Judges 10 in Tamil ERV Compare Tamil Easy Reading Version
1 அபிமெலேக்கு மரித்தபின், தேவன் மற்றொரு நியாயாதிபதியை இஸ்ரவேலரை காப்பாற்றும்படி எழுப்பினார். அந்த மனிதனின் பெயர் தோலா. தோலா, பூவா என்பவனின் மகன். பூவா தோதோவின் மகன். தோலா இசக்கார் கோத்திரத்தைச் சேர்ந்தவன். தோலா சாமீர் நகரத்தில் வசித்து வந்தான். சாமீர் நகரம் எப்பிராயீம் மலைநாட்டில் இருந்தது.
2 தோலா இஸ்ரவேலருக்கு 23 ஆண்டுகள் நியாயாதிபதியாக இருந்தான் பின்பு அவன் மரித்தபோது சாமீர் நகரத்தில் புதைக்கப்பட்டான்.
3 தோலா மரித்தபின், தேவனால் மற்றொரு நீதிபதி நியமிக்கப்பட்டான். அவன் பெயர் யாவீர். யாவீர் கீலேயாத் தேசத்தில் வாழ்ந்து வந்தான். யாவீர் இஸ்ரவேலருக்கு 22 ஆண்டுகள் நீதிபதியாக இருந்தான்.
4 யாவீருக்கு 30 மகன்கள் இருந்தனர். அந்த 30 மகன்களும் 30 கழுதைகளின் மீது சவாரி செய்தனர். அவர்கள் கீலேயாத் தேசத்தில் உள்ள 30 நகரங்களைத் தம் அதிகாரத்துக்குட்படுத்திக் கொண்டனர். அவை இன்றும் யாவீரின் நகரங்கள் எனப்படுகின்றன.
5 யாவீர் மரித்தபோது காமோன் நகரில் அடக்கம் பண்ணப்பட்டான்.
6 தீமையானவைகள் எனக் கர்த்தரால் குறிக்கப்பட்ட அனைத்தையும் இஸ்ரவேலர் மீண்டும் செய்ய ஆரம்பித்தனர். அவர்கள் பொய்த் தெய்வங்களாகிய பாகாலையும், அஸ்தரோத்தையும் தொழுதுகொள்ள ஆரம்பித்தனர். அவர்கள் ஆராமின் தெய்வங்களையும், சீரியாவின் தெய்வங்களையும் சீதோனின் தெய்வங்களையும் மோவாபின் தெய்வங்களையும் அம்மோனியரின் தெய்வங்களையும், பெலிஸ்தரின் தெய்வங்களையும் தொழுதுகொண்டனர். இஸ்ரவேலர் கர்த்தரை மறந்து அவரை ஆராதிப்பதை நிறுத்தினர்.
7 எனவே கர்த்தர் இஸ்ரவேலர் மீது கோபமடைந்தார். பெலிஸ்தரையும் அம்மோனியரையும் இஸ்ரவேலரைத் தோற்கடிப்பதற்கு கர்த்தர் அனுமதித்தார்.
8 அதே ஆண்டில் யோர்தான் நதிக்குக் கிழக்கிலுள்ள பகுதியில் கீலேயாத் தேசத்தில் வாழ்ந்த இஸ்ரவேலரையும் அழித்தனர். எமோரியர் வாழ்ந்த தேசம் அதுவே. இஸ்ரவேலர் அங்கு 18 ஆண்டுகள் தொல்லையடைந்தனர்.
9 அம்மோனியர் யோர்தான் நதியைக் கடந்தனர். அவர்கள் யூதா, பென்யமீன், எப்பிராயீம் ஜனங்களோடு போரிடச் சென்றனர். அம்மோனியர் இஸ்ரவேலருக்கு மிகுந்த தொல்லைகள் அளித்தனர்.
10 இஸ்ரவேலர் கர்த்தரிடம் உதவிவேண்டி அழுதார்கள். அவர்கள், “தேவனே, உமக்கு எதிராகப் பாவம் செய்தோம். எங்கள் தேவனை விட்டுப் பொய்த் தெய்வமாகிய பாகாலை நாங்கள் தொழுதுகொண்டோம்” என்றனர்.
11 கர்த்தர் இஸ்ரவேலரை நோக்கி, “எகிப்தியரும், எமோரியரும், அம்மோனியரும், பெலிஸ்தியரும் உங்களைத் துன்புறுத்தும்போது என்னிடம் முறையிட்டீர்கள். நான் அவர்களிடமிருந்து உங்களைக் காப்பாற்றினேன்.
12 சீதோனியரும், அமலேக்கியரும், மீதியானியரும் உங்களைத் துன்புறுத்திய போது என்னிடம் முறையிட்டீர்கள். நான் உங்களை அவர்களிடமிருந்தும் காத்தேன்.
13 ஆனால் நீங்கள் என்னை விட்டு விட்டு பிற தெய்வங்களை தொழுதுகொள்ளத் தொடங்கினீர்கள். எனவே உங்களைக் காப்பாற்ற மறுக்கிறேன்.
14 நீங்கள் அந்த தெய்வங்களைத் தொழுதுகொள்ள விரும்புகிறீர்கள். எனவே அவர்களிடம் போய் உதவி வேண்டுங்கள். அந்தத் தெய்வங்கள் உங்கள் தொல்லைகளிலிருந்து உங்களைக் காப்பாற்றட்டும்” என்று பதில் கூறினார்.
15 ஆனால் இஸ்ரவேலர் கர்த்தரிடம், “நாங்கள் பாவம் செய்தோம். உமது விருப்பம்போல எங்களுக்குச் செய்யும். ஆனால் இன்று எங்களைக் காப்பாற்றும்” என்றார்கள்.
16 பின்பு இஸ்ரவேல் ஜனங்கள் அந்நிய தெய்வங்களை வீசியெறிந்து விட்டு, கர்த்தரை மீண்டும் ஆராதிக்க ஆரம்பித்தனர். எனவே கர்த்தர் அவர்கள் துன்பத்தைக் கண்டு மனமிரங்கினார்.
17 அம்மோன் மக்கள் போருக்காக ஒன்றாகக் கூடினார்கள். அவர்களின் முகாம் கீலேயாத் தேசத்தில் இருந்தது. இஸ்ரவேலர் ஒன்றாகக் கூடினார்கள். மிஸ்பாவில் அவர்களின் முகாம் இருந்தது.
18 கீலேயாத் தேசத்தில் வாழ்ந்த ஜனங்களின் தலைவர்கள், “அம்மோன் ஜனங்களை எதிர்த்துப் போரிடுவதற்குத் தலைமை தாங்கும் மனிதன் கீலேயாத்தில் வாழும் ஜனங்களுக்குத் தலைவன் ஆவான்” என்றனர்.