Jeremiah 10 in Tamil ERV Compare Tamil Easy Reading Version
1 இஸ்ரவேல் குடும்பத்தாரே! உங்களைக் குறித்து கர்த்தர் சொன்னதை கவனித்து கேளுங்கள்!
2 “மற்ற நாடுகளில் உள்ள ஜனங்களைப் போன்று வாழாதீர்கள்! வானத்தில் தோன்றும் சிறப்பான அடையாளங்களைக் கண்டு பயப்படாதீர்கள்! அயல் நாடுகளில் உள்ளவர்கள் தாம் வானத்தில் காண்கின்றவற்றைப்பற்றி பயப்படுகிறார்கள். ஆனால் அவற்றைப்பற்றி நீங்கள் பயப்பட வேண்டாம்!
3 மற்ற ஜனங்களின் பழக்கவழக்கங்கள் பயனற்றவை. ஏனெனில், அவர்களது விக்கிரகங்கள் காட்டிலுள்ள மரக்கட்டைகளைத் தவிர, வேறில்லை. அவர்களின் விக்கிரகங்கள் வேலையாளால் உளியால் செதுக்கப்பட்டவை.
4 அவர்கள் தமது விக்கிரகங்களைப் பொன்னாலும் வெள்ளியாலும் அழகுபடுத்துகின்றனர். அவர்கள் ஆணிகளையும், சுத்திகளையும் பயன்படுத்தி, விக்கிரகங்கள் விழாமல் செய்கிறார்கள். எனவே, அவை விழுவதில்லை.
5 அயல்நாடுகளில் உள்ள விக்கிரகங்கள் வெள்ளரிக்காய் வயலிலே, குருவிகளை விரட்டுவதற்காக வைக்கப்பட்ட கொல்லை பொம்மையைப் போன்றுள்ளன. அவர்களின் விக்கிரகங்களால் பேசமுடியாது. அவர்களின் விக்கிரகங்களால் நடக்கமுடியாது. ஜனங்கள் அந்த விக்கிரகங்களைத் தூக்கிச் செல்லவேண்டும். அவற்றுக்கு நீங்கள் பயப்படவேண்டாம். அவைகளால் உங்களைக் காயப்படுத்த முடியாது. அவை உங்களுக்கு உதவியும் செய்யாது” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
6 கர்த்தாவே, உம்மைப் போன்று எவரும் இல்லை! நீர் பெரியவர்! உமது நாமம் மகிமையும் பெருமையும் வல்லமையும் வாய்ந்தது!
7 தேவனே! எல்லோரும் உமக்கு மரியாதைச் செலுத்தவேண்டும். அனைத்து தேசத்தாருக்கும் நீரே அரசன். அவர்களின் மரியாதைக்கு நீர் பாத்திரர். அந்த நாடுகளுக்கிடையில் பல ஞானமுள்ளவர்கள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் எவரும் உம்மைப் போன்று ஞானமுள்ளவர்கள் இல்லை.
8 வேறு நாடுகளில் உள்ள, அனைத்து ஜனங்களும், அறியாமையும், மூடத்தனமும் கொண்டவர்கள். அவர்களின் போதனைகள் பயனற்றவை. அவர்களின் தெய்வங்கள் மரச் சிலைகளே.
9 அவர்கள் தர்ஷீசிலிருந்து கொண்டுவந்த வெள்ளியையும் ஊப்பாசிலிருந்து கொண்டு வந்த பொன்னையும் வைத்து அந்தச் சிலைகளைச் செய்திருக்கின்றனர். அந்த விக்கிரகங்கள், தச்சன்களாலும், தட்டான்களாலும் செய்யப்பட்டவை. அவர்கள் அந்த விக்கிரகங்களுக்கு, இளநீலமும், ஊதா ஆடையும் அணிவிக்கிறார்கள். “ஞானமுள்ளவர்கள்” அந்த “தெய்வங்களைச்” செய்கின்றனர்.
10 ஆனால் கர்த்தர்தான் உண்மையான ஒரே தேவன். உண்மையில் ஜீவனுள்ள ஒரே தேவன் அவர்தான்! அவர் என்றென்றும் ஆளுகின்ற அரசன்! தேவன் கோபங்கொண்டால் பூமி அதிர்கிறது, தேசங்களிலுள்ள ஜனங்களால் அவரது கோபத்தை தாங்க முடியாது.
11 “அந்த ஜனங்களிடம் இந்தச் செய்தியைக் கூறுங்கள், ‘அந்தப் பொய்த் தெய்வங்கள் பரலோகத்தையும் பூமியையும் படைக்கவில்லை. அந்தப் பொய்த் தெய்வங்கள் அழிக்கப்படுவார்கள். வானம் மற்றும் பூமியிலிருந்து மறைவார்கள்’” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
12 தேவன் ஒருவரே தமது வல்லமையால் பூமியைச் செய்தார். தேவன் தனது ஞானத்தைப் பயன்படுத்தி பூமியை உண்டாக்கினார். தேவன் தமது ஞானத்தினால் பூமியின்மேல் வானத்தை விரியச் செய்தார்.
