1 இரண்டு ஆண்டுகள் கழிந்தது. பார்வோன் ஒரு கனவு கண்டான். நைல் நதியின் அருகில் நின்றுகொண்டிருப்பதாகக் கனவு கண்டான்.

2 ஆற்றிலிருந்து ஏழு பசுக்கள் வெளியே வந்து புல் தின்றுகொண்டிருந்தன. அவை செழுமையாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தன.

3 மேலும் ஏழு பசுக்கள் ஆற்றிலிருந்து வெளியே வந்து கரையில் நின்ற மற்ற பசுக்களோடு நின்றன. அவை மெலிந்தும் பார்க்க அருவருப்பாகவும் இருந்தன.

4 மெலிந்த அருவருப்பான பசுக்கள் கொழுத்த ஆரோக்கியமான ஏழு பசுக்களையும் உண்டன. பிறகு பார்வோன் எழும்பினான்.

5 பார்வோன் மீண்டும் தூங்கி கனவு காண ஆரம்பித்தான். அப்போது ஒரே செடியில் ஏழு செழுமையான கதிர்கள் வந்திருந்தன.

6 மேலும் ஒரு செடியில் ஏழு கதிர்கள் வந்தன. ஆனால் அவை செழுமையில்லாமல் இருந்தன. காற்றில் உதிர்ந்துபோயின.

7 மெலிந்த ஏழு கதிர்களும் செழுமையான ஏழு கதிர்களை விழுங்கிவிட்டன. பார்வோன் மீண்டும் எழுந்து தான் கண்டது கனவு என உணர்ந்தான்.

8 மறுநாள் காலையில் அவன் இதைப்பற்றி மிகவும் கவலைப்பட்டான். அவன் எகிப்திலுள்ள அனைத்து மந்திரவாதிகளையும், ஞானிகளையும் அழைத்தான். அவர்களிடம் தன் கனவைச் சொன்னான். ஆனால் ஒருவராலும் அதற்கு விளக்கம் சொல்ல முடியவில்லை.

9 பிறகு திராட்சைரசம் கொடுப்பவனுக்கு யோசேப்பைப்பற்றிய நினைவு வந்தது. அவன் பார்வோனிடம், “எனக்கு ஏற்பட்டது இன்று நினைவுக்கு வருகிறது.

10 உங்களுக்குக் கோபம் வந்து என்னையும், ரொட்டி சுடுபவனையும் சிறையில் அடைத்திருந்தீர்களே,

11 அப்போது ஓரிரவில் நாங்கள் கனவு கண்டோம். இரண்டும் வெவ்வேறு கனவுகள்.

12 அங்கு எபிரேய இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் சிறையதிகாரியின் உதவியாள். நாங்கள் அவனிடம் கனவைச் சொன்னோம். அவன் அதைப்பற்றி விளக்கம் சொன்னான்.

13 அவன் சொன்னதெல்லாம் உண்மையாயிற்று. நான் மூன்று நாளில் விடுதலையாகிப் பழைய வேலையைப் பெறுவேன் என்றான். அது அவ்வாறாயிற்று. ரொட்டி சுடுபவன் தூக்கிலிடப்படுவான் என்றான். அது போலவே நடந்தது” என்றான்.

14 எனவே, பார்வோன் சிறையில் இருந்து யோசேப்பை அழைத்தான். அதிகாரி உடனே யோசேப்பை வெளியே கொண்டு வந்தான். அவன் சவரம் செய்து நல்ல ஆடைகள் அணிந்துகொண்டு, பார்வோனைப் பார்க்கப்போனான்.

15 பார்வோன் யோசேப்பிடம், “நான் கனவு கண்டேன். எவராலும் அதற்கு பொருள் சொல்லமுடியவில்லை. உன்னிடம் அவற்றைப்பற்றி சொன்னால் நீ அதற்கு விளக்கம் சொல்ல முடியும் என்று அறிந்தேன்” என்றான்.

16 யோசேப்பு, “என்னால் முடியாது. ஆனால் தேவன் உமக்காக விளக்கம் தருவார்” என்றான்.

17 பிறகு பார்வோன், “கனவில் நான் நைல் ஆற்றின் கரையில் நின்றுகொண்டிருந்தேன்.

18 அப்போது ஏழு பசுக்கள் ஆற்றிலிருந்து வெளியே வந்து புல் மேய்ந்துகொண்டிருந்தது. அவை செழுமையாகவும், பார்க்க அழகாகவும் இருந்தன.

19 பிறகு மேலும் ஏழு பசுக்கள் ஆற்றிலிருந்து வெளியே வந்தன. அவை மெலிந்து, நோய் கொண்டவையாக இருந்தன. அவற்றைப் போன்று மோசமான பசுக்களை நான் எகிப்திலே எங்கும் பார்த்ததில்லை.

20 அவை செழுமையான பசுக்களை உண்டுவிட்டன.

21 அவை அதற்குப் பிறகும் ஒல்லியாகவும், நோயுற்றும் தோன்றின. அவை பசுக்களைத் தின்றுவிடும் என்று சொல்ல முடியாத வகையிலேயே இருந்தன. அதற்குள் நான் எழுந்துவிட்டேன்.

