Ezekiel 34 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.2 மானிடா! இஸ்ரயேலின் ஆயர்களுக்கு எதிராக இறைவாக்குரை. அவர்களுக்கு இறைவாக்குரைத்துச்சொல். தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; தாங்களே மேய்ந்துகொள்ளும் இஸ்ரயேலின் ஆயர்களுக்கு ஐயோ கேடு! ஆயர்கள் மந்தையையன்றோ மேய்க்க வேண்டும்!3 நீங்கள் கொழுப்பானதை உண்டு, ஆட்டு மயிராடையை உடுத்தி, மந்தையில் சிறந்ததை அடிக்கிறீர்கள். மந்தையையோ மேய்ப்பதில்லை.4 நீங்கள் நலிந்தவற்றைத் திடப்படுத்தவில்லை; பிணியுற்றவற்றிற்குக் குணமளிக்கவில்லை. காயமுற்றவற்றிற்குக் கட்டுப்போடவில்லை; வழிதப்பியவற்றைத் திரும்பக் கூட்டி வரவில்லை. காணாமல் போனவற்றைத் தேடவில்லை. ஆனால், அவற்றைக் கொடுமையுடனும் வன்முறையுடனும் நடத்தினீர்கள்.5 ஆயன் இல்லாமையால் அவை அலைந்து திரிந்தன. அப்போது எல்லாக் காட்டு விலங்குகளுக்கும் அவை இரையாயின.6 என் ஆடுகள் எல்லா மலைகளிலும் உயர்ந்த குன்றுகளிலும் அலைந்து திரிந்தன. பூவுலகில் எவ்விடத்திலும் என் மந்தை சிதறுண்டு போனது; அதைத் தேடவோ கூட்டிச் சேர்க்கவோ எவரும் இலர்.⒫7 எனவே ஆயர்களே, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்;8 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; என் மேல் ஆணை! என் மந்தை கொள்ளையிடப்பட்டது; எல்லாக் காட்டு விலங்குகளுக்கும் இரையானது. ஏனெனில் அதற்கு ஆயன் இல்லை. என் ஆயர்கள் என் மந்தையைத் தேடவில்லை. என் மந்தையை அவர்கள் மேய்க்காமல் தாங்களே மேய்ந்து கொள்கிறார்கள்.9 எனவே, ஆயர்களே! ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்:10 தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நான் ஆயர்களுக்கு எதிராக இருக்கிறேன். என் மந்தையை அவர்களிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொள்வேன். மந்தை மேய்ப்பினின்று அவர்களை நீக்கிவிடுவேன். எனவே தாங்களே மேய்ந்துக் கொள்ளும் அவர்கள் இனி என் மந்தையை மேய்க்க மாட்டார்கள். அவர்கள் வாயினின்று என் மந்தையை மீட்பேன். அவை இனி அவர்களுக்கு உணவாகா.11 எனவே, தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: நானே என் மந்தையைத் தேடிச் சென்று பேணிக் காப்பேன்.12 ஓர் ஆயன் தன் மந்தையினின்று சிதறுண்ட ஆடுகளைத் தேடித் செல்வதுபோல, நானும் என் மந்தையைத் தேடிப் போவேன். மப்பும் மந்தாரமுமான நாளில் அவற்றை எல்லா இடங்களினின்றும் மீட்டு வருவேன்.13 மக்களினங்களினின்று அவற்றை வெளிக்கொணர்ந்து, நாடுகளினின்று கூட்டிச்சேர்த்து, அவற்றின் சொந்த நாட்டிற்கு அழைத்து வருவேன். அவற்றை இஸ்ரயேலின் மலைகளிலும் ஓடையோரங்களிலும் நாட்டின் எல்லாக் குடியிருப்புகளிலும் மேய்ப்பேன்.14 நல்ல மேய்ச்சல் நிலத்தில் அவற்றை மேய்ப்பேன். இஸ்ரயேலின் மலையுச்சிகளில் அவற்றின் மேய்ச்சல் நிலம் இருக்கும். அங்கே வளமான மேய்ச்சல் நிலத்தில் அவை இளைப்பாறும். இஸ்ரயேலின் மலைகளின்மேல் செழிப்பான மேய்ச்சல் நிலத்தில் அவை மேயும்.15 நானே என் மந்தையை மேய்த்து, இளைப்பாறச் செய்வேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.16 