Ezekiel 33 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:2 மானிடா! உன் மக்களிடம் பேசி, அவர்களுக்குச் சொல்; ஒரு நாட்டின்மேல் நான் வாளைக் கொணரும்போது, அந்நாட்டின் மக்கள் தங்கள் நடுவிலிருந்து ஒரு மனிதனைத் தேர்ந்தெடுத்து அவனைத் தங்கள் காவலாளியாக ஆக்கியிருக்க,3 அவன் அந்நாட்டின்மேல் வாள் வருவதைக் கண்டு எக்காளம் ஊதி மக்களை எச்சரிக்கை செய்யும்போது,4 எக்காளத்தின் ஒலியை எவராவது கேட்டும், எச்சரிப்புக்குச் செவிகொடாமல் இருக்க, வாள் வந்து அவர்களை வீழ்த்திச் சென்றால் அவர்கள் தம் இரத்தப்பழியைத் தாமே சுமப்பர்.5 எக்காளத்தின் ஒலியைக் கேட்டிருந்தும் அவர்கள் அந்த எச்சரிப்பைப் பொருட்படுத்தவில்லை. எனவே, அவர்கள் தம் இரத்தப்பழியைத் தாமே சுமப்பர்.6 ஆனால், அந்தக் காவலாளி வாள் வருவதைக் கண்டும் எக்காளம் ஊதாமல் இருந்து, அதன் மூலம் மக்கள் எச்சரிக்கைப்படாமல் இருக்கையில், வாள் வந்து அவர்களுள் எவரையாவது வீழ்த்தும்போது, அவர் தம் குற்றத்திலிருந்து வீழ்த்தப்பட்டிருப்பினும், அவரது இரத்தப்பழியை நான் காவலாளியின் மேல் சுமத்துவேன்.⒫7 அவ்வாறே, மானிடா! நான் உன்னை இஸ்ரயேல் வீட்டாருக்கும் காவலாளியாக ஏற்படுத்தியுள்ளேன். என் வாயினின்று வரும் வாக்கைக் கேட்கும்போதெல்லாம் நீ என் பொருட்டு அவர்களை எச்சரிக்கைவேண்டும்.8 தீயோரிடம் நான், “ஓ தீயோரே! நீங்கள் உறுதியாகச் சாவீர்கள்” என்று சொல்ல, அத்தீயோர் தம் வழியிலிருந்து திரும்பும்படி நீ அவர்களை எச்சரிக்காவிடில், அத்தீயோர் தம் குற்றத்திலேயே சாவர்; ஆனால், அவர்களது இரத்தப்பழியை உன் மேலேயே சுமத்துவேன்.9 ஆனால் தீயோரை அவர்கள் தம் வழியிலிருந்து திரும்ப வேண்டுமென்று நீ எச்சரித்தும் அவர்கள் தம் வழியிலிருந்து திரும்பாவிட்டால், அவர்கள் தம் குற்றத்திலேயே சாவர். நீயோ, உன் உயிரைக் காத்துக் கொள்வாய்.10 நீயோ, மானிடா! இஸ்ரயேல் வீட்டாரிடம் சொல்; நீங்கள் சொல்கிறீர்கள்: “எங்கள் குற்றங்களும் பாவங்களும் எங்கள்மேல் இருப்பதால் நாங்கள் உருகிப்போகிறோம். எப்படி நாங்கள் வாழமுடியும்?”11 அவர்களிடம் சொல்: “தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: என் மேல் ஆணை! தீயோர் சாகவேண்டுமென்பது என் விருப்பம் அன்று; ஆனால், அத்தீயோர் தம் வழிகளினின்று திரும்பி, வாழ வேண்டும் என்பதே என் விருப்பம். ஆகவே உங்கள் தீய வழிகளினின்று திரும்புங்கள். இஸ்ரயேல் வீட்டாரே! நீங்கள் ஏன் சாகவேண்டும்?⒫12 மேலும், மானிடா! உன் மக்களிடம் சொல்: நேர்மையாளர் தவறிழைக்கும்போது, அவர்களுடைய நற்செயல்கள் அவர்களை விடுவிக்கா. தீயோரோ தம் தீமையினின்று மனம் மாறிவிட்டால், தம் தீமையை முன்னிட்டு வீழ்ச்சியடையார். நேர்மையாளர் தவறிழைக்கும்போது தம் முன்னைய நற்செயல்களை முன்னிட்டு வாழமுடியாது.13 நேர்மையாளரிடம் அவர்கள் உறுதியாக வாழ்வது உறுதி என்று நான் சொன்னாலும், அவர்கள் தம் முன்னைய நற்செயல்களை நம்பித் தவறிழைத்தால், அவர்களுடைய நற்செயல்களில் எதுவுமே எண்ணப்படமாட்டாது. அவர்கள் தம் குற்றத்திலேயே சாவர்.14 மாறாக, தீயோரிடம் ‘நீங்கள் சாவது உறுதி’ என்று நான் சொன்னாலும், அவர்கள் தம் பாவத்தினின்று விலகி, நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால் —15 அவர்கள் தாங்கள் வாங்கிய பணயப் பொருள்களைத் திருப்பிக் கொடுத்தால், திருடிக் கவர்ந்தவற்றைத் திருப்பித் தந்தால், வாழ்வளிக்கும் நியமங்களின்படி நடந்து, தீச்செயல் எதுவும் செய்யாதிருந்தால் — அவர்கள் வாழ்வது உறுதி; சாகார்.16 அவர்கள் செய்த பாவம் எதுவுமே அவர்களுக்கெதிராக எண்ணப்படமாட்டாது. நீதியையும் நேர்மையையும் அவர்கள் கடைப்பிடித்தால், அவர்கள் வாழ்வது உறுதி.