1 “பிறருக்கு விரோதமாகப் பொய் பேசாதீர்கள். சாட்சி சொல்லும்படி நீதி மன்றத்துக்கு நீங்கள் சென்றால், ஒரு தீய மனிதன் பொய் சொல்வதற்கு உதவாதீர்கள்.
2 “பிறர் செய்கிறார்கள் என்பதால் மட்டுமே நீங்கள் சிலவற்றைச் செய்யாதீர்கள். ஒரு கூட்டம் ஜனங்கள் தவறு செய்தால் அவர்களோடு சேராதீர்கள். அந்த ஜனங்கள் உங்களை தீயவற்றைச் செய்யும்படியாகத் தூண்டவிடாதீர்கள். எது சரியென்றும் நியாயமான தென்றும் தெரிகிறதோ, அதையே செய்யுங்கள்.
3 “ஒரு ஏழை நியாயந்தீர்க்கப்படுகையில் அவன் மீதுள்ள இரக்கத்தினால் ஜனங்கள் அவனுக்கு ஆதரவாக இருக்கலாம். ஆனால், நீங்கள் அவ்வாறு செய்யக்கூடாது. அவன் செய்தது சரியாக இருந்தால் மட்டுமே அவனுக்கு ஆதரவாக இருங்கள்.
4 “காணாமற்போன மாட்டையோ, கழுதையையோ பார்த்தீர்களானால், அதை அதன் உரிமையாளனிடம் சேர்ப்பிக்க வேண்டும். அதன் உரிமையாளன் உனது பகைவனாக இருந்தாலும், நீ அதைச் செய்ய வேண்டும்.
5 “மிகுந்த பாரத்தால் நடக்க முடியாத மிருகத்தைக் கண்டால் அதை நிறுத்தி அதற்கு உதவ வேண்டும். அது உனது பகைவர்களில் ஒருவனுக்குச் சொந்தமானதாக இருந்தாலும் அம்மிருகத்திற்கு நீ உதவ வேண்டும்.
6 “ஒரு ஏழை மனிதனுக்கு ஜனங்கள் அநியாயம் செய்ய விடாதே. அவனும் பிறரைப் போன்றே நியாயந்தீர்க்கப்பட வேண்டும்.
7 “ஒருவன் குற்றவாளி என நீ கூறும்போது எச்சரிக்கையாக இரு. ஒருவனுக்கு எதிராக வீண் பழி சுமத்தாதே. குற்றமற்ற ஒருவன் செய்யாத செயலுக்குத் தண்டனையாகக் கொல்லப்படுவதற்கு வகை செய்யாதே. குற்றமற்ற மனிதனைக் கொல்பவன் கொடியவன். அம்மனிதனை நான் மன்னிக்கமாட்டேன்.
8 “ஒருவன் தவறு செய்யும்போது அவன் செயலை ஆமோதிப்பதற்காக ஒருவன் உனக்கு லஞ்சம் கொடுக்க வந்தால் அதை ஏற்றுக்கொள்ளாதே. நீதிபதிகள் உண்மையைப் பார்க்காதபடிக்கு இத்தகைய பணம் நீதிபதிகளைக் குருடாக்கும். அந்தப் பணம் உண்மையுள்ளவர்களையும் பொய்யராக்கும்.
9 “அந்நியனுக்குத் தீங்குசெய்யாதீர்கள். எகிப்து தேசத்தில் வாழ்ந்தபோது நீங்களும் அந்நியராக இருந்ததை நினைவு கூருங்கள்.
10 “விதைகளை விதையுங்கள், பயிர்களை அறுவடை செய்யுங்கள், ஆறு ஆண்டுகள் நிலத்தைப் பண்படுத்துங்கள்.
11 ஆனால் ஏழாவது ஆண்டு நிலத்தைப் பண்படுத்தாதீர்கள். நிலம் ஓய்வெடுப்பதற்குரிய விசேஷ காலமாக ஏழாவது ஆண்டு இருக்கட்டும். அந்த ஆண்டில் உங்கள் நிலங்களில் எதையும் விதைக்காதீர்கள். ஏதேனும் பயிர்கள் அந்நிலத்தில் விளைந்தால் அதை ஏழைகள் அனுபவிக்கட்டும். மிகுதியான தானியங்களைக் காட்டுமிருகங்கள் உண்ணட்டும். உங்களுக்குச் சொந்தமான திராட்சைத் தோட்டங்களையும், ஒலிவமரத் தோப்புக்களையும் அவ்வாறே பயன்படுத்துங்கள்.
