Jeremiah 32 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 யூதாவின் அரசன் செதேக்கியாவினுடைய ஆட்சியின் பத்தாம் ஆண்டில், அதாவது நெபுகத்னேசரது ஆட்சியின் பதினெட்டாம் ஆண்டில், ஆண்டவரிடமிருந்து எரேமியாவுக்கு வாக்கு அருளப்பட்டது.2 அப்பொழுது பாபிலோனிய மன்னனுடைய படை எருசலேமை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தது. இறைவாக்கினர் எரேமியாவோ யூதா அரசனது அரண்மனையில் இருந்த காவல்கூடத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்தார்.3 யூதா அரசன் செதேக்கியா எரேமியாவைப் பார்த்து, “ஆண்டவர் கூறுவது இதுவே: இந்நகரைப் பாபிலோனிய மன்னனுடைய கையில் ஒப்புவிக்கிறேன். அவனும் அதைக் கைப்பற்றிக்கொள்வான்.4 யூதாவின் அரசன் செதேக்கியா கல்தேயரின் கைக்குத் தப்பமாட்டான்; மாறாக, அவன் பாபிலோனிய மன்னனிடம் கையளிக்கப்படுவது உறுதி. செதேக்கியா அவனோடு நேருக்கு நேர் பேசுவான்; அவனை முகத்துக்கு முகம் பார்ப்பான்.5 அவன் செதேக்கியாவைப் பாபிலோனுக்கு இழுத்துச் செல்வான். நான் அவனைச் சந்திக்கும் வரையில் அவன் அங்கேயே இருப்பான்,” என்கிறார் ஆண்டவர். மேலும், கல்தேயருக்கு எதிராக நீங்கள் போரிட்டாலும் வெற்றி பெறமாட்டீர்கள் என்று நீ இறைவாக்கு உரைத்தது ஏன்? என்று சொல்லி, அவரைச் சிறைப்படுத்தினான்.⒫6 அப்பொழுது எரேமியா கூறியது: ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:7 இதோ, உன் உறவினன் சல்லூமின் மகன் அனமேல் உன்னிடம் வந்து, “அனத்தோத்தில் இருக்கும் என் நிலத்தை நீ விலைக்கு வாங்கிக் கொள். எனெனில் அதை வாங்கி மீட்பது உனது உரிமை ஆகும்” என உன்னை வேண்டுவான்.8 ஆண்டவர் உரைத்திருந்தவாறே என் உறவினரின் மகன் அனமேல் காவல் கூடத்தில் இருந்த என்னிடம் வந்து, “தயவு செய்து பென்யமின் நாட்டில் அனத்தோத்தில் உள்ள என் நிலத்தை நீர் விலைக்கு வாங்கிக்கொள்ளும்; ஏனெனில் அதை மீட்டு உடைமையாக்கிக்கொள்வது உமது உரிமை; நீரே அதை வாங்கிக்கொள்ளும்” என்று வேண்டினார். அப்பொழுது அது ஆண்டவரின் வாக்கு என்று நான் அறிந்துகொண்டேன்.9 அதன்படி அனத்தோத்தில் இருந்த அந்த நிலத்தை என் உறவினரின் மகன் அனமேலிடமிருந்து நான் வாங்கினேன்; அதற்கு விலையாகப் பதினேழு செக்கேல் வெள்ளியை அவரிடம் நிறுத்துக் கொடுத்தேன்.10 பத்திரத்தில் கையெழுத்திட்டு, அதில் முத்திரையிட்டேன்; சாட்சிகள் முன்னிலையில் வெள்ளியைத் தராசில் வைத்து நிறுத்துக் கொடுத்தேன்.11 பின்னர் விதி முறைகளும் நிபந்தனைகளும் அடங்கிய முத்திரையிடப்பட்ட ஒப்பந்தப் பத்திரத்தையும் அதன் முத்திரையிடப்படாத நகலையும் நான் பெற்றுக் கொண்டேன்.12 