Ezra 9 in Tamil ERV Compare Tamil Easy Reading Version
1 இவை அனைத்தையும் செய்து முடிந்த பிறகு, இஸ்ரவேல் ஜனங்களின் தலைவர்கள் என்னிடம் வந்தனர். அவர்கள், “எஸ்றா, இஸ்ரவேல் ஜனங்கள் தம்மைச் சுற்றியுள்ள ஜனங்களிடமிருந்து தங்களைத் தனியே பிரித்து வைத்திருக்கவில்லை. ஆசாரியர்களும் லேவியர்களும் தங்களைத் தனியே பிரித்து வைத்திருக்கவில்லை. இவர்கள், கானானியர், ஏத்தியர், பெர்சியர், எபூசியர், அம்மோனியர், மோவாபியர், எகிப்தியர், எம்மோரியர் ஆகிய ஜனங்களால் பாதிப்புக்குள்ளாகி, அவர்களின் தீயச் செயல்களுக்கும் ஆளானார்கள்.
2 இஸ்ரவேல் ஜனங்கள் எங்களைச் சுற்றியுள்ளவர்களை மணந்துக்கொண்டனர். இஸ்ரவேல் ஜனங்கள் சிறப்புக்குரியவர்களாகக் கருதப்படத்தக்கவர்கள். ஆனால் அவர்கள் இப்போது தம்மோடு வாழும் மற்றவர்களோடு கலந்துவிட்டனர். இந்த வகையில் இஸ்ரவேல் ஜனங்களின் தலைவர்களும் முக்கிய அதிகாரிகளும் ஒரு மோசமான உதாரணமாக இருந்தனர்” என்றனர்.
3 நான் இதைப்பற்றி கேள்விப்பட்டதும், நான் கலக்கமடைந்ததைக் காட்ட எனது ஆடைகளையும் சால்வைகளையும் கிழித்துக்கொண்டேன். என் தலையிலும் தாடியிலும் உள்ள முடியைப் பிடுங்கிக்கொண்டேன். அதிர்ச்சியடைந்தும் கலக்கமடைந்தும் நான் உட்கார்ந்துவிட்டேன்.
4 பிறகு, தேவனுடைய சட்டங்கள் மீது மரியாதைக் கொண்ட ஒவ்வொருவரும் அஞ்சினார்கள். அவர்கள், அடிமைத்தனத்திலிருந்து மீண்ட இஸ்ரவேலர்கள் தேவனுக்கு உண்மையுள்ளவர்கள் அல்ல என்பதை அறிந்ததால் பயந்தார்கள். நான் அதிர்ச்சியும் கலக்கமும் அடைந்தேன். பலிக்கான மாலை நேரம்வரை நான் உட்கார்ந்திருந்தேன். அந்த ஜனங்கள் என்னைச் சுற்றிக் கூடினார்கள்.
5 பிறகு பலிக்குரிய மாலை நேரம் வந்ததும் நான் எழுந்தேன். அங்கே அமர்ந்திருந்தபொழுது, பார்ப்பதற்கு வெட்கப்படும்படியாக என்னை நானே ஆக்கிக் கொண்டேன். எனது ஆடையும் சால்வையும் கிழிந்திருந்தன. நான் முழங்காலிட்டு, என் தேவனாகிய கர்த்தருக்கு நேராக கைகளை விரித்திருந்தேன்.
6 பிறகு நான் இந்த ஜெபத்தைச் செய்தேன். “எனது தேவனே, உம்மைப் பார்ப்பதற்கு நான் மிகவும் வெட்கமும் குழப்பமும் அடைகிறேன். எங்கள் தலைகளைவிட எங்கள் பாவங்கள் உயரமாகிவிட்டதை அறிந்து வெட்கப்படுகிறேன். எங்கள் குற்றங்கள் பரலோகம்வரை எட்டியது.
7 எங்கள் முற்பிதாக்களின் காலமுதல் இன்றுவரை நாங்கள் பலவகையான பாவங்களைச் செய்து வருகிறோம். நாங்கள் பாவம் செய்ததினால் எங்களுடைய அரசர்களும் ஆசாரியர்களும் தண்டிக்கப்பட்டனர். வெளிநாட்டு அரசர்கள் எங்களைத் தாக்கி, எங்கள் ஜனங்களை இழுத்துச் சென்றனர். எங்களுக்குரிய செல்வங்களையும் எடுத்துக்கொண்டு எங்களை அவமானத்திற்குள்ளாக்கிவிட்டார்கள். இன்றும் கூட அதே நிலைதான் உள்ளது.
