1 ஆபகூக் தீர்க்கதரிசி சிகாயோனில் செய்த ஜெபம்.
2 கர்த்தாவே, நான் உம்மைப்பற்றிய செய்திகளைக் கேட்டிருக்கிறேன். கர்த்தாவே, நீர் கடந்த காலத்தில் செய்த வல்லமைமிக்க செயல்களால் ஆச்சரியப்படுகிறேன். இப்பொழுது நான், நீர் எங்கள் காலத்தில் பெருஞ் செயல்கள் செய்ய வேண்டும் என்று ஜெபிக்கிறேன். தயவுசெய்து அச்செயல்கள் எங்கள் காலத்தில் நிகழுமாறு செய்யும். ஆனால் நீர் கோபங்கொள்ளும்போதும் எங்கள் மீது இரக்கம் காட்ட நினைத்துக்கொள்ளும்.
3 தேவன் தேமானிலிருந்து வந்துகொண்டிருக்கிறார், பரிசுத்தமானவர் பாரான் மலையிலிருந்து வந்துகொண்டிருக்கிறார். கர்த்தருடைய மகிமை பரலோகங்களை நிறைத்துள்ளது. அவரது துதி பூமியில் நிறைந்துள்ளது.
4 அவரது கையிலிருந்து பிரகாசமான கதிர்கள் வரும். இது பிரகாசமான வெளிச்சம் போன்றது. அத்தகைய வல்லமை அவரது கையில் மறைந்துகொண்டிருக்கும்.
5 அவருக்கு முன்னால் கொள்ளைநோய் போனது. அழிப்பவன் அவரைப் பின் தொடர்வான்.
6 கர்த்தர் நின்று பூமியை அசைத்தார். அவர் அனைத்து நாடுகளிலும் உள்ள ஜனங்களைப் பார்த்தார். அவர்கள் அச்சத்துடன் நடுங்கினார்கள். பல ஆண்டுகளாகக் குன்றுகள் பலமாக நின்றுக்கொண்டிருக்கின்றன. ஆனால் அக்குன்றுகள் விழுந்து துண்டுகளாகின. பழைய குன்றுகள் விழுந்துவிட்டது. தேவன் எப்பொழுதும் அப்படியே இருந்திருக்கிறார்.
7 நான் குஷான் நகரங்கள் துன்பத்தில் இருப்பதைப் பார்த்தேன். மீதியான் வீடுகள் அச்சத்தால் நடுங்கின.
8 கர்த்தாவே, உமக்கு நதிகள் மீது கோபமா? தண்ணீரோடைகள் மீது உமக்குக் கோபமா? கடல்மீது உமக்குக் கோபமா? உம்முடைய குதிரைகள் மீதும், உமது இரதங்கள் மீதும் வெற்றிநோக்கி பவனி சென்றபோது கோபப்பட்டீரா?
9 அதற்குப்பிறகும் நீர் உமது வானவில்லைக் காட்டினீர். பூமியில் உள்ள குடும்பத்தினருடன் உமது உடன்படிக்கைக்கு இது சான்றாயிற்று. வறண்ட நிலம் ஆறுகளைப் பிளந்தன.
10 மலைகள் உம்மை பார்த்து அதிர்ந்தன. தண்ணீர் நிலத்தில் பாய்ந்து வடிந்து போனது. கடலில் உள்ள தண்ணீர் தனது பூமியின் மேலிருந்த அதிகாரத்தை இழந்துவிட்டதாக உரத்த சத்தம் எழுப்பியது.
11 சூரியனும் சந்திரனும் தங்கள் பிரகாசத்தை இழந்தன. அவை உமது மின்னல்களின் பிரகாசத்தைப் பார்த்து வெளிச்சத்தை நிறுத்திக்கொண்டன. மின்னலானது காற்று வழியாகப் பாயும் அம்புகளைப்போன்றும், ஈட்டிகளைப் போன்றும் உள்ளன.
12 நீர் கோபத்துடன் பூமியின்மேல் நடந்தீர்; பல தேசங்களைத் தண்டித்தீர்.
13 நீர் உமது ஜனங்களைக் காப்பாற்ற வந்தீர். நீர் தேர்ந்தெடுத்த அரசனை வெற்றி நோக்கி நடத்த வந்தீர். ஒவ்வொரு தீமை செய்கிற குடும்பத்திலும் உள்ள தலைவர்களை, முக்கியமானவர்களானாலும் முக்கியமற்றவர்களானாலும் அவர்களைக் கொன்றீர்.
14 நீர் மோசேயின் கைத்தடியைப் பயன்படுத்தி பகை வீரர்களைத் தடுத்தீர். அவ்வீரர்கள் எனக் கெதிராகப் போரிட வல்லமைமிக்கப் புயலைப் போல் வந்தார்கள். ஒரு ஏழையை ரகசியமாகக் கொள்ளையிடுவது போல் எங்களை எளிதாக வெல்லமுடியுமென எண்ணினார்கள்.
15 ஆனால் நீர் உம் குதிரைகளை ஆழமான தண்ணீர் வழியாக மண்ணைக் கலங்கும்படி நடக்கச் செய்தீர்.
16 நான் அந்தக் கதையைக் கேட்டபோது என் உடல் முழுவதும் நடுங்கியது. நான் உரக்க பரிகசித்தேன். நான் என் எலும்புகளின் பலவீனத்தை உணர்ந்தேன். நான் அங்கே நின்று நடுங்கிக்கொண்டிருந்தேன். எனவே நான் பகைவர் வந்து தாக்கும் அந்த அழிவின் நாளுக்காகக் காத்திருப்பேன்.
17 அத்திமரங்களில் அத்திப்பழங்கள் வளராமலிருக்கலாம். திராட்சைக்கொடிகளில் திராட்சைப் பழங்கள் வளராமலிருக்கலாம். ஒலிவ மரங்களில் ஒலிவ பழங்கள் வளராமலிருக்கலாம், வயல்களில் தானியம் விளையாமலிருக்கலாம், கிடையில் ஆட்டு மந்தைகள் இல்லாமல் இருக்கலாம், தொழுவத்தில் மாடுகள் இல்லாமல் இருக்கலாம்.
18 ஆனால், கர்த்தருக்குள் நான் இன்னும் மகிழ்ச்சியோடு இருப்பேன். எனது இரட்சகரான தேவனில் நான் மகிழ்வேன்.
19 எனக்கு அதிகாரியான என் கர்த்தர் எனக்குப் பலத்தை கொடுக்கிறார். அவர் என்னை மானைப்போன்று ஓட உதவுகிறார். அவர் என்னைக் குன்றுகளில் பாதுகாப்பாக வழிநடத்துகிறார். இது இசையமைப்பாளருக்கு எனது நரம்பு வாத்தியங்களில் வாசிக்க வேண்டியது.
Habakkuk 3 ERV IRV TRV