ஒப்பந்தப் பத்திரத்தை மாசேயாவின் பேரனும் நேரியாவின் மகனுமான பாரூக்கிடம் நான் கொடுத்தேன். என் உறவினரின் மகன் அனமேல் முன்னிலையிலும் பத்திரத்தில் கையொப்பமிட்டிருந்த சாட்சிகள் முன்னிலையிலும் காவல்கூடத்தில் உட்கார்ந்திருந்த யூதர் அனைவருடைய முன்னிலையிலும் நான் அதைக் கொடுத்தேன்.13 அவர்கள் முன்னிலையில் நான் பாரூக்கிற்குக் கொடுத்த கட்டளையாவது;14 இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; இந்த ஒப்பந்தப் பத்திரங்களை — அதவாது, முத்திரையிடப்பட்டதையும் அதன் நகலையும் — எடுத்துக்கொள். நீண்ட நாள் அவை பாதுகாப்புடன் இருக்கும்பொருட்டு அவற்றை ஒரு மண்பாண்டத்தில் போட்டுவை.15 ஏனெனில் இஸ்ரயேலின் கடவுளாகிய படைகளின் ஆண்டவர் கூறுவது இதுவே; இந்நாட்டில் வீடுகளும் நிலங்களும் திராட்சைத் தோட்டங்களும் மீண்டும் விலைக்கு வாங்கப்படும்.16 ஒப்பந்தப் பத்திரத்தை நேரியாவின் மகன் பாரூக்கிடம் ஒப்படைத்த பின்னர், நான் ஆண்டவரிடத்தில் வேண்டிக்கொண்டது:17 “என் தலைவராகிய ஆண்டவரே! உம் மிகுந்த ஆற்றலாலும் ஓங்கிய புயத்தாலும் விண்ணையும் மண்ணையும் படைத்தவர் நீரே! உமக்குக் கடினமானது எதுவும் இல்லை.18 ஆயிரமாயிரம் பேருக்கு நீர் அருளன்பு காட்டி வருகிறீர். ஆனால் தந்தையரின் குற்றத்திற்கான தண்டனையை அவர்களுக்குப் பின் அவர்களுடைய பிள்ளைகளின் மடியில் கொட்டுகிறீர். மாபெரும் ஆற்றல் மிகு இறைவா! படைகளின் ஆண்டவர் என்பதே உமது பெயராகும்.19 நீர் திட்டமிடுவதில் பெரியவர்; செயலில் வல்லவர். மானிடரின் வழிகள் எல்லாம் உமது கண்முன்னே உள்ளன. எனவே, அவரவருடைய வழிகளுக்கும் செயல்களின் விளைவுகளுக்கும் ஏற்றவாறு நீர் கைம்மாறு அளிக்கிறீர்.20 நீர் எகிப்து நாட்டில் செய்த அடையாளங்களையும் வியத்தகு செயல்களையும் இஸ்ரயேலிலும் மற்ற எல்லா மக்களினத்தார் நடுவிலும் இன்றுவரை தொடர்ந்து புரிந்துவருகிறீர். இன்றுவரை உமது பெயருக்கு புகழ் தேடிக்கொண்டீர்.21 அடையாளங்கள் மற்றும் வியத்தகு செயல்களால் பேரச்சம் உண்டாக, வலிமை மிகு கையோடும் ஓங்கிய புயத்தோடும் உம் மக்கள் இஸ்ரயேலை எகிப்து நாட்டினின்று நீர் கூட்டிக் கொண்டு வந்தீர்.22 அவர்களுடைய மூதாதையர்க்குத் தருவதாக நீர் வாக்களித்திருந்த நாட்டை — பாலும் தேனும் வழிந்தோடும் இந்நாட்டை — அவர்களுக்குக் கொடுத்தீர்.23 அவர்கள் வந்து அதைத் தங்கள் உடைமையாக்கிக் கொண்டார்கள். ஆனால் உம் குரலுக்குச் செவிகொடுக்கவில்லை; உம் சட்டத்தையும் பின்பற்றவில்லை; நீர் கட்டளையிட்டிருந்த எதையுமே செய்யவில்லை. ஆதலால் இத்தீங்கு அனைத்தும் அவர்களுக்கு நேரிடச் செய்தீர்.