1 நாட்டில் பஞ்சம் மிகக் கொடியதாய் இருந்தது.
2 அவர்கள் எகிப்திலிருந்து வாங்கி வந்த தானியங்கள் எல்லாம் தீர்ந்துவிட்டது. யாக்கோபு தன் மகன்களிடம், “எகிப்துக்குப் போய் இன்னும் கொஞ்சம் தானியங்களை வாங்கி வாருங்கள்” என்றான்.
3 ஆனால் யூதாவோ யாக்கோபிடம், “அந்நாட்டின் ஆளுநர் எங்களை எச்சரித்திருக்கிறார். ‘உங்கள் இளைய சகோதரனை அழைத்துக்கொண்டு வராவிட்டால் உங்களோடு பேசமாட்டேன்’ என்றார்.
4 நீங்கள் பென்யமீனை எங்களோடு அனுப்பினால் நாங்கள் போய் தானியங்களை வாங்கி வருவோம்.
5 ஆனால் நீங்கள் பென்யமீனை அனுப்ப மறுத்தால் நாங்கள் போகமாட்டோம். அந்த மனிதன் இவன் இல்லாமல் வரவேண்டாம் என்று எச்சரித்துள்ளான்” என்றான்.
6 இஸ்ரவேல் (யாக்கோபு) “அவனிடம் ஏன் உங்கள் இளைய சகோதரனைப்பற்றி சொன்னீர்கள்? ஏன் இதுபோல் ஒரு கெட்டச் செயலை எனக்குச் செய்தீர்கள்?” என்று கேட்டான்.
7 அதற்கு சகோதரர்கள், “அந்த மனிதன் ஏராளமான கேள்விகளைக் கேட்டான். அவன் எங்களைப்பற்றியும் நமது குடும்பத்தைப்பற்றியும் கேட்டான். அவன் எங்களிடம், ‘உங்கள் தந்தை உயிரோடு இருக்கிறாரா? இன்னொரு தம்பி வீட்டில் இருக்கிறானா?’ என்று கேட்டான். நாங்கள் பதிலை மட்டும் சொன்னோம். அவன் இளைய சகோதரனையும் அழைத்துக்கொண்டு வரச்சொல்லுவான் என்பதை நாங்கள் அறியோம்” என்றார்கள்.
8 பிறகு யூதா, “தன் தந்தையாகிய இஸ்ரவேலிடம் பென்யமீனை என்னோடு அனுப்பி வையுங்கள் அவனுக்கு நான் பொறுப்பு. உணவுப் பொருட்களுக்காக எகிப்துக்குப் போகவே வேண்டும். நாம் போகாவிட்டால் நீரும், நமது குழந்தைகளும் மரித்து போவோம்.
9 அவனைப் பாதுகாப்பாக அழைத்து வருவோம் என்று உறுதி கூறுகிறேன். அவனை நாங்கள் திருப்பி அழைத்து வாராவிட்டால் நீங்கள் என்னை எப்பொழுதும் பழிகூறுங்கள்.
10 நீங்கள் முன்னமே போகவிட்டிருந்தால் இதற்குள் இரண்டுமுறை போய் வந்திருக்கலாம்” என்று சொன்னான்.
11 பிறகு அவர்கள் தந்தை இஸ்ரவேல், “இது உண்மை என்றால் பென்யமீனை உங்களோடு அழைத்துப்போங்கள். ஆனால் ஆளுநருக்குச் சில அன்பளிப்புகளையும் எடுத்துக்கொள்ளுங்கள். நம் நாட்டில் சேகரிக்கத்தக்கவற்றைச் சேகரியுங்கள். தேன், பிசின்தைலம், கந்தவர்க்கம், வெள்ளைப்போளம், தொபிந்துகொட்டைகள், வாதுமைக் கொட்டைகள் போன்றவற்றை எடுத்துச் செல்லுங்கள்.
12 பணத்தை இரட்டிப்பாய் எடுத்துப்போங்கள். கடந்த முறை நீங்கள் கொடுத்த பணம் தவறி உங்களிடமே வந்துவிட்டது ஆளுநர் தவறு செய்திருக்கலாம்.
13 பென்யமீனையும் அழைத்துக்கொண்டு அவரிடம் போங்கள்.
14 நீங்கள் ஆளுநர் முன்னால் நிற்கும்போது சர்வ வல்லமையுள்ள தேவன் உங்களுக்கு உதவுவார். அவர் சிமியோனையும், பென்ய மீனையும் திருப்பி அனுப்பும்படி பிரார்த்தனை செய்கிறேன். இல்லாவிட்டால் நான் மீண்டும் மகனை இழந்த துக்கத்துக்கு ஆளாவேன்” என்றான்.
15 எனவே, சகோதரர்கள் காணிக்கைப் பொருட்களோடும் இரண்டு மடங்கு பணத் தோடும் எகிப்துக்குப் புறப்பட்டுப் போனார்கள். இப்போது பென்யமீனும் அவர்களோடு போனான்.
16 எகிப்தில், அவர்களோடு பென்யமீனை பார்த்த யோசேப்பு வேலைக்காரனிடம், “இவர்களை என் வீட்டிற்கு அழைத்து வாருங்கள். ஒரு மிருகத்தைக் கொன்று சமையுங்கள். இன்று மத்தியானம் அவர்கள் என்னோடு சாப்பிடுவார்கள்” என்றான்.
17 வேலைக்காரன் யோசேப்பு சொன்னபடி செய்தான். அவர்களை யோசேப்பின் வீட்டிற்கு அழைத்துப் போனார்கள்.
18 அவர்கள் யோசேப்பின் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டபோது பயந்தனர். “சென்ற முறை பணத்தை பைக்குள்ளே போட்டுவிட்டதால் இப்போது தனது வீட்டிற்கு அழைக்கிறார். அது நமக்கு எதிரான சாட்சியாகப் பயன்படுத்தப்படும். நமது கழுதைகளைப் பறித்துக்கொண்டு நம்மை அடிமைகளாக்கிவிடுவார்கள்” என்று பேசிக்கொண்டார்கள்.
19 ஆகவே அவர்கள் அனைவரும் யோசேப்பின் வீட்டின் பொறுப்பாளனாகிய வேலைக்காரனிடம் வந்தனர்.
20 அவர்கள் அவனிடம், “ஐயா, இதுதான் உண்மை என்று வாக்குறுதிச் செய்கிறோம். சென்றமுறை தானியம் வாங்க வந்தோம்.
21 வீட்டிற்குத் திரும்பும்போது வழியில் பைக்குள் பணம் இருப்பதைப் பார்த்தோம். அதற்குள் எவ்வாறு வந்தது என்று எங்களுக்குப் புரியவில்லை. ஆனால் அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க கொண்டு வந்திருக்கிறோம். இந்த முறை உணவுப் பொருள் வாங்குவதற்கு அதிகப்படியான பணமும் கொண்டு வந்திருக்கிறோம்” என்றனர்.
23 ஆனால் வேலைக்காரனோ, “பயப்பட வேண்டாம், நம்புங்கள் உங்கள் தேவனும் உங்கள் தந்தையின் தேவனும் அந்தப் பணத்தை உங்கள் பைகளில் போட்டிருக்கலாம். கடந்த முறை தானியத்துக்கான பணத்தைக் கொடுத்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்” என்றான். பிறகு அவன் சிமியோனைச் சிறையிலிருந்து விடுவித்தான்.
24 அவர்கள் அனைவரையும் அழைத்துக்கொண்டு வேலைக்காரன் வீட்டிற்குள் போனான். அவர்களுக்குத் தண்ணீர் கொடுத்தான். அவர்கள் பாதங்களைக் கழுவிக்கொண்டனர். அவர்களின் கழுதைகளுக்கும் உணவு கொடுத்தான்.
25 அவர்கள் ஆளுநரோடு உண்ணப் போகிறோம் என்பதை அறிந்தனர். எனவே, அவனுக்குக் கொடுக்க வேண்டிய காணிக்கைகளை எடுத்து தயார் செய்தனர்.
26 மதியம் ஆனபோது யோசேப்பு வீட்டிற்கு வந்தான். அவர்கள் அவனுக்குக் காணிக்கைகளைக் கொடுத்தனர். பிறகு அவனுக்கு முன்னால் பணிந்து வணங்கினார்கள்.
27 யோசேப்பு அவர்களிடம் நடந்ததை எல்லாம் கேட்டான், “உங்கள் வயதான தந்தை எப்படி இருக்கிறார். இப்போதும் அவர் உயிரோடும் நலமாகவும் இருக்கிறாரா?” என்று கேட்டான்.
28 சகோதரர்கள் அனைவரும், “ஆமாம் ஐயா, அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார்” என்றனர். மீண்டும் அவனைப் பணிந்து வணங்கினார்கள்.
29 பிறகு யோசேப்பு தன் தம்பியைப் பார்த்தான். (இருவரும் ஒரே தாயின் வயிற்றில் பிறந்தவர்கள்.) “இதுதான் எனக்கு நீங்கள் சொன்ன உங்கள் இளைய சகோதரனா?” என்று கேட்டான். பிறகு யோசேப்பு, “என் மகனே தேவன் உன்னை ஆசீர்வதிக்கட்டும்” என்று பென்யமீனிடம் சொன்னான்.
30 பிறகு அவன் அந்த அறையை விட்டு வெளியே ஓடினான். தன் சகோதரன் பென்யமீனைத் தான் மிகவும் விரும்புவதை அவனுக்கு உணர்த்தப் பெரிதும் விரும்பினான். அவனுக்கு அழவேண்டும்போல இருந்தது. ஆனால் தான் அழுவதைத் தன் சகோதரர்கள் பார்த்துவிடக் கூடாதே என்று அஞ்சினான். இதனால்தன் அறைக்குச் சென்று அழுதான்.
31 பிறகு முகத்தைக் கழுவிக்கொண்டு வந்தான். அவன் தன்னைத் தானே அடக்கிக்கொண்டு, “இது உணவு உண்ணும் நேரம்” என்றான்.
32 அவனுக்கும் அவர்களுக்கும் மற்ற எகிப்தியர்களுக்கும் தனித்தனியாக மேஜை போடப்பட்டிருந்தது. அவர்களும் தனித் தனியாக அமர்ந்தார்கள். எகிப்தியர்கள் எபிரெயர்களோடு சேர்ந்து சாப்பிடுவதில்லை.
33 யோசேப்பின் சகோதரர்கள் அவனுக்கு முன்னால் அமர்ந்தார்கள். மூத்தவன் முதல் இளையவன் வரை வரிசையாக அமர்ந்திருந்தார்கள். அவர்கள் நடப்பதைப்பற்றி வியப்புடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
34 வேலைக்காரர்கள் யோசேப்பின் மேஜையிலிருந்து உணவை எடுத்து வந்து அவர்களிடம் கொடுத்தார்கள். அவர்கள் பென்யமீனுக்கு மற்றவர்களைக் காட்டிலும் ஐந்து மடங்கு அதிகமாக உணவு கொடுத்தனர். சகோதரர்கள் யோசேப்போடு சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருந்தார்கள்.
Genesis 43 ERV IRV TRV