Ezekiel 25 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ஆண்டவரின் வாக்கு எனக்கு அருளப்பட்டது:2 “மானிடா! அம்மோனியருக்கு நேராக உன் முகத்தைத் திருப்பி அவர்களுக்கு எதிராய் இறைவாக்குரை.3 அவர்களுக்குச் சொல்: தலைவராகிய ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள். அவர் கூறுவது இதுவே; நீங்கள் எனது தூயகம் தீட்டுப்படுத்தப்பட்டபோதும், இஸ்ரயேல் நாடு பாழாக்கப்பட்டபோதும் யூதாவின் வீட்டார் சிறைப்பிடிக்கப்பட்டபோதும் ‘ஆகா’ என்று கூறி அக்களித்தீர்கள்.4 எனவே உங்களைக் கீழ்த்திசையினருக்கு உரிமையாக ஒப்புவிக்கப்போகிறேன். அவர்கள் உங்கள் நடுவே பாளையம் அமைப்பார்கள்; கூடாரங்கள் அடிப்பார்கள்; உங்கள் மரங்களின் கனிகளை உண்பார்கள்; உங்கள் மந்தையின் பாலைப் பருகுவார்கள்.5 இராபாவை ஒட்டகங்களின் மேய்ச்சல் நிலமாகவும், அம்மோனை மந்தையின் கிடையாகவும் மாற்றுவேன். அப்போது நானே ஆண்டவர் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.6 ஏனெனில், தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; இஸ்ரயேல் நாட்டுக்கு எதிராக நீங்கள் கைகொட்டிக் குதித்து வன்மனத்துடன் மகிழ்ந்தீர்கள்.7 எனவே நான் என் கைகளை உங்களுக்கு எதிராய் ஓங்கி உங்களை வேற்றினத்தாருக்குக் கொள்ளைப் பொருளாய் ஒப்புவிப்பேன். உங்களை மக்களினங்களினின்று பிரித்து, நாடுகளிடையே இல்லாதபடி பூண்டோடு அழிப்பேன். அப்போது, நானே ஆண்டவர் என்பதை அறிந்துகொள்வீர்கள்.8 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: மோவாயும் சேயிரும், ‘இதோ! யூதா வீட்டார் மற்ற மக்களினங்களைப் போலவே உள்ளனர்’ எனக் கூறினர்.9 எனவே, மோவாபின் மலை வாயிலைத் திறப்பேன்; அதன் அணிகலனாகவும் எல்லையாகவும் உள்ள பெத்தசிமோத்து, பாகால்மெகோன், கிரியத்தாயிம் ஆகியவற்றை அழிப்பேன்.10 மோவாபை அம்மோனுடன் சேர்த்து, கீழை நாட்டினர்க்கு உரிமையாகக் கொடுப்பேன். அது மக்களினங்களிடையே நினைவுகூரப்பட மாட்டாது.11 மோவாபின்மேல் தண்டனையை வருவிப்பேன். அப்போது நானே ஆண்டவர் என்பதை அது அறிந்து கொள்ளும்.12 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: யூதா வீட்டாரை ஏதோம் பழிதீர்த்து அதன்மூலம் குற்றப் பழிக்குள்ளானது.13 எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; நான் ஏதோமுக்கு எதிராய் என் கைகளை ஓங்கி, அதன் மாந்தரையும் விலங்குகளையும் கொல்வேன்; அதைப் பாழாக்குவேன். தேமானிலிருந்து தெதான் வரை மக்கள் வாளால் வீழ்வர்.14 என் மக்களாகிய இஸ்ரயேலரின் கையால் ஏதோமைப் பழிவாங்குவேன். அவர்களும் என் சினத்திற்கும் சீற்றத்திற்கும் தக்கவாறு ஏதோமுக்குச் செய்வார்கள். அது என் பழிவாங்குதலை உணர்ந்து கொள்ளும், என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.15 தலைவராகிய ஆண்டவர் கூறுவது இதுவே: பெலிஸ்தியர் பழிவாங்குமாறு இதயத்தில் பகை உணர்வுடன் செயல்பட்டனர். பழைய பகையை மனத்தில் வைத்து யூதாவை அழிக்கத் தேடினர்.16 எனவே தலைவராகிய ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; பெலிஸ்தியருக்கு எதிராக கைகளை ஓங்குகிறேன். கெரேத்தியரைக் கொன்று, கடற்கரை ஊர்களில் எஞ்சியவற்றையெல்லாம் அழிப்பேன்.17 வன்மையாய் அவர்களைப் பழிவாங்கி, என் சீற்றத்தால் அவர்களைத் தண்டிப்பேன். அவ்வாறு அவர்களைப் பழிவாங்குகையில், நானே ஆண்டவர் என அவர்கள் அறிந்து கொள்வர்.Ezekiel 25 ERV IRV TRV