காணாமல் போனதைத் தேடுவேன்; அலைந்து திரிவதைத் திரும்பக்கொண்டுவருவேன்; காயப்பட்டதற்குக் கட்டுப்போடுவேன்; நலிந்தவற்றைத் திடப்படுத்துவேன். ஆனால், கொழுத்ததையும் வலிமையுள்ளதையும் அழிப்பேன். இவ்வாறு நீதியுடன் அவற்றை மேய்ப்பேன்.17 எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்: உன்னைப் பொறுத்தவரை, என் மந்தையே, நான் ஆட்டுக்கும் ஆட்டுக்கும் இடையேயும் ஆட்டுக் கிடாய்களுக்கும், வெள்ளாட்டுக் கிடாய்களுக்கும் இடையேயும் நீதி வழங்குவேன்.18 நீங்கள் நல்ல மேய்ச்சல் நிலத்தில் மேய்வது போதாதென்றா, எஞ்சிய மேய்ச்சல் நிலங்களைக் காலால் மிதிக்கிறீர்கள்? நல்ல நீரைக் குடித்துவிட்டு எஞ்சிய நீரைக்காலால் கலக்குகிறீர்களே!19 உங்கள் கால்களால் மிதிக்கப்பட்டதை என் மந்தை உண்ண வேண்டுமா? உங்கள் கால்களால் கலக்கப்பட்டதை என் மந்தை குடிக்க வேண்டுமா?20 எனவே, தலைவராகிய ஆண்டவர் அவர்களுக்கு இவ்வாறு கூறுகிறார்: நானே கொழுத்த ஆட்டுக்கும் நலிந்த ஆட்டுக்குமிடையே நீதி வழங்குவேன்.21 நலிந்த ஆடுகளை விலாவினாலும் முன்னந்தொடையினாலும் இடித்துத் தள்ளி, உங்கள் கொம்புகளால் முட்டி அவற்றை வெளியே விரட்டியடிக்கிறீர்கள்.22 எனவே, நான் என் மந்தையை மீட்பேன். அவை இனிமேல் கொள்ளையிடப்படா. நான் ஆட்டுக்கும் ஆட்டுக்குமிடையே நீதி வழங்குவேன்.23 எனவே, அவற்றிற்கு என் ஊழியன் தாவீதை ஒரே ஆயனாய் அமர்த்துவேன். அவன் அவற்றை மேய்த்து அவற்றிற்கு ஆயனாய் இருப்பான்.24 ஆண்டவராகிய நான் அவர்கள் கடவுளாய் இருப்பேன். என் ஊழியன் தாவீது அவர்கள் நடுவே தலைவனாய் இருப்பான். ஆண்டவராகிய நானே இதை உரைத்தேன்.25 சமாதான உடன்படிக்கையை அவர்களோடு செய்து கொள்வேன். காட்டு விலங்குகளை நாட்டினின்று வெளியேற்றுவேன். எனவே என் மந்தை திறந்த வெளியில் பாதுகாப்பாய் வாழ்ந்து காடுகளில் உறங்கும்.26 அவர்களுக்குக் குன்றினைச் சுற்றிய இடங்களை ஆசியாகக் கொடுப்பேன். ஏற்ற காலத்தில் மழையை வரச் செய்வேன். அவர்கள் ஆசிமழையாக இருப்பர்.27 வயல்வெளி மரங்கள் கனி கொடுக்கும். நிலமோ நல்விளைச்சல் நல்கும். அவர்கள் தங்கள் நாட்டில் பாதுகாப்பாய் இருப்பர். நான் அவர்களின் தளைகளைத் தகர்த்து, அடிமைப்படுத்தியவர் கையினின்று அவர்களை விடுவிக்கையில் நானே ஆண்டவர் என்பதை அறிந்துகொள்வர்.28 இனிமேல் அவர்கள் மக்களுக்குக் கொள்ளைப் பொருளாய் இரார். நாட்டின் கொடிய விலங்குகளும் அவர்களை விழுங்க மாட்டா. அவர்கள் எத்தகைய அச்சுறுத்தலுமின்றிப் பாதுகாப்பாய் வாழ்வர்.29 சிறப்புமிகு பண்ணை ஒன்று அவர்களுக்கு எழும்பச் செய்வேன். அவர்கள் இனி நாட்டில் பஞ்சத்தால் வாடமாட்டார்கள். மக்களினங்களின் இழி சொல்லையும் இனிச் சுமக்கமாட்டார்கள்.30 அப்போது அவர்களுடைய கடவுளும் ஆண்டவருமாகிய நான் அவர்களோடு இருக்கிறேன் என்பதையும், இஸ்ரயேலின் வீட்டாராகிய அவர்கள் என் மக்களாக இருக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொள்வார்கள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.31 நீங்கள் என் மேய்ச்சலின் மந்தையாகிய மக்கள், நான் உங்கள் கடவுள், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.