22 “அடுத்த கனவில் ஒரு செடியில் ஏழு கதிர்களைக் கண்டேன். அவை செழுமையாக இருந்தன.

23 பிறகு செடியில் மேலும் ஏழு கதிர்கள் வளர்ந்தன. காற்றில் உதிரக் கூடிய நிலையில் மெலிந்து இருந்தன.

24 பிறகு இவை செழுமையான கதிர்களை விழுங்கிவிட்டன. “நான் இந்தக் கனவை மந்திரவாதிகளிடமும் ஞானிகளிடமும் கூறினேன். ஆனால் யாராலும் இவற்றிற்கு பதில் சொல்ல முடிய வில்லை, இவற்றின் பொருள் என்ன?” என்று கேட்டான்.

25 பிறகு யோசேப்பு பார்வோனிடம், “இரண்டு கனவுகளுக்கும் ஒரே பொருள் தான். விரைவில் என்ன நடக்கும் என்பதைத் தேவன் கூறிவிட்டார்.

26 ஏழு செழுமையான பசுக்கள், ஏழு செழுமையான கதிர்கள் என்பது ஏழு வளமான ஆண்டுகளைக் குறிக்கும்.

27 ஏழு மெலிந்த பசுக்கள் ஏழு மெலிந்த கதிர்கள் என்பது பஞ்சமான ஏழு ஆண்டுகளைக் குறிக்கும். வளமான ஏழு ஆண்டுகளுக்குப் பிறகே பஞ்சமான ஏழு ஆண்டுகள் வரும்.

28 விரைவில் என்ன நடக்கும் என்பதை தேவன் உமக்கு காண்பித்திருக்கிறார். இவ்வாறே தேவன் நடத்துவார்.

29 இன்னும் ஏழு ஆண்டுகளுக்கு எகிப்தில் ஏராளமான உணவுப் பொருட்கள் விளையும்.

30 பிறகு ஏழு ஆண்டுகள் பஞ்சமும் பசியும் இருக்கும். எகிப்து ஜனங்கள் முன்பு கடந்த காலத்தில் தாங்கள் வைத்திருந்த உணவின் மிகுதியை மறந்துவிடுவார்கள். இப்பஞ்சம் நாட்டை அழித்துவிடும்.

31 ஏனென்றால் தொடர்ந்து வரும் பஞ்சம் அவ்வளவு கடுமையாக இருக்கும்.

32 “நீர் ஏன் ஒரே பொருள்பற்றிய இரு கனவுகளைக் கண்டிருக்கிறீர் தெரியுமா? இது நிச்சயம் நடக்கும் என்பதை தேவன் உமக்குக் காட்ட விரும்புகிறார். அதோடு தேவன் இதனை விரைவில் நிகழவைப்பார்.

33 எனவே, நீர் புத்திசாலியான ஒருவனிடம் எகிப்தின் பொறுப்புகளை விடவேண்டும்.

34 பிறகு மேலும் சிறந்த ஆட்களை தேர்ந்தெடுத்து உணவுப் பொருட்களை எல்லாம் சேகரிக்க வேண்டும். இனியுள்ள ஏழு வருடங்களும் ஜனங்கள் தங்கள் விளைச்சலில் ஐந்தில் ஒரு பங்கை அரசனுக்குரியதென இவர்களிடம் கொடுக்க வேண்டும்.

35 இவ்வாறு அந்த ஆட்கள் உணவுப் பொருட்களைச் சேகரித்து, தேவைப்படும் அளவுக்கு நன்றாகச் சேமித்து வைக்கவேண்டும். இந்த உணவு உமது கட்டுப்பாட்டிற்குள் இருக்கவேண்டும்.

36 பிறகு ஏழு பஞ்ச ஆண்டுகளில் தேவையான உணவுப் பொருள் எகிப்து நாட்டில் இருக்கும். அதனால் எகிப்து பஞ்சத்தில் அழியாமல் இருக்கும்” என்றான்.

37 இந்த விளக்கம் பார்வோனுக்கும் அவனது அதிகாரிகளுக்கும் பொருத்தமானதாக இருந்தது. அதோடு

38 பார்வோன் அவர்களிடம், “யோசேப்பைவிடப் பொருத்தமானவன் வேறு யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. தேவ ஆவியானவர் அவன் மேல் இருக்கிறார். அவனை மிக ஞானமுள்ளவனாக ஆக்கியிருக்கிறார்!” என்றான்.

39 எனவே, பார்வோன் யோசேப்பிடம், “தேவன் இவற்றை உனக்குத் தெரியச் செய்தார். உன்னைப்போல் அறிவுக் கூர்மையும், ஞானமும் உள்ளவர்கள் வேறு யாருமில்லை.

40 உன்னை என் நாட்டிற்கு அதிகாரியாய் ஆக்குகிறேன். உன் கட்டளைகளுக்கு என் ஜனங்கள் அடங்கி நடப்பார்கள். நான் மட்டுமே உன்னைவிட மிகுந்த அதிகாரம் பெற்றவனாக இருப்பேன்” என்று கூறினான்.

