Deuteronomy 17 ERV IRV TRV KJV ASV BBE DBY WBT WEB YLT
1 ஊனமோ வேறு எந்தக் குறையோ உள்ள மாட்டையாவது ஆட்டையாவது உன் கடவுளாகிய ஆண்டவருக்குப் பலி செலுத்த வேண்டாம். ஏனெனில், அதை உன் கடவுளாகிய ஆண்டவர் வெறுக்கிறார்.2 கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கிற நகர்கள் ஒன்றில், ஓர் ஆண் அல்லது பெண், உன் கடவுளாகிய ஆண்டவரின் உடன்படிக்கையை மீறி, அவருக்கு எதிராகக் குற்றம் செய்வதாக உனக்குத் தெரிந்தால்,3 நான் கட்டளையிட்டதற்கு எதிராக, வேற்றுத் தெய்வங்கள் அல்லது நிலா, கதிரவன் அல்லது வேறு யாதொரு வான் கோளங்களைப் பின்சென்று, பணிந்து வணங்கினால்,4 அது பற்றி உனக்குச் சொல்லப்படும் போது அல்லது நீ கேள்விப்படும் போது அதை நீ நன்கு விசாரி. அது உண்மை எனவும் அத்தகைய அருவருப்பான செயல் இஸ்ரயேலில் நடந்தது உறுதி எனவும் நீ கண்டால்,5 அக்குற்றத்தைச் செய்த ஆணையோ பெண்ணையோ உன் நகர வாயிலுக்குக் கூட்டிச் சென்று அவனை அல்லது அவளைக் கல்லால் எறிந்து கொல்.6 இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் வாக்குமூலத்தை முன்னிட்டே, குற்றவாளி கொலை செய்யப்பட வேண்டும். ஒரே சாட்சியின் வாக்குமூலத்தை முன்னிட்டு எவரும் கொலை செய்யப்படலாகாது.7 முதலில் சாட்சிகளின் கைகளும் பின்னர் எல்லா மக்களின் கைகளும் கொல்லப்பட வேண்டியவனுக்கு எதிராக ஓங்கட்டும். இவ்வாறு, உன் நடுவிலிருந்து தீமையை அகற்றுவாய்.⒫8 இரத்தப் பழிகளைக் குறித்தோ, உரிமை வழக்குகளைக் குறித்தோ, தடியடியைக் குறித்தோ தீர்ப்புக் கூறுவது கடினமாய் இருந்தால் அல்லது உன் நகரிலுள்ள வேறு எந்த வழக்கும் சிக்கலானதாக இருந்தால், நீ எழுந்து உன் கடவுளாகிய ஆண்டவர் தேர்ந்து கொள்ளும் இடத்திற்குச் செல்.9 அங்கு, லேவியரான குருக்களிடத்திலும் அன்றைய நாளின் நீதிபதிகளிடமும் அறிவுரை கேள். நியாயத் தீர்ப்பை அவர்கள் உனக்குத் தெரிவிப்பார்கள்.10 ஆண்டவர் தேர்ந்துகொள்ளும் இடத்திலிருந்து அவர்கள் உனக்குத் தெரிவிப்பதன்படி நட. அவர்கள் கற்பித்தபடி எல்லாம் செயல்படுவதில் கருத்தாயிரு.11 அவர்கள் உனக்குக் கற்பித்த சட்டங்களின்படியும், அவர்கள் உனக்குத் தெரிவித்த தீர்ப்பின்படியும் செயல்படு. அவர்கள் உனக்குத் தெரிவித்த தீர்ப்பினின்று இடமோ வலமோ பிறழாதே.12 கடவுளாகிய ஆண்டவருக்கு ஊழியம் புரிய அங்கே நிற்கும் குருக்களுக்கோ நீதிபதிகளுக்கோ செவிகொடாமல் செருக்குடன் செயல்படுகிறவன் சாகவேண்டும். இவ்வாறு, இஸ்ரயேலிலிருந்து தீமையை அகற்றுவாய்.13 எல்லா மக்களும் அதைக் கேட்டு, அஞ்சுவர்; எவரும் செருக்குடன் செயல்படார்.14 உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்குக் கொடுக்கப்போகும் நாட்டுக்குள் சென்று அதை உடைமையாக்கி அதில் குடியேறியபின், ‘என்னைச் சுற்றிலுமுள்ள எல்லா வேற்றினத்தாரையும் போல, நானும் எனக்கு ஓர் அரசனை ஏற்படுத்துவேன்’ என்று நீ சொல்வாய்.15 அப்போது உன் கடவுளாகிய ஆண்டவர் தெரிந்தெடுக்கும் ஒருவனையே உன் அரசனாக ஏற்படுத்துவாய். உன் இனத்தான் ஒருவனையே உன் அரசனாக்குவாய். உன் இனத்தான் அல்லாத அந்நியன் ஒருவனை உனக்கு அரசனாக நியமிக்காதே.16 அவன் தனக்கெனக் குதிரைகளை மிகுதியாக்கிக் கொள்ளாமலும், குதிரைகளை மிகுதியாக்கிக்கொள்ளும் பொருட்டு மக்களை மீண்டும் எகிப்துக்குப் போகச் சொல்லாமலும் இருக்கட்டும். ஏனெனில், இனி அந்த வழியாகத் திரும்பவும் செல்லக்கூடாதென ஆண்டவர் உங்களுக்குச் சொல்லியுள்ளார்.17 அவன் இதயம் ஆண்டவரைவிட்டு விலகாதிருக்க வேண்டுமானால், பல மனைவியரைக் கொள்ளலாகாது; வெள்ளியும் பொன்னும் அளவுமீறிச் சேர்க்கலாகாது.18 அவன் தன் அரசுக் கட்டிலில் அமர்ந்தபின், லேவியராகிய குருக்கள் பொறுப்பிலுள்ள இச்சட்ட நூலின் நகல் ஒன்றைத் தனக்கென ஓர் ஏட்டில் எழுதிக் கொள்ளட்டும்.19 அதைத் தன்னோடு வைத்துக்கொள்ளட்டும். அதை நாள்தோறும் அவன் வாழ்நாள் முழுவதும் வாசிக்கட்டும். அதனால், அந்தச் சட்டத்தின் எல்லா வார்த்தைகளையும், அதன் நீதிமுறைகளையும் நிறைவேற்றுதவன் மூலம் அவன் கடவுளாகிய ஆண்டவருக்கு அஞ்சி நடக்கக் கற்றுக் கொள்வான்.20 அதனால், அவன் இதயத்தில் இறுமாப்புக்கொண்டு, தன் சகோதரருக்கு மேல் தன்னை உயர்த்திக் கொள்ளாமலும், கட்டளைகளிலிருந்து வலமோ இடமோ பிறழாமலும் இருப்பான். அப்போது அவனும் அவன் புதல்வர்களும் இஸ்ரயேலில் நெடுநாள் ஆட்சி புரிவர்.