்டும் என்றான்.
4 அவன் பெலிஸ்தர்களிடத்தில் குற்றம் கண்டுபிடிக்கக் காரணம் உண்டாகும்படி, இது கர்த்தரின் செயல் என்று அவனுடைய தாயும் தகப்பனும் அறியாமல் இருந்தார்கள்: அக்காலத்திலே பெலிஸ்தர்கள் இஸ்ரவேலை ஆண்டார்கள்.
5 அப்படியே சிம்சோனும் அவனுடைய தாயும் தகப்பனும் திம்னாத்திற்குப் போகப் புறப்பட்டார்கள்; அவர்கள் திம்னாத் ஊர் திராட்சைத் தோட்டங்கள் வரை வந்தபோது, இதோ, கெர்ச்சிக்கிற இளம் சிங்கம் ஒன்று அவனுக்கு எதிராக வந்தது.
6 அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன் தன்னுடைய கையில் ஒன்றும் இல்லாதிருந்தும், அதை ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப்போடுகிறதுபோல் கிழித்துப்போட்டான்; ஆனாலும் தான் செய்ததை அவன் தன்னுடைய தாய் தகப்பனுக்கு அறிவிக்கவில்லை.
7 அவன் போய் அந்தப் பெண்ணோடு பேசினான்; அவள் சிம்சோனின் கண்ணுக்குப் பிரியமாயிருந்தாள்.
8 சில நாட்களுக்குப்பின்பு, அவன் அவளைத் திருமணம் செய்யத் திரும்பிவந்து, சிங்கத்தின் உடலைப் பார்க்கிறதற்கு வழிவிலகிப்போனான்; இதோ, சிங்கத்தின் உடலுக்குள்ளே தேனீக்கூட்டமும் தேனும் இருந்தது.
9 அவன் அதைத் தன்னுடைய கைகளில் எடுத்து, சாப்பிட்டுக்கொண்டே நடந்து, தன்னுடைய தாய்தகப்பனிடத்தில் வந்து, அவர்களுக்கும் கொடுத்தான்; அவர்களும் சாப்பிட்டார்கள்; ஆனாலும் தான் அந்தத் தேனைச் சிங்கத்தின் உடலிலே எடுத்ததை அவர்களுக்கு அறிவிக்கவில்லை.
10 அவன் தகப்பன் அந்தப் பெண் இருக்கும் இடத்தில் போனபோது, சிம்சோன் அங்கே விருந்துசெய்தான்; வாலிபர் அப்படிச் செய்வது வழக்கம்.
11 அவர்கள் அவனைப் பார்த்தபோது, அவனோடு இருக்கும்படி முப்பது நண்பர்களை அவனிடத்தில் கொண்டுவந்தார்கள்.
12 சிம்சோன் அவர்களை நோக்கி: ஒரு விடுகதையை உங்களுக்குச் சொல்லுகிறேன்; அதை நீங்கள் விருந்து சாப்பிடுகிற ஏழுநாட்களுக்குள்ளே கண்டுபிடித்து எனக்கு விடுவித்தால், நான் உங்களுக்கு முப்பது மேலாடைகளையும் முப்பது மாற்று உடைகளையும் கொடுப்பேன்.
13 அதை எனக்கு விடுவிக்காமல் போனால், நீங்கள் எனக்கு முப்பது மேலாடைகளையும் முப்பது மாற்று உடைகளையும் கொடுக்கவேண்டும் என்றான். அதற்கு அவர்கள்: உன் விடுகதையைச் சொல்லு; நாங்கள் அதைக் கேட்கிறோம் என்றார்கள்.
14 அப்பொழுது அவன்: பட்சிக்கிறவனிடத்திலிருந்து பட்சணமும், பலவானிடத்திலிருந்து மதுரமும் வந்தது என்றான்; அந்த விடுகதை அவர்களால் மூன்று நாட்கள்வரை விடுவிக்கமுடியாமற்போனது.
15 ஏழாம்நாளிலே அவர்கள் சிம்சோனின் மனைவியைப் பார்த்து: உன்னுடைய கணவன் அந்த விடுகதையை எங்களுக்கு விடுவிக்கும்படி நீ அவனை வசப்படுத்து; இல்லாவிட்டால் நாங்கள் உன்னையும் உன்னுடைய தகப்பன் வீட்டையும் அக்கினியால் எரித்துப்போடுவோம்; எங்களுடையவைகளைப் பறித்துக்கொள்ளவா எங்களை அழைத்தீர்கள் என்றார்கள்.
16 அப்பொழுது சிம்சோனின் மனைவி அவனுக்கு முன்பாக அழுது, நீ என்னை நேசிக்காமல் என்னைப் பகைக்கிறாய், என்னுடைய மக்களுக்கு ஒரு விடுகதையைச் சொன்னாய், அதை எனக்காவது விடுவிக்கவில்லையே என்றாள்; அதற்கு அவன்: இதோ, நான் என்னுடைய தாய்தகப்பனுக்கும் அதை விடுவிக்கவில்லையே, உனக்கு அதை விடுவிப்பேனோ என்றான்.
17 விருந்து சாப்பிடுகிற ஏழுநாளும் அவள் அவன் முன்பாக அழுதுகொண்டே இருந்தாள்; ஏழாம் நாளிலே அவள் அவனை தொல்லை செய்துகொண்டிருந்ததினால், அதை அவளுக்கு விடுவித்தான்; அப்பொழுது அவள் தன்னுடைய மக்களுக்கு அந்த விடுகதையை விடுவித்தாள்.
18 ஆகையால் ஏழாம் நாளிலே பொழுது போகுமுன்னே, அந்த ஊர் மனிதர்கள் அவனைப் பார்த்து: தேனைப்பார்க்கிலும் மதுரமானது என்ன, சிங்கத்தைப்பார்க்கிலும் பலமானதும் என்ன என்றார்கள்; அதற்கு அவன்: நீங்கள் என் கிடாரியால் உழாதிருந்தீர்களானால், என்னுடைய விடுகதையைக் கண்டுபிடிப்பதில்லை என்றான்.
19 கர்த்தருடைய ஆவி அவன்மேல் இறங்கியதானால், அவன் அஸ்கலோனுக்குப் போய், அந்த ஊர் மக்களில் முப்பதுபேரைக் கொன்று, அவர்களுடைய ஆடைகளை எடுத்துக்கொண்டுவந்து, விடுகதையை விடுவித்தவர்களுக்கு அந்த மாற்று ஆடைகளைக் கொடுத்து, கோபம் வந்தவனாகப் புறப்பட்டு, தன்னுடைய தகப்பன் வீட்டிற்குப் போய்விட்டான்.
20 சிம்சோனின் மனைவியோ, அவனுடைய நண்பர்களில் அவனோடு சிநேகமாயிருந்த ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டாள்.
Judges 14 ERV IRV TRV