Hebrews 9 in Tamil ERV Compare Tamil Easy Reading Version
1 முதலாம் உடன்படிக்கையானது வழிபாட்டிற்கான விதிகளை உடையது. மனிதர்களால் உருவாக்கப்பட்ட வழிபாட்டிற்கான இடத்தை உடையது.
2 இந்த இடம் ஒரு கூடாரத்துக்கு உள்ளே இருந்தது. கூடாரத்திற்குள் முன் பகுதி உள்ள இடம் பரிசுத்தமான இடம் என அழைக்கப்பட்டது. அந்தப் பரிசுத்தமான இடத்தில் ஒரு குத்துவிளக்கும், ஒரு மேஜையும், தேவனுக்குப் படைக்கப்பட்ட சிறப்பான அப்பங்களும் இருந்தன.
3 இரண்டாம் திரைக்குப் பின்னே மிகப் பரிசுத்தமானது என அழைக்கப்படும் இடம் இருந்தது.
4 அதில் பொன்னால் செய்த தூபகலசமும் பழைய உடன்படிக்கை வைக்கப்பட்ட பரிசுத்தமான பெட்டியும் இருந்தன. அப்பெட்டி தங்கத் தகட்டால் மூடி வைக்கப்பட்டிருந்தது. அப்பெட்டிக்குள் மன்னா வைக்கப்பட்டிருந்த தங்கப் பாத்திரமும் துளிர்த்த இலைகளையுடைய ஆரோனின் கைத்தடியும் இருந்தன. மேலும் பத்துக் கட்டளைகள் பொறித்த உடன்படிக்கையின் கற்பலகைகளும் இருந்தன.
5 அப்பெட்டியின் மேல் கிருபையாகிய இருக்கையை மறைத்தபடி தேவனுடைய விசேஷ தூதர்கள் இருந்தார்கள். (இப்பொழுது இவற்றைப் பற்றிய உண்மையான விபரங்களைச் சொல்லக் காலம் போதாது.)
6 இவ்விதத்தில் எல்லாப் பொருள்களும் ஆயத்தப்படுத்தப்பட்ட பிறகு, ஆராதனை சேவையை செய்யும் பொருட்டு ஆசாரியர்கள் முதலாம் பரிசுத்தக் கூடாரத்தில் நித்தமும் செல்லத் தொடங்குவார்கள்.
7 ஆனால் பிரதான ஆசாரியர் மட்டுமே மிகப் பரிசுத்தமான இரண்டாம் அறைக்குள் பலியின் இரத்தத்தைச் சிந்தி நுழைய முடியும். அவர் முதலில் தான் செய்த பாவங்களுக்காகக் காணிக்கை செலுத்த வேண்டும். அதற்குப் பிறகு தவறு செய்துகொண்டிருக்கிறோம் என்று தெரியாமலேயே அறியாமையால் மக்கள் செய்த பாவங்களுக்காக அவர் காணிக்கைகளை வழங்கவேண்டும்.
8 முதலாம் கூடாரம் நிற்கும் வரையிலும் மிகப் பரிசுத்தமான இடத்திற்குப் போகும் வழியானது மூடப்பட்டிருக்கிறது என்பதைப் புலப்படுத்தவே பரிசுத்த ஆவியானவர் இவ்விரண்டு அறைகளையும் பயன்படுத்துகிறார்.
9 எல்லாமே நிகழ் காலத்தின் ஒரு அடையாளமானது. தாம் செலுத்தும் காணிக்கையாலும், பலிகளாலும் வழிபடுகிறவனின் மனசாட்சியானது முழுமைப்படுத்தப்படுவதில்லை.
10 ஏனெனில் உண்ணுதல், பருகுதல், சடங்குக் குளியல்கள் ஆகிய புற விஷயங்களைப் பற்றிய காணிக்கைகளும் பலிகளுமாகவே இருக்கின்றன. இவ்விஷயங்கள் தேவனுடைய புதிய வழி உண்டாகும் வரைக்கும் பயன்படுகின்றன.
11 மேலும் இப்போது வரப்போகிற நன்மைகளுக்குரிய பிரதான ஆசாரியனாகக் கிறிஸ்து வந்திருக்கிறார். (சாதாரண கூடாரத்தின் வழியே அவர் வரவில்லை). மனிதக் கைகளால் உருவாக்கப்படாத உயர்ந்ததும், பரிசுத்தமானதுமான கூடாரத்தின் வழியே வந்தார். அக்கூடாரமானது தேவன் உருவாக்கிய இவ்வுலகத்தின் பகுதியல்ல.
12 மேலும் மிகப் பரிசுத்தமான கூடாரத்திற்குள் இயேசு நுழைந்தபோது, வெள்ளாட்டுக்கடாக்கள் மற்றும் காளைகளின் இரத்தத்தை அவர் பயன்படுத்தவில்லை. மிகப் பரிசுத்தமான கூடாரத்திற்குள் நுழைய அவர் தன் சொந்த இரத்தத்தையே பயன்படுத்தினார். எல்லா காலத்திற்கும் போதுமென்கிற அளவிற்கு ஒரே ஒருமுறை தான் அவர் அதற்குள் சென்றார். இவ்வழியில் நமக்கு அவர் நித்திய விடுதலையைப் பெற்றுத்தந்தார்.
13 வெள்ளாட்டுக்கடா காளை ஆகியவற்றின் இரத்தமும் தீட்டுப்பட்ட மக்கள் மீது தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும் அவர்களைப் பரிசுத்தமாக்கிப் புறப்பரிசுத்தம் உடையவர்களாக்க முடியும்.
