Ezekiel 47 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 அம்மனிதர் என்னைக் கோவிலின் நுழைவாயிலுக்கு மீண்டும் அழைத்து வந்தார். அங்கு நான் கோவிலின் வாயிற்படியின் கீழிருந்து கிழக்கு நோக்கித் தண்ணீர் வருவதைக் கண்டேன். ஏனெனில், கோவில் கிழக்கு நோக்கி இருந்தது. தண்ணீர், கோவில் மற்றும் பீடத்தின் தெற்குப் பக்கத்திலிருந்து வந்தது.2 அவர் என்னை வடக்கு வாயில் வழியாய் அழைத்து வந்து கிழக்கு நோக்கிய வெளிவாயிலின் வெளிப்பகுதிக்கு இட்டுச் சென்றார். இதோ! தண்ணீர் தெற்குப் பகுதியிலிருந்து பாய்ந்து கொண்டிருந்தது.3 அம்மனிதர் கையில் ஓர் அளவு நூலைப் பிடித்துக்கொண்டு கிழக்கு நோக்கிச் சென்று, ஆயிர முழம் அளந்தார். பின்னர் கணுக்காலளவு ஆழமுள்ள அத்தண்ணீர் வழியாய் என்னை அழைத்துச் சென்றார்.⒫4 அவர் மேலும் ஆயிர முழம் அளந்து என்னை முழங்காலளவு ஆழமுள்ள தண்ணீரில் அழைத்துச் சென்றார். மேலும் ஆயிர முழம் அளந்து இடுப்பளவு தண்ணீரில் என்னை நடத்திச் சென்றார்.5 அவர் மேலும் ஆயிர முழம் அளந்தார். ஆனால் இப்போது அது ஆறாக ஓடியது. எனவே என்னால் அதைக் கடக்க இயலவில்லை. ஏனெனில் தண்ணீர் உயர்ந்து நீந்திப்போகுமளவுக்கு ஆழமுடையதாய், யாராலும் நடந்து கடக்க முடியாத ஆறாய் ஓடியது.6 அவர் என்னிடம் “மானிடா! இதைப் பார்த்தாயா?” என்றார். பின்னர் அவர் என்னை ஆற்றின் கரைக்கு அழைத்துச் சென்றார்.7 நான் அங்கே சென்றபோது ஆற்றின் இரு கரைகளிலும் எண்ணற்ற மரங்கள் நிற்கக் கண்டேன்.8 அவர் என்னிடம் உரைத்தது: “இத் தண்ணீர் கிழக்குப் பகுதியை நோக்கிப் பாய்ந்து அராபாவில் சேர்கிறது. அங்கு அது கடலோடு கலக்கிறது. அது கடலோடு கலக்கையில் அத்தண்ணீர் அங்கு நல்ல தண்ணீராக மாறும்.9 இந்த ஆறு பாயுமிடமெல்லாம் திரளான உயிரினங்கள் வாழும். அங்கு ஏராளமான மீன்கள் இருக்கும். ஏனெனில் இத்தண்ணீர் பாய்ந்து அங்குள்ள நீரை நல்ல நீராய் மாற்றும். எனவே அது பாயுமிடமெல்லாம் யாவும் உயிர் வாழும்.10 மீனவர் கடலோரமெங்கும் நிற்பர். ஏன்கேதியிலிருந்து எனக்லயிம்வரை வலைகளை விரிக்க இடமிருக்கும். மீன்களோ பெருங்கடலின் மீன்கள் போலப் பலவகைப்பட்டவையாய் இருக்கும்.11 ஆயினும் உவர் மற்றும் சதுப்பு நிலங்கள் வளமை பெறா; அவை உப்பளங்களுக்காய் விடப்படும்.12 பலவகையான பழமரங்கள் ஆற்றின் இருமருங்கிலும் வளரும்; அவற்றின் இலைகள் உதிரா; அவற்றில் கனிகள் குறையா. ஒவ்வொரு மாதமும் அவை கனி கொடுக்கும்; ஏனெனில் தூயகத்திலிருந்து தண்ணீர் அவற்றிற்குப் பாய்கின்றது. அவற்றின் கனிகள் உணவாகவும் இலைகள் மருந்தாகவும் பயன்படும்.13 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; நீங்கள் இஸ்ரயேலின் பன்னிரு குலங்களுக்கும் யோசேப்பின் இரு பாகங்களுக்கும் ஏற்ப இந்த நாட்டைப் பிரித்து உரிமையாக்கிக் கொள்வதற்கான எல்லைகள் இவையே:14 நீங்கள் அதனை ஒவ்வொரு சகோதரனுக்கும் சமமாகப் பங்கிட வேண்டும். ஏனெனில், நான் இதனை உங்கள் மூதாதையருக்குத் தருவதாய்க் கையுயர்த்தி வாக்களித்துள்ளேன். இந்த நாடு உங்கள் உரிமைச் சொத்தாகும்.15 நாட்டின் எல்லை இதுவே: வடக்குப் பக்கம் இது பெருங் கடலிலிருந்து ஏத்லோன் சாலை வழியாய்ச் செதாது வரை;16 பெரோத்தா, தமஸ்கு எல்லை முதல் ஆமாத்து எல்லையிலுள்ள சிப்ரயிம் வரை; அவ்ரான் எல்லையில் இருக்கும் ஆட்சேர் அத்திக்கோன் வரை;17 இவ்வெல்லை கடலிலிருந்து அட்சர் ஏனோன் வரை நீண்டு, தமஸ்குவின் வடக்கு எல்லை வழியாய் வடக்கில் ஆமாத்து எல்லை வரை போகும். இது வடக்கு எல்லையாகும்.18 கிழக்குப் பக்க எல்லை அவ்ரானுக்கும் தமஸ்குவுக்கும் இடையே, யோர்தான் வழியாய், கிலயாதுக்கும் இஸ்ரயேல் நாட்டிற்கும் இடையில் போய், கிழக்குக் கடல் வரை போகும். இது கிழக்கு எல்லையாகும்.19 தெற்குப் பக்கத்தில் இது தாமாரிலிருந்து மெரிபா காதேசு நீர்நிலை வரை போய் எகிப்தின் எல்லை ஓரமாய்ப் பெருங்கடல் வரை போகும். இது தெற்கு எல்லையாகும்.20 மேற்குப் பகுதியில் பெருங்கடலிலிருந்து ஆமாத்து நுழைவின் எதிர்ப்பக்கம் வரை எல்லையாக இருக்கும். இது மேற்கு எல்லையாகும்.21 நீங்கள் இந்த நாட்டை இஸ்ரயேலின் குலங்களுக்கு ஏற்பப் பங்கிட வேண்டும்.22 நீங்கள் இதை உங்களுக்கு உரிமைச் சொத்தாகவும், உங்கள் நடுவில் வந்து குடியேறி உங்கள் நடுவில் பிள்ளைகள் பெற்றெடுத்த அந்நியரின் உரிமைச் சொத்தாகவும் பங்கிட வேண்டும். அவர்களும் உங்கள் நாட்டில் பிறந்த இஸ்ரயேலராகவே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். உங்களோடு சேர்ந்த இஸ்ரயேலின் குலங்கள் நடுவே அவர்களுக்கும் உரிமைச் சொத்து வழங்கப்பட வேண்டும்.23 அந்நியன் எந்தக் குலத்தோடு சேர்ந்து குடியேறினாலும், அங்கே அவனுக்கு உரிமைச் சொத்து வழங்கப்பட வேண்டும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.Ezekiel 47 ERV IRV TRV