1 “உங்கள் தேவனாகிய கர்த்தர் மீது நீங்கள் அன்பு கொள்ளவேண்டும். நீங்கள் பின்பற்றுவதற்காக தேவன் உங்களுக்குக் கூறியவற்றையெல்லாம் நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும். எப்போதும் நீங்கள் அவரது சட்டங்களுக்கும், நியாயங்களுக்கும், கட்டளைகளுக்கும் கீழ்ப்படிய வேண்டும்.
2 உங்களுக்குப் போதிக்கும்படி உங்கள் தேவனாகிய கர்த்தர் செய்த பெருஞ் செயல்களை நினைத்துப் பாருங்கள். அந்த மகா காரியங்களைக் கண்டு, அவற்றைக் கடந்து வந்தவர்கள் நீங்களே, உங்கள் குழந்தைகளல்ல. உங்களுக்குத்தான் தெரியும், கர்த்தருடைய மகத்துவத்தைப் பார்த்தவர்கள் நீங்கள், கர்த்தருடைய வலிமையைக் கண்ணாரப் பார்த்துள்ளீர்கள். கர்த்தருடைய ஆற்றல் நிறைந்த செயல்களைப் பார்த்தவர்கள் நீங்கள்.
3 கர்த்தருடைய அற்புதங்களைப் பார்த்தவர்கள் நீங்கள் தான், உங்கள் பிள்ளைகள் அல்ல. எகிப்தின் இராஜாவாகிய பார்வோனுக்கும் அவனது நாடு முழுவதிற்கும் கர்த்தர் செய்த அடையாளங்களையும், செயல்களையும் நீங்கள் பார்த்துள்ளீர்கள்.
4 எகிப்தின் படையும், அவர்களது குதிரைகளும், இரதங்களும் போரில் உங்களைத் தொடர்ந்து வரும்போது, கர்த்தர் அவர்களைச் செங்கடலின் தண்ணீரில் மூடியதை உங்கள் பிள்ளைகள் அல்ல, நீங்கள்தான் பார்த்தீர்கள். அவர்களை முழுவதுமாக அழித்ததை நீங்கள் பார்த்தீர்கள்.
5 உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் இன்று இவ்விடத்திற்கு வரும் வரைக்கும், அன்றும் பாலைவனத்தில் உங்களுக்காகச் செய்த எல்லாவற்றையும் பார்த்தவர்கள் நீங்கள்தான். உங்கள் பிள்ளைகள் அல்ல.
6 ரூபன் குடும்பத்தைச் சார்ந்த எலியாப் என்பவனின் மகன்களான தாத்தான், அபிராம் இருவருக்கும் கர்த்தர் என்ன செய்தார் என்பது உங்களுக்குத் தெரியும். பூமி தன் வாயைத் திறந்து அவர்களை விழுங்கியதை இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரும் பார்த்தார்கள், அவ்விருவரின் குடும்பங்களையும், கூடாரங்களையும் அவர்களது விலங்குகள், வேலையாட்கள் எல்லாவற்றையும் பூமி விழுங்கியது.
7 கர்த்தர் செய்த இந்தப் பெரிய செயல்களை எல்லாம் உங்களுடைய பிள்ளைகளல்ல, நீங்களே கண்டீர்கள்.
8 “ஆகவே நான் இன்று உங்களுக்குச் சொல்லும் ஒவ்வொரு கட்டளைக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும். பின் நீங்கள் பலம் வாய்ந்தவர்களாக ஆவீர்கள். அதனால், யோர்தான் ஆற்றினைக் கடந்து, நீங்கள் நுழையத் தயாராகவுள்ள இந்த தேசத்தை சொந்தமாக்கிக்கொள்வீர்கள்.
9 பின் நீங்கள் அந்தத் தேசத்தில் நீண்ட வாழ்க்கை வாழலாம். இந்த தேசத்தை உங்கள் முற்பிதாக்களுக்கும் அவர்களது சந்ததியினருக்கும் கொடுப்பதாக கர்த்தர் வாக்களித்துள்ளார். இந்த தேசம் பாலும் தேனும் ஓடக் கூடிய செழிப்பும், எல்லா வளங்களும் நிறைந்த நாடாகவும் இருக்கும்.
10 நீங்கள் சுதந்திரமாக வசிக்கப்போகும் இந்த தேசம் நீங்கள் விட்டு வந்த எகிப்து நாட்டைப் போல் இருக்காது. எகிப்தில் நீங்கள் விதை விதைத்தீர்கள். தண்ணீர்ப் பாய்ச்சும்படி உங்கள் கால்களால் மிதித்து, வாய்க்காலில் இருந்து உங்கள் தோட்டங்களுக்கு நீங்கள் தண்ணீர்ப் பாய்ச்சினதுபோல உங்கள் வயல்களுக்கும் தண்ணீர் இறைத்து வந்தீர்கள்.