8 “ஆனால் இப்போது, முடிவாக நீர் எங்கள் மீது இரக்கத்துடன் இருக்கிறீர். அடிமைத்தனத்திலிருந்த எங்களில் சிலரை விடுதலை செய்து, இந்தப் பரிசுத்தமான இடத்திற்கு அழைத்து வந்தீர், கர்த்தாவே எங்களுக்குப் புதிய வாழ்வும், அடிமைத்தனத்திலிருந்து விடுதலையும் தந்தீர்.
9 ஆமாம், நாங்கள் அடிமைகளாய் இருந்தோம். ஆனால் நீர் எங்களை எப்போதும் அடிமைகளாய் இருக்கவிடவில்லை. எங்களோடு நீர் இரக்கமாய் இருக்கிறீர். பெர்சியா அரசர்களையும் எங்கள் மீது கருணை காட்டுமாறு செய்தீர். உமது ஆலயம் அழிக்கப்பட்டது. ஆனால் நீர் எங்களுக்குப் புதிய வாழ்க்கையைக் கொடுத்தீர். எனவே, நாங்கள் உமது ஆலயத்தை மீண்டும் புதிதாகக் கட்ட முடிந்தது. தேவனே, யூதாவையும் எருசலேமையும் காப்பாற்ற ஒரு சுவர் கட்ட நீர் உதவிச்செய்தீர்.
10 “இப்போது, தேவனே உமக்கு நாங்கள் என்ன சொல்ல முடியும்? மீண்டும் நாங்கள் உம்முடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதை நிறுத்திக் கொண்டோம்.
11 தேவனே, நீர் உம்முடைய ஊழியக்காரர்களையும், தீர்க்கதரிசிகளையும் பயன்படுத்தி உமது கட்டளைகளைக் கொடுத்தீர். நீர், ‘நீங்கள் வாழப் போகிற நாடு அழிந்துபோன நாடு. அது, அங்குள்ள ஜனங்களின் தீயச் செயல்களால் அழிந்து போனது. இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு இடத்திலும் அங்குள்ள ஜனங்கள் பாவம் செய்தனர். அவர்கள் இந்தத் தேசத்தைத் தங்கள் பாவங்களால் அசிங்கப்படுத்திவிட்டனர்.
12 எனவே, இஸ்ரவேல் ஜனங்களே, அவர்களது பிள்ளைகளை உங்கள் பிள்ளைகள் மணந்துக்கொள்ள அனுமதிக்கவேண்டாம்! அவர்களோடு சேராதீர்கள். அவர்களது பொருட்களை விரும்பாதீர்கள்! எனது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள். எனவே நீங்கள் பலமுள்ளவர்களாகவும், இந்த நாட்டிலுள்ள நல்லவற்றை அனுபவிப்பவர்களாகவும் இருப்பீர்கள். பிறகு இந்த நிலத்தை உமது பிள்ளைகளுக்குக் கொடுக்கலாம்’ என்று சொன்னீர்.
13 “எங்களுடைய சொந்தத் தவறுகளால் தான் எங்களுக்கு தீமைகள் ஏற்பட்டன. நாங்கள் கெட்டவற்றைச் செய்திருக்கிறோம், எங்களிடம் நிறைய குற்றங்கள் உள்ளன. ஆனால், எங்கள் தேவனாகிய நீர் எங்களுக்குரிய தண்டனைகளைவிடக் குறைவாகவே தண்டித்தீர். நாங்கள் பயங்கரமான பாவங்களைச் செய்திருக்கிறோம். நாங்கள் மிக மோசமாகத் தண்டிக்கப்பட்டிருக்கவேண்டும். ஆனால் நீர் எங்களை அடிமைத்தனத்திலிருந்து மீட்டிருக்கின்றீர்.
14 எனவே, நாங்கள் உம்முடைய கட்டளைகளை மீறக்கூடாது என்று தெரிந்துக்கொண்டோம். அவர்களை நாங்கள் மணந்துக்கொள்ளக்கூடாது. அவர்கள் தீய பாவங்களை செய்தனர். தேவனே, நாங்கள் அவர்களைத் தொடர்ந்து மணந்துக்கொண்டிருந்தால், எங்களை நீர் முழுவதும் அழித்துவிடுவீர் என்பதை அறிவோம்! பிறகு, இஸ்ரவேலர் எவரும் உயிரோடு இருக்கமாட்டார்கள்.
15 “இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, நீர் நல்லவர்! நீர் இன்னும் எங்களில் சிலரை வாழ விட்டிருக்கிறீர். ஆமாம், நாங்கள் குற்றவாளிகளே! எங்கள் குற்றமனப்பான்மையால் எங்களில் ஒருவரும் உமது முன்னிலையில் நிற்க அனுமதிக்கப்படக்கூடாது.”