Exodus 18 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 மிதியானின் அர்ச்சகரும் மோசேயின் மாமனாருமாகிய இத்திரோ என்பவர் கடவுள் மோசேக்கும் அவர் தம் மக்களாகிய இஸ்ரயேலருக்கும் செய்தது அனைத்தையும், ஆண்டவர் இஸ்ரயேலை எகிப்தினின்று வெளியேறச் செய்ததையும் கேள்வியுற்றார்.2 மோசே முன்பு அனுப்பிவைத்திருந்த அவர் மனைவி சிப்போராவையும், இரு புதல்வர்களையும் அவர் மாமனாராகிய இத்திரோ அழைத்துக் கொண்டு வந்தார்.3 ‘அயல் நாட்டில் அந்நியனாக உள்ளேன்’ என்ற பொருளில் ஒருவனுக்குக் ‘கேர்சோம்’ என்று மோசே பெயரிட்டிருந்தார்.4 என்னைப் பார்வோனின் வாளினின்று காப்பாற்றிய என் மூதாதையரின் ‘கடவுளே என் துணை’ என்ற பொருளில் ‘எலியேசர்’ என்று மற்றவனுக்குப் பெயரிட்டிருந்தார்.5 பாலை நிலத்தில் கடவுளின் மலை அருகில் மோசே பாளையம் இறங்கியிருக்க, அவருடைய மாமனாராகிய இத்திரோ மோசேயின் புதல்வரோடும் மனைவியோடும் அவரிடம் வந்தார்.6 “உம் மாமன் இத்திரோ என்ற நான் உம் மனைவியோடும் இரு மைந்தரோடும் வந்திருக்கிறேன்” என மோசேக்குச் சொல்லியனுப்பினார்.7 மோசேயும் தம் மாமனாரைச் சந்திக்க எதிர்கொண்டு வந்தார்; அவர்முன் தாழ்ந்து பணிந்தார்; அவரை முத்தமிட்டார். இருவரும், ஒருவர் ஒருவரிடம் நலம் விசாரித்துக்கொண்டு, பாளையத்தில் புகுந்தனர்.8 இஸ்ரயேலின் நலனை முன்னிட்டு ஆண்டவர் பார்வோனுக்கும் எகிப்திற்கும் செய்தது அனைத்தைப்பற்றியும், வழியில் தங்களுக்கு நேரிட்ட எல்லாத் தொல்லைகளைப் பற்றியும் ஆண்டவர் தங்களுக்கு விடுதலை அளித்தது பற்றியும் மோசே தம் மாமனாருக்கு விவரித்துச் சொன்னார்.9 இஸ்ரயேலை எகிப்தின் பிடியினின்று விடுவிக்கையில், ஆண்டவர் செய்த எல்லா நன்மைகளைக்குறித்தும் இத்திரோ அகமகிழ்ந்தார்.10 அப்போது இத்திரோ, “ஆண்டவர் வாழ்த்தப்பெறுவாராக!. எகிப்தியர் பிடியினின்றும் பார்வோன் பிடியினின்றும் உங்களை விடுவித்தவர் அவரே.11 அனைத்துத் தெய்வங்களையும் விட ஆண்டவரே உயர்ந்தவர் என இப்போது உணர்ந்துகொண்டேன். ஏனெனில், ஆணவச் செயல்புரிந்த எகிப்தியர் பிடியினின்று மக்களை விடுவித்தவர் அவரே” என்றுரைத்தார்.12 மோசேயின் மாமனாராகிய இத்திரோ கடவுளுக்கு எரிபலியையும், பலிகளையும் செலுத்தினார். ஆரோனும் இஸ்ரயேலின் எல்லாத் தலைவர்களும் மோசேயின் மாமனாருடன் கடவுள் திருமுன் உணவருந்தச் சென்றனர்.13 மறுநாள் மோசே மக்களுக்கு நீதிவழங்க அமர்ந்தார். காலை முதல் மாலைவரை மக்கள் மோசேயைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர்.14 மோசே மக்களுக்குச் செய்து