12 “ஆறு நாட்கள் உழையுங்கள். ஏழாவது நாளில் ஓய்வு எடுங்கள். உங்கள் அடிமைகளுக்கும், வேலையாட்களுக்கும் ஓய்வுக்கும், அமைதிக்கும் அது வழிவகுக்கும். உங்கள் மாடுகளும், கழுதைகளும் ஓய்வெடுக்க நேரம் கிடைக்கும்.
13 “இச்சட்டங்களை உறுதியாகப் பின்பற்றுங்கள் பொய்த் தேவர் களை தொழுதுகொள்ளாதீர்கள். அவைகளின் பெயர்களை உங்கள் நாவினால் உச்சரிக்கவேண்டாம்!
14 “ஒவ்வொரு ஆண்டும் மூன்று விசேஷ விடு முறைகள் உங்களுக்கு இருக்கும். அந்நாட்களில் என்னைத் தொழுதுகொள்ளும்படி விசேஷ இடத்தில் நீங்கள் கூடுங்கள்.
15 முதலாவது, புளிப்பில்லா அப்பப் பண்டிகையாகும். நான் கட்டளையிட்டபடியே இதைக் கொண்டாடவேண்டும். புளிப்புச் சேராத ரொட்டியை நீங்கள் ஏழு நாட்கள் உண்ண வேண்டும். ஆபிப் மாதத்தில் இதைச் செய்ய வேண்டும். ஏனெனில் அம்மாதத்தில்தான் நீங்கள் எகிப்தை விட்டு வெளியேறினீர்கள். அந்த சமயம் உங்களில் ஒவ்வொருவனும் ஒரு பலியைக் கொண்டு வரவேண்டும்.
16 “பெந்தெகோஸ்தே பண்டிகையானது ஆண்டின் இரண்டாவது விடுமுறை நாளாக இருக்கும். உங்கள் வயல்களில் அறுவடை ஆரம்பிக்கும் கோடையின் தொடக்கத்தில் இந்த விடுமுறை நாள் வரும். “ஆண்டின் மூன்றாம் விடுமுறையானது அடைக்கலக் கூடாரப் பண்டிகையாக இருக்கும். இலையுதிர் காலத்தில் உங்கள் வயல்களின் எல்லாப் பயிர்களையும் சேர்க்கும் நாட்களில் இப்பண்டிகை வரும்.
17 “ஆகவே ஆண்டிற்கு மூன்றுமுறை ஒவ்வொரு ஆண்டும் உங்கள் கர்த்தராகிய ஆண்டவரை வணங்கும்படி நீங்கள் எல்லோரும் கூடிவரவேண்டும்.
18 “ஒரு மிருகத்தைக் கொன்று அதன் இரத்தத்தைப் பலியாகக் கொடுத்தால், புளிப்புள்ள ரொட்டியை அதனோடு படைக்கக்கூடாது. இப்பலியிலிருந்து நீங்கள் மாமிசத்தை எடுத்து உண்ணும்போது, ஒரே நாளில் அதை முடித்துவிடவேண்டும். எஞ்சிய மாமிசத்தை அடுத்த நாளுக்காகப் பாதுகாக்க வேண்டாம்.
19 “அறுவடை காலத்தில் பயிர்களைச் சேர்க்கும்போது, பயிர்களில் முதலில் அறு வடை செய்பவற்றை தேவனாகிய கர்த்தரின் வீட்டிற்குக் (பரிசுத்த கூடாரத்திற்குக்) கொண்டுவர வேண்டும். “தாய் ஆட்டின் பாலில் வேக வைக்கப்பட்ட ஆட்டுக்குட்டியின் மாமிசத்தைச் சாப்பிடாதீர்கள்” என்றார்.
20 தேவன், “நான் உங்களுக்கு முன்பாக ஒரு தூதனை அனுப்புவேன். நான் உங்களுக்கென தயாராக வைத்திருக்கிற இடத்திற்கு அத்தூதன் அழைத்துச் செல்வார். அந்தத் தூதன் உங்களைப் பாதுகாப்பார்.
21 தூதனுக்குக் கீழ்ப்படிந்து அவரைப் பின்பற்றுங்கள். அவரை எதிர்க்காதீர்கள். நீங்கள் அவரை எதிர்த்துச் செய்கிற தவறுகளைத் தூதன் மன்னிக்கமாட்டார். அவரில் என் வல்லமை (நாமம்) இருக்கிறது.