13 சத்தமான இடிக்கும் தேவனே காரணமாகிறார். வானத்திலிருந்து பெருவெள்ளம் பொழியவும் அவரே காரணமாகிறார். அவர் பூமியின் அனைத்து இடங்களிலிருந்தும் வானத்திற்கு மேகம் எழும்பும்படி செய்கிறார். அவர் மின்னலுடன் மழையை அனுப்புகிறார். அவர் தமது பண்டகச் சாலையிலிருந்து காற்றை அனுப்புகிறார்.
14 ஜனங்கள் மூடர்களாக இருக்கிறார்கள்! உலோகச் சிற்பிகள் தாங்கள் செய்த விக்கிரகங்களைக் கொண்டு அவமானத்துக்குள்ளாகின்றனர். அந்தச் சிலைகள் வெறும் பொய் என்று அவர்கள் அறிவார்கள். அந்த விக்கிரகங்களுக்கு உயிர் இல்லை.
15 அந்த விக்கிரகங்கள் பயனற்றவை. அவை பொய்யானவை. வஞ்சிக்கும்படியாக செய்யப்பட்டவை. நியாயத்தீர்ப்புக் காலத்தில், அவ்விக்கிரகங்கள் அழிக்கப்படும்.
16 ஆனால் யாக்கோபின் தேவன், அந்த விக்கிரகங்களைப் போன்றவரல்ல. தேவன் எல்லாவற்றையும் படைத்தார், தேவன் தமது சொந்த ஜனங்கள் என்று இஸ்ரவேல் ஜனங்களை தேர்ந்தெடுத்தார். “சர்வ வல்லமையுள்ள கர்த்தர்” என்பது தேவனுடைய நாமம்.
17 உனக்குச் சொந்தமானவற்றையெல்லாம் சேர்த்துக்கொள். புறப்படத் தயாராகு. யூதாவின் ஜனங்களாகிய நீங்கள் பட்டணத்தில் பிடிபடுவீர்கள். இதனை பகைவர்கள் சுற்றி வளைத்துக் கொள்வார்கள்.
18 “இந்த முறை, யூதாவின் ஜனங்களை நாட்டைவிட்டு வெளியே எறிவேன். நான் அவர்களுக்கு வலியும், துன்பமும் கொண்டு வருவேன். நான் இதனைச் செய்வதன் மூலம் அவர்கள் பாடம் கற்றுக்கொள்வார்கள்” என்று கர்த்தர் சொல்லுகிறார்.
19 ஓ! நான் (எரேமியா) மோசமாகக் காயப்பட்டேன், நான் புண்பட்டேன், என்னால் குணமாக முடியவில்லை எனக்குள் நான் இவ்வாறு சொல்லிக்கொண்டேன். “இதுதான் என்னுடைய நோய். இதன் மூலம் நான் துன்பப்படவேண்டும்.”
20 எனது கூடாரம் அழிக்கப்பட்டது. கூடாரக் கயிறுகள் எல்லாம் அறுபட்டன. எனது பிள்ளைகள் என்னை விட்டுவிட்டனர். அவர்கள் போய்விட்டார்கள். எனது கூடாரத்தை அமைப்பதற்கு எவனும் இருக்கவில்லை, எனக்கான இருப்பிடத்தை உருவாக்கிட யாரும் இல்லை.
21 மேய்ப்பர்கள் (தலைவர்கள்) மூடர்கள், அவர்கள் கர்த்தரைத் தேட முயற்சி செய்வதில்லை. அவர்களுக்கு ஞானம் இல்லை. எனவே அவரது மந்தைகள் (ஜனங்கள்) சிதறிக் காணாமல் போகின்றன.
22 உரத்த சத்தத்தைக் கேளுங்கள்! இந்த உரத்த சத்தம் வடக்கிலிருந்து வருகிறது. அது யூதாவின் நகரங்களை அழிக்கும். யூதா ஒரு வெறுமையான வனாந்தரமாகும், அது ஓநாய்களுக்கான வீடாகும்.
23 கர்த்தாவே! ஜனங்கள் உண்மையில் தங்களது வாழ்வைக் கட்டுப்படுத்தவோ, அல்லது தங்கள் எதிர்காலத்தை திட்டமிடவோ முடியாது, என்பதை நான் அறிவேன். வாழ்வதற்கான சரியான வழியை ஜனங்கள் உண்மையில் அறிந்துகொள்ளவில்லை.
24 கர்த்தாவே! எங்களைத் திருத்தும், நீதியாய் இரும். கோபத்தில் எங்களைத் தண்டிக்காமல்இரும். இல்லையேல் நீர் எங்களை அழிக்கக்கூடும்.
25 நீர் கோபத்தோடு இருந்தால், பின் அந்நிய நாடுகளைத் தண்டியும். அவர்கள் உம்மை அறிவதில்லை, மதிப்பதுமில்லை. அந்த ஜனங்கள் உம்மைத் தொழுதுகொள்வதுமில்லை. அந்த நாடுகள் யாக்கோபின் குடும்பத்தை அழித்தது, அவர்கள் இஸ்ரவேலை முழுமையாக அழித்தனர், அவர்கள் இஸ்ரவேலரின் தாய் நாட்டையும் அழித்தனர்.