கொண்டிருந்ததையெல்லாம் அவர் மாமனார் கவனித்தார். “நீர் மக்களுக்குச் செய்துகொண்டிருப்பது என்ன? நீர் மட்டும் அமர்ந்திருப்பதும், மக்களெல்லாம் காலைமுதல் மாலைவரை உம்மைச்சுற்றி நின்றுகொண்டிருப்பதும் எதற்கு?” என்று அவர் கேட்டார்.15 மோசே தம் மாமனாரை நோக்கி, “கடவுளின் தீர்ப்பை நாடி மக்கள் என்னிடமே வருகின்றனர்.16 அவர்களுக்கிடையில் சச்சரவு ஏற்படும்போது என்னிடம் வர ஒருவனுக்கும் இன்னொருவனுக்கும் நடுநின்று நானும் நீதி வழங்குகிறேன். கடவுளுடைய நியமங்களையும் அவர் சட்டங்களையும் தெளிவுபடுத்துகிறேன்” என்றார்.17 மோசேயின் மாமனார் அவரை நோக்கி, “நீர் செயல்படும் முறை சரியல்ல.18 நீரும் உம்மோடுள்ள இந்த மக்களும் களைத்துப் போவீர்கள். இதை உம்மால் தாங்க முடியாது; தனி ஆளாக இப்பணியை உம்மால் செய்யவியலாது.19 இப்போது, நான் சொல்வதைக் கேளும். உமக்கோர் அறிவுரை கூறுகிறேன். கடவுள் உம்மோடு இருப்பாராக! கடவுளின் திருமுன் நீர் மக்களின் பதிலாளாக இருந்து அவர்கள் விவகாரங்களைக் கடவுளிடம் எடுத்துச் செல்வீர்.20 நியமங்களையும் சட்டங்களையும் பற்றி நீர் அவர்களுக்கு அறிவுறுத்துவீர். அவர்கள் நடக்கவேண்டிய நல்வழியையும், அவர்கள் ஆற்றவேண்டிய பணியையும் நீர் அவர்களுக்கு அறிவிப்பீர்.21 மேலும், மக்கள் அனைவரிலும் திறமையும், இறையச்சமும், நாணயமும் கொண்டு கையூட்டை வெறுக்கும் பண்பாளரைக் கண்டுபிடியும். அவர்களை ஆயிரமவர், நூற்றுவர், ஐம்பதின்மர். பதின்மர் ஆகிய குழுக்களின் தலைவர்களாக நியமிப்பீர்.22 அவர்கள் எப்பொழுதும் மக்களுக்கு நீதி வழங்கட்டும். முக்கிய விவகாரங்கள் அனைத்தையும் உம்மிடம் கொண்டுவரட்டும். சிறிய காரியங்களில் அவர்களே நீதி வழங்கட்டும். ஆக, உமக்கும் சுமை குறையும். அவர்களும் உம்மோடு பொறுப்பேற்பர்.23 கடவுள் கட்டளையிடும் இக்காரியத்தை நீர் செய்தால், உம்மால் பளுவைத் தாங்க இயலும்; இம் மக்கள் அனைவரும் தம்தம் இடத்திற்கு மன அமைதியுடன் செல்வர்” என்றார்.⒫24 மோசே தம் மாமனாரின் சொல்லைக் கேட்டு, அவர் சொன்னபடியெல்லாம் செய்தார்.25 மோசே, இஸ்ரயேல் அனைவரிலும் திறமை வாய்ந்தவர்களைத் தேர்ந்தெடுத்து மக்களில் ஆயிரமவர், நூற்றுவர், ஐம்பதின்மர், பதின்மர் ஆகிய குழுக்களின் தலைவர்களாக அவர்களை நியமித்தார்.26 அவர்களும் மக்களுக்கு எப்பொழுதும் நீதி வழங்கி வந்தனர்; கடினமான சிக்கல்களை மோசேயிடம் கொண்டு சென்றனர். சிறிய காரியங்களில் அவர்களே நீதி வழங்கினர்.27 மோசே தம் மாமனாரை வழியனுப்பி வைக்க, அவரும் தம் நாட்டிற்குத் திரும்பிச் சென்றார்.Exodus 18 ERV IRV TRV