41 யோசேப்பை ஆளுநர் ஆக்குவதற்குரிய விசேஷச் சடங்கும், ஊர்வலமும் சிறப்பான முறையில் நடந்தன. “உன்னை எகிப்து முழுமைக்கும் ஆளுநர் ஆக்குகிறேன்” என்றான்.

42 பார்வோன் யோசேப்புக்கு தனது விசேஷ மோதிரத்தைக் கொடுத்தான். அம்மோதிரத்தில் அரசமுத்திரை பொறிக்கப்பட்டிருந்தது. இத்தோடு அழகான ஆடைகளையும், அவன் கழுத்தில் பொன்மாலையும் அணிவித்தான்.

43 யோசேப்பைத் தனது இரண்டாவது இரதத்தில் ஏற்றி ஊர்வலமாகப் போகச் செய்தான். காவல் அதிகாரிகள் அவன் முன்னே போய் ஜனங்களிடம், “யோசேப்புக்கு அடிபணியுங்கள்” என்றனர். இவ்வாறு யோசேப்பு எகிப்து முழுவதற்கும் ஆளுநர் ஆனான்.

44 பார்வோன் யோசேப்பிடம், “நான் எகிப்தின் அரசனாகிய பார்வோன். எனக்கு விருப்பமான முறையில் நான் நடந்துகொள்வேன். வேறுயாரும் இந்நாட்டில் உன் அனுமதி இல்லாமல் கையைத் தூக்கவோ காலை நகர்த்தவோ முடியாது” என்றான்.

45 பார்வோன் யோசேப்புக்கு சாப்னாத்பன்னேயா என்று வேறு பெயர் சூட்டினான். அவனுக்கு ஆஸ்நாத் என்ற மனைவியையும் கொடுத்தான். அவள் ஓன் நகரத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் மகள். இவ்வாறாக யோசேப்பு எகிப்து தேசத்து ஆளுநரானான்.

46 யோசேப்புக்கு அப்போது 30 வயது. அவன் நாடு முழுவதையும் சுற்றிப்பார்க்கப் புறப்பட்டான்.

47 ஏழு ஆண்டுகளாக எகிப்தில் நல்ல விளைச்சல் இருந்தது.

48 யோசேப்பு அவற்றை நன்கு சேமித்து வைத்தான். ஒவ்வொரு நகரத்திலும் அதன் சுற்றுப்புறத்திலுள்ள தானியங்களையெல்லாம் சேமித்து வைத்தான்.

49 யோசேப்பு ஏராளமாக கடற்கரை மணலைப்போன்று தானியங்களைச் சேமித்து வைத்தான். அவன் சேமித்த தானியமானது அளக்கமுடியாத அளவில் இருந்தது.

50 யோசேப்பின் மனைவி ஆஸ்நாத்து ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் மகள். முதலாண்டு பஞ்சம் வருவதற்கு முன்னால் அவளுக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள்.

51 முதல் மகனுக்கு மனாசே என்று பேரிட்டான். ஏனென்றால், “தேவன் என் துன்பங்களையெல்லாம் மறக்கச் செய்தார். என் வீட்டையும் மறக்கச் செய்துவிட்டார்” என்றான்.

52 யோசேப்பு இரண்டாவது மகனுக்கு எப்பிராயீம் என்று பேரிட்டான். “நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகப் பண்ணினார்” என்று சொல்லி இந்தப் பெயரை வைத்தான்.

53 ஏழு ஆண்டுகளுக்குத் தேவையான உணவுப் பொருட்கள் இருந்தன. அந்த ஆண்டுகள் முடிந்தன.

54 அதன் பிறகு யோசேப்பு சொன்னதைப்போலவே பஞ்ச காலம் துவங்கியது. எந்த நாடுகளிலும் உணவுப் பொருட்கள் விளையவில்லை. ஆனால் எகிப்தில் உணவுப் பொருட்கள் ஏராளமாக சேமிக்கப்பட்டிருந்தன. இதற்குக் காரணம் யோசேப்பின் திட்டம்.

55 பஞ்சம் துவங்கியதும் ஜனங்கள் பார்வோனிடம் வந்து உணவுக்கு அழுதனர். பார்வோன் ஜனங்களிடம், “நீங்கள் போய் யோசேப்பிடம் என்ன செய்யலாம் எனக் கேளுங்கள்” என்றான்.

56 எங்கும் பஞ்சம் அதனால் யோசேப்பு ஜனங்களுக்குச் சேமிப்பிலிருந்து தானியத்தை எடுத்துக் கொடுத்தான். சேர்த்து வைத்த தானியங்களை யோசேப்பு எகிப்தியருக்கு விற்றான். பஞ்சம் மேலும் மோசமாகியது.

57 எல்லா இடத்திலும் மோசமான அளவில் பஞ்சம் இருந்தது. எகிப்தைச் சுற்றி பல் வேறு நாடுகளிலிருந்து ஜனங்கள் உணவுப் பொருட்களை வாங்குவதற்காக எகிப்திற்கு வந்தார்கள்.

Genesis 41 ERV IRV TRV