Genesis 33 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 யாக்கோபு தம் கண்களை உயர்த்திப் பார்க்க, ஏசா நானூறு ஆள்களோடு வருவதைக் கண்டார். உடனே அவர் லேயாவிடமும் ராகேலிடமும் இரு வேலைக்காரிகளிடமும் பிள்ளைகளைப் பிரித்து ஒப்படைத்தார்.2 முதல் வரிசையில் வேலைக்காரிகளையும் அவர்களுடைய பிள்ளைகளையும், இரண்டாம் வரிசையில் லேயாவையும், அவருடைய பிள்ளைகளையும், இறுதியில் ராகேலையும் யோசேப்பையும் நிறுத்தினார்.3 அவர் அவர்களுக்கு முன் சென்று தம் சகோதரரை நெருங்கிச் செல்கையில் ஏழு முறை தரையில் வீழ்ந்து அவரை வணங்கினார்.⒫4 ஏசாவோ அவருக்கு எதிர் கொண்டு ஓடி அவரை அரவணைத்து இறுகக் கட்டித்தழுவி முத்தமிட்டார். இருவரும் மகிழ்ச்சிக் கண்ணீர் சிந்தினர்.5 பின் கண்களை உயர்த்தி, பெண்களையும் அவர்களின் பிள்ளைகளையும் கண்டு, “உன்னோடு இருக்கும் இவர்கள் யார்?” என்று கேட்டார். அவரும் “உம் அடியானாகிய எனக்குக் கடவுள் கருணையுடன் அருளிய பிள்ளைகளே இவர்கள்” என்று பதில் சொன்னார்.6 அப்பொழுது வேலைக்காரிகளும் அவர்களுடைய பிள்ளைகளும் அணுகி அவரை வணங்கினர்.7 அவ்வாறே லேயாவும் அவருடைய பிள்ளைகளும் வணங்கினர். இறுதியாக யோசேப்பும் ராகேலும் நெருங்கி வந்து வணங்கினர்.8 அப்போது ஏசா யாக்கோபை நோக்கி, “எனக்கு எதிர்கொண்டு வந்த பரிவாரம் எதற்காக?” என்று கேட்டார். யாக்கோபு, “என் தலைவராகிய உம் பார்வையில் எனக்குத் தயை கிடைப்பதற்காக” என்று பதில் சொன்னார்.9 ஏசா, “என் சகோதரனே, ஏற்கெனவே என்னிடம் மிகுதியாக உள்ளது. உன்னுடையதை நீயே வைத்துக்கொள்” என்றார்.10 யாக்கோபு, “இல்லை. உமது பார்வையில் எனக்குத் தயை கிடைத்திருப்பது உண்மையானால் நான் தரும் அன்பளிப்பை ஏற்றுக் கொள்ளும். உமது முகத்தைக் காண்பது கடவுளின் முகத்தைக் காண்பதுபோல் இருக்கிறது. ஏனெனில், நீர் எனக்குக் கனிவு காட்டியுள்ளீர்.11 எனவே, உமக்கு அடியேன் கொண்டு வந்துள்ள அன்பளிப்பைத் தயவு செய்து ஏற்றுக் கொள்ளும். ஏனெனில், கடவுளின் கருணையினால் எனக்கு வேண்டிய மட்டும் உள்ளது” என்று சொல்லி வற்புறுத்த, அவரும் அவற்றைப் பெற்றுக்கொண்டார்.⒫12 பிறகு, அவர் “நாம் சேர்ந்து பயணம் செய்வோம். உனக்குமுன் நான் செல்வேன்” என்றார்.13 அதற்கு யாக்கோபு, “பச்சிளங்குழந்தைகளும் பால் கொடுக்கும் ஆடு, மாடுகளும் என்னிடம் உள்ளன என்று என் தலைவராகிய உமக்குத் தெரியும். அவற்றை ஒரே நாளில் வருத்தி ஓட்டிக் கொண்டு வந்தால், என் மந்தையெல்லாம் செத்துப் போகும்.14 தலைவராகிய நீர் எனக்குமுன்னே செல்வீராக! நானோ மந்தைகள், பிள்ளைகளின் நடைக்கு ஏற்ப மெதுவாக வந்து சேயிரில் உம்மைச் சந்திப்பேன்” என்றார்.15 அதற்கு ஏசா, “அப்படியானால் என்னுடைய ஆள்களில் சிலரை உன்னிடம் விட்டுச் செல்கிறேன்” என்று சொல்ல, அவர் “வேண்டாம்; என் தலைவராகிய உமது பார்வையில் எனக்குத் தயை கிடைத்ததே போதும்” என்றார்.⒫16 ஆகையால், ஏசா அன்றே புறப்பட்டு, தாம் வந்த வழியே சேயிருக்குத் திரும்பினார்.17 யாக்கோபு சுக்கோத்தை வந்தடைந்தவுடன், அங்கே தமக்கென்று ஒரு வீடு கட்டினார். தம் மந்தைகளுக்குக் குடில்களை அமைத்தார். இதனால் அந்த இடத்திற்குச் ‘சுக்கோத்து’* என்று பெயரிட்டார்.⒫18 இவ்வாறு யாக்கோபு பதான் அராமிலிருந்து திரும்பி வந்தபின் கானான் நாட்டைச் சார்ந்த செக்கேம் நகருக்கு நலமுடன் வந்து சேர்ந்தார். அந்நகருக்கு எதிரே பாளையம் இறங்கினார்.19 கூடாரமடித்துத் தங்கிய அந்நிலப்பகுதியை செக்கேமின் தந்தை ஆமோரின் புதல்வரிடமிருந்து நூறு வெள்ளிக்காசுக்கு அவர் விலைக்கு வாங்கினார்.20 பின்பு, அங்கே அவர் ஒரு பலிபீடத்தை எழுப்பி அதற்கு ‘ஏல்-எலோகே-இஸ்ரயேல்’* என்று பெயரிட்டார்.