14 இது உண்மை எனில், கிறிஸ்துவின் இரத்தம் இதிலும் மிக்க வல்லமை உள்ளது என்பதை எண்ணிப் பாருங்கள். பரிசுத்த ஆவியானவர் மூலமாக தேவனுக்கு இயேசு தன்னைத் தானே ஒரு முழுமையான பலியாக வழங்கினார். ஆகவே நமக்கு ஆன்மீக மரணத்தைக் கொண்டுவருகிற தீய செயல்களில் இருந்து அவர் இரத்தமானது நம் இதயத்தை சுத்தமாக்கும். ஜீவனுள்ள தேவனை வழிபடும் வண்ணம் நாம் சுத்தமாக்கப்படுகிறோம்.
15 கிறிஸ்து இறந்ததால், புதிய உடன்படிக்கையின் நடுவராக அவர் ஆனார். இப்போது முதல் உடன்படிக்கையின் கீழ் செய்த தவறுகளில் இருந்து மக்களை விடுவிக்கும் கிறிஸ்துவின் மரணம் ஒன்றிருந்தது. அதனால், அழைக்கப்பட்டவர்கள் என்றென்றும் உரிமைகளைப் பெறுவர்.
16 ஒரு மனிதன் இறக்கும்போது அவன் தன் மரண சாசனத்தை விட்டுச்செல்கிறான். ஆனால் அம்மரண சாசனத்தை எழுதியவன் இறந்துபோனான் என்பதை மக்கள் நிரூபிக்க வேண்டும்.
17 மரண சாசனத்தை எழுதியவன் வாழ்கிறான் என்றால் அந்த சாசனத்திற்குப் பொருள் இல்லை. அந்த சாசனத்தை அவன் இறந்த பிறகே பயன்படுத்த முடியும்.
18 தேவனுக்கும் அவரது மக்களுக்கும் ஏற்பட்ட முதல் உடன்படிக்கையும் இது போலாயிற்று. இதுவும் இரத்தமில்லாமல் நன்மையடையவில்லை.
19 முதலில் மோசே சட்டத்தில் உள்ள ஒவ்வொரு கட்டளையையும் அறிவித்தான். பிறகு இளங்காளைகளின் இரத்தத்தைத் தண்ணீரோடும், சிவப்பான ஆட்டு மயிரோடும் ஈசோப்போடும் கூட எடுத்து சட்டப் புத்தகத்தின் மேலும் மக்கள் மீதும் தெளிக்கப் பயன்படுத்தினான்.
20 “தேவன் உங்களுக்குக் கட்டளையிட்ட உடன்படிக்கையின் இரத்தம் இதுதான்” என்று மோசே கூறினான்.
21 இவ்வாறு பரிசுத்தக் கூடாரத்தின் மேலும் மோசே இரத்தத்தை தெளித்தான். அத்துடன் வழிபாட்டிற்குரிய அனைத்துப் பொருட்களின் மீதும் தெளித்தான்.
22 அனைத்தையும் இரத்தத்தால் சுத்தப்படுத்த முடியும் என்று சட்டம் சொல்கிறது. இரத்தம் இல்லாமல் எவ்வித பாவங்களும் மன்னிக்கப்படமாட்டாது.
23 எனவே பரலோகத்தில் உள்ளவற்றின் சாயலாக உள்ள இவற்றை விலங்குகளைப் பலி கொடுத்து சுத்தம் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். ஆனால் பரலோகத்தில் உள்ளவற்றிற்கு இதைவிடச் சிறப்பான பலிகள் அவசியம் ஆகும்.
24 கிறிஸ்து மிகப் பரிசுத்தமான இடத்திற்குப் போனார். ஆனால் உண்மையானதின் சாயலாக மனிதக் கைகளால் செய்யப்பட்ட இடத்திற்குப் போகவில்லை. கிறிஸ்து பரலோகத்திற்கே சென்றார். இப்போது அங்கே நமக்காக தேவனுக்கு முன் தோன்றுகிறார்.
25 ஒவ்வொரு ஆண்டும் தனக்குச் சொந்தமற்ற இரத்தத்தோடு பிரதான ஆசாரியன் மிகப் பரிசுத்தமான இடத்திற்குள் செல்ல வேண்டும். ஆனால் மீண்டும் மீண்டும் கிறிஸ்து தன்னையே வழங்கிக்கொள்ள வேண்டியதில்லை.
26 அப்படியானால் உலகம் உண்டானது முதல் அவர் அநேகந்தரம் இதுபோல் பாடுபட வேண்டியது இருந்திருக்கும். அவர் தம்மை தாமே பலியிட வேண்டியிருந்தது. அதனால் அவர் இந்தக் கடைசி காலத்தில் ஒரே ஒருதரம் தம்மைப் பலியிட்டார். இதன் மூலம் அவர் அனைவரது பாவங்களையும் நீக்கிவிட்டார்.
27 ஒவ்வொரு மனிதனும் ஒருமுறை மட்டுமே சாகிறான். அதன் பிறகு நியாயந்தீர்க்கப்படுகிறான்.
28 ஆகையால் ஒவ்வொருவரின் பாவங்களையும் தீர்க்கும்படி கிறிஸ்து ஒருமுறை மரித்தார். மேலும் கிறிஸ்து இரண்டாம் முறையும் வருவார். பாவங்களைத் தீர்க்கும்படி அல்ல. தமக்காகக் காத்துக்கொண்டிருக்கிறவர்களுக்கு இரட்சிப்பை அளிக்க வருவார்.