22 அவர் சொல்கிற எல்லாவற்றிற்கும் நீங்கள் செவிகொடுக்கவேண்டும். அவ்வாறு செய்தால் நான் உங்களோடிருப்பேன். உங்கள் பகைவர்களை எதிர்ப்பேன். உங்களை எதிர்க்கிற ஒவ்வொருவருக்கும் நான் பகைவனாவேன்” என்றார்.
23 தேவன், “என் தூதன் உங்களை தேசத்தில் வழி நடத்துவார். எமோரியர், ஏத்தியர், பெரிசியர், கானானியர், ஏவியர், எபூசியர் ஆகிய வெவ்வேறு ஜனங்களுக்கு எதிராக உங்களை வழிநடத்துவார். நான் அந்த ஜனங்களை எல்லாம் தோற்கடிப்பேன்.
24 “அந்த ஜனங்களின் தேவர்களைத் தொழுதுகொள்ளாதீர்கள். அவைகளுக்கு முன்பு பணியாதீர்கள். அவர்கள் வாழுகிறபடி நீங்கள் வாழாதீர்கள். அவர்களின் விக்கிரகங்களை அழித்துவிடுங்கள். அவர்கள் தெய்வங்களின் நினைவுச் சின்னங்களை உடைத்துவிடுங்கள்.
25 உங்கள் தேவனாகிய கர்த்தருக்குச் சேவை செய்யுங்கள். நீங்கள் இதைச் செய்தால், உங்களை ஏராளமான ஆகாரத்தாலும், தண்ணீராலும் ஆசீர்வதிப்பேன். உங்களிலிருந்து எல்லா நோய்களையும் அகற்றுவேன்.
26 உங்களது பெண்களுக்கு குழந்தைகள் பிறக்கும், உங்களது பெண்களின் பிரசவத்தின்போது குழந்தைகள் மரிப்பதில்லை. நீங்கள் நீண்ட ஆயுளோடு இருக்கும்படிச் செய்வேன்.
27 “உங்கள் எதிரிகளோடு போரிடும்போது உங்களுக்கு முன்பாக என் வல்லமையின் செய்தியை அனுப்புவேன். போரில் உங்கள் எதிரிகள் குழப்பமுற்று ஓடுவார்கள். நான் உங்கள் பகைவர்களை வெல்ல உங்களுக்கு உதவுவேன்.
28 உங்கள் பகைவர்களை விரட்ட காட்டுக் குளவிகளை உங்கள் முன் அனுப்புவேன். ஏவியரும், கானானியரும் ஏத்தியரும் உங்கள் தேசத்தை விட்டுப் போவார்கள்.
29 ஆனால் உங்கள் தேசத்திலிருந்து இவர்களை உடனடியாக விரட்டமாட்டேன். ஒரே ஆண்டில் நான் இதைச் செய்தால் நாடு வெறுமையாகிவிடும். எல்லாக் காட்டு மிருகங்களும் பெருகி நாட்டை ஆக்கிரமிக்கும். அவை உங்களுக்குத் தொல்லையாக மாறும்.
30 எனவே உங்கள் நாட்டினின்று அந்த ஜனங்களை சிறிது சிறிதாக அனுப்புவேன். தேசத்தில் நீங்கள் தொடர்ந்து முன்னேறுவீர்கள். நீங்கள் போகுமிடமெல்லாம் அந்நியரை உங்களுக்கு முன்பாக விரட்டுவேன்.
31 “செங்கடலிலிருந்து ஐப்பிராத்து நதி வரைக்குமுள்ள நாட்டை உங்களுக்குத் தருவேன். பெலிஸ்திய கடல் (மத்திய தரைக் கடல்) மேற்கு எல்லையாகவும் அரேபிய பாலைவனம் கிழக்கு எல்லையாகவும் இருக்கும். அங்கு வாழும் ஜனங்களை நீங்கள் தோற்கடிக்கச் செய்வேன். அங்குள்ள ஜனங்களெல் லோரும் விலகிப் போகும்படி செய்வீர்கள்.
32 “அவர்களோடும், அவர்களது தேவர்களோடும் எந்த ஒப்பந்தத்தையும் செய்யாதீர்கள்.
33 அவர்கள் உங்கள் நாட்டில் தங்க விடாதீர்கள். அவர்களைத் தங்க அனுமதிப்பது உங்களுக்குக் கண்ணியாக அமையும். எனக்கு விரோதமாக பாவம் செய்யவும், அந்நிய தேவர்களை நீங்கள் தொழுதுகொள்ளவும் அவர்கள் உங்களைத் தூண்டுவார்கள்” என்றார்.
Exodus 23 ERV IRV TRV