⒫24 இதோ, நகரைக் கைப்பற்றும் பொருட்டு முற்றுகைத்தளங்கள் எழுகின்றன! வாள், பஞ்சம், கொள்ளைநோய் காரணமாக, நகரை எதிர்த்துப் போரிடும் கல்தேயர் அதைக் கைப்பற்றுவர். நீர் சொன்னது எல்லாம் இப்பொழுது நடந்தேறிவிட்டதை நீரே காண்கிறீர்!25 ஓ! தலைவராகிய ஆண்டவரே, நீர் என்னைப் பார்த்து, ‘வெள்ளியை விலையாகக் கொடுத்து உனக்கு நிலத்தை வாங்கிக் கொள்; அதற்குச் சாட்சிகளையும் வைத்துக் கொள்’ என்று சொல்கிறீரே! ஆனால் நகர் கல்தேயரின் கையில் ஏற்கெனவே வீழ்ந்து விட்டதே!”⒫26 பின்னர் ஆண்டவரின் வாக்கு எரேமியாவுக்கு அருளப்பட்டது;27 நானே ஆண்டவர்; எல்லா மக்களுக்கும் கடவுள் நானே; அப்படியிருக்க எனக்குக் கடினமானது எதுவும் உண்டோ?28 ஆதலால், ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; கல்தேயரிடமும் பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசரிடமும் இந்நகரை நான் கையளிப்பேன். அவனும் அதைக் கைப்பற்றிக்கொள்வான்.29 இந்நகரை எதிர்த்துப் போரிடும் கல்தேயர் அதன் உள்ளே புகுந்து அதற்குத் தீ வைப்பர்; அதனோடு வீடுகளையும் தீக்கிரையாக்குவர்; ஏனெனில் அந்த வீடுகளின் மேல் தளங்களில்தான் மக்கள் பாகாலுக்குத் தூபம் காட்டினார்கள்; வேற்றுத் தெய்வங்களுக்கு நீர்மப் படையல்களைப் படைத்தார்கள்; இவ்வாறு அவர்கள் எனக்குச் சினமூட்டினார்கள்.30 இஸ்ரயேல் மக்களும் யூதா மக்ளும் தங்கள் இளமை முதல் எனது திருமுன் தீமை ஒன்றையே செய்துவந்துள்ளார்கள்; ஆம், இஸ்ரயேல் மக்கள் தங்கள் செயல்களால் எனக்குச் சினமூட்டியதைத் தவிர, வேறு எதுவும் செய்ததில்லை, என்கிறார் ஆண்டவர்.⒫31 இந்நகர் கட்டியெழுப்பப்பட்டது முதல் இந்நாள்வரை, என் சினத்திற்கும் சீற்றத்திற்கும் காரணமாய் இருந்துள்ளது. எனவே நான் அதை என் திருமுன்னின்று அகற்றி விடுவேன்.32 ஏனெனில் இஸ்ரயேல் மக்களும் யூதா மக்களும் தங்களது எல்லாத் தீச்செயல்கள் மூலம் எனக்குச் சினமூட்டியுள்ளார்கள்; அவர்களும் அவர்களுடைய அரசர், தலைவர், குருக்கள், இறைவாக்கினர், யூதா மக்கள், எருசலேம்வாழ் மக்கள் ஆகிய அனைவருமே இவ்வாறு செய்துள்ளார்கள்.33 அவர்கள் தங்களது முகத்தை அல்ல, முதுகையே எனக்குக் காட்டினார்கள். திரும்பத் திரும்ப நான் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்திருந்தும் அவர்கள் அதற்குச் செவிகொடுக்கவும் இல்லை, அறிவுரையை ஏற்றுக் கொள்ளவும் இல்லை.34 எனது பெயர் விளங்கும் கோவிலைத் தீட்டுப்படுத்தும்படி, தங்கள் அருவருப்பான சிலைகளை அதில் வைத்தனர்.35 மோலேக்கு தெய்வத்துக்குத் தங்கள் புதல்வர், புதல்வியரைத் தீயில் சுட்டெரிக்கும்படி, பென்இன்னோம் பள்ளத்தாக்கில் பாகாலின் தொழுகை