Deuteronomy 31 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 மோசே தொடர்ந்து பின்வரும் வார்த்தைகளை இஸ்ரயேலர் அனைவருக்கும் கூறினார்:2 அவர் சொன்னது: “இன்று எனக்கு வயது நூற்று இருபது. இனி என்னால் நடமாட இயலாது. மேலும், ‘நீ யோர்தானைக் கடக்க மாட்டாய்’ என்று ஆண்டவர் எனக்குக் கூறியுள்ளார்.3 உன் கடவுளாகிய ஆண்டவரே உன்முன் செல்வார். அவரே உன் முன்னின்று இந்த வேற்றினங்களை அழிப்பார். நீ அவற்றுக்கு உரியவற்றை உடைமையாக்கிக் கொள்வாய். ஆண்டவர் சொன்னபடி, யோசுவா உனக்கு முன்பாகச் செல்வான்.4 எமோரியரின் மன்னர்களான சீகோனுக்கும் ஓகுக்கும் அவர்களின் நாட்டுக்கும் செய்ததுபோல — அவர்களை அழித்தது போல — ஆண்டவர் அவற்றுக்கும் செய்வார்.5 ஆண்டவர் அவர்களை உங்களிடம் ஒப்படைப்பார். நான் இன்று உங்களுக்குக் கட்டளையிட்ட அனைத்துக் கட்டளைகளின்படி நீங்கள் அவர்களுக்குச் செய்யுங்கள்.6 வலிமைபெறு; துணிவுகொள்; அஞ்சாதே, அவர்கள் முன் நடுங்காதே; ஏனெனில், உன் கடவுளாகிய ஆண்டவரே உனக்குமுன் செல்பவர்! அவர் உன்னை விட்டு விலக மாட்டார்; உன்னைக் கைவிடவும் மாட்டார்.⒫7 பின்னர், மோசே யோசுவாவை வரவழைத்து, இஸ்ரயேலர் அனைவர் முன்னிலையிலும் அவரிடம் கூறியது: வலிமை பெறு; துணிவுகொள்; இவர்களுக்குக் கொடுப்பதாக அவர்களின் மூதாதையருக்கு ஆண்டவர் ஆணையிட்டுக் கூறிய நாட்டுக்குள், இந்த மக்களோடு நீ செல்லவேண்டும். அதை இவர்கள் உரிமையாக்கிக் கொள்ளுமாறு செய்யவேண்டும்.8 ஆண்டவரே உனக்குமுன் செல்வார். அவர் உன்னோடு இருப்பார். அவர் உன்னை விட்டு விலக மாட்டார். அவர் உன்னைக் கைவிடவும் மாட்டார் அஞ்சாதே, திகைக்காதே!⒫9 பின்னர், மோசே இந்தத் திருச்சட்டநூலை எழுதி, ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைச் சுமக்கிற லேவியின் வழி வந்த குருக்களிடமும் இஸ்ரயேலின் தலைவர்கள் அனைவரிடமும் ஒப்படைத்தார்.10 மேலும், மோசே அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது; விடுதலை ஆண்டாகிய ஒவ்வொரு ஏழாம் ஆண்டின் முடிவில் வரும் கூடார விழாவில்,11 உங்கள் கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்துகொள்ளும் இடத்தில், இஸ்ரயேலர் அனைவரும் அவர் முன்னிலையில் வந்து கூடும்போது, அவர்கள் அனைவரும் கேட்க இத்திருச்சட்ட நூலை அவர்களுக்கு உரக்க வாசியுங்கள்.12 மக்களை ஒன்று திரட்டுங்கள். ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் உங்கள் நகரில் வாழும் அந்நியரும் அதைக் கேட்டு அறிந்து கொள்ளட்டும். அவர்கள் உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி, இத்திருச்சட்டத்தின் வார்த்தைகளைக் கடைப்பிடிப்பதில் கருத்தாய் இருக்கட்டும்.13 இவற்றை அறியாத அவர்களுடைய புதல்வர்களும், நீங்கள் யோர்தானைக் கடந்து, உடைமையாக்கிக் கொள்ளப்போகும் மண்ணில் வாழும் நாளெல்லாம், இவற்றைக் கேட்டு, உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சக் கற்றுக் கொள்ளட்டும்.14 பின்னர், ஆண்டவர் மோசேயிடம், “நீ இறக்கும் நாள் நெருங்கிவிட்டது. யோசுவாவைக் கூப்பிடு. இருவரும் சந்திப்புக் கூடாரத்துக்கு வாருங்கள். நான் அவனுக்குப் பணிப் பொறுப்புத் தரவேண்டும்” என்றார். அவ்வாறே மோசேயும் யோசுவாவும் போய்ச் சந்திப்புக் கூடாரத்தில் நின்றனர்.15 ஆண்டவர் கூடாரத்தில் மேகத்தூணில் தோன்றினார். மேகத்தூண் கூடாரத்தின் நுழைவாயிலில் நின்றது.16 அப்பொழுது ஆண்டவர் மோசேயிடம் கூறியது: “நீ உன் மூதாதையரோடு துஞ்சப்போகிறாய். இந்த மக்களோ தாங்கள் போகவிருக்கும் நாட்டில் கிளர்ந்தெழுந்து வேற்றுத் தெய்வங்களைப் பின்பற்றிக் கள்ள உறவு கொள்வர். அவர்கள் என்னைவிட்டு விலகி, நான் அவர்களோடு செய்து கொண்ட உடன்படிக்கையை மீறுவர்.17 அப்போது, எனது சினம் அந்நாளில் அவர்களுக்கு எதிராகக் கனன்றெரியும். நான் அவர்களைக் கைவிடுவேன். அவர்களிடமிருந்து என் முகத்தை மறைத்துக் கொள்வேன். அவர்கள் அறியும்படி பல தீங்குகளும், இன்னல்களும் அவர்கள் மேல் வரும். அந்நாளில் அவர்கள் ‘நம் கடவுள் நம்மோடு இல்லாததால் அன்றோ இத்தகைய தீங்குகள் நமக்கு வந்துள்ளன’ என்பர்.18 அவர்கள் வேற்றுத் தெய்வங்களை அணுகி, செய்த தீய செயல்கள் அனைத்தின் பொருட்டும், அந்நாளில் நான் என்முகத்தை மறைத்துக் கொள்வேன்.⒫19 எனவே, இப்பொழுது நீ இந்தப்பாட்டை எழுது. அதை இஸ்ரயேல் மக்களுக்குக் கற்றுக்கொடு. அதை அவர்கள் நாவில் வை. அதனால், இந்தப் பாடலே இஸ்ரயேல் மக்களுக்கு எதிராக நான் தரும் சான்றாக விளங்கும்.20 ஏனெனில், அவர்களின் மூதாதையருக்கு ஆணையிட்டுச் சொன்ன, பாலும் தேனும் நிறைந்து வழியும் நாட்டுக்குள் நான் அவர்களைக் கொண்டு போனதும் அவர்கள் உண்டு நிறைவு பெற்று கொழுத்துப் போவர். அப்போது அவர்கள் வேற்றுத் தெய்வங்களை அணுகி அவற்றுக்கு ஊழியம் செய்து, எனக்குச் சினமூட்டுவர்; என் உடன்படிக்கையையும் மீறுவர்.21 பல்வேறு தீங்குகளும் இன்னல்களும் அவர்கள் மேல் வரும்போது, அவர்களுடைய மரபினரின் வாய், பாடலை மறந்து போகாதிருக்கும். இப்பாடலே அவர்களுக்கு எதிராகச் சான்று பகரும். ஏனெனில், இப்பொழுதே அவர்கள் தீட்டியுள்ள திட்டத்தை நான் ஆணையிட்டுக் கூறிய நாட்டுக்குள் அவர்களைக் கொண்டுபோகுமுன்பே அறிவேன்” என்றார்.⒫22 ஆகையால், மோசே இப்பாடலை அன்றே எழுதி இஸ்ரயேல் மக்களுக்குக் கற்றுக் கொடுத்தார்.23 மேலும், ஆண்டவர் நூனின் மகனாகிய யோசுவாவுக்குக் கட்டளையிட்டுக் கூறியது: ‘வலிமை பெறு, துணிவு கொள், ஏனெனில் நீ இஸ்ரயேல் மக்களை நான் அவர்களுக்கு ஆணையிட்டுக் கூறிய நாட்டுக்குள் கொண்டு போவாய். நான் உன்னோடு இருப்பேன்’ என்றார்.⒫24 மோசே இத்திருச்சட்டத்தின் வார்த்தைகளை ஒரு நூலாய் எழுதி முற்றிலும் முடித்த பின்பு,25 ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையைத் தூக்கி வந்த லேவியரை நோக்கிக் கட்டளையிட்டுக் கூறியது:26 “இத்திருச்சட்ட நூலை எடுத்து, உங்கள் கடவுளாகிய ஆண்டவரின் உடன்படிக்கைப் பேழையின் அருகில் வையுங்கள். அங்கே அது உங்களுக்கு எதிரான சான்றாக இருக்கும்.27 ஏனெனில், நான் உங்கள் கலகக் குணத்தையும் முரட்டுப் பிடிவாதத்தையும் அறிவேன். இன்று நான் உங்களுடன் உயிரோடு இருக்கையில், ஆண்டவருக்கு எதிராகக் கலகம் செய்கிறீர்கள்: நான் இறந்த பின் இன்னும் எவ்வளவு செய்வீர்களோ?28 எனவே, உங்கள் குலங்களின் தலைவர்கள் அனைவரையும் உங்கள் அலுவலர்களையும் ஒன்று கூட்டுங்கள். அவர்கள் கேட்க நான் இவ்வார்த்தைகளை எடுத்துரைத்து, அவர்களுக்கு எதிராக விண்ணையும் மண்ணையும் சான்றாக வைப்பேன்.29 ஏனெனில், நான் இறந்தபின் நீங்கள் கெட்டுச் சீரழிவீர்கள்; நான் உங்களுக்குக் கட்டளையிட்ட வழிகளிலிருந்து விலகி, ஆண்டவரின் முன்னிலையில் அருவருப்பானவைகளைச் செய்வீர்கள். நீங்கள் செய்துகொள்ளும் சிலைகளால் அவருக்குச் சினமூட்டுவீர்கள். ஆகையால், இறுதிக் காலத்தில் உங்களுக்குத் தீங்குகள் நேரிடும் என்பதையெல்லாம் நான் அறிவேன்.”30 பின்னர், இஸ்ரயேல் சபையினர் அனைவரும் கேட்க, மோசே பின்வரும் பாடலின் வார்த்தைகள் அனைத்தையும் சொன்னார்:Deuteronomy 31 ERV IRV TRV