11 ஆனால், இப்போது வசிக்கப்போகின்ற இந்த நிலம் அப்படிப்பட்டது அல்ல. இஸ்ரவேலில் மலைகளும், பள்ளத்தாக்குகளும் உள்ளன. அந்த நிலம் வானத்தின் மழைத் தண்ணீரைக் குடிக்கும் தேசம்.
12 உங்கள் தேவனாகிய கர்த்தர் நீங்கள் வசிக்கப்போகும் நிலத்தைக் காத்து வருகிறார். வருடத்தின் துவக்கம் முதல் முடிவு வரை ஆண்டு முழுவதும் உங்கள் தேவனாகிய கர்த்தர் கவனித்து வருகிறார்.
13 “கர்த்தர், ‘நான் இன்று உங்களுக்குத் தரும் கட்டளைகளைக் கவனமாகக் கேளுங்கள். நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தர் மீது அன்பு செலுத்தி, அவருக்கு அடி பணிந்து, முழு மனதோடு ஆத்ம திருப்தியுடன் சேவை செய்யவேண்டும். நீங்கள் அப்படிச் செய்தீர்களென்றால்,
14 உங்கள் நிலத்திற்குத் தேவையான மழையை ஏற்ற பருவத்தில் பெய்யச் செய்வேன். நீங்கள் உங்கள் தானியங்களைச் சேர்க்கவும், எண்ணெய் வித்துக்களைப் பெருக்கவும், புதிய திராட்சைரசத்தைப் பெறவும், அதற்கான காலத்தில் உங்கள் தேசத்தில் இலையுதிர் காலத்தில் முன்மாரியையும் வசந்த காலத்தில் பின்மாரியையும் நான் அனுப்புவேன்.
15 உங்கள் கால் நடைகளுக்குத் தேவையான புல்வெளிகளை செழிப்படையச் செய்வேன். உங்களுக்கு உண்ணும்படி எராளமான ஆகாரம் இருக்கும்’ என்று கூறுகிறார்.
16 “ஆனால் நீங்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்! உங்கள் இருதயம் சந்தேகப்பட்டு விலகாதபடி இருங்கள். உங்களின் வழியிலிருந்து விலகி அந்நிய தெய்வங்களைத் தொழுதுகொண்டு சேவை செய்யாதீர்கள்.
17 அப்படிச் செய்தீர்களானால், பின் கர்த்தர் உங்கள் மீது கடுங்கோபம் கொள்வார். மழை பெய்யாது, உங்கள் நிலம் எவ்வித விளைச்சலையும் தராதபடி வானத்தை அடைத்துவிடுவார். அதனால் கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கின்ற இந்த நல்ல தேசத்திலேயே நீங்கள் விரைவில் மரித்து போவீர்கள்.
18 “நான் இன்று உங்களுக்குத் தருகிற இந்தக் கட்டளைகளை எப்போதும் உங்கள் உள்ளங்களில் வையுங்கள். அவற்றை எழுதுங்கள், கட்டுங்கள், அணிந்துகொண்டு, அல்லது உங்கள் கண்களில் படும்படி எப்போதும் உங்களின் ஞாபகத்தில் இருக்கும்படி வைத்துக்கொள்ள வேண்டும்.
19 இந்தச் சட்டங்களை உங்கள் குழந்தைகளுக்கும் சொல்லிக் கொடுங்கள். உங்கள் வீடுகளில் இருக்கும்போதும், வீதிகளில் நடக்கும்போது, தூங்குவதற்கு முன்பும், எழுந்தப் பின்பும், எப்போதும் இவற்றைப் பற்றியேப் பேச வேண்டும்.
20 உங்கள் வீட்டுக் கதவுகள் மீதும், வாசல்களிலும் இந்தக் கட்டளைகளை எழுதி வையுங்கள்.
21 அப்போது உங்கள் முற்பிதாக்களிடம் கர்த்தர் கொடுத்த வாக்கின்படி உங்களுக்குச் சுதந்திரமாக வாழக் கொடுத்த நிலத்தில் நீங்களும் உங்கள் பிள்ளைகளும் நீண்ட காலம் வாழலாம். இந்த பூமியின்மேல் வானம் உள்ளளவும் நீங்கள் நீண்டகாலம் வாழலாம்.