மேடுகளை எழுப்பினார்கள். இத்தகைய அருவருப்பான செயலைச் செய்வதன்மூலம், யூதா பாவத்தில் விழவேண்டும் என்று நான் அவர்களுக்குக் கட்டளையிடவில்லை; இது என் எண்ணத்தில் கூட எழவில்லை.36 இப்பொழுதோ வாள், பஞ்சம், கொள்ளைநோய் காரணமாக இந்நகர் பாபிலோனிய மன்னனிடம் கையளிக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் இந்நகரைப் பற்றிக் கூறுகிறீர்கள். ஆனால் இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் அதைக் குறித்துக் கூறுவது இதுவே;37 “இதோ, என் சினத்திலும் சீற்றத்திலும் வெஞ்சினத்திலும் நான் அவர்களைத் துரத்தியடித்துள்ள எல்லா நாடுகளினின்றும் அவர்களைக் சுட்டிச் சேர்ப்பேன்; அவர்களை இந்த இடத்திற்குத் திரும்பக் கூட்டி வந்து, பாதுகாப்புடன் அவர்களை வாழச் செய்வேன்.38 அவர்கள் என் மக்களாய் இருப்பார்கள். நான் அவர்கள் கடவுளாய் இருப்பேன்.39 ஒரே இதயத்தையும் ஒரே நெறிமுறையையும் நான் அவர்களுக்குக் கொடுப்பேன். இதனால் அவர்கள் தங்கள் நலனையும், தங்களுக்குப்பின் தங்கள் பிள்ளைகளின் நலனையும் கருதி, எந்நாளும் எனக்கு அஞ்சி நடப்பார்கள்.40 நான் அவர்களோடு என்றும் நிலைத்திருக்கும் உடன்படிக்கை ஒன்றைச் செய்துகொள்வேன். எனவே அவர்களுக்கு நன்மை செய்ய நான் தவறமாட்டேன். என்னைப் பற்றிய அச்சத்தை அவர்களது இதயத்தில் பதியவைப்பேன். இதனால் அவர்கள் என்னைவிட்டு விலகிச்செல்லமாட்டார்கள்.41 அவர்களுக்கு நன்மை புரிவதில் நான் மகிழ்ச்சி அடைவேன்; என் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் அவர்களை நான் இந்நாட்டில் உறுதியாக நிலைநாட்டுவேன்⒫42 ஏனெனில், ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; இத்தகைய பெரும் தீங்கு அனைத்தையும் இம்மக்கள்மீது வரச் செய்தது போலவே, நான் அவர்களுக்கு அறிவித்திருக்கும் எல்லா நலன்களையும் அவர்களுக்கு வழங்குவேன்.43 ‘இது மனிதர்களோ விலங்குகளோ இல்லாத பாழடைந்த நாடு; இது கல்தேயரிடம் கையளிக்கப்பட்டுள்ள நாடு, என்று எந்த நாட்டைப் பற்றி நீங்கள் கூறுகிறீர்களோ, அந்த நாட்டில் நீங்கள் மீண்டும் விலைக்கு நிலங்களை வாங்குவீர்கள்.44 வெள்ளியை விலைக்குக் கொடுத்து நிலங்கள் வாங்குவர்; அவற்றுக்குப் பத்திரம் எழுதி முத்திரையிடுவர்; இவை சாட்சிகள் முன்னிலையில் பென்யமின் நாட்டிலும், எருசலேமின் சுற்றுப் புறங்களிலும், யூதாவின் நகர்களிலும், மலைப் பகுதியிலுள்ள நகர்களிலும், செபேலாவைச் சார்ந்த நகர்களிலும், நெகேபைச் சார்ந்த நகர்களிலும் நிகழும். ஏனெனில் அடிமைத்தனத்தினின்று நான் அவர்களைத் திரும்பி வரச்செய்வேன்;’ என்கிறார் ஆண்டவர்.Jeremiah 32 ERV IRV TRV