⒫17 இருப்பினும், ‘ஆண்டவரின் நெறிமுறை நீதியற்றது’ என உன் மக்கள் சொல்கிறார்கள். ஆனால் அவர்களின் நெறிமுறைதான் நீதியற்றது.18 நேர்மையாளர் தம் நன்னெறியினின்று பிறழ்ந்து தவறிழைத்தால் அதன்பொருட்டு அவர்கள் சாவர்.19 தீயோரும் தம் தீமையினின்று விலகி நீதியையும் நேர்மையையும் கடைப்பிடித்தால் அதன்பொருட்டு அவர்கள் வாழ்வர்.20 இருப்பினும்‘ஆண்டவரின் நெறிமுறை நீதியற்றது’ என நீங்கள் சொல்கின்றீர்கள். இஸ்ரயேல் வீட்டாரே! உங்களில் ஒவ்வொருவரையும் அவரவர் நெறிமுறைக்குத் தக்கவாறு நான் தீர்ப்பிடுவேன்.”21 எங்கள் சிறையிருப்பின் பன்னிரண்டாம் ஆண்டில், பத்தாம் மாதத்தின் ஐந்தாம் நாள், எருசலேமிலிருந்து தப்பியோடி வந்த ஒருவன் என்னிடம் வந்து, “நகர் வீழ்ந்துவிட்டது” என்றான்.22 தப்பியவன் வருவதற்குமுன் மாலையில் ஆண்டவரின் கை என் மேல் இருந்தது. அம்மனிதன் காலையில் என்னிடம் வருமுன் ஆண்டவர் என்னை வாய்திறக்கச் செய்தார். ஆகவே என் வாய் திறக்கப்பட்டிருக்க, நான் பேச இயலாதவனாய் இல்லை.23 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது.24 மானிடா! இஸ்ரயேல் நாட்டின் பாழிடம்வாழ் மக்கள், “ஆபிரகாம் தனியொரு மனிதராக இருந்தும் அவர் நாட்டை அவர்தம் உடைமையாகக் கொண்டிருந்தார். அப்படியிருக்க, நாம் பலராய் இருக்கும் போது, இந்த நாடு நமக்கே உரிமையாய்த் தரப்பட்டுள்ளதன்றோ?” என்று சொல்கிறார்கள்.⒫25 எனவே அவர்களிடம் சொல்; தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நீங்கள் குருதியுடன் சேர்ந்து இறைச்சியை உண்கிறீர்கள்; உங்கள் தெய்வச் சிலைகளுக்கு வணக்கம் செலுத்துகிறீர்கள்! கொலை செய்கிறீர்கள். அவ்வாறிருக்க நீங்கள் நாட்டை உரிமையாக்கிக் கொள்வீர்களோ?26 உங்கள் வாள்களின் மீது நம்பிக்கை வைக்கிறீர்கள்; அருவருப்பான செயல்களைச் செய்கிறீர்கள். ஒவ்வொருவனும் அடுத்தவன் மனைவியைக் கெடுக்கிறான். அவ்வாறிருக்க நீங்கள் நாட்டை உரிமையாக்கிக் கொள்வீர்களோ?⒫27 அவர்களுக்கு இதைச் சொல்; தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே; என் மேல் ஆணை! பாழிடம்வாழ் எஞ்சியோர் வாளால் வீழ்வர். வயல் வெளியில் இருப்போரைக் காட்டு விலங்குகளுக்கு இரையாய் அளிப்பேன். கோட்டையிலும் குகையிலும் தங்கியிருப்போர் கொள்ளை நோயால் மடிவர்.28 அழிவுக்கும் வெறுமைக்கும் நாட்டைக் கையளிப்பேன். அதன் வலிமையின் பெருமை முடிவுக்குக் கொண்டுவரப்படும். இஸ்ரயேலின் மலைகள் பாழாய்ப்போம். அங்கே நடமாட்டம் ஏதும் இராது.29 அவர்கள் செய்த எல்லா அருவருப்புகளின் பொருட்டும் நான் நாட்டைப் பாழாக்குகையில் நானே ஆண்டவர் என்பதை அவர்கள் அறிந்து கொள்வர்.30 மானிடா! உன் மக்களினத்தார் உன்னைக் குறித்து சுவர்களின் அருகிலும் வீடுகளின் கதவருகிலும் பேசிக்கொள்கின்றனர். அவர்களுள் ஒவ்வொருவரும் அடுத்திருப்பாரிடம் ‘ஆண்டவரிடமிருந்து வரும் செய்தி என்ன எனக் கேட்க வாருங்கள்’ எனக் கூறுகின்றார்கள்.31 என் மக்கள் வழக்கம்போல் உன்னிடம் வருகின்றனர். அவர்கள் முன்னிலையில் அமர்ந்து உன் சொற்களைக் கேட்கின்றனர். ஆனால் அவற்றையோ கடைப்பிடிப்பதில்லை. அவர்களின் உதடுகள் அன்பொழுகப் பேசுகின்றன; உள்ளமோ நேர்மையற்ற பொருளைத் தேடி ஓடுகின்றது.32 அவர்களுக்கு நீ இசைக்கருவியுடன் இயைந்து இனிய குரலில் காதல் பாடல் பாடும் பாடகன் போல் உள்ளாய். அவர்கள் உன்சொற்களைக் கேட்கின்றனர்; ஆனால் அவற்றைக் கடைப்பிடிப்பதில்லை.33 உண்மையில் இவை வரப்போகின்றன. அப்பொழுது தங்கள் நடுவே ஓர் இறைவாக்கினர் இருந்தார் என உணர்ந்து கொள்வர்.