22 “நான் உங்களிடம் கூறியவற்றைப் பின் பற்றுவதிலும், ஒவ்வொரு கட்டளைகளுக்கும் கீழ்ப்படிவதிலும் எச்சரிக்கையுடன் இருங்கள்! உங்கள் தேவனாகிய கர்த்தர் மீது அன்பு செலுத்துங்கள். அவரது எல்லா வழிகளையும் பின்பற்றுங்கள். அவருக்கு உண்மையானவர்களாய் இருங்கள்.
23 பின் உங்கள் தேசத்திற்குள் செல்லும்போது கர்த்தர் உங்களுக்கு எதிரான மற்ற இனத்தவர்களை வெளியே துரத்திவிடுவார். உங்களைவிடப் பெரிய பலம் வாய்ந்தவர்களிடமிருந்து அந்த நிலத்தை நீங்கள் கைப்பற்றிவிடலாம்.
24 உங்கள் பாதங்கள் படும் இடமெல்லாம் உங்களுடையதாகும். உங்களின் நிலமானது தெற்கே பாலைவனம் முதல் வடக்கே லீபனோன் வரை விரிந்து செல்லும். கிழக்கே ஐபிராத்து நதிதொடங்கி மத்தியதரைக் கடல் வரையிலும் உங்கள் தேசத்தின் எல்லையாக இருக்கும்.
25 உங்களை எதிர்த்து நிற்பவர் எவருமில்லை. உங்கள் தேவனாகிய கர்த்தர் இந்த நிலத்தில் நீங்கள் எங்கெல்லாம் செல்கிறீர்களோ அங்கெல்லாம் அந்த ஜனங்களைப் பயமடையச் செய்வார். அதைத்தான் கர்த்தர் உங்களுக்கு ஏற்கெனவே வாக்களித்திருக்கிறார்.
26 “நீங்கள் தெரிந்துகொள்ள நான் இன்று உங்களுக்கு ஒரு வாய்ப்பைத் தருகிறேன். இதோ! ஆசீர்வாதங்களையும் சாபங்களையும் உங்களுக்கு முன்பாக வைக்கிறேன். இவற்றில் நீங்கள் எதையாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
27 நான் இன்று உங்களுக்குக் கூறியிருக்கிறபடி உங்கள் தேவனாகிய கர்த்தர் தந்த கட்டளைகளுக்கு செவிகொடுத்து கீழ்ப்படிந்து, அவற்றைக் கடைப்பிடித்தால் நீங்கள் ஆசீர்வாதம் பெறுவீர்கள்.
28 ஆனால் உங்கள் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிவதையும், பின்பற்றுவதையும் மறுத்தால் சாபத்தைப் பெறுவீர்கள். ஆகவே, நான் இன்று உங்களுக்குக் கட்டளையிட்டபடி வாழ்வதை நிறுத்திவிடாதீர்கள். அதுமட்டுமின்றி அந்நிய பொய்த் தெய்வங்ளைப் பின்பற்றாதிருங்கள். கர்த்தரைப் பற்றி உங்களுக்குத் தெரியும். ஆனால் அந்தப் பொய்த் தெய்வங்களைப்பற்றி உங்களுக்குத் தெரியாது.
29 “உங்களின் சுதந்திர தேசத்தில் உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களை வழிநடத்திச் செல்வார். நீங்கள் விரைவில் அந்த தேசத்தில் வாழ்ப்போகிறீர்கள். அந்த நேரத்தில் கெரிசீம் மலையின் உச்சிக்கு நீங்கள் செல்ல வேண்டும். அங்கிருந்து ஜனங்களுக்கு ஆசீர்வாதங்களைக் கூறுங்கள். பின்பு ஏபால் மலையின் உச்சிக்குச் செல்லவேண்டும். அங்கிருந்து ஜனங்களுக்கு சாபங்களைக் கூற வேண்டும்.
30 இந்த மலைகள் யோர்தான் நதியின் மறுபக்கத்தில் கானானியர் குடியிருக்கின்ற நாட்டில் உள்ளன. இந்த மலைகள் மேற்கு நோக்கி ஓக் மரங்களுக்கு அதிக தொலைவில் இல்லாமல் கில்காலுக்கு எதிரான மோரே என்னும் சமவெளிக்கு அருகே இருக்கின்றன.
31 நீங்கள் யோர்தான் நதியைக் கடந்து செல்ல வேண்டும். உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கின்ற நிலத்தைச் சென்றடைவீர்கள். அங்கு சுதந்திரமாகக் குடியிருப்பீர்கள். இந்த நிலத்தில் நீங்கள் வாழும்போது,
32 நான் இன்று உங்களுக்குத் தருகின்ற சட்டங்களுக்கும், நியாயங்களுக்கும் கீழ்ப்படிந்து எச்சரிக்கையுடன் அவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.
Deuteronomy